Monday, December 2, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கடலூர் மே நாள் : சிவந்தது வங்கக் கடற்கரை !

கடலூர் மே நாள் : சிவந்தது வங்கக் கடற்கரை !

-

மே 1 தொழிலாளர் தினம் உலகு தழுவிய அளவில்  போராட்ட நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அந்நாநளை கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் பல்வேறு ஓட்டுக் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அதற்கு மாற்றாக புரட்சிகர அமைப்பான ம.க.இ.க  மற்றும் அதன் தோழமை அமைப்புகள்  தொழிலாளிகளின் அடிமைத் தனத்தை உடைத்து விடுதலைக்காகவும்,  முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கு எதிராகவும் போராடி வருகின்றன.

கடலூரில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி இணைந்து பேரணி-பொதுக்கூட்டம் நடத்தின. முதலில் காவல்துறை இந்த பேரணிக்கு அனுமதி மறுத்தது. பிறகு தோழர்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு சில நிபந்தனைகளோடு பேரணிக்கு அனுமதி வழங்கியது. ஜனநாயகம் என்பதே வரம்புக்குட்பட்டதே என்பதை நிரூபித்து விட்டது காவல்துறை.

இராணுவக் கட்டுப்பாடுடன் நடந்த இந்த பேரணியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வீட்டின் மாடியிலும், வெளியிலும் நின்று கண்ணசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாதிரிக்குப்பத்தில் தொடங்கிய இந்த பேரணியை விவசாயிகள் விடுதலை முன்னணி திருவெண்ணெய்நல்லூர் வட்டாரச்செயலர் தோழர்.ஏழுமலை அவர்கள் தொடங்கி வைத்து பேரணியின் நோக்கம் குறித்து விளக்கினார்.

 

கடலூரின் முக்கியமான சாலை, இடைவிடாமல் போக்குவரத்து சென்று கொண்டேயிருக்கும். சாலையின் இரு புறங்களிலும் கடைகள்,வீடுகள் நிறைந்த பகுதியின் வழியே பேரணி சென்றது. முன்னே சென்றவர்கள் வானுயர செங்கொடியை ஏந்திச் சென்றார்கள். அதற்கடுத்து வந்த தோழர்கள் ஆசான்களின் படத்தை பிடித்துக்கொண்டு விண்ணதிரும் முழக்கங்களோடு சென்றதை பார்த்து உற்சாகமடையாதோர் யாரும் இல்லை.  இராணுவக் கட்டுப்பாடுடன் நடந்த இந்த பேரணியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வீட்டின் மாடியிலும், வெளியிலும் நின்று கண்ணசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாலையின் இரு புறங்களிலும் கடைகள்,வீடுகள் நிறைந்த பகுதியின் வழியே பேரணி சென்றது.

மோடியின் முகத்திரையை கிழிக்கும் விதமாக முழக்கங்கள், இந்த அரசமைப்பு தோற்று விட்டது என்பதை பறைசாற்றும் விதமாக பதாகை வாசகங்கள் என பேரணி முழுவதும் புரட்சிகர அரசியலால் வண்ணமயமாகியிருந்தன.

நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த பேரணியில் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் சென்றதை பார்த்த மக்கள் யார் இவர்கள், எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியை எழுப்பியிருக்ககூடும். ஏனெனில் ஓட்டுக்கட்சிகள் குடியும் கூத்துமாக நடத்தியிருப்பதை தான் இத்தனை நாட்கள் அவர்கள் பார்த்திருப்பார்கள். கட்டுப்பாட்டுடனும் ,நேர்த்தியாகவும் நடந்த இந்த பேரணியை முதன்முதலில் இப்பொழுது தான் பார்ப்பதாக டீக்கடையில் பேரணியை பார்த்தவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பேரணியின் நீளம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டு கொண்டே  ஒரு கொடியின் கீழ் மாபெரும் படையாக சென்றனர். புதிய ஜனநாயகப்புரட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் செங்கொடியையும், பதாகையையும் பிடித்திருந்த ஒவ்வொருவருக்கும் இருந்தது.

வெகுஜன மக்களும், தோழர்களும் கலந்து கொண்ட இந்த பேரணி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பொதுக்கூட்டம் நடக்க இருந்த தேரடி தெருவில் வந்தமர்ந்தனர்.

சரியாக மாலை 7.00 மணிக்கு ஆரம்பித்த இந்த பொதுக்கூட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுவை மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கி பேசுகையில், விவசாயிகள், தொழிலாளர்கள் முதலாளித்துவ சுரண்டலாலும், அரசின் அடக்கு முறையாலும் இன்று கொடுந்துயரத்திற்கு ஆளாகி வருவதையும் அதனை வீழ்த்துவதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக செங்கொடி ஏந்த வேண்டிய நோக்கம் குறித்து தலைமையுரையில் பேசி முடித்தார்.

தோழர் ஸ்ரீதர்

அடுத்ததாக பேசிய புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் விழுப்புரம் அமைப்பாளர் தோழர் ஞானவேல் அவர்கள் பேசுகையில், தனியார்மயம், தாராளமயம் வந்த பிறகு விவசாயிகள் விவசாயத்தை விட்டே விரட்டி அடிக்கப்படுள்ளார்கள். லட்சக்கணக்கில் விவசாயிகள் இறந்துள்ளனர்கள். இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்காக போராடியவர்கள் விவசாயிகள் மரணத்திக்கு எதிராக பேசவில்லை. “உழவுச்சக்கரம் சுழலவில்லை என்றால் பூமி சக்கரம் நின்று விடும்” என்பார்கள். ஆனால் இன்று விவசாயம் அழிக்கப்பட்டு விட்டது. கல்வியில் ஏழை மாணவர்கள் படிக்க கூடாது என்பதற்காக NEET தேர்வை மோடி அரசு திணிக்கிறது. மற்றொருபுறம் இந்து மதவெறி பாசிசத்தை கட்டவிழ்த்து விடுகிறது. நாம் ஒரு மாபெரும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறோம். இந்த அபாயத்தை முறியடிக்க புரட்சிகர அமைப்பாக அணி திரளவேண்டும் என்று கூறி முடித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின்  ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் பேசுகையில், இந்தியாவில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளது. இவை எல்லாம் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடாமல் தங்களுடைய பதவி உரிமைக்காக போராடி வருகிறார்கள். இன்றைக்கு மின்துறையில் நடந்து  வரும் ஊழல்கள், முறைகேடுகள் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது. மின்துறை கடனால் திவாலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. போதிய ஆட்களை நியமிப்பதில்லை. குறைந்த ஆட்களை மட்டும் வைத்து உழைப்பு சுரண்டலை இந்த அரசு ஏய்த்து வருகிறது. நிலக்கரி உள்ளிட்டவை அனைத்தும் இந்தோனோசியா உட்பட தனியார் முதலாளிகளிடம் இருந்து வாங்குவதால் தான்  மின்துறை திவால் நிலைக்கு சென்றுள்ளதை  அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைச் செயலர் தோழர் லோகநாதன் அவர்கள் பேசுகையில், நாடு முழுவதும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம் நடந்து வருகிறது.  போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்கள் அனைத்தும் இன்று முதலாளிகளுக்கு சாதகமாக மோடி அரசு மாற்றி வருகிறது.மக்களிடம் சேவை வரி பிடுங்கும் மோடி, முதலாளிகளுக்கு சேவை செய்கிறார். முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்கிறார். விவசாயிகள் கடனை ரத்து செய், வறட்சி நிவாரணம் கொடு என்று கேட்டால் மட்டும் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விடும் என்று என்று கூச்சலிடுகிறது. மக்களுக்கு சேவை செய்யாத இந்த அரசை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். இன்று “தல”யின் பிறந்த நாள் என்று மக்களை திசை திருப்புகிறது ஊடகம். உண்மையான தலையோட பிறந்த நாள் மே 5. உழைக்கும் மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்பணித்த ஆசான் காரல் மார்க்ஸ். அவரிடம் இருந்து நாம் கற்று கொள்வதற்கு நிறைய இருக்கிறது. அந்த வகையில் நாம் மக்களுக்காக போராட வேண்டும். ஒரு ஆண்டுக்கு முன்பு மக்கள் அதிகாரம் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை முன் வைத்தது. இன்று  மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து கடைகளை மூடுகிறார்கள். அணைந்து கிடந்த தீ இன்று பற்றிப் படருகிறது. நாளை இந்த தீயில் அரசும் பொசுங்கும். அதுவரை போராடுவோம் என்று கூறி தனது உரையை முடித்தார்.

தோழர் ராஜூ

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் பேசுகையில், இன்று நடந்து வருவது முதலாளிகளுக்கான  ஆட்சி தான். விவசாயிகள், தொழிலாளிகள், மக்களுக்கான ஆட்சி கிடையாது. விவசாயிகளுக்காகவும், தொழிலாளிகளுக்காகவும் என்ன கொள்கையை வைத்திருக்கிறது மத்திய, மாநில அரசுகள். ஏற்கனவே இருந்த தொழிலாளர் நல சட்டம், தொழிற் தகராறு சட்டம் அனைத்தையும் செல்லாக்காசு ஆக்கியது தான் இன்றைய அரசின் சாதனை. சாதாரண டீக்கடை தொழிலாளி தொடங்கி யாரும் 8 மணி நேர வேலையை பேச முடியாது. எந்த கட்சியும் இதற்காக பேசாது. மக்களை அடிமைகளாக்கி, குடிகாரர்களாகவும், காமந்தாரர்களாகவும் தான் இந்த அரசும், கட்சிகளும் மாற்றி வைத்துள்ளது.

OPS முதல் EPS வரை எவருக்கும் மக்களை ஆளும் தகுதி கிடையாது. எடப்பாடி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கிரிமினல். OPS தான் சுருட்டி வைத்திருந்த சொத்துக்களை சின்னம்மாவும், பெரியம்மாவும் அடித்து உதைத்து எழுதி வாங்கும் அளவிற்கு கொள்ளையடித்த ஒரு கிரிமினல்.

கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி மக்களின் சேமிப்பை வழிப்பறி செய்தவர் மோடி. ஆனால் முதலாளிகளுக்கு செய்யும் சேவையை விவசாயிகளுக்கு செய்வதில்லை. சட்டமன்றம் முதல் பாராளுமன்றம் வரை தலையாரி முதல் தலைமை செயலர் வரை கிரிமினல் மயமாகிவிட்டது. இந்த கும்பல் மக்களை எப்படி வழி நடத்தியுள்ளார்கள் என்றால், எங்கள் ஊரில் இடைத்தேர்தல் வராதா, தொகுதி MLA  சாக மாட்டாரா என எதிர்பார்க்கும் அளவிற்கு மக்களையும் மாற்றி வைத்துள்ளார்கள். இது தான் இவர்கள் மக்களை வழி நடத்தும் யோக்கியதை.

பொய், பித்தலாட்டம் என்று இந்த அரசுக்கட்டமைப்பே அழுகி நாறுகிறது. அதிமுக கும்பல் அடித்த கொள்ளை, சீரழிக்கப்பட்ட மக்களின் வாழ்வு, தாலியருக்கப்பட்ட தாய்மார்களின் கோபம் இனி சும்மா விடாது. போராட்டத்தை இனி தடுக்க முடியாது. அடித்தாலும் அடங்காது. இது வேற தமிழ்நாடு என்பதை நிருபிப்போம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

தோழர் விஜயகுமார்

இறுதியாக சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர் விஜயகுமார் அவர்கள், எந்த கோரிக்கைக்காக தொழிலாளர் வர்க்கம் போராடி துப்பாக்கி சூட்டுக்கு பலியானதோ, தொழிலாளர், முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டு அமெரிக்க அரசு கொலை செய்ததோ, அந்த கோரிக்கை இன்றும் கோரிக்கையாகவே இருக்கிறது.

எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து உலகெங்கும் இருக்கின்ற தொழிலாளர்கள் போராடக்கூடிய அவல நிலை தான் உள்ளது. ஆனால் தமிழகம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இது வேறு தமிழகம் என்று பதிவு செய்துள்ளது. இந்துஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கில இதழ் தமிழக போராட்ட மரபை வியந்தெழுதுகிறது. இந்த போராட்டத்தின் உச்ச கட்டம் தான் திருப்பூரில் பெண்கள் டாஸ்மாக்கை மூடு என்று நடத்திய போராட்டம். அடித்தாலும் இவர்கள் போராடுகிறார்களே இது எப்படி சாத்தியம் என்று வியப்படைகிறது.

இன்று தமிழகத்தில் போராட்டம் நடைபெறாத ஊர் எதுவுமில்லை என்றளவிற்கு வந்துள்ளது. ஆறுகளில் மணல் அள்ளப்படுவதற்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது. விவசாயத்தை காப்பதற்காக போராட்டம் நடைபெறுகிறது. எங்கும் போராட்டம்.  விவசாய தொழில் என்பது தற்கொலைக்கு சமமானது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளார்கள். வாழ வழி இல்லாமால் நகரத்தை நோக்கி விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்.

விவசாயிகளை இந்த நிலைக்கு தள்ளி விட்டு அவர்களின் கடனை தள்ளுபாடி செய்ய அரசு மறுக்கிறது. விவசாயிகள் கடன் வங்கி விட்டு ஏமாற்றுகிறார்கள் என்று இழிவு படுத்துகிறது பார்ப்பன ஜனதா கும்பல். பன்னாட்டு முதலாளிகள் லாபவேட்டைக்காக சிறு தொழில்களை அழிக்கின்றன பெரும் வணிக நிறுவனங்கள். இதனால் வேலையிழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களோ இந்தியாவில் ஏராளம்.

தனியார் முதல் அரசுத்துறை வரை அனைத்திலும் காண்டிராக்ட்மயம். இதில் உச்சகட்டம் மின்துறை. அதிக விதவை தொழிலாளர்களை கொண்ட ஒரே துறை. அதிக அளவில் காண்டிராக்ட் தொழிலாளியையும் கொண்டுள்ளது. சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளின் அவலம் மிகக் கொடுமையானது.  சுரங்கம் தோண்டும் பொழுது மண் சரிந்து செத்துப்போன தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இப்படி பல்வேறு துறைகளில் ஒப்பந்த முறையை அமுல்படுத்து தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி கொழுக்கிறது உலக முதலாளித்துவம்.

மகஇக – வின் கலை நிகழ்ச்சி

தொழிலாளிகளின் அவல நிலையை கண்டுகொள்ளாத இந்த மோடி அரசு தான் முதலாளிகளுக்கு ஊஞ்சலாட்டி விட்டுக்கொண்டிருக்கிறது. மறுபுறம் மாட்டுக்கறிக்கு தடை விதித்து விட்டு மாட்டுக்கறியை வெட்டி ஏற்றுமதி செய்கிறது இந்த பார்ப்பன கும்பல். இந்த கும்பல் தான் இந்தியாவை இந்துக்கள் நாடாக மாற்றியே தீருவேன் என்று வெறி கொண்டு அலைகிறார்கள். சிறுபான்மையினர், தலித்துகளை கேள்விக்கிடமற்ற முறையில் கொலை செய்கிறார்கள்.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் காலூன்றி வரும் இந்த கும்பல் மேற்கு வங்கத்தை அடுத்து தமிழகத்தை குறி வைத்துள்ளது. முதலாளிகளும், பார்ப்பன இந்து மதவெறி கும்பலும் ஓரணியில் இருக்கிறது. ஏற்றத்தாழ்வான இந்த சமூகத்தில் அரசு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க முடியாது. இது ஏமாற்று ஜனநயகம். இது காவி கும்பலுக்கும், கார்ப்ப்ரேட்டுக்குமான அரசு இந்த அரசை தூக்கி எரிந்து விட்டு உழைக்கும் மக்களுக்கான ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவ நாம் செங்கொடி ஏந்தி போராட வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

பொதுக்கூட்ட  நிகழ்ச்சியில் இடையிடையே பாடப்பட்ட மக.இ.க.- வின் பாடல்கள் தோழர்கள் மற்றும் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கடலூரில் நடந்த மே தின பேரணி-பொதுக்கூட்டம் வங்கக் கரையை சிவப்பாக்கியதோடு, மக்களிடையே அரசியதல் கோபத்தையும், போராட்ட உற்சாகத்தையும் உருவாக்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!

-வினவு செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க