Thursday, December 12, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஓசிக்குச் சோறு போடலைன்னா லாடம் கட்டும் - குஜராத் போலீசு !

ஓசிக்குச் சோறு போடலைன்னா லாடம் கட்டும் – குஜராத் போலீசு !

-

டைத் தெருக்களில் வாழ வழியில்லாதோர்  பிச்சை எடுப்பதைப் பார்த்திருப்போம். ஏங்கும் கண்களோடு கடைக்காரர் பிச்சை போடும் வரையோ அல்லது விரட்டி விடும் வரையோ கடை ஓரமாய் நின்று கொண்டிருப்பார்கள். இன்னொரு புறம் உரிமையோடு கடைப் பொருளை எடுத்துக் கொண்டு அதிகாரத் தொனியோடு பணத்தையும் பிடுங்கிச் செல்லுபவர்களையும் பார்த்திருப்போம். சமூகத்தில் இத்தகைய வழிப்பறிக்காரர்கள் கொஞ்சம் ஸ்பெசல் தான். இவர்களுக்கு அரசே தொப்பி, பெல்ட், பூட்ஸ் மற்றும் காக்கி உடை ஆகியவை கொடுத்து கையில் லத்தியையும் கொடுத்திருக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற இச்சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்  சில சமயங்களில் செய்யும் அட்டூழியங்கள் பரபரப்புச் செய்தியாகி விடுகிறது. அப்படி ஒரு செய்தி தான் இது.

கரீம் பாய்

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் பாலிடானா. அப்பகுதியில் பல ஆண்டுகளாக திலிப் பாய் நோடியா என்பவரும் அவரது சகோதரர்களும் இணைந்து சில உணவகங்களையும், ஒரு துணிக்கடையையும் நடத்தி வருகின்றனர்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் திடீரென ஒரு போலீசு ஏட்டு, திலீப் பாய் நோடியாவிடம் போலீசு நிலையங்களுக்கு உணவு வழங்கும் ஒப்பந்தத்தை அவரது குடும்ப உணவகங்களுக்கு வழங்கவிருப்பதாகக் கூறினார். அதனை நம்பிய நோடியா சகோதரர்கள் தங்கள் உணவகங்களில் இருந்து, போலீசு நிலைய காக்கிகளுக்கும், அங்கு லாக் அப்பில் இருப்பவர்களுக்கும், சில சமயங்களில் அதிகாரிகளின் வீட்டு விருந்துகளுக்கும் உணவு வழங்கி வந்தனர்.

முதல் மாதம் முடிந்ததும், அதுவரை வழங்கிய உணவுக்கு பணம் கேட்ட போது பணம் வரும் போது தருவதாகவும் அது வரை பணத்தைக் கேட்காமல் உணவு சப்ளை செய்ய வேண்டும் எனக் மிரட்டியது போலீசு. போலீசின் மிரட்டலுக்கு பயந்து கடந்த 5 ஆண்டுகளாக உணவு சப்ளை செய்து வந்த நோடியா குடும்பத்தாருக்கு இது வரை மொத்தத்தில் இரண்டு முறை மட்டுமே பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை ரூபாய் பத்தாயிரமும் மற்றொரு முறை  ரூபாய் தொள்ளாயிரமும் போலீசால் கொடுக்கப்பட்டது.

குஜராத்தின் ‘வளர்ச்சி நாயகன்’ மோடி, இந்தியாவின் பிரதமரான பின்னர், ஒரே இரவில் இந்தியாவை ’வல்லரசாக்க’ மக்களின் தலையில் இடியாய் இறக்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கம் நோடியா குடும்பத்தின் உணவங்களையும் விட்டு வைக்கவில்லை. அச்சமயத்திலும், போலீசு கும்பல் குறை வைக்காமல் ஓசிச் சாப்பாடு வாங்கித் தின்று சென்றது. நோடியா குடும்பத்தினர் உணவிற்கான பாக்கிப் பணத்தைக் கொடுக்குமாறு பல முறை கேட்டும் போலீசு கும்பல் கொடுக்க மறுத்தது.

வெறுத்துப் போன நோடியா குடும்பத்தின் மூத்த சகோதரரான திலீப் பாய், இனி தமது உணவகங்களிலிருந்து போலீசு நிலையத்திற்கு உணவு வழங்க வேண்டாம் என முடிவெடுத்து தமது குடும்பத்திற்குச் சொந்தமான எந்த ஒரு உணவங்களிலிருந்தும் உணவுப்பொருள்கள் வழங்க வேண்டாம் என தெரிவித்தார். கடந்த மார்ச் 14, அன்று ஓசிச் சோறு வாங்கிச் செல்ல திலீப் பாயின் கடைக்கு வந்த போலீசிடம், இனி போலீசு நிலையத்திற்கு உணவு வழங்குவதாக இல்லை எனவும், பழைய பாக்கி ரூ. 3,00,000 த்தை கொடுத்த பின்னரே உணவு வழங்க முடியும் எனவும் கூறி திருப்பியனுப்பிவிட்டார்.

கரீம் பாய் மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள்

மறுநாள் காலை சுமார் 10 மணியளவில் திலீப் பாயின் கடைக்கு வந்த போலீசு, அச்சமயத்தில் கடையில் இருந்த கரீம் பாயிடம் (திலீப் பாயின் சகோதரர்) “அய்யா, ஸ்டேஷனுக்கு அழைத்து வரச் சொன்னதாகக்” கூறி அவரை பாலிடானா போலீசு நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

இச்செய்தி அறிந்ததும், திலீப் பாய், அவரது மனைவி ஜெய்புன்பென் மற்றும் அவர்களது மகன்களான ஃபைசல் பாய், ஃபரூக் பாய், திலீப் பாயின் மற்றொரு சகோதரரான யூசஃப் பாய்  மற்றும் கரீம் பாயின் மூத்த மகனான ஃபெரோஸ் பாய் ஆகியோர் போலீசு நிலையத்திற்கு உடனடியாக விரைந்தனர். அங்கிருந்த போலீசு கண்காணிப்பாளர் வி.எஸ். மஞ்சாரியா, 40 வயது பெண்ணான ஜெய்புன்பென்னையும் சேர்த்து அங்கு வந்திருந்த  நோடியா குடும்பத்தினர் அனைவரையும் சிறைக் கொட்டடியில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன் பின்னர் அன்று மாலையில் கரீம் பாயைக் கைவிலங்கோடு, ஊர்வலமாக இழுத்துச் செல்ல முடிவெடுத்தது. அவரை போலீசு வாகனத்திற்கு முன்னால் கைவிலங்கோடு நடக்க வைத்து ஊர்வலமாக இழுத்துச் சென்றது. போகும் வழியில் அவர்களது உணவகத்தில் இருந்த கரீம் பாயின் இளைய மகனான நவாப்பையும் இணைத்துக் கொண்டு பாலிடானா நகரைச் சுற்றி அவர்கள் இருவரையும் இழுத்துச் சென்றது. அதன் பின்னர் அவர்களைப் போலீசு நிலையத்தில் அடைத்தனர். அன்று இரவு யூசுஃப் பாயையும், ஃபெரோஸ் பாயையும் மட்டும் விடுவித்து விட்டு, மற்ற அனைவரையும் போலீசுக் கொட்டடியில் அடைத்துச் சித்திரவதை செய்தது. அன்று இரவே சுமார் 11 மணியளவில், நோடியா குடும்பத்தினருக்கு எதிராக சங்வி என்ற குற்றவாளி ஒருவனை வைத்து பொய்ப்புகார் கொடுக்க வைத்து, பொய் வழக்கு பதிந்தது போலீசு. திலீப்பாயின் கடைக்கு அருகே, துணி வியாபாரம் செய்து வரும் சங்வியிடமிருந்து நோடியா குடும்பத்தினர் ரூ.2000-த்தை திருடிக் கொண்டதாகவும், குடும்பத்துடன் சேர்ந்து ஆயுதங்களோடு கொள்ளையில் ஈடுபட்டதாகவும் வழக்கைப் பதிவு செய்தது போலீசு. இந்த பொய்ப் புகாரை அளித்த சங்வி அதற்கு முன்னர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது 3 மாத பெயிலில் வெளி வந்திருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட திலீப் பாயின் மனைவியான ஜெய்புன்பென் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு , பாவ்நகர் குடும்ப மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவங்களில் ஈடுபட்ட போலீசு கும்பலின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு கருத்துத் தெரிவித்துள்ள பாவ்நகர் மாவட்ட எஸ்.பி. டிபாங்கர் திரிவேதி, இச்சம்பவம் குறித்து தமக்குத் தாமதமாகத் தான் தகவல் கிடைத்ததாகவும், விசாரணைக் கமிட்டி அமைப்பது குறித்து  ஆராய்ந்து வருவதாகவும் கூறி மழுப்பியுள்ளார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் திலீப் பாயின் மனைவி ஜெய்புன்பென்

திலீப்பாயின் இளைய சகோதரரான ராஜேஸ் பாய் இப்பிரச்சினையை உடனடியாக குஜராத் உயர்நீதி மன்றத்தில் ராகுல் சர்மா என்ற வழக்கறிஞரின் வாயிலாக வழக்குப் பதிவு செய்தார். கடந்த ஏப்ரல் 13 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.பி.பர்திவாலா, இவ்வழக்கு கும்பலாக ஆயுதங்களோடு கொள்ளையடித்தல் என்ற பிரிவின் கீழ் வராது எனக் குறிப்பிட்டு திலீப் பாய், கரீம் பாய், ஃபைசல் பாய், ஃபரூக் பாய் மற்றும் நவாப் நோடியா ஆகிய ஐவரும் அடுத்த 3 மாதங்களுக்கு பாலிடானாவிற்குள் நுழையக் கூடாது வரக் கூடாது என்றும் ஜெய்புன்பென் மட்டும் நகருக்குள் வரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார். விரிவான தீர்ப்பு வழங்கப்படாமல் இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தரவில், நோடியா குடும்பத்தினரை ஊர்வலமாக அழைத்துச் சென்றது குறித்தும், போலீசின் அத்துமீறல்கள் குறித்தும் சிறு  கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. அந்த அளவிற்கு குஜராத் அரசின் சீருடை அணிந்த கூலிப் படைக்கு உயர்நீதி மன்றமும் காவலாக நிற்கின்றது.

தற்போது நோடியா குடும்பத்தில் உள்ள ஆண்களில் பெரும்பான்மையானோர், நீதிமன்ற உத்தரவுப்படி வெளியூரில் வீடெடுத்து தங்கியிருப்பதால் அவர்களால் உணவகங்களை நடத்த முடிவதில்லை. கிட்டத்தட்ட அவர்களது  வாழ்வாதாரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டன.

திலீப் பாய் மற்றும் அவரது சகோதரர்கள் குடும்பம் வெகு நாட்களாக அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில், சுமார் 25 ஆண்டுகளுக்கு அவரது தந்தையும் தாயும் தான் அப்பகுதி கார்ப்பரேட்டர்களாக (நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பதவி) இருந்து வந்திருந்தனர். அந்த அளவிற்கு அப்பகுதியில் செல்வாக்கோடும், மக்களுடன் இரண்டரக் கலந்தும் வாழ்ந்து வந்திருந்தனர். ஆனால் தற்போது இச்சம்பவத்திற்குப் பிறகு மக்கள் மத்தியில் தலைகுனிவோடு வாழ வேண்டியிருப்பதாக்க் கூறியிருக்கிறார் நோடியா குடும்பத்தின் இளைய சகோதரரான ராஜேஷ் பாய்.

ஓய்வு பெற்ற இராணுவ சுபேதார் – மனித உரிமை போராளி – நல்லகாமன்

தமிழகத்தில் 1982-ம் ஆண்டு, வாடிப்பட்டி அருகே நல்லகாமன் – பிரேம்குமார் வழக்கினை ஒத்ததாக இருக்கிறது இவ்வழக்கு. நல்லகாமன் என்ற ஓய்வு பெற்ற இராணுவ சுபேதாரை வீடு காலி செய்யும் விவகாரத்தில் அப்பகுதி எஸ்.ஐ. பிரேம்குமார் அவரையும் அவரது மனைவியையும், அடித்து கைவிலங்கோடு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று சிறையில் அடைத்தார். பிரேம்குமாரை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர சுமார்28 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தினார் நல்லகாமன். தமிழகத்தின் நிலைமையே இப்படி என்றால், மோடி புகழ் ’போலி என்கவுண்டர் ஸ்பெசல்’ – குஜராத்தின் நிலைமையைப் பற்றி சொல்லவே தேவையில்லை.  திலீப் பாயும் அவரது குடும்பத்தினரும் இன்னும் எத்தனை ஆண்டுகள் சட்டரீதியாகப் போராடினால் நீதி கிடைக்கும் என்பது நீதித் துறைக்கு தான் வெளிச்சம்!! முதலில் நீதி கிடைக்குமா என்பதே கேள்விக் குறி!!

போலீசு அதிகாரி ப்ரேம் குமாருக்கு எதிரான வழக்கை 28 ஆண்டுகளாக நடத்திய அய்யா நல்லகாமன், அது குறித்துக் குறிப்பிடும் போது நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து சொத்துக்களை விற்று வழக்கு நடத்தியதற்கு பதிலாக அன்றே உலக்கையைக் கொண்டு அவனை அடித்திருந்தால் சில ஆண்டுகள் சிறையிலிருந்து விட்டு இந்நேரம் வெளியில் வந்திருப்பேன், சொத்துக்களாவது மிஞ்சியிருக்கும் என்று கூறினார்.

போலீசு கும்பலின் அராஜகங்களுக்கும் ஒடுக்குமுறைச் செயல்களுக்கும் துணை நிற்கும் நீதித்துறையை நம்பினால் சொத்துக்களை இழந்து 28 ஆண்டுகளோ, 58 ஆண்டுகளோ காத்திருக்க நேரிடும் சூழல் தான் இன்றும் நிலவுகிறது. இன்னும் சொல்லப் போனால் இன்று நிலைமை அதை விட மோசமாகி இருக்கிறது. அநீதிகளுக்கு எதிராக நீதி பெற வேண்டும் எனில், நல்லகாமன் கூறியது போலக் கையில் உலக்கையை எடுக்கிறோமோ இல்லையோ, நீதியை நிலைநாட்ட மக்களே அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதற்கான அவசியச் சூழல் இங்கு உள்ளது.

மக்களுக்கு நீதி வழங்கத் திராணியற்றதாக, முழுக்க முழுக்க ஊழல்மயமாகிப் போய், அழுகி நாறிப் போன நீதித்துறை, மக்களை அரித்துத் திண்ணும் போலீசு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என நமக்கு எதிராக இருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பு நமக்கு உதவப் போவது இல்லை. அது முழுக்க முழுக்க ஆளும்வர்க்கத்தின் எடுபிடி வேலைகளைச் செய்வதற்கான அமைப்பாகவே இருந்து வருகிறது. நமது உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும், சுயமரியாதையையும் நாமே பாதுகாப்பதற்கு மக்கள் அதிகார மன்றங்களை நிறுவுவது தான் நம் முன் உள்ள ஒரே வழி !!

– நந்தன்.

மேலும் படிக்க:
Denied Free Food, Gujarat Police Parade Restaurant Owner Across Town in Handcuffs, Arrest Family

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க