Thursday, December 5, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்மே நாள் சிலிர்ப்புகள் - துரை. சண்முகம்

மே நாள் சிலிர்ப்புகள் – துரை. சண்முகம்

-

மே நாளின் பாதம் பட்ட இடமெங்கும்  நகரம் சிவந்திருந்தது.  ஆவடியும் அப்படித்தான்.  அன்று, தொடர்வண்டி நிலையம் தொடங்கி பேரூந்து நிலையம் வழியாக செல்லும் திசையெங்கும் செங்கொடிகள் சிறகசைத்தன.  அந்த மாலைநேரம் சூரியன் மேற்கசையும் வானமும் சிவப்பின் வண்ணத்தில் சிலிர்த்தது.  “சிவப்பென்றாலே சிலருக்கு முகமெல்லாம் கருப்பாக மாறுது,  இளம் பிள்ளை நெஞ்சம் என்றும் மறவாது உடலெங்கும் சிவப்பு நிறம்தானே ஓடுது!” என்ற ஆந்திராவின் நக்சல்பாரி கவிஞன் சுப்பாராவ் பாணிக்கிரகியின் கவிதை போல அரசியல் உணர்வின் காட்சிகளில் மே நாள் இனித்தது.  எத்தனை தொழிலாளர்கள், எத்தனை தோழர்கள் தியாகத்தில் சிவந்தது இந்நாள்.  வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களின்  ரத்தநாளங்களில்  விடுதலை உணர்வு கொப்பளிக்கும் வீரத்திருநாள் அல்லவா இது!

மானுட மகிழ்ச்சிக்காக போராடும் தொழிலாளி வர்க்கத் தோழர்களை, கம்யூனிஸ்டுகளை காராகிரகத்தில் அடைத்தபோதும், அவர்களின் மே நாள் உணர்வுகளை யாராலும்   சிறைப்படுத்த முடியவில்லை.  செக்கோஸ்லோவேக்கியாவின் வீரப்புதல்வன் கம்யூனிச போராளி ஜூலியஸ் பூசிக்கை நாஜிக்கள் சிறைவைத்து சித்ரவதை செய்தபோதும்,  அடைக்கப்பட்ட சிறை இருளில் இருந்து அடைக்கப்பட முடியாத அவரின் மே நாள் நினைவுகள் மேலெழுந்தது!

சிறைப்பட்டிருந்தாலும்,  மே நாள் என்றவுடன் அவரது அரசியல் உணர்வுக்கு சிறகு முளைத்தது,  “மே முதல் நாள்!  இந்த நன்னாளில் பொழுது புலர்வதற்குள் நாங்கள் எழுவோம்.  கொடிகளை  தயார் செய்வோம்.  இந்த நேரத்தில் மாஸ்கோவில்,  மே தின அணிவகுப்பில் செல்லும் பொருட்டு முதல் வரிசையினர் ஆயத்தமாகி, தத்தம் இடத்தில் தயாராகப் போய் நிற்பர்.  இன்றைக்கு இந்த நேரத்தில் மனித சுதந்திரத்தைக் காப்பதற்காக  நடைபெறும் மகத்தான இறுதிப்போரில் லட்சோபலட்சம் மக்கள் சமர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.  நான் அவர்களில் ஒருவன்.  அவர்களில் ஒருவனாகவே என்றும் இருப்பேன்.  சுதந்திரத்திற்கான இறுதிப்போரில் ஒரு வீரனாக இருப்பது எவ்வளவு மகத்தான கொடுப்பினை?”  என்று மே நாளின் லட்சியக் வேட்கையில் பூசிக் மகிழ்வார்.  சிக்காகோவோ,  செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கோ, சென்னை ஆவடியோ இடங்கள் தான் வேறு,  சிவப்பின் வர்க்கத்துடிப்போ ஒன்று.  “போராடு… செங்கொடி ஏந்தி போராடு..”  என்று  முழங்கிட்டு துவங்கிய ஆவடி மே நாள் நிகழ்வுகள், இந்த வரலாற்றின் ‍தொடர்ச்சியாய்,   பார்த்த அனைவரையும் தனது பாட்டாளிவர்க்க விடுதலை முழக்கத்தில் இழுத்துக்கொண்டது.

சிக்காகோவோ, செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கோ, சென்னை ஆவடியோ இடங்கள் தான் வேறு, சிவப்பின் வர்க்கத்துடிப்போ ஒன்று. “போராடு… செங்கொடி ஏந்தி போராடு..” என்று முழங்கிட்டு துவங்கிய ஆவடி மே நாள்

பேரணி தொடங்கிய இடத்தில்,  ஒரு நாளின் மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாக உதட்டில் குவித்திருந்த அந்த மூத்த தோழரை பார்க்க முடிந்தது.  சி.பி.எம்.  அமைப்பிலிருந்து விலகி வந்த கடந்தகால செயல்பாட்டாளர் அவர்.  ‘மே நாள் வாழ்த்துகள் தோழர்!’ என்று இறுகப்பற்றிய கரத்தில் என்ன ஒரு வர்க்கப்பாசம்!  இதயத்தில் பைபாஸ் ஆபரேசன் செய்து முடித்து, சில மாதங்கள்தான் ஆகியிருக்கும் அவருக்கு.  என்னங்க பேரணியில் நடக்க முடியுமா? என்று நான் அக்கறை காட்ட, ‘பைபாசில்’ நடந்து வர்க்கத்துக்காக முழக்கமிடும் உற்சாகத்தில்,  பைபாஸ் ஆவது?  ஆபரேசனாவது? வர்க்கத்துக்காக வாளாவிருப்பதுதான் நோய்..  என்பதுபோல் அவரது உணர்ச்சி நடை அரசியல் காட்டியது.  பாடுபட்டு பாடுபட்டு பஞ்சடைந்த விழிகளும்,  பசி நிரம்பிய வயிறுகளும் போராடிப் போராடி வாங்கித் தந்த உரமான நாள் அல்லவா இந்த மே நாள்!  ஒருவர் போயின் ஒருவர் வருவர்,  ஒருவர் மாயின் ஒருவர் எழுவர், எனும் கம்யூனிச கால் தடத்தின் அரசியல்  நடையில் ஆவடி வீதிகள் ஆக்சிஜன் பெற்றன..

கக்கத்தில் இரண்டு குடம், கைகளில் இரண்டு குடம் என்று எதிர்பட்ட பெண்ணிடம் எப்படி மே நாள் துண்டறிக்கைய‍ை கொடுப்பது என்று தயங்கிய தோழரிடம்,  “இந்த குடத்துல போடுங்க, தண்ணிதான் இல்ல,  இதாவது ரொம்பட்டும்!”  என்று போகிற போக்கில் அந்த அம்மா உதிர்த்த வார்த்தைகள் இலக்கியமா! இலட்சியமா!  மக்களிடம் எதார்த்தத்தில் வெளிப்படும் மகத்தான உணர்வுகளை எந்த இலக்கியவாதியின் கற்பனையில் படைக்க முடியும், மே நாள் பேரணியில் கிடைத்த மேலான அனுபவம் இது.  அந்த தோழரின் நடவடிக்கை ஒரு துண்டறிக்கையை கொடுப்பது ‍போல தெரியவில்லை.  கையில் இருக்கும் குழந்தையை இன்னொருவர் கைக்கு மாற்றித்தரும் உயிரோட்டமானதாக இருந்தது.  உடல்நலம் குன்றிய நிலையிலும் அந்த மூத்த தோழரின் மே நாளின் லட்சிய உணர்வுகளை மக்களிடம் கையளிக்க காட்டிய உற்சாகம் யாவரும் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று!

மக்களிடம் பழக ஒரு கம்யூனிஸ்டுக்கு என்ன கூச்சம்.  முன்பின் தெரியாதவர்களிடம் ”தம்பி இந்தாங்க நோட்டீச படிச்சு ஆயாகிட்ட சொல்லுங்க, அம்மா படிச்சு பாத்துட்டு வீட்டுக்காரர் வந்தோன்ன கொடுங்க”.. என்று அவர் துண்டறிக்கையை ஒவ்வொருவரிடமும் கொடுத்தவிதம் வர்க்கம் கலந்த வாஞ்சை அது.  நான் சற்று அவரை உற்றுப் பார்த்து ரசிக்க,  “என்ன தோழர், எல்லாமே நம்ப வர்க்கம்தான்,  ஏழைங்கள இப்ப நாம ஏழைன்னு உணர வைக்கவே போராடவேண்டி இருக்கு!  ஒவ்வொருவரும் தன்ன ஒரு முதலாளின்னு நெனைக்கும்படி முதலாளித்துவம் மயக்கி வச்சிருக்கு!  நீயும் உழைக்கும் வர்க்கம்னு இந்த  மாயச்சுவரை உடைக்கறதுக்கும் நாம போராட வேண்டியிருக்கு,  இந்த துண்டறிக்கை அதச்செய்யும்! என்று அவர் மக்களிடம் தாவித் தாவி இன்முகத்தோடு தருவதில் நாம் பெறுவதற்கும் பல கண்ணோட்டங்கள் இருக்கிறது.  மே நாளில் கலந்து கொண்டால் மட்டும் போதுமா? மே நாளை மக்களிடம் கலக்கும் மகோன்னத கம்யூனிச  உழைப்பு  வேண்டும். அந்த போல்சவிக் புத்துணர்ச்சியை ஆவடியில் காட்டியது கம்யூனிசம்.  பொங்குமாங்கடலின் ஆழத்தை தன்னடக்கத்தோடு தரையில் தழுவிக்கொள்ளும் உணர்ச்சி அது.  கட்டாயம் நாம் கைகொள்ள வேண்டிய உணர்ச்சியும் அது!

பேரணியில் உற்சாகமாக பெண்கள்

நூற்றுக்கணக்கில் தோழர்கள்,  தொழிலாளர்கள், பீறிட்டெழும் முழக்கத்தில் கைகளை உயர்த்தும் பெண்கள், பறை இசையுடன் அசைந்தாடும் சிறுவர்கள், செங்கொடிகள், பதாகைகள்.. வீதி இருமருங்கிலும் வியப்போடு பார்த்த விழிகள் முழக்கத்தின் முடிவில் உவப்போடு கலந்தன.  “மக்களின் வாழ்வுரிமையைக் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தை தகர்த்திடுவோம்!  பார்ப்பன இந்து மதவெறி பாசிச ஆர். எஸ். எஸ். – பா.ஜ.க. கும்பலை மோதி வீழ்த்துவோம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!  பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கட்டியமைப்போம்!  என்ற மையமான முழக்கத்தின் வீச்சோடு ‍பேரணி நியைவுற்ற ஆவடி நகராட்சி கட்டிடம் அருகே நிகழ்ந்த ஆர்ப்பாட்ட மேடையை நோக்கி மக்களின் கவனம் குவிந்தது.  மே நாள் வாழ்த்து சொன்ன மோடி அரசின் அருகதைக்கு உகந்த அரசியல் பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள் பேச்சாளர்கள்.  கருத்துரையில் கலந்துவிட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சவாரி போறியா என்று கேட்ட சக தொழிலாளியிடம் இல்ல  தோ பாரு சரியான போடு! இவுங்க என்னா கம்யூனிஸ்டு? என்று ஆர்வம் மிக கேட்க,

ஆவடி மேதினப் பேரணியின் ஒரு பகுதி

அருகே வந்த தோழர் ஒருவர் அமைப்பை பற்றி விளக்கினார்.  ஆயிரக்கணக்கில் நாற்காலிகளைப்  போட்டாலும் மக்களால் அனாதையாக்கப்படும் ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் மத்தியில்,  உழைப்பின் வலி மறந்த பல தொழிலாளர்கள் நெடுநேரம் நின்றுகொண்டே தமக்கான வர்க்க அரசியலில் ஒன்று கலந்தனர்.  பேரணி மட்டுமல்ல, ஆர்ப்பாட்ட மேடை நிகழ்வுகள் வரைக்கும் கூடி நிற்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் அயராது பணியாற்றிய பெண் தோழர்களை பார்த்து இருவரில் ஒருவர், எங்க போனாலும்  ஒரு டம்ளர் தண்ணீ கேட்டா மதிச்சு கொடுக்க ஆளில்ல,  இங்க பார்த்தா அசறாம அந்த பொண்ணு போய் எடுத்து வந்து எடுத்து வந்து அலுப்பு பாக்காம தண்ணி தருது!  என்று வியக்க, ஏய்! சிவப்பு சட்ட  ஆளுங்கடா இவங்க என்று ஒற்றை வரியில் மக்களுக்கான உழைப்பு யாரிடம் கிடைக்கும் என்பதை புரியவைத்தார் இன்னொருவர். கம்யூனிசம் என்பது அரசியல் சித்தாந்தம் மட்டுமல்ல ஒரு புதிய சமூக அமைப்பின் பண்பாட்டின் தரம் என்பதை புரியவைக்கும் உழைப்பின் உரைகல் இது.  மே நாள் உருவாக்கும் அரசியல் பயன் மகிழ்ச்சியில் இதுவும் ஒன்றுதான்.

மோடி, எடப்பாடி, பன்னீரு.. என சிறப்புரை நடப்பு மக்கள் விரோத ஆட்சியாளர்களின்,  கட்சிகளின் யோக்கியதையை கிழித்து தொங்கவிட அங்கு செட்டு சேர்ந்திருந்த அ.தி.மு.க. கரைவேட்டிகளில் ஒருவர் என்னன்ணே! இந்த வாங்கு வாங்குறாங்க, என்ன குரூப்பு! என்று ‘அண்ணனை’ கேட்க, ஏய்! இவங்கதான்டா டாஸ்மாக்க உடைக்கிறவங்க..  மக்கள் அதிகாரம்னு பாட்டெல்லாம் பாடி அரஸ்ட் ஆனாரு பாரு அதெல்லாம் இவங்கதான் பயப்பட மாட்டாங்க.. பின்னே! சரியாத்தானே பேசுறாங்க.. என்று போராடுற குரூப்பு என விளக்கினார் அண்ணன்.  மே நாளின் இலக்கு என்பது குறிப்பிட்ட பொருளாதார கோரிக்கைகள் மட்டுல்ல,  நிலவும் முதலாளித்துவ அரசியலமைப்பிற்கு மாற்றாக பாட்டாளிவர்க்கம் தனது அதிகாரத்தை நிறுவிக்கொள்ளும் அரசியல் தலைமை கொடுப்பது என்பதும்தான்.. அதை அரசியில் விவாதக்களத்தில் எழுப்பும் விதத்தில் மே நாளின் நிகழ்வு பங்காற்றுவதை பார்க்க முடிந்தது.

நிகழ்ச்சிகள் முடிந்து புறப்பட்டு சென்றுக்கொண்டிந்த போது ஒரு தள்ளுவண்டிக்காரர்  என்னங்க அதுக்குள்ள முடிஞ்சிடிச்சா என்றார் ஏக்கத்தோடு.  இது வெறும் கூட்டம் தொடர்பான ஏக்கம் மட்டுமல்ல.  இந்தக் ‘கூட்டம்’ நமக்குத் தொடர்பானது எனும் வர்க்க உணர்விலிருந்து பிறக்கும் ஏக்கம் அது!  அனாதையாக்கப்பட்டுள்ள  உழைக்கும் மக்கள் காணத்துடிப்பது கம்யூனிசம் என்பதற்கான ஏக்கப்பார்வை அது!   மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பது மட்டுமல்ல,  மக்களின் தேவைக்குரியவர்களாக நாம் என்ன செய்ய போகிறோம்..  எனும் சிந்தனையில் என்னுள் மே நாள் தொடர்ந்தது…

– துரை. சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க