Friday, December 13, 2024
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்மதுரை : டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம்

மதுரை : டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம்

-

துரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ் உரப்பனூர் இந்திரா காலனியைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவினை கேலி செய்யும் விதத்தில் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடையை இந்திரா காலனி குடியிருப்புக்குள் கொண்டு சென்று அமைத்தனர்.

ஊருக்குள் இந்தச் சனியன் வந்ததால் மக்களே தோழர்களை அழைத்தனர். 12.4.2017 அன்று கடைக்கு போகும் பாதையில் முட்களை வெட்டிப்போட்டு அடைத்து பகுதி மக்கள் மறியல் செய்தனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த காவல்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் ஏப்ரல் இறுதி வரை கால அவகாசம் கேட்டு, மே 1-ம் தேதிக்குள் கடையை மூடிவிடுவதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர்.

மே 1-ம் தேதி அடைக்கப்பட வேண்டிய கடை அடைக்கப்படவில்லை, டாஸ்மாக் அதிகாரிகளின் திமிர்த்தனத்தைக் கண்டு கொதிப்படைந்த மக்கள் மீண்டும் மே 2 அன்று காலையிலேயே தோழர்களை அழைத்து கடையை இன்று நடத்த விடக்கூடாது என்று உறுதியாக நின்றனர். தகவலறிந்த காவல்துறை 100 -க்கும் மேற்பட்ட  காக்கிகளோடு வந்து அச்சுறுத்தியது. போலீசுக்கு அஞ்சாமல் பெண்கள் உறுதியாக நின்று சரமாறியாக கேள்வி எழுப்பியதால் காவல்துறை பின்வாங்கியது. உடனே நேரடியாக உதவி மாவட்ட ஆட்சித் தலைவரை அழைத்தனர்.

“மக்களோடு, மக்கள் அதிகாரம் தோழர்கள் உள்ளதால் தொடர்ச்சியாக போராட வாய்ப்பு உள்ளது. எங்களால் கடைக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக கடையை மூடுவதாக அறிவித்தனர். அதன் பின்னரே மக்கள் கலைந்து சென்றனர். மனுகொடுப்பது, கெஞ்சுவது தீர்வாகாது, போர்குணமிக்க போராட்டமே தீர்வு என்பதற்கு இந்த போராட்டம் ஒரு சான்று. தொடர்ச்சியான மக்கள் பிரச்சனைக்கும் இணைந்தே போராடுவோம் என்று மக்கள் உறுதியளித்தனர்.

இதே போல் உசிலை வட்டம் முண்டுவேலம்பட்டி அருகில் புதிதாக திறக்கவுள்ள டாஸ்மாக் கடைக்கு கட்டிட வேலை நடைபெற்று வந்தது. இதை அறிந்த மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி அவர்கள் மக்களைத் திரட்டி ஊர்ப்பொதுமக்கள் சார்பாக, கடையைத் திறந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மனு அளிக்கப்பட்டது. அதன் விளைவாக அந்தக்கடையையும் திறக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.


( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருமங்கலம் பகுதி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க