privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 2

தமிழகமெங்கும் மே நாள் போராட்டங்கள் – செய்தித் தொகுப்பு 2

-

சென்னை ஆவடி

திருவள்ளூர் மேற்கு மாவட்ட, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் ஆவடி பகுதியில் நடைபெற்றது. இப்பேரணி, இராமரத்னா திரையரங்கம் அருகில் இருந்து துவங்கி குடியிருப்பு பகுதிகள் வழியாக ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவடைந்தது. இதில் சென்னை பகுதி மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்த தோழர்களுடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை மற்றும் இணைப்பு சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் என மொத்தம் 600 பேர் கலந்துக் கொண்டனர்.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன், துவங்கிய பேரணியை திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட தலைவர் தோழர் சரவணன் துவக்கி வைத்து மே தின தியாகிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். இப்பேரணியில் சிறுநகர் இசை சமர் கலைக்குழுவின்  பறையிசையுடன், விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணி காமராஜர் நகர், எம்.ஜி.ஆர் சாலை மற்றும் TNHB குடியிருப்பு வழியாக வீறுநடை போட்டு ஆவடி, நகராட்சி அலுவலகம் அருகில் முடிவடைந்தது.

ஆவடி, நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் மு.முகிலன் தலைமை தாங்கினார். தலைமையுரையில் மே தின தியாகிகளது கோரிக்கையான 8 மணிநேர வேலை உரிமை இன்று வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தரம் கோரும் உரிமை ஆகிய அனைத்தும் சட்டமாக மட்டுமே உள்ளன. தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற எல்லா உரிமைகளையும், சட்டங்களையும் முதலாளிகளின் நலனுக்காக இன்று மத்திய அரசு காவு கொடுக்கிறது. தமிழகமே போராட்ட களமாக மாறி வருகிறது. எல்லா போராட்டங்களுக்கு அடிப்படையான மறுகாலனியாக்க நடவடிக்கையை தகர்க்க வேண்டும் என உரையாற்றினார்.

மேநாள் எழுச்சி உரையாற்றிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் அவர்கள், மோடி அரசின் மறுகாலனியாக்க நடவடிக்கையையும், இந்து மதவெறி பாசிச நடவடிக்கைகளையும் ஒவ்வொன்றாக துலக்கமாக எடுத்து விளக்கினார். தமிழக அரசு எப்படி செயல்படாத அரசாகவும், விவசாயிகளுக்கும், மாணவர்கள், மீணவர்கள் என அனைத்து மக்களுக்கும் இழைத்த துரோகத்தையும் பட்டியலிட்டு உரையாற்றினார். இந்த அரசை தூக்கியெறிந்து, உழைக்கும் மக்களுக்கான புதிய ஜனநாயக அரசை நிறுவ வர்க்கமாக இணைந்து புரட்சிகர தலைமையின் கீழ் அணித்திரண்டு போராட வேண்டும் என அறைகூவி உரையை நிறைவு செய்தார். ஆர்ப்பாட்டத்தை நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் சூழ்ந்து நின்று கூட்டத்தை கவனித்தனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக மே நாள் முழக்கமிட்டு, பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மேநாள் பேரணி – ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்
தொடர்புக்கு: 94453 68009

***

ஒசூர் புஜதொமு கிளை சங்கம் – கமாஸ் வெக்ட்ரா

மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தைத் தகர்த்திடுவோம்!
பார்ப்பன இந்துவெறி பாசிச ஆர். எஸ். எஸ் – பா.ஜ.க கும்பலை மோதி வீழ்த்துவோம்!
முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைக் கட்டியமைப்போம்!

  • என்ற முழக்கத்தின் அடிப்படையில் மே நாளில் 01.05.2017 காலை 10.30 மணியளவில் ஒசூரில் உள்ள கனரக வாகன உற்பத்தி நிறுவனமான கமாஸ் வெக்ட்ரா ஆலையில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் கிளைச் சங்கத்தின் சார்பாக அவ்வாலை வாயிலில் கொடியேற்றி மேதின தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இவ்வாலையின் கிளைச்சங்க தலைவர் தோழர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இவ்வமைப்பின் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கொடியேற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார். சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்கொண்ட முழக்கங்களை முன்வைத்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
ஒசூர்

***

ஒசூர்

மே நாளில் 01.05.2017 மாலை 4.30 மணியளவில் ஒசூர் பழைய நகராட்சி அலுவலம் அருகில், புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இவ்வமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் சிற்றுரையும், பு.ஐ.தொ.மு.வின்  மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையும் ஆற்றினர். இறுதியாக, தோழர் இ.கோ.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார். தொழிலாளர்கள், பெண்கள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துக்கொண்டனர்.

தோழர் செந்தில் தனது உரையில், “1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது . பல லட்சகணக்கான தொழிலாளர்கள் உயிரை கொடுத்து போராடி 8 மணி நேர வேலை பெற்றனர் . ஆனால் இப்போது அந்த போராடி பெற்ற உரிமை நமது கை நழுவி மீண்டும் பழைய முறைக்கு செல்கிறது. பல நிறுவனங்களில் 12 மணி நேர 14 மணி நேரம் என வேலை செய்கிறோம். 8 மணி நேரத்திற்கு தர வேண்டிய சம்பளத்தை 14 மணி நேர வேலைக்கு தருகிறான் முதலாளி .. மேதினத்தில் இந்த மனித கொடுமைகளை , உழைப்பை கொள்ளை அடிப்பதை எதிர்த்து 8 மணி நேரம் போராட வேண்டுமே ஒழிய… இது கொண்டாடப்பட வேண்டிய தினமில்லை… அந்தவகையில் போராட்ட நாளாக அறிவித்து நமது உரிமைகளை பறித்தெடுக்கும் வகையில் நாம் ஒன்றிணைந்துப் போராடுவோம்” என்றவகையில் அறைகூவிப் பேசினார். அடுத்ததாக, பள்ளிச்சிறுமிகளான நக்சல்பாரி, செஞ்சுடர் இருவரும் புரட்சிகர பாடல்களை பாடினர். குறிப்பாக, “கஞ்சி ஊத்த வக்கில்லை என்னடா கவர்மெண்டு” என்ற பாடல் அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தோழர் பரசுராமன் தனது சிறப்புரையில், ” மே 1 உலகத் தொழிலாளர் தினம். 8 மணி நேர வேலை உரிமை நிலைநாட்டப்பட்ட நாள் தொழிலாளர் வர்க்கத்தின் அரைநூற்றாண்டு கோரிக்கை போராட்டம் சிகாகோவில் உயிர் தியாகத்துடன் மேநாள் வரலாறு உருவானது. போராடிப்பெற்ற 8 மணிநேர வேலை உரிமை உலகமயமாக்கல் கொள்கையால் நசுக்கப்படுகிறது.

உலகமயமாக்கல் கொள்கை உலகம் முழுமைக்கும் 167 நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல நாடுகளில் மக்கள் வாழ்வையும் இயற்கை வளத்தையும் சூறையாடிவிட்டது. கிரீஸ் திவாலிகிவிட்டது. பிரிட்டன் வெளியேறுகிறது. அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் முற்றுகைப்போராட்டம். சுரண்டுவது சூறையாடுவது உலகமயக் கொள்கையின் நோக்கம் என்று தெளிவாகிவிட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சிறு தொழில் புரிவோர் வாழ்வும் பறிக்கப்படுகிறது.

இன்று இந்தியாவில் கொள்முதலிலும் நியாயமான விலை இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாத தொழிலாக மாற்றிவிட்டது இந்திய ஆளும் வர்க்கம். சில்லறை வர்த்தகத்தை கைப்பற்றி கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயத்தை கைப்பற்றிட திட்டமிட்டு செயல்படுகிறது. இதற்கு நாடாளுமன்ற ஓட்டுச்சீட்டு அரசியல் துணைநிற்கிறது. கடந்த 11 – ஆண்டுகளில் 47 – லட்சம் வரிச்சலுகை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மோடி அரசுமட்டும் 2 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்கியுள்ளது. இந்த ஆளும் வர்க்கத்தின் சட்டம் ஒழுங்கு, அதிகாரம் மக்களுக்கு எதிரானது. கார்ப்பரேட்டுக்கு நாட்டை தாரைவார்க்கப்படுவதில் காங்கிரசுக்கு பி.ஜே.பி சளைத்தவை அல்ல. இதில்  ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பல் தனது கார்ப்பரேட் சேவையை மறைக்க இந்து மதவெறி, சாதிவெறி அரசியல் திட்டமிட்டு பரப்புகிறது.

இந்த நாடாளுமன்றம் சட்டமன்றம் நீதிமன்றம் போலீசு இவற்றின் நோக்கம் நமது நாட்டை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கு விற்பதாகும். இவர்களின் கொள்கையையும் அதிகாரத்தையும் தூக்கியெறிய இந்த மே நாளில் நாம் உறுதியேற்போம். என்று பேசினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தொடர்புக்கு -9788011784. ஓசூர்.

***

தேனி மாவட்டம்

தேனி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணியின் சார்பில் போடி நகரில் 01-05-2017 அன்று மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போடி நகரச் செயலர் தோழர். கணேசன் தலைமையில் பறை முழக்கத்துடன் துவங்கிய ஊர்வலமாகச் சென்று இறுதியில் கூடலூர் கிளைச் செயலாளர். தோழர். இராசேந்திரன் அவர்கள் அமைப்புக் கொடி ஏற்றிவைத்தார்.

பின்னர் மாலை 6 மணிக்குத் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில், தோழர்கள் பாக்கியராஜ், சேகர், தாலுக்கா செயலர் முருகன் ஆகியோர் மே தினத் தியாகிகள் பற்றியும், அவர்கள் வழியில் விவசாயிகள் போராட வேண்டிய அவசியம் பற்றியும் உரையாற்றினர்.

இறுதியாகப் பேசிய மக்கள் அதிகாரம் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், “மே தினத் தியாகிகள் போல உலகமெங்கும் உழைப்பாளிகள் போராடிப் பெற்ற உரிமைகள் எல்லாம் இன்று கார்ப்பறேட்டுகளின் நலனுக்காக மோடி அரசு அழித்துவருகிறது! ரேசன் பொருள்கள் முதல் டாஸ்மாக் பிரச்சனைகள் வரை கட்சிகளைக் கடந்து, நேரடியாக மக்கள் திரண்டு போராடாமல் தீர்க்க முடியாது என்பது நிதர்சனமாகி வருகிறது. இத்தகைய போராட்டங்களை விரிவாக முன்னெடுத்துச் செல்வதுதான் நாம் மே தினத் தியாகிகளுக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும்” என்று பேசினார்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
தேனி மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க