Friday, December 13, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்திருச்சியில் மே தின பேரணி : செய்தி - படங்கள்

திருச்சியில் மே தின பேரணி : செய்தி – படங்கள்

-

திருச்சியில் மே தின பேரணி
போராடு…ஒன்றிணைந்துபோராடு,  செங்கொடி எந்திபோராடு!

சிக்காக்கோவில்1886-ம் ஆண்டு கோடானு கோடி பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகளுக்குகாக போராடி தங்கள் இன்னுயிரை ஈர்ந்த தொழிலாளிகளின் நினைவாக உலகம் முழுவதும் மே முதல் நாள் உலகதொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகளின் சார்பாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை 5 மணியளவில் மரக்கடை பகுதியிலிருந்து பறைமுழக்கத்துடன் பேரணி தொடங்கியது. ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் கோபிநாத் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி பறைமுழக்கத்தோடு முன்னேறி செல்ல இளம்தோழர்களின் நடனம் பார்வையாளர்களைவெகுவாக கவர்ந்தது. தொழிலாளர்வர்க்கத்தின் கோரிக்கைகள் குறித்தும், இந்தியாவில் இன்று தொழிலாளர்களின் நிலைகுறித்தும், அரசின் பாசிச நடவடிக்கையை அம்பலப்படுத்தும் வகையிலும் “எல்லாமே கார்ப்பரேட்டுக்குனா என்னாமயித்துக்கு கவர்மெண்ட்டு”  முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சாலையின் இருபுறங்களிலும் உள்ள மக்கள் ஆர்வமாக பிரசுரங்களை வாங்கிபடித்து தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். சுமார் ஒன்றரை மணிநேரம் பேரணி சென்றது.

சரியாக 7 மணியளவில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. பாய்லர் ப்ளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலர் தோழர் சுந்தரராசு அவர்கள் தலைமையேற்று பேசுகையில் “இந்தியா முழுவதும் RSS-BJP ன் பாசிச ஆட்சிக்கு எதிராக பல்வேறு மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அப்போராட்டத்தை தனித்தனி பிரச்சினைகளாக பிரித்து போராட்டத்தின் தன்மையை சீர்குலைக்க முயல்கிறது RSS-BJP கும்பல். தனியார்மய, தாராளமய, உலகமய, மறுகாலனியாக்க கொள்கைகள் இன்று விவசாயிகள், தொழிலாளர்கள், சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களை பறித்து வருகிறது. இதைமுறியடிக்க வேண்டுமெனில் போராடக்கூடிய மக்கள் ஒன்றிணைந்து போராடவேண்டும், செங்கொடி ஏந்தி போராட வேண்டும்.” என்றார்.

அவரைத்தொடர்ந்து மக்கள் கலைஇலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலர் தோழர் ஜீவா கண்டன உரையாற்றுகையில் “இது உழைப்பாளர்களின் தினம். 130 ஆண்டுகளுக்கு முன் தொழிலாளர்கள் தங்கள் உதிரம் சிந்தி உரிமைகளை பெற்றெடுத்த நாள்.  ஆனால் இன்று தொழிலாளர்களின் நிலை இதை கொண்டாடக்கூடிய நிலையில் இருக்கிறதா ? உரிமைக்கேட்டு போராடவேண்டிய தொழிலாளியை, வேலைப்பிச்சை கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளியிருக்கிறது முதலாளித்துவம். இன்று சாரயக்கடைக்கு எதிராகபோராடிக் கொண்டிருக்ககூடிய மக்கள், எந்தஅரசியல் கட்சிகளையும் நாடாமல்தன்னெழுச்சியாக தாமாகவே அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு போராடுகிறார்கள். அதுதான் விடுதலைக்கான வழி.” என்றார்.

அவரைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் பொருளாளர் தோழர்.செல்வராஜ் பேசுகையில் “இந்தஅரசு தான் எல்லாருக்கும் வேலை, உடை, இருப்பிடம், சுகாதாரம், ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் செய்யனும், ஆனா அது செய்யறது இல்ல, சரி நாமே பாத்துக்கலாம்னா அதையும் விட்டுவைக்கமாட்டேங்குது. கார்ப்பரேட் முதலாளிகளுடைய லாபத்துக்காக சட்டத்துக்கு மேல சட்டத்தைபோட்டு ஒட்ட சுரண்டுது. இத நம்பி வாழ முடியாது. இதமாத்தனும்னா பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தான் ஒரே தீர்வு” என்றார்.

அடுத்ததாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின்பொருளாளர் தோழர் பிரித்திவ் பேசுகையில் “இன்றைய சூல்நிலையில் கல்வியை கார்ப்பரேட்மயமாகவும், காவிமயமாகவும் மாற்றுவதற்க்காக RSS-BJP கும்பல் முயற்சி செய்து வருகிறது. இந்தியாவுல பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் கவர்மெண்டு கக்கூஸ விட கேவலமாகத்தான் இருக்கு. இதுல இந்தியாவின் கல்வி தரத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த போகுதாம் இந்த வானரக்கூட்டம். அடுத்து சாமானியன் யாரும் உயர்கல்வியில் நுழையவேக்கூடாதுனு நீட்நுழைவுத்தேர்வு கொண்டு வர்றான். ஏற்கனவே இந்தியாவுல 93% MBA படிச்சவன்,  80%  இன்ஜினீரிங் படிச்சவனுக்குவேலை இல்லை. ஆனால் தனியார் பொறியியல் மற்றும் மேலாண்மைகல்வி நிறுவனம்பெருகிக்கொண்டே போறதுக்கு காரணம் என்ன ? வேலையில்லா பட்டாளத்தை உருவாக்கி, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவான கூலி உழைப்புக்கு இளைஞர்களை உருவாக்கி தருவதுதான் அதன் நோக்கம். அனைவருக்கும்கல்வி, அனைவருக்கும் வேலை வேண்டுமெனில்அது பகத்சிங் பாதையான புரட்சியால்தான் சாத்தியம்” என்றார்.

சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத்தலைவர் தோழர் ராஜா பேசுகையில் இந்த சமூகம் ஒரு வரலாற்றுக் கடமையை நினைவு கூறுகின்றது  இந்தியாவில் தொழிலாளி வர்க்கம்  போராடி  பெற்ற உரிமைகளை பறித்தெடுத்துள்ளது. அதனை மீட்டெடுக்கும் வகையில் இன்றைய மே நாள் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. உதாரணமாக ஐல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் எந்த அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும்    நம்ப வில்லை. கடைசி மூன்று நாட்கள் மக்கள் அதிகாரத்தின் பாடல்கள் மெரினா கடற்கரையெங்கும் பற்றி பரவியது. சீப்பை மறைத்தால் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என அரசு நினைத்தது அது பலிக்கவில்லை. மாணவர்கள் இளைஞர்கள் சொந்த காலில் நின்று போராடினார்கள்; வெற்றியும் பெற்றார்கள்.

கீழடியில் நடந்த தொல் பொருள் ஆய்வில் BJP யின் துரோகத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஆய்வை பார்வையிட வந்த தமிழிசையை   விரட்டி அடித்துள்ளனர். டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் எங்களுடைய அமைப்புதான் துவங்கி வைத்தது. சில இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராடுகின்றார்கள்.  யாரையும் நம்பவில்லை.  இன்று டெல்லி தமிழகத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றது.   மோடி தமிழக மக்களின் போராட்டத்தை பார்த்து மிரண்டு போகின்றார். மத்திய அரசின் சொத்து ரயில்வே அவற்றின் ரயில் பெட்டிகள் தண்டவாளங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இதனால் குட்செட் தொழிலாளர்கள் வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது. BHEL போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமல்ல உங்கள் நிழலை தவிர உங்கள் உயிரை தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை அனைத்தும் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டார் மோடி. இந்த அரசு நிர்வாக அமைப்புகள் நமக்காக இல்லை என்பதால் இந்த மே நாளில் நாம் இங்கு கூடியிருக்கின்றோம். நமக்கான அரசமைப்பை நாமே உருவாக்கிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என கூறி தனது உரையை முடித்தக்கொண்டார்.

அடுத்தாக அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தோழர் பழனிச்சாமி பேசுகையில் அரசு வேலை தரவில்லை என்பதால் MA,BA,BE  படித்த இளைஞர்கள் சொந்தமாக சிறு முதலீடு போட்டு தரைக்கடை போட்டால் அதற்கும் வேட்டு வைக்கின்றது இந்த அரசும் போலீசும். மக்களுக்கு தண்ணீர் தர வக்கில்ல அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியல. இதனால எந்த தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டாலும் நாங்கள் அவர்களுக்காக போராடுகின்றோம். பெரிய பெரிய கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கின்ற போலீசும் கமிஷ்னரும் எங்களை தெருவோர வியாபாரி என அடையாள அட்டை கொடுத்து ஓயாமேரி சுடுகாட்டுக்கு விரட்டப் பார்க்கின்றார். சென்னை சில்க்ஸ்சையும் போத்திசையும் சாரதாசையும் ஓயாமேரிக்கு விரட்டுவார்களா? முன்பெல்லாம் திருடனை பார்தது பயப்படுவோம் இன்று போலீசை பார்த்து பயப்பட வேண்டியுள்ளது. ட்ராபிக் போலீசு ஒரு பக்கம் இன்னொரு பக்கம் எல்லன்டோ என அடுத்தடுத்து வசூல் வேட்டை நடத்துகின்றனர். அன்றாடம் திருச்சி போலீசு  10 ஆயிரம் கல்லாக்கட்டுகின்றது.  இந்த கேவலத்தை கைவிடுங்கள் எங்களை போன்ற வியாபாரிகளை அடையாள அட்டைகளை காட்டி மிரட்டாமல் வாழவிடுங்கள் என முடித்தார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய மகஇக தோழர்  கோவன் பேசுகையில் தமிழகம் என்பது தற்போது அரசியல் போராட்டக்களமாக மாறி நிற்கின்றது. குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே! அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே! மூடு கடையை எவன் வருவான் பார்ப்போம்! எங்க ஊரில் இனி டாஸ்மாக்கு கிடையாது அடிச்சித் தூக்கு! எங்கள் அமைப்பு பாடியதால கடைய அடிச்சி ஒடைக்கின்றார்களா? இல்லை அடிச்சி உடைக்கின்றதால நாங்க பாடினோமா? இதில் எது முந்தி என்றால் மக்களின் நடைமுறைதான் முந்தி என்று பார்க்க வேண்டும். மக்களின் போராட்டம் முன்பு போல் அரசிடம் மனுகொடுப்பதாக இல்லை. மாறாக சாராயக்கடை எங்க ஊருக்கு வேண்டாம் நாங்களே மூடிக்கொள்கின்றோம் என மக்கள் தங்கள் அதிகாரத்தை தாங்களே நிலைநாட்டிக் கொள்கின்றனர். அகவே தான் சொல்கின்றோம் மக்கள் அரசியல் கண்ணோட்டத்தை பெற தொடங்கிவிட்டனர். மக்களின் போராட்டம் பழைய மாதிரி இல்லை. புதிய வடிவத்தை கையில் எடுத்துவிட்டனர். மோடி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு இது வேறு தமிழகம் என்பதை மக்கள் புரியவைக்க துவங்கிவிட்டனர்.

மே தினம் என்பது உரிமைகளை மீட்டெடுத்த நாள் அந்தவகையில் இந்த மே நாளில் தமிழகம் போராட்டக்களமாக மாற்றியுள்ளது. இந்த அரசாங்கம் ஆளத்தகுதியிழந்துவிட்டது என்பதால் மக்கள் அரசியல் அறிவு பெற்று போராட துவங்கிவிட்டார்கள். அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட என்ற வடிவேலுவின் காமெடி தான் கவருமென்டு பற்றி மக்களின் கருத்தாக உள்ளது.  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் “ஜல்லிகட்டு வேண்டும் ! பீட்டாவை தடை செய்! என துவங்கிய போராட்டம் விசாயம் நீட் தேர்வு மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி அனைத்திலும் தமிழகத்துக்கு துரோகம் செய்த மத்திய அரசின் துரோகத்தை புரிந்து கொண்டவுடன் போராட்டம் அரசியல் வடிவம் பெற்று “நரேந்திர மோடி நீ மெரினா பக்கம் வாடி” என மக்கள் முழங்கினர். நாடு நல்லா இருக்க ஒரு மாநிலம் தியாகம் பண்ணனும் என்கின்றான் BJP-க்காரன்; தமிழகமும் இந்த நாடும் நல்லாயிருக்க BJP யை தியாகம் பன்னுகின்றோம் என மக்கள் முடிவு செய்து விட்டனர். நாட்டின் வளங்களை பன்னாட்டு கம்பெனிக்கு தாரைவார்க்கும் செயலை மோடி விரைந்து செய்து வருகின்றார். தட்டிக் கேட்கும் மக்களை தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் தேசத்துரோகிகள் என முத்திரை குத்துகின்றது BJP-RSS கும்பல்.  மக்களை திசைதிருப்ப யோகா செய்யுங்கள் என பல கோடிகள் செலவில் விளம்பரம் செய்கின்றனர். விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு என்ன கேட்டார். அம்பானிக்கு 5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யிரிங்களே விவசாயி கடனை தள்ளுபடி செய்யிங்க என கேட்டால்  எச்சி ராஜா என்ன சொல்லுராரு அப்சல் குருவோட இவருக்கு தொடர்பு இருக்கு என அவதூறு செய்கின்றார்.

ஜல்லிகட்டுக்கு முன்னாடி தமிழ் மக்களை சாராயமும் இலவசமும் வழிநடத்தியது. ஜல்லிக்கட்டுக்கு பின்னாடி அரசியல் பார்வை வழிநடத்துகின்றது. எனவே இது வேற தமிழ்நாடு எவ்வளவு பேர வைச்சி பிளாக் பண்ணுனாலும் நெடுவாசலுக்கு மக்கள் போயே தீருவார்கள். உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. உலகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றது. அதில் தமிழகம் வேகமாக பயணிக்கிறது. அதை நோக்கி முன்னேறுவோம் தோழர்களே! என தனது உரையை முடித்தார்.

இறுதியாக விண்ணதிரும் முழக்கத்தோடு சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் குத்புதீன் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த பேரணி – ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 350 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
திருச்சி


திருச்சி சுமைப்பணி தொழிலாளர்களின் மே தின கொடியேற்றம் !

  1. மே நாள் காலை 9 மணி அளவில் பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் திருச்சி BHEL கைசிலை அருகே கொடி யேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தோழர்.சுந்தரராசு தலைமையேற்றார். தோழர்.உத்ராபதி செங்கொடியேற்றி மே தின உரை நிகழ்த்தினார். தொழிலாளர்களும் தோழர்களும் திரளாக கலந்துகொண்டனர். குழுமியிருந்த தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
  2. திருச்சி ரயில்வே குட்செட்டில் இயங்கும் சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தலைவர் தோழர்.குத்புதின் தலைமையேற்றார். மகஇக தோழர்.ஜீவா அவர்கள் கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார். மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் பாடிய புரட்சிகர பாடல்கள் குழுமிநின்ற தொழிலாளர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அமைந்தது. இவ்வமைப்பின் தோழர்.நிர்மலா அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்.

இறுதியாக சு.தொ.பா.சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர்.ராஜா பேசுகையில் மே தின போராட்டம் என்றால்   ஆலைவாயில்களில் மட்டும் நடந்த நிலைமாறி ரோடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ரயில்வே நிறுவனம் தனியார்வசம் ஒப்படைக்கப்படுகின்றது. சரக்கு  கட்டண உயர்வு தண்டத் தீர்வைகள் அதிகரிப்பினால் சிறு ஒப்பந்ததாரர்கள் வேலையெடுக்கவே அஞ்சுகின்றார்கள். நேரடியாக  சரக்கை கையாலும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விளைவு சுமைத்தூக்கும் தொழிலாளர் வேலை பறிபோகின்றது. டெல்ட்டாவின் வறட்சியால் ஏற்றுமதி (உரம், நெல் தானியங்கள், சிமெண்ட்) இறக்குமதி பாதிப்படைகின்றது. ஒரு நாளைக்கு 1000 பேருக்கு மேல் வேலைதரக்கூடிய இந்த இடத்தில் மாசத்துக்கு நான்கு நாட்களுக்கு கூட வேலையில்லாத பரிதாபத்தையும் வாகனப் போக்குவரத்துமில்லாத சுடுகாடுபோல் காட்சியளிக்கின்றது.  தொழிலாளர்களின் எதிரி ஒன்றாக நிற்க்கின்றான். தொழிலாளர்களாகிய நாம் மட்டும் பல சங்கங்களாக பிரிந்து கிடந்து என்ன பயன் ? எனவே சங்கங்கடந்து ஒரே அணியில் நின்று போராடுவதுதான் ஒரே தீர்வாக அமையும் என தனது உரையை முடித்துக் கொண்டார். இறுதியாக தோழர்.தனக்கொடி நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

கூட்டத்தின் இறுதயில் வெடி வெடித்து குழுமிநின்ற தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வேலையே இல்லாத சூழ்நிலையிலும் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம்
திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க