Friday, February 26, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் மதுரை, தர்மபுரியில் மே தின ஊர்வலம்

மதுரை, தர்மபுரியில் மே தின ஊர்வலம்

-

மதுரை மே  தினம் – பேரணி, பொதுக்கூட்டம்

சிலை, மதுரை, சிவகங்கை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.ம.இ.மு., பெ.வி.மு., வி.வி.மு., ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் மே தினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நிகழ்த்தினர்.

பேரணியில் 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் புரட்சிகர முழக்கங்கள்,  ஆசானின் படங்களையும் பதாகைகளாக ஏந்தி, விண்ணதிர முழக்கமிட்டுச் சென்றது பார்ப்பவர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது. அரசியலாலும் எழுச்சிமிக்க முழக்கங்களாலும் இவர்கள்தான் கம்யூனிச வாரிசுகள் என்று CPM ஆதரவாளர்களையே பேச வைத்தது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மாலை 6 மணிக்கு தெற்குத்தெரு காந்தி சிலையில் தொடங்கிய பேரணி உசிலை ரோடு வழியாக சென்று ஸ்வீப்பர் காலணியில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகில் முடிவடைந்தது. இரவு 7 மணிக்கு தோழர் வீரணன் தலைமையில் தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் பொதுக்கூட்டம் துவங்கியது.

பு.ஜ.தொ.மு., தோழர் ஆனந்தன், ம.க.இ.க., தோழர் ராமலிங்கம், தோழர் சினேகா, பு.மா.இ.மு., தோழர் ராஜ்குமார், வி.வி.மு., தோழர் ஆசை ஆகியோர் உரையாற்றினர்.

மக்கள் அதிகாரத்தின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் நாகராஜன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப்பகுதியில் உள்ள துப்புறவு பணிசெய்பவர்களின் வாழ்நிலையைத் தொட்டுப் பேசியது பெரும்பகுதி மக்களை ஈர்த்தது. இந்த அரசும் ஆட்சியாளர்களும் இந்த கட்டமைப்பும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து பிரினருக்கும் எதிரானது என்பதை பல்வேறு விளக்கங்களுடன் பேசியது மாற்று அரசியல் குறித்த பார்வையை உருவாக்கியது.

தேர்தலில் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது ஒட்டு மொத்த மக்கள் எழுச்சியே தீர்வு என்பதை மே நாளில் சூளுரைப்போம் என்று கூறி சர்வதேச கீதத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
மக்கள் கலை இலக்கிய கழகம்
மதுரை.


தருமபுரி  ஆர்ப்பாட்டம்

மே தினத்  தியாகிகள்  நினைவை  நெஞ்சிலேந்துவோம்!
மக்கள்  போராட்டங்களைஒன்றிணைப்போம்!   

மே  1   உலக  தொழிலாளர் தினம்.   முதலாளித்துவ  சுரண்டலுக்கு  எதிராக   அன்றைக்கு   தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு செங்கொடி  ஏந்தி போராடி   பல  உரிமைகளை  பெற்றெடுத்த  போராட்ட நாள் தான்  மே  தினம்.  இன்றைக்கு  பல்வேறு  பிரச்சினைகளுக்கு   மக்கள்  தனித்தனியாக  போராடினால்  பிரச்சினையை  தீர்க்க  முடியாது  அனைத்து  போராட்டங்களும்   ஒரு தலைமையின் கீழ்  புரட்சிகர  இயக்கத்தின்  பின்னால்  செங்கொடி ஏந்தி  போராட  வேண்டும்  என்பதை   உணர்த்தும்  வகையில் தருமபுரியில்   விவசாயிகள்  விடுதலை  முன்னணி,  புரட்சிகர  மாணவர்  – இளைஞர்  முன்னணி  சார்பாக   கடந்த  ஒரு வாரமாக   மாவட்டம்  முழுவதும் வீச்சான  பிரச்சாரத்ததை  மேற்கொண்டு  01.05.2017  அன்று   மாலை  5 மணி அளவில்  தருமபுரி   தந்தி அலுவலகம்  அருகில்   கண்டன  ஆர்ப்பாட்டத்தை  நடத்தியது.

ஆர்ப்பாட்டத்தினை   விவசாயிகள்  விடுதலை  முன்னணி  வட்டார  செயலாளர்    தோழர்  கோபிநாத்  தலைமை தாங்கினார் அவர் பேசுகையில்,   மே  தினத்தில்  லட்சகணக்கான  மக்கள்   உயிர் தியாகம்  செய்து  8 மணி நேரம்  வேலை, 8 மணிநேர உறக்கம், 8 மணிநேர ஓய்வு, போன்ற  உரிமைககளை  பெற்றெடுத்தநாள் தான்  மே தினம்.   ஆனால்  இன்றைக்கு  அந்த  உரிமைகளை  இழந்து   நிற்கிறோம். தனியார்மயம் வந்தால்  நாடு வல்லரசு  ஆகிவிடும்  என்று  அமல்படுத்தினார்கள். ஆனால் இன்னைக்கு மக்கள்  வாழவே  முடியாது  என்கிற  கையறுநிலையை  அடைந்து இருக்கிறார்கள். விவசாயிகள்  இல்லை என்றார்  நாம்  சோறு  சப்பிட முடியாது, 40  நாட்களுக்கு  மேல்  டெல்லியில்  போராடிய விவசாயிகளை சந்தித்த  எடப்பாடி  பழனிச்சாமி   உங்களுடைய  கோரிக்கைகளை  எல்லாம்  நிறைவேற்றுவேன் என்று உறுதி  அளித்தார்.  ஆனால்  தமிழகம்  வந்த உடனே   80 விவசாயிகளுக்கு மட்டும்தான்  இழப்பீடு  கொடுக்கப்படும் மற்ற விவசாயிகள்  நோய்வாய்பட்டும்  சொந்த பிரச்சினையாலும்  இறந்துள்ளனர் என்று  பேசுகிறார். நீர் நிலைகளை  மேம்படுத்தாமல்  டாஸ்மாக்கை  திறக்கிறார்கள்,  இதுவரைக்கும்  3000-க்கும்  மேற்பட்ட  ஏரிகள்  காணாமல்  போயிருக்கிறது.

இப்படி  கடந்த  25  ஆண்டுகளாக  கடல் வளம்,  ஆறு, கனிம வளம் என  ஒட்டு மொத்த  இயற்கை  வளங்களையும்  அதிகார  வரக்கம்  பல அரசியல் கட்சிகளோடு  கூட்டு வத்துக்கொண்டு  கொள்ளையடித்துள்ளனர். இந்தியாவில்  400 பேரிடம்  60% சொத்துக்கள்  குவிந்திருக்கிறது.  இவர்கள் வைப்பதுதான்  சட்டம் .  50  பன்னாட்டு  நிறுவனங்களின்  கொள்ளைக்காக  நாட்டை  கூட்டிக்கொடுப்பவர்தான்  மோடி, அவருக்கு அதுதான் வேலை, எனவே  அரசிடம்  மனுக்கொடுப்பது, கெஞ்சுவதன்  மூலம்  பிரச்சினையை  தீர்க்க முடியாது. இதனை  தூக்கி எறிய  வேண்டும். புரட்சிகர  பாதையில்  செங்கொடி  ஏந்தி  போராடுவதுதான்  ஒரே  தீர்வு என்றார்.

அடுத்தாக  மக்கள்  அதிகாரம்  தோழர்  சிவா  பேசுகையில்,    அன்றைக்கு  18, 19  மணிநேரம்  என தொழிலாளர்களை   கொத்தடிமையாக  கசக்கி பிழியப்பட்டு  சக்கையாக  தூக்கி எறிந்தனர்.  அந்த சக்கைகள்  தான்  செங்கொடி கீழ் எழுந்து  நின்று   போராடி  8 மணிநேரம் உறக்கம்,  8  மணிநேர வேலை, 8 மணி நேர ஓய்வு, போன்ற  உரிமைகளை  மீட்டெடுத்தனர்.  ஆனால்  இன்றைக்கும்  அதே  நிலையில்  தான்  வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.  எனவே  திருப்பூர்,  கோவை,  பெங்களூரு என்று  போவதை  கைவிட்டுவிட்டு    இங்கே  நின்று  போராடும் போதுதான்  நமக்கான  நியாயம்  கிடைக்கும்.   அன்றைக்கு  முதலாளித்துவ  பயங்கரவாதம், இன்றைக்கு   அரசு  பயங்கரவாதம்.

தமிழகத்தில்  ஆயிரகணக்கான  விவசாயிகள்  போராடி கொண்டிருக்கிறார்கள், நூற்றுக்கணக்கான  விவசாயிகள்   செத்துகொண்டுருக்கிறார்கள்.  இவர்களை  பார்த்து   ஃபிராடு எச். ராஜா  தமிழக விவசாயிகள்  போடக்கூடிய  சாப்பாட்டை   சாப்பிட்டுவிட்டு   விவசாயிகளை  ஃபிராடு  என்று  கூறுவதற்கு   என்ன  அருகதை இருக்கிறது. மேலும்  வளர்ச்சி என்கிற  பெயரிலே   ஹைட்ரோ  கார்பன்    திட்டத்தை கொண்டுவந்து, விவசாயத்தை  அழித்து   பாலைவனமாக்குவது,  முதலாளிக்கு  வரிசலுகை அளிப்பது, விவாயிகளுக்கு   கடனை  தள்ளபடி செய்ய மறுப்பது, இதற்கு எதிராக  பல்வேறுக்கட்ட  போராட்டங்களை  மக்கள்    நடந்து வருகின்றனர்.  இதனையெல்லாம்   கண்டுகொள்ளாமல் தீர்க்க  துப்பில்லாமல்   அரசு  தோல்வி  அடைந்து , மக்களுக்கு எதிர்நிலை  சக்தியாக  மாறிவிட்டது.  எனவே   ஜல்லிக்கட்டுக்காக  கிராமங்கள், நகரம் தோறும்  எப்படி  போராட்டங்களை  கட்டி  அமைத்து  வெற்றிப் பெற்றோமோ  அதேபோல்  அணைத்து  பிரச்சினைக்கும்  ஒன்றினைய  வேண்டும் என்றார்.

புரட்சிகர மாணவர்- இளைஞர்  முன்னணி   மாவட்ட  அமைப்பாளர்  தோழர்  அன்பு  பேசுகையில், மே தினம் என்றால்  விழா?  சந்தோசமான  நாள்  என்று  பொதுவாக  பார்க்கபடுகிறது. ஆனால்  அது  தொழிலாளர்களுக்கு   பல உரிமைகளை  மீட்டெடுத்த    போராட்ட தினம்.  தொழிலாளர்களுக்கு  மட்டுமல்ல, அனைத்து தரப்பு  மக்களுக்குமானது. எனவே  முதலாளித்துவம்  தொழிலாளர்களை  மட்டும்  சுரண்டுவது இல்லை எல்லா  மக்களையும்  சுரண்டுகிறது.  இன்றைக்கு  காசு இருந்தால்தான்  கல்வி, காசு இருந்தால்தான்  மருத்துவம்   என்கிற  நிலையில்  தனியார் பள்ளிகள்   கொலை கூடாரமாகவே  மாறிவிட்டது. இவர்களின்  கொள்ளைக்காகத்தான்  அரசு இருக்கிறது.

37,000 அரசு பள்ளிகளில்   குடிநீர் , கழிப்பிடம் இல்லை,  பொறியியல்  படித்த பட்டதாரிகள்  2 லட்சத்திற்கும்  மேற்பட்டவர்க்கு   வேலையில்லை, 7 லட்சத்துக்கும்  மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு  படிப்புக்கேற்ற வேலை இல்லை, இதைபற்றியெல்லாம்  அரசுக்கு  கவலை இல்லை, மத்தியில் ஆளும்  பி.ஜே.பி   ஒட்டுமொத்த  கல்வித்துறையிலும்  காவிமயமாக்க  வேண்டும் என்று  இந்தியை  திணிக்கிறார்கள்.  இதனை எதிர்த்து கேட்டால்  தேசதுரோகி,  பயங்கரவாதி என்று  முத்திரை குத்துகிறார்கள்.  எனவே  ஆர்எஸ்எஸ், பிஜேபி  வானர கூட்டத்தை   விரட்டியடிக்காமல்  பிரச்சினைகளை  தீர்க்க முடியாது.  தமிழகத்தை  மெரினாவாக்க   புரட்சிகர   அமைப்பின்  கீழ்  ஒன்றிணைந்து  போராட வேண்டும். புதிய  இந்தியாவை, புதிய  ஜனநாயகத்தை  படைக்கும்  போதுதான்   அனைவருக்கும்   இலவச கல்வி, மருத்துவம், வேலை  பெறமுமடியும் என்றார்.

புரட்சிகர  மாணவர்- இளைஞர்  முன்னணி  சார்ந்த  தோழர் மலர் கொடி  பேசுகையில், மே தினம்  பெற்றெடுத்த  உரிமைகளையெல்லாம்  இழந்து  தெருவில்  நிற்கிறோம்.   இன்றைக்கு  பல தொழிற்சாலைகளில்   ஆண்களை விட  பெண்களை  அதிகம்  வேலைக்கு  எடுக்கிறார்கள். ஏனென்றால்  சங்கம் வைக்கமாட்டார்கள், கடுமையாக உழைப்பார்கள், அதிகம் பேசமாட்டார்கள்  இதனால்  அதிக உழைப்பை  சுரண்டலாம். அதோடு  நாடு  முன்னேற்றம் என்று  பேசுகிறார்கள். யாருக்கான  முன்னேற்றம்.  மக்களுக்கானதா?  கார்ப்பரேட்டுக்களுக்கானதா?  விவசாயத்தை  அழித்தன் விளைவாக  இன்றைக்கு  விவசாயிகள்   நடுத்தெருவில்  போராடுகிறார்கள்.  80 லட்சம்   மாணவர்களுக்கு  வேலையில்லை , ஐடி  ஊழியர்கள்  10,000 பேரை  தகுதி இல்லை என்று  வேலைநீக்கம்  செய்திருக்கிறார்கள். டாஸ்மாக்கால்  பாதிக்கப்பட்ட  பெண்களே  எச்சில் பாட்டில் கழுவி  பிழைப்பை நடத்தும் அவலம், இதனையெல்லாம்   தீர்க்க   துப்பியில்லாமல்  அரசு  வேடிக்கை  பார்த்துக்கொண்டுயிருக்கிறது.  இன்னொரு  பக்கம்  தொழிற்சங்க  தலைவர்களும்   முதலாளியோடு  கூட்டு வைத்துக்கொண்டு  தொழிலாளர்களுக்கு  துரோகம்  இழைக்கின்றனர்.  இந்த  துரோகத்தை  கண்டு  துவண்டு விடாமல்   புரட்சிகர  இயக்கத்தின்  கீழ்  செங்கொடி  ஏந்தி  போராடுவதின்  மூலம் தான்   உரிமைகளை, வாழ்வாதாரத்தை  மீட்டெடுக்க  முடியும் என்று  அறைகூவல்  விடுத்தார்.

ஆர்ப்பாட்டமானது   மே  தினத்தின்  போராட்ட  சிறப்பு அம்சங்களையும்,  பல்வேறு  பிரச்சினைகளுக்காக  நடக்கும்   தனித் தனியான போராட்டங்கள்  அனைத்தும்  ஒன்றிணைய வேண்டிய அவசியத்தையும்  உணர்த்துவதாக  அமைந்தது.

தகவல்
விவசாயிகள்  விடுதலை  முன்னணி.
புரட்சிகர  மாணவர்-  இளைஞர்  முன்னணி
தருமபுரி. தொடர்புக்கு;  99433   12467 .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க