Friday, December 13, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்நெல்லை, கோவையில் மே தினப் பேரணி

நெல்லை, கோவையில் மே தினப் பேரணி

-

நெல்லை ஆர்ப்பாட்டம்
மே தின தியாகிகளது நினைவை நெஞ்சிலேந்துவோம் !
மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தைத் தகர்த்திடுவோம்!

நெல்லையில் மே 1 2017   காலை 10.00 மணிக்கு இரயில் நிலையம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் நெல்லை மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவா தலைமை வகித்தார். சரியாக 10 மணிக்கு மே தின முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் துவங்கியது. சுற்றியிருந்த வியாபாரிகளும், இரயில் நிலையம் செல்வோரும் முழக்கங்களை ஆர்வத்துடன் கவனித்துச் சென்றனர்.

தலைமையுரையாற்றிய தோழர் சிவா, ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவு மக்களும் இன்றைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர், கார்ப்பரேட் முதலாளிகள் இதற்கு எப்படி காரணமாக உள்ளனர்,  கார்ப்பரேட் முதலாளிகளை அரசு பாதுகாப்பதை அம்பலப்படுத்திப் பேசினார். அடுத்ததாக பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி  இந்த அரசுக் கட்டமைப்பு மக்களை ஆள தகுதியற்றுப் போய்விட்டதை உணர்த்தும் விதமாக பேசினார்.

அடுத்ததாக, சிறப்புரையாற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலர் தோழர் லயனல் அந்தோணிராஜ் “ மறுகாலனியாக்கம் எப்படி தொழிலாளர்களை மட்டுமல்லாமல் விவசாயிகளையும் மிக கடுமையாக பாதித்துள்ளதைப் பற்றிப் பேசினார். விவசாயிகளை பாதுகாக்க துப்பில்லாமல், குறைவான கட்டணத்தில் விமானப் பயணம் என்ற மோடியின் திட்டத்தை எள்ளி நகையாடினார்.

கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையைப் பாதுகாக்க இந்து மதவெறி பாசிஸ்டுகள் எப்படி நாடு முழுவதும் வெறிகொண்டு செயல்படுகிறார்கள், ஹெச்.ராஜா போன்றவர்கள் போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதை கடுமையாகச் சாடிப் பேசினார். இறுதியாக, எல்லாப் போராட்டங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும், புரட்சிகர அமைப்புகளின் தலைமையின் கீழ்தான் அதற்குத் தீர்வு காண முடியும் என்பதையும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த அரசுக்கட்டமைப்பில் அது சாத்தியமில்லை என்பதையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே மாற்று என்பதையும் வலியுறுத்தினார். விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர சக்தி நன்றியுரையாற்றினார்.

அரசையும், இந்து மதவெறி பாசிஸ்டுகளையும் அம்பலப்படுத்திய பதாகைகள் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றன.

ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை ஜங்ஷன் போலீசு ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுத்தது. தொழிற்சங்கங்கள் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம்  நடத்துவார்கள் அதனால் அதற்கு மேல் முடியாது என்பதை அதற்கு காரணமாக கூறியது. ஆனால் உண்மையில் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது என்று அதற்கும் தடை விதித்தது. கேட்டால் பாடல்களில் உள்ள கருத்துக்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்கிறது. யாருக்கும் அனுமதியில்லையாம். இந்து மதவெறி பாசிஸ்டுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இந்த நாட்டையே சுடுகாடாக மாற்றுவதற்கு உரிமை உண்டு. ஆனால் கருத்துக்களை வெளிப்படுத்த ஜனநாயக வழியைப் பின்பற்றினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சினை.

போலீசின் இந்த நெருக்கடிகளையும் தாண்டி தோழர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலைக்கான பாதையை அறைகூவும் விதமாக போராட்டம் நடந்தேறி நிறைவுற்றது.

 

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மேல் அழுத்தவும்)

தகவல்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
நெல்லை மாவட்டம்

***

கம்யூனிசம் தோற்றுவிட்டதென்றால் வென்றது எது…? மே நாள் பேரணி, கூட்டம், கோவை.

மே ஒன்று உலகத் தொழிலாளர் தின பேரணியும் அதனை தொடர்ந்து தெருமுனைக் கூட்டமும் கோவை மண்ணில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களால் நடத்தப்பட்டது.

கோவையை பொறுத்தவரை காக்கிகளும் காவிகளும் நிரந்தரக் கூட்டணி அமைத்துள்ளனர். போலீசின் நிறைவேற்றும் பொறுக்கிக் கும்பலாக ஜனநாயக சக்திகளின் மீதான அடக்கு முறைக்கு காரணங்களை உருவாக்குபவர்களாக அவ்வப்போது முதலாளிகளின் அடியாட்களாக என காக்கி மற்றும் காவிப் படையின் ஆளும் வர்க்க சேவைகளின் பரிணாமம் கோவையில் நமக்கு நிறைய காணக் கிடைக்கும்.

சி.‌ஆர்.‌ஐ நிறுவன சட்டவிரோத கதவடைப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமாக சென்று கொண்டிருந்த காலத்தில், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் போஸ்டர்கள் ஒட்டப்படும் இடங்களிலெல்லாம் பழைய சினிமா பட போஸ்டர்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு நமது போஸ்டர்கள் மீது ஒட்ட ஆளையும் பசையையும் காசையும் கொடுத்து அனுப்புவார் முதலாளி. அதே போல இப்போதும் மே நாள் சுவரொட்டிகள் மீதும் காவிக்கூட்டத்தைச்சேர்ந்த ஒருவரின் நினைவு நாளை போஸ்டரை ஒட்டியுள்ளார்கள். மே நாள் பி‌ஜெ‌பி காரனுக்கு எரிச்சலை தருகிறது.

மே தின சுவரொட்டிகளை மறைக்கும் வானரப்படைகள்

இடையர்பாளையத்தில் தொழிலாளிகள் போராடி களம் கண்ட மண்ணில் பேரணி துவங்கியது. ஓங்கி ஒலிக்கத் துவங்கிய மே நாள் முழக்கங்களும் மேற்கு மண்டல மண்ணின் இசைக்கருவி மத்தளம் பேரொலி எழுப்பி நாற்சந்தி அதிர எஸ்.‌ஆர்.‌ஐ தொழிலாளிகள் ஜி‌டி‌என் தொழிலாளிகள் இன்னும் பல நிறுவன தொழிலாளிகள் வண்ண வண்ண சீருடைகள் இவையனைத்திற்கும் இணையாய் செஞ்சட்டைகள் குழந்தைகள் பெண்கள் என பேரணி மெல்ல நகர்ந்தது.

இடையர்பாளையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி கடந்த வருடம் காவிகளின் கலவர பாளையமாக மாறிய மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் நோக்கி சென்றது.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தோழர் சரவணன் தலைமையேற்று கூட்டத்தை நடத்தினார். தனது தலைமையுரையில் இந்த கூட்டத்தின் அவசியத்தை விளக்கினார்.

கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்க தோழர் ஜெகநாதன் மில் தொழிலாளிகளின் உணர்வை மேடையேற்றினார்.

அவரை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் உமா,

“செய்தி தாள்களில் பேஸ்புக் எங்கும் மே தின வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். இது வாழ்த்து தெரிவிக்கும் நாளா..? மார்ச் எட்டு உழைக்கும் மகளிர் தினம் எப்படி கோலப்போட்டிகளாலும் பட்டுச் சேலை கட்டிக்கொண்டும் அற்பத்தனமாக சீரழிக்கப்பட்டதோ, அதே போல மே தினத்தையும் சீரழிக்க நாம் அனுமதிக்க கூடாது. போராட்டத்திற்கு யாரையும் கூப்பிடும் அவசியம் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. மக்கள் தன்னெழுச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அதிகாரம் தமிழகம் முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. திருவாரூரில் மக்களிடம் மனுவாங்க அதிகாரி மறுக்கிறார், தாலுகா அலுவலகம் அடித்து நொறுக்கப்படுகிறது. டாஸ்மாக் போராட்டத்தில் இப்போது பெண்கள் உடைக்கும் அளவில் சென்று கொண்டிருக்கிறார்கள். இதனை வளர்த்தெடுக்க வேண்டும்.” என கூறினார்.

மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் சம்புகன்,

“போராடிப் பெற்ற உரிமைகளை தக்க வைக்க வேண்டிய அவசியத்தையும் பாசிச மோடியின் ஆட்சியில் எப்படி இயற்கையும் நாடும் சுரண்டப்படுகிறது என்பதை கூறினார்.” தேர்தல் பாதையை காறியுமிழ்ந்து போராட்டப் பாதைக்கு அறைகூவி முடித்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி தனது சிறப்புரையில்,

இந்த மே நாள் என்பது ரசியப் புரட்சியின் நூற்றாண்டில் வரும் மே தினம் 18ஆம் நூற்றாண்டில் சிக்காகோ தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலைக்காக போராட்டத்தை துவக்கினார்கள். அதனை ரசிய புரட்சி நடத்திக் காட்டியது. இந்த மே தினத்தில் மீண்டும் தொழிலாளி வர்க்கம் எட்டு மணி நேர வேலைக்காக குரல் கொடுக்கும் நிலைக்கு வந்து விட்டோம். முதாளித்துவம் நம்மை மீண்டும் பழைய நிலைக்கு இழுத்து வந்து விட்டது.

வரலாற்றின் சக்கரங்கள் மீண்டும் சுழலும். பாட்டாளி வர்க்கம் ஏற்கெனவே பெற்ற வெற்றியை விட கூடுதலாக வெற்றி அடையும். மே தினத் திருநாள் வாழ்த்தை எடப்பாடி முதற்கொண்டு சி‌பி‌ஐ, சி‌பி‌எம் என அனைவரும் கூறுகின்றனர். மே தினம் என்பது திருநாளல்ல. அது விடுதலைக்காக அறை கூவல் விடுக்கும் நாள். தமிழ் மாதங்களில் கொண்டாடப்படுகின்ற பௌர்ணமி, பிரதோஷம் ஆவணி அவிட்டம், மகா சிவராதிரி, தீபாவளி, பூசம், மகம் போல மே தினம் கொண்டாடப்படுகிறது. மூடத்தனம் நிரப்பிய பண்டிகை போல அது காட்டப்படுகிறது.

மேதினம் என்பது ஏதோ எட்டு மணி நேர வேலை என்பதுடன் குறுக்கப்படுகிறது. மேதினத்தின் கொள்கைகள் அதையும் தாண்டியது அரசியல் அதிகாரத்தை நோக்கி அது வளரும். வளர்த்த வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது நாம் தான். போராட்டங்களின் தலைமை பாட்டாளி வர்க்கம்தான். வரலாறு நமக்கு அந்தக் கடமையை வழங்கியுள்ளது. அதன்படி நம் நாட்டின் அனைத்துப் போராட்டங்களுக்கும் தலைமை ஏற்போம். தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் குடிநீர் தட்டுப்பாடு வறட்சி பற்றி என்ன கூறுகிறார்கள்? இது 144 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வந்துள்ளது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். இதனை நாம் பொய் என்கிறோம். இந்த வறட்சிக்கு காரணம் அரசியல்வாதிகளும் முதலாளிகளும்தான்.

நொய்யல் கோவைக்கு தாயாக ஓடிக் கொண்டிருந்தாள். நொய்யலில் நின்று ஒரு வெண்கல சொம்பை எடுத்து துண்டால் மூடி தண்ணீரை மொண்டு குடித்தால் தேனாய் இனிக்கும். சாயக்கழிவை கொட்டி நொய்யலை அழித்தது முதலாளித்துவ வர்க்கம்தான்.

நொய்யலில் இன்றும் தினசரி இரவு 10 மணிக்கு மேல் மணல் அள்ளுவது அமைச்சர் எஸ்‌பி வேலுமணிதான். இவருடைய கூட்டாளிதான் தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்திய வானதி சீனிவாசன். தொண்டாமுத்தூரில் தான் வானதியின் தோட்டமும் வீடும் உள்ளது. ஆனால் அக்கா அங்கே தேர்தலில் போட்டியிடாமல் கோவை தெற்கு தொகுதியில் நின்ற காரணமே எஸ்பி வேலுமணி கூடுதல் ஓட்டு வாங்கி ஜெயிக்க வேண்டும் என்பதற்கு தான். கூடுதல் ஓட்டு வாங்கி ஜெயித்தால் தான் மந்திரி பதவி என்பது செத்துப் போன அம்மாவின் கணக்கு எனவே தன் சாதிக்காரர்க்கு வானதி மேடம் இப்படியாக உதவினார். மக்கள் விரோதிகளுக்கு கட்சி லேபிள்கள் வேறு ஆனால் கொள்ளை அடிப்பதில் ஒரே அணி.

வானதி, வேலுமணியோடு ஈஷா ஜக்கியும் ஒரே அணி. மலையை அழித்து ஆசிரமம் கட்டி, ஆதீயோகி சிலை அமைத்து மேற்கு தொடர்ச்சி மலையை நாசமாக்கி வருகிறார்கள். நதியை, மலையை நாசமாக்கினால் வான்மழை எப்படி வரும் வறட்சி தான் வரும். எனவே சமீபத்திய வறட்சிக்கு இந்த சதிகாரர்களே காரணம். உழைக்கும் மக்கள் இவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றாமல் தடுக்கவே கலாச்சாரச் சீரழிவுகளை முன்நிறுத்துகின்றனர்.

இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என பாகுபலிக்கு ஊடகங்கள் கவர் வாங்கிக் கொண்டு எழுதிக் கொண்டுள்ளார்கள். ஆனால் மக்கள் செங்கொடியை உயர்த்தினாள் உடனே முதலாளித்துவ கூலி எழுத்தாளர்கள், ஊடகங்கள் கம்யூனிசம் தோற்று விட்டது என்கிறார்கள்.

கம்யூனிசம் தோற்று விட்டால் வென்றது எது ?
காந்தியிசமா அல்லது முதலாளித்துவமா…?

எந்த இசம் வென்றது என்று இவர்களால் ஏன் சொல்ல முடியவில்லை. மேகங்களால் மறைக்கப்பட்டு நிலவின் ஒளி மங்கினால் நிலவு தோற்று விட்டதாக சொல்வது எப்படி மடமையோ அது போல கம்யூனிசம் தோற்று விட்டதாக சொல்வதும் ஆகும். இனி மே நாளை போராட்ட நாளாக மாற்றுவோம் என்று அறைகூவல் விடுத்து முடித்தார்.

தோழர் ஜோசப் குழுவினரின் பாடல்கள் கூட்டத்தை உற்சாகம்மூட்டியது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர் தேவராஜ் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
கோவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க