Thursday, June 24, 2021
முகப்பு உலகம் இதர நாடுகள் எனது நண்பன் யமீன் ரஷீதைக் கொன்றது யார் ?

எனது நண்பன் யமீன் ரஷீதைக் கொன்றது யார் ?

-

ந்த ஞாயிற்றுக் கிழமை காலை மாலத்தீவு வாசிகளுக்கு அதிர்ச்சிகரமாக விடிந்தது. 29 வயதே ஆன புகழ்பெற்ற இணைய எழுத்தாளர் யமீன் ரஷீது கொல்லப்பட்டார் என்கிற செய்தியே அதிர்ச்சிக்குக் காரணம்.

சுமார் நான்காண்டுகளுக்கு முன், 2012 அக்டோபர் மாதம், இதே போன்ற ஒரு கொடூரமான கொலை மாலத்தீவு வாசிகளை அதிர்ச்சியுறச் செய்திருந்தது. அப்போது புகழ்பெற்ற இசுலாம் மத அறிஞரும், சீர்திருத்தவாதியும் பாராளுமன்ற உறுப்பினருமான அஃப்ரஷீம் அலி கொல்லப்பட்டார். இருவருமே ஒரே விதமாக கொல்லப்பட்டிருந்தனர். உடல் முழுவது பல்வேறு வெட்டுக் காயங்களுடன் இருவரின் உடல்களும் மாலத்தீவின் தலைநகர் மாலேவில் அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மாடிப்படிகளின் கீழே கண்டெடுக்கப்பட்டன.

2014 ஆகஸ்ட்டிலிருந்து ரஷீதின் நெருங்கிய நண்பரும், இணைய எழுத்தாளருமான அகமது ரில்வான் காணாமல் போயிருக்கிறார். அனேகமாக அவர் கடத்தப்பட்டிருக்க வேண்டுமென்றே கருதப்படுகின்றது. போலீசாரால் குற்றவாளிகளை இது வரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், இந்தக் கொலைகளுக்கும் ஆட்கடத்தலுக்கும் யார் காரணம் என நம்மால் சொல்ல முடியாது.

இந்தக் குற்றச் செயல்களைத் தூண்டிருக்க கூடிய காரணங்கள் எவையாக இருப்பினும், இவை மாலத்தீவில் ஒரு புதிய வகை சித்தாந்தத்தின் பரவல் விளைவித்திருக்கும் புதிய வகை குற்றங்களின் பிரதிபலிப்புகள் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் அரசியல் உள்ளடக்கத்துடன் தொடர்புடைய இந்த புதிய வகை சிந்தாந்தம், மதச்சார்பற்ற அரசியலின் தோல்வியின் மேலும், சிதறிய மத நம்பிக்கைகளின் மேலும் எழுகின்றது.

மத நம்பிக்கைகள்

கொலை செய்யப்பட்ட யமீன் ரஷீத்

மதம் தொடர்பான சர்ச்சைகளில் ரஷீதும், ரில்வானும், அலியும் வெளிப்படையாகப் பேசினர்.

சொல்ல போனால், அலி ஒரு முதிர்ச்சியடைந்த மத அறிஞரும் கூட. மதம் தொடர்பாக அவரிடம் ஒரு விதமான சீர்திருத்தவாத கண்ணோட்டம் இருந்தது. மாலத்தீவின் பாரம்பரிய இசை உள்ளிட்ட வெகுஜன கலாச்சாரங்களை மதித்த அலி, ஆண் பெண் சமத்துவத்தை ஆதரித்தார்.

ரஷீதும், ரில்வானும் இளைஞர்களிடம் செல்வாக்கு செலுத்திய நவீன சித்தாந்த போக்குகளை பிரதிபலித்தனர். இன்றைய காலகட்டத்தில் மாலத்தீவின் இளைஞர்களில் சிலர் பகுத்தறிவு இசுலாமிய போக்கான முத்தாஸிலிடெசையும், சூஃபியிசத்தையும் ஆதரிக்கின்றனர். மேலும், மாலத்தீவின் பழைய புத்தமத வரலாறும், இசுலாமிய பாரம்பரியம் அதன் கலாச்சாரம், இலக்கியங்களும் இளைஞர்களைக் கவர்கின்றன. ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால், மாலத்தீவின் இளைஞர்களை அறிவியல் பூர்வமான பகுத்தறிவும், மனிதாபிமான சித்தாந்தங்களும் பாதித்துள்ளன.

எனினும், இந்த இளைஞர்களில் சிலருக்கு அறிவியல் பூர்வமான புதிய நாத்திகவாதத்தின் மேலும், மதச்சார்பின்மையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மதம் தொடர்பான விவகாரங்களை தனிபட்ட சொந்த விசயங்களாக கையாள வேண்டும் என இவர்கள் வாதிடுகின்றனர். இவர்கள் கறாராக சட்டவாதம் பேசக் கூடியவர்களாகவும் இருப்பதில்லை. இளைஞர்களாக இருப்பதால் இயல்பாகவே தீராத பல கேள்விகளுக்கு இவர்களிடம் நிரந்தரமான, உத்திரவாதமான நிலைப்பாடுகள் இருப்பதில்லை.

ரஷீதும் ரில்வானும் இந்தப் புதிய தலைமுறை இளைஞர்களையே பிரதிபலித்தனர். அவர்களிடம் அறுதியான நம்பிக்கைகள் ஏதும் இல்லை. ஆனால், மனித உரிமை தொடர்பாக அவர்கள் என்ன பேசினார்களோ அதில் சமரசமற்றவர்களாக இருந்தனர். கடும் பிற்போக்குவாதத்தையும், தீவிரவாதத்தையும் தக்ஃபீரி போக்கையும் (தக்ஃபீர் பொருள் :- எது சரியான இசுலாம், யார் சரியான முசுலீம் என்று முத்திரை குத்துவது) இவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இவ்வாறாக மதவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை ஒரு சேர சம்பாதித்துக் கொண்டனர் இவ்விருவரும்.

 மதம் சாராத அரசியல்வாதிகளின் மிரட்டல்கள்

அரபு வசந்தத்திற்கு சில ஆண்டுகள் முன்பு, 2008-லேயே மாலத்தீவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்திற்கான எழுச்சி மலர்ந்தது. அதன் போக்கில் சுதந்திர மையம் (Freedom House) எனும் சிந்தனைக்குழாம் ஒன்று மாலத்தீவை முதன் முறையாக தேர்தல் ஜனநாயக நாடாக அறிவித்தது.

எனினும், 2012 பிப்ரவரி மாதம் முதன் முறையாக ஜனநாயகப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்ட அதிபரான மொகமது நஷீதின் ஆட்சிக்காலம் மேலும் இரண்டாண்டுகளுக்கு இருந்த போதே கட்டாயமாக பதவி விலக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மதம் சாராத அரசியல் சக்திகளின் மூலமே மெல்ல மெல்ல மாலத்தீவில் ஜனநாயக நீக்க நடவடிக்கைகள் துவங்கின.

கட்டாய பதவி விலக்கம் செய்யப்பட்ட மாலத்தீவு அதிபர் மொகமது நஷீத்

இந்த ஜனநாயக நீக்க நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட முறைமையில் நடந்தன. அதாவது, தேர்தல் ஜனநாயகத்திற்கும் சாதாரண மாலத்தீவுவாசிகள் பின்பற்றும் இசுலாத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் அதற்கு காரணமாக இல்லை – சொல்லப் போனால், மாலத்தீவுவாசிகள் ஜனநாயகத்திற்கு ஆதரவானவர்களாகவே இருந்தனர்.

நஷீதின் அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் தலைவர்கள் சிலரால் நிதியுதவி செய்து மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வுகளின் பின் மதமும் ஒரு காரணியாக இருந்தது உண்மை தான். எனினும், மாலத்தீவின் இளம் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டதற்கு அடிப்படைக் காரணிகளான அரசியல் பொருளாதார மற்றும் ஆட்சிமுறை சார்ந்த சவால்கள் அந்நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் உள்ள மேட்டிமைத்தனத்திலிருந்தே கிளைத்து எழுந்தவையாகும்.

பழைய எதேச்சாதிகாரத்தின் இடத்தில் புதிய எதேச்சாதிகாரம் நுழைந்ததும் மாலத்தீவில் மனித உரிமைமீறல்கள் திடீரென அதிகரித்தன. இது எதேச்சாதிகாரத்தின் மிக மோசமான வடிவமாகும். வழமையான வடிவங்களையும் ஜனநாயக மேல்பூச்சுகளையும் பயன்படுத்திக் கொள்வதோடு உள்ளடக்கத்தில் முழுமையடைந்த ஊழல்மயமாகவும் கிரிமினல்மயமாகவும் இருக்கின்றது.

தங்களது நலன்களைக் காத்துக் கொள்ள அரசியல் ரீதியான வன்முறைகளைக் கையிலெடுக்கும் குற்ற கும்பல்களை தங்களது ஊழல்களாலும் கிரிமினல்தனத்தாலும் மேன்மையானவர்களாக்கி விட்டனர் அரசியல்வாதிகள்.

இந்தப் புதிய எதேச்சாதிகாரத்தையும், அதன் ஊழல்களையும் மனித உரிமை மீறல்களையும் ரஷீதும், ரில்வானும் கடுமையாகவும் வெளிப்படையாகவும் எதிர்த்தனர். அவர்களுக்கு பகடியும், நகைமுரணாக தங்களாது கருத்துக்களை முன்வைப்பதும் இயல்பாக கைவந்தது. ரஷீதின் கேலி கிண்டல்களுக்கு அவரது நையாண்டியான வலைப்பூவே சாட்சி. இந்த வலைப்பக்கங்கள் மாலத்தீவில் மிகவும் பிரபலமாயின.

மேற்படி போக்கின் விளைவாக அரசியல் வன்முறைகளின் சூத்திரதாரிகளே இந்தக் கொலைகளுக்கும் ஆட்கடத்தலுக்கும் காரணமாக இருந்திருக்க கூடிய வாய்ப்பு உள்ளது. தங்களுக்கு எதிரான குரல்களை மௌனமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், வேறொரு வாய்ப்பும் உள்ளது.

சிதறிய மதப் பரப்பு

மாலத்தீவில் உருவாகியுள்ள ஒரு புதிய வகை – ஆனால், சிறிய – குழுக்கள் சிலவும் சமூகவலைத்தள பிரபலங்களான ரஷீத், ரில்வான் மற்றும் அலியைப் போன்ற சீர்திருத்தவாத தாராளவாத மத அறிஞர்களை தங்களுக்கான ஆபத்தாக பார்க்கிறார்கள். இவர்கள் மத தீவிரவாதிகள்.

சமீபமாக மாலத்தீவில் நடந்து வரும் நவீன வளர்ச்சிகளைத் தொடர்ந்து சமூகத்தில் மதத்தின் பங்கு என்னவென்பதைக் குறித்த கேள்வி மக்களிடையே விவாதங்களை எழுப்பியுள்ளது.

இதன் காரணமாக, அதிகாரப்பூர்வமாக ஒற்றை இசுலாமிய அடையாளம் வலியுறுத்தப்பட்டாலும் மத ரீதியான சிந்தனைப்போக்குகளில் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரங்களின் மத்தியில் அரசியலில் தாராளவாதப் போக்கு நுழைந்த பின் தீவிரவாத குழுக்களும் அபரிமிதமாக வளர்ந்து சமூக அந்தஸ்த்தைப் பெற்றன.

கடந்த ஆண்டுகளில் இது போன்ற குழுக்கள் மத ரீதியான வன்முறைகளை நிகழ்த்தியுள்ளன. இதில் சில குழுக்கள் வன்முறையான ஜிகாதை வெளிப்படையாகவே ஆதரிக்கவும் செய்கின்றன. இவர்களுக்குள் ’எதற்கு எதிராக ஜிகாது செய்ய வேண்டும்’ என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், செய்யப்படும் ஜிகாது வன்முறையாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை நிலவுகின்றது.

இதை நாம் ‘சூழல் பொருத்தம் விலக்கப்பட்ட வன்முறை’ (Decontextualised Violence) என்று அழைக்கலாம். குறிப்பாக தக்ஃபீரி கொள்கை கொண்ட சில குழுக்கள் ரஷீதும் ரில்வானும் மதவிரோதிகள் என குற்றம் சுமத்தின. ரஷீதின் மரணத்திற்குப் பின் இந்தக் குழுக்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் முகநூல் பதிவுகளில் அவர்கள் ரஷீதை மதவிரோதியென தூற்றியதைப் பார்க்க முடிந்தது.

ரஷீது ரில்வான் போன்றவர்களால் சொல்லப்படும் கருத்துக்களை மத அடிப்படையில் விதண்டாவாதமாக புரிந்து கொள்வதே மதரீதியான வன்முறைகளுக்கு காரணமாகிறது. மாலத்தீவில் இயங்கிவரும் இது போன்ற தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிலர் ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக சிரியா சென்றுள்ளனர்.

ஊழல்வாத அரசியல்வாதிகளைப் போன்றே இந்த மத தீவிரவாத கும்பல்களும் தீவிரவாத சிந்தனை கொண்ட இளைஞர்களுடன் கைகோர்த்துள்ளன. ”தீவிரவாதிகளை இசுலாமியமயமாக்குவது” என ஆலிவர் ராய் சொல்லும் ஒரு போக்கு மாலத்தீவில் உள்ளது. இது போல் “இசுலாமியமயமாக்கப்பட்ட தீவிரவாதிகள்” பலர் சிரியாவுக்குச் சென்றுள்ளனர். இந்தக் குழுக்களுக்கு சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களுடன் பரஸ்பர உறவு இருப்பதால் தங்கள் மீதான சட்டநடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்கின்றனர்.

ரஷீது, அலியின் கொலையின் பின்னும், ரில்வானின் கடத்திலின் பின்னும் மாலேவில் உள்ள இது போன்ற கும்பல்கள் இருக்குமென்றால், சர்வதேச அழுத்தங்கள் இருந்தால் அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை. அப்படியே நீதி கிடைத்தாலும் குற்றம் அரசியலுக்காக நடந்ததா அல்லது மத காரணங்களுக்காக நடந்ததா என்கிற கேள்வி எஞ்சி நிற்கும்.

எப்படிப் பார்த்தாலும் மாலத்தீவில் மதம் சாராத அரசியலின் தோல்வி மற்றும் ஆழமாக பிளவுபட்ட மதப் பரப்பின் மேல் ஒரு புதியவகை வன்முறை தோன்றியிருப்பதைத் தான் ரஷீதின் கொடூரமான கொலை உணார்த்துகின்றது.

மூலக்கட்டுரை: Who killed my friend Yameen Rasheed?
நன்றி: Azim Zahir, ALJAZEERA
தமிழாக்கம்: முகில்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க