Tuesday, April 13, 2021
முகப்பு வாழ்க்கை குழந்தைகள் சேலம் சிவராஜ் வைத்தியருக்குப் போட்டியாக ஆர்எஸ்எஸ்-ன் ஆரோக்கிய பாரதி !

சேலம் சிவராஜ் வைத்தியருக்குப் போட்டியாக ஆர்எஸ்எஸ்-ன் ஆரோக்கிய பாரதி !

-

ங்களது குறிக்கோள் என்னவென்றால், உத்தமமான சந்ததியினரை உற்பத்தி செய்வதும் அவர்கள் மூலம் வலிமையான பாரதத்தைப் படைப்பதும் தான்” என்கிறார் மருத்துவர் கரிஷ்மா மோகன் தாஸ் நார்வானி.

”பெற்றோர் அறிவற்றவர்களாக இருந்தாலும், படிப்பறிவற்ற பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களது குழந்தை அதீத புத்திசாலியாக பிறக்கும். சரியான முறைகளைப் பின்பற்றினால், கருப்பான நிறம் கொண்ட, குள்ளமான பெற்றோர்களுக்கும் கூட நல்ல வெளுப்பு நிறத்திலும் குழந்தை பிறக்கும்; அக்குழந்தை உயரமாகவும் வளரும்” என்கிறார் மருத்துவர் ஹித்தேஷ் ஜனி.

இவர்கள் கர்ப விஞ்ஞான கலாச்சாரத் திட்டத்தின் (Garbh Vigyan Sanskar Project) தேசிய பொறுப்பில் உள்ள மருத்துவர்கள்.

நீங்கள் சந்தேகப்பட்டது சரிதான். இந்த திட்டம் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான வித்யா பாரதியின் துணை அமைப்பான ஆரோக்கிய பாரதியினுடையது. மேற்படி திட்டத்தின் நோக்கம் ’உத்தம சந்ததி’ ஒன்றை உருவாக்குவது. உத்தம சந்ததி என்பதை முன்வடிவமைக்கப்பட்ட குழந்தைகள் (Designer Babies) என்று சரியாக புரிந்து கொள்ளலாம். இவ்வாறான ’உத்தம சந்ததியை’ உற்பத்தி செய்ய இவர்கள் பின்பற்றச் சொல்லும் வழிமுறைகள் என்ன?

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் எங்கள் கிராமத்து ஆலமரத்தடிக்கு எப்போதாவது ஒரு ‘மருத்துவர்’ ஒருவர் வருவார். சுற்றிலும் மூலிகைகளைப் பரப்பி வைத்துக் கொண்டு “ஒருமண்டலம் சுயமைதுனம் செய்யாமல் விரதமிருந்து பின் மனைவியின் மாதவிலக்காகிய 12-ம் நாள் அவரோடு கூடினால் பிறக்கும் குழந்தை பெரும் அறிவோடு பிறக்கும்” என்று நீட்டி முழக்குவார். ஒருவேளை உங்களால் ‘சுத்தபத்தமாக’ இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர் முன் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் மூலிகையில் ஒன்றை ஐந்தாயிரம் கொடுத்து வாங்கித் தின்றால் (தேனில் கலந்து; அந்த தேனையும் அவரிடம் ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டும்) அதே அளவுக்கு பலன் கிடைக்கும் என்று அடித்து விடுவார். கூட்டம் அதிரும். அதிலும் ஒற்றைப்படை நாட்களில் கூடினால் பெண் குழந்தைகளும், இரட்டைப்படை நாட்களில் கூடினால் ஆண் குழந்தைகளும் பிறக்குமென கொளுத்திப் போடுவார் (பெண் குழந்தைகளால் அறிவாளி ஆகவே முடியாதோ).

அந்த ஆலமரத்தடி வில்லேஜ் விஞ்ஞானியின் இன்றைய வடிவம் தான் ஆரோக்கிய பாரதி.

சரி,அது என்ன உத்தமமான சந்ததி? அதை எப்படி உருவாக்கப் போகிறார்கள்?

உத்தம சந்ததி என்பது இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Customized) குழந்தைகள் என்கிறார் மருத்துவர் ஜனி. இவ்வாறு ’வடிவமைப்பதற்கு’ தேவையான விவரங்கள் ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடும் மருத்துவ நார்வானி, குழந்தைகள் கருவுற்றுள்ள சமயத்தில் தாய் எதைத் தின்ன வேண்டும், எதைக் கேட்க வேண்டும் என்பதற்கெல்லாம் விரிவான விதிமுறைகள் இருப்பதாகவும், அவற்றைப் பின்பற்றினால் நாம் விரும்பும் விதமான குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறார்.

அது மட்டுமின்றி பழைய இந்து சாஸ்திரங்களில் தங்களுடைய ராசி, நட்சத்திரங்களின் அடிப்படையிலும், கோள்கள் எந்தக் கட்டத்தில் சஞ்சாரம் செய்கின்றன என்பதன் அடிப்படையிலும் பெற்றோர் எந்த சமயத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களும் இருப்பதாக நார்வானி குறிப்பிடுகிறார். எந்த நேரத்தில் தம்பதியினர் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதைக் குறித்துக் கொடுத்துடன், சம்பவம் நடப்பதற்கு 90 நாட்களுக்கு முன்னிருந்து பின்பற்றப்பட வேண்டிய ‘தேக சுத்தி’ மற்றும் ‘நாடி சுத்தி’ பயிற்சிகளையும் வழங்குகின்றனர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த’வில்லேஜ் விஞ்ஞானிகள்’

இவை மட்டுமின்றி கர்ப காலத்தில் குறிப்பிட்ட சில சமஸ்கிருத மந்திரங்களை உச்சாடனம் செய்தால் குழந்தையின் அறிவு வளருமாம். இதன் மூலம் பிரசவ வலி இருக்காதென்றும், பிறக்கும் குழந்தை மற்ற குழந்தைகளை விட 300 கிராம் வரை அதிக எடையுடன் பிறக்குமென்றும் சொல்கிறார் அதே அமைப்பைச் சேர்ந்த மற்றொரு வில்லேஜ் விஞ்ஞானினும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குமான அசோக் குமார் வார்ஷினி.

இந்தளவுக்கு கேடுகெட்ட லூசுத்தனங்கள் முதன் முதலில் எங்கே துவங்கியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வேறெங்கே, குஜராத்தில் தான்.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே குஜராத்தில் முயற்சித்துப் பார்க்கப்பட்ட மேற்படி திட்டம், 2015-ம் ஆண்டுக்குப் பின் நாடெங்கும் விரிவுபடுத்தப்பட்டதாக ஆரோக்கிய பாரதியின் தேசிய தலைவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளனர். தற்போது குஜராத்திலும், மத்திய பிரதேசத்திலும் சுமார் பத்து கிளைகளில் செயல்பட்டு வரும் இத்திட்டம், விரைவில் உத்திரபிரதேசத்திற்கும் மேற்கு வங்க மாநிலத்துக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

மேற்படி திட்டத்தின் அடிப்படையில் கொல்கத்தாவில் கர்ப சன்ஸ்கார் என்கிற பெயரில் மூன்று நாள் ’பயிற்சிப் பட்டறை’ ஒன்றுக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்துள்ளது ஆரோக்கிய பாரதி. நிகழ்ச்சிக்கு பரவலாக செய்யப்பட்ட விளம்பரங்கள் மேற்கு வங்க குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கமிஷனின் (WBCPCR) கவனத்தை ஈர்க்கவே அவர்கள் நீதிமன்றத்தை நாடி தடை கோரியுள்ளனர். மத்தியில் நடப்பது மோடி அரசு என்பதால், பெயருக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து முகாமை நடத்த அனுமதி வழங்கியது நீதிமன்றம்.

முகாம் நடந்த நாட்களில் அதைப் பார்வையிடச் சென்ற குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கமிஷனின் தலைவர் அநன்யா சக்ரபர்த்தி மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் டிங்கு கன்னா, ருச்சிரா குப்தா போன்றோர், நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் மற்றும் நோட்டீசுகளின் வாசகங்களில் ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதைப் போன்றும், அதற்கான பயிற்சிகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் குறித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும் ஆரோக்கிய பாரதியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அசோக் வர்சினி, மேற்படி திட்டத்திற்கான ஜெர்மனியிடமிருந்து கடன் வாங்கியது என்கிறார். இதே போன்ற திட்டம் ஒன்றின் மூலம் குழந்தைகளைப் பெற்றதன் மூலமாகவே இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய இருபதே ஆண்டுகளில் ஜெர்மன் மீண்டும் வல்லரசானதாக ஆரோக்கிய பாரதியின் பிற நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தைகள் கருத்தரிக்கும் நேரமும், கருவில் இருக்கும் காலமும் அது பிறந்த பின் அதன் ஆளுமையில் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே உண்மை. குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் வளரும் சூழலே அக்குழந்தைகளின் அறிவாற்றலையும் இன்னபிற திறமைகளையும் தீர்மானிக்கின்றன. எனினும், அபூர்வமாக சில குழந்தைகள் தாங்கள் வளரும் சூழலையும் எதிர்த்துப் போராடி புதிய திறமைகளை வளர்த்துக் கொள்கின்றன. ஆனாலும், அவ்வாறான குழந்தைகள் விதிவிலக்குகளே.

ஒரு சமூகத்தில் பிறக்கும் குழந்தையை, அது வளரும் போது என்ன வகையான சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது – அல்லது ஈடுபடுத்தப்படுகின்றது – என்பதன் அடிப்படையிலேயே அதன் ஆளுமையும் அறிவுத்திறனும் உருவாகின்றன. ஆனால், தங்கள் பிள்ளைகளை ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் விற்பன்னராக்குவது எப்படி என்பதைச் சுற்றியே இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் கனவு கண்டு வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் கும்பலின் டிசைனர் குழந்தைகள் திட்டம் நடுத்தர வர்க்கத்தினரிடையே வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை.

கர்ப காலத்துக்கு முன்னும் பின்னும் பின்பற்றப்பட வேண்டியவைகள் என ஆர்.எஸ்.எஸ் வகுத்துக் கொடுக்கும் நடைமுறைகளின் விளைவாக பிறக்கும் குழந்தை ’உத்தம சந்ததியாக’ பிறக்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் இந்துத்துவ கும்பல் எதிர்பார்க்கும் ‘உத்தமர்களாகி’ விடுவர். சமஸ்கிருத மந்திரங்கள், பார்ப்பன வாழ்க்கைமுறை, பார்ப்பன உணவுப்பழக்கங்கள் என ’உத்தம’ குழந்தைக்கு கனவு காணும் பெற்றோர்களுக்கு அவர்கள் அறியாமலேயே காக்கி டவுசரை மாட்டி விடுவதே ஆர்.எஸ்.எஸ் திட்டம்.

இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளை வளர்க்கவும், அவர்களுக்கு சமூக எதார்த்தத்தை உணர்த்தும் நடைமுறைகளின் ஊடே தங்கள் பிள்ளைகளை நடத்திச் சென்று வழிகாட்டவும் நேரம் வாய்க்கப்பெறாத  நடுத்தர வர்க்க மக்கள், ஏதாவது குறுக்குவழியில் தங்கள் பிள்ளைகளை சூப்பர் மேன்களாகவும் ஸ்பைடர் மேன்களாகவும் ஆக்கி விடமுடியுமா என ஆலாய்ப் பறக்கின்றனர். இதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயங்குவதில்லை. கோடை விடுமுறைக் காலங்களில் இது போன்ற பொருளாதாரப் பின்னணி கொண்ட குழந்தைகளை மையப்படுத்தி நடக்கும் (ஆயகலை அறுபத்து நான்குக்கான) பயிற்சி வகுப்புகளும், அதைச் சுற்றிய பொருளாதாரமும் தனி கணக்கு.

தொலைக்காட்சியிலும், பிற ஊடகங்களிலும் குழந்தைகளை மையப்படுத்தி வரும் விளம்பரங்களை கவனித்தாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். அதிக உடல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து பானங்களில் இருந்து அபாகஸ் வரை “கட்டணமாக செலுத்தும் பணத்தின் அளவைப் பொறுத்து’ உங்களுக்கு ஸ்பைடர்மேனையோ சூப்பர்மேனையோ உருவாக்கித் தருவதாக மேற்படி விளம்பரங்கள் உத்தரவாதம் தருகின்றன.

குழந்தைகள் பெறுவது மட்டுமின்றி அவர்களை வளர்ப்பதே பெரும் வணிகச் சந்தையாக உள்ளது – இந்த வணிகச் சந்தைக்கு அடித்தளமாக இருப்பது பெரும்பாலும் உயர் மற்றும் நடுத்தரவர்க்க பெற்றோர்களே. இவர்களின் சபலத்தையும் பலகீனத்தையும் மூலதனமாக கொண்டு ஆர்.எஸ்.எஸ் கும்பல் களமிறங்கியுள்ளது. பார்ப்பன கலாச்சாரத்தையும் விழுமியங்களையும் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் கூட அதை எதார்த்தத்தில் ஒரு வாழ்க்கை முறையாக அமல்படுத்துவதில் இருக்கும் மனத்தடைகளை “குழந்தைக்காக” என்கிற ஒரே காரணம் தகர்த்து விடும்.

அந்த வகையில் தான் பிறக்கப் போகும் குழந்தைகளை முன்வைத்து பெற்றோரை முழுவதுமாக காவிமயமாக்குவது, பின்னர் எதிர்காலத்தில் அதே சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பிஞ்சிலேயே இந்துத்துவ நஞ்சைப் புகட்டுவது என்பதை ஆர்.எஸ்.எஸ் பரிவாரமான ஆரோக்கிய பாரதி தனது செயல்திட்டமாக கொண்டுள்ளது.

ஏற்கனவே மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளிகள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு பரிவார அமைப்பு என்கிற கணக்கில் நூற்றுக்கணக்கான அமைப்புகளைக் களமிறக்கி சமூகத்தின் சகல பிரிவுகளிலும் இந்துத்துவ வெறுப்பரசியலை முன்னெடுத்து வருகின்றது ஆர்.எஸ்.எஸ். இப்போது ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே அதற்கு காக்கி டவுசர் மாட்டிவிடும் திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளை விமர்சிக்கும் ஜனநாயக சிந்தனை கொண்டவர்கள் அவற்றை ஆக்டோபசுடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள் – அது காரணமின்றிச் செய்யப்பட்ட ஒப்பீடல்ல.

– சாக்கியன்

மேலும் படிக்க:

 1. “”இப்போது ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே அதற்கு காக்கி டவுசர் மாட்டிவிடும் திட்டத்துடன் “”

  I like your sense of humor .

 2. What is பார்ப்பன வாழ்க்கைமுறை?
  Like in K Balachander cinema ARANKETRAM-
  பார்ப்பன Prostitution is for family progress
  1)like education of brother
  2) Other sisters marriage
  3)and old age parents well being

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க