வென்றது பெண்களின் உறுதிமிக்க போராட்டம் ! பணிந்தது ‘டாஸ்மாக் அரசு’ !!
கடந்த ஏப்ரல் 18 ம் தேதி தஞ்சை மானோஜிப்பட்டியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தலைமையில் அப்பகுதி பெண்கள் அணிதிரண்டு முற்றுகை போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடையை மூட மே 5 தேதிவரை திமிர் பிடித்த அதிகார கும்பலுக்கு கெடு விதித்தனர். மே 5 -க்குள் மூடவில்லை எனில் கடை இருந்த சுவடு இருக்காது என அதிகாரிகளை எச்சரித்து அனுப்பினர் அப்பகுதி பெண்கள்.
மே 5 ம் தேதி கடை காலி செய்யவில்லை எனில் சாணி, குப்பை விளக்கமாற்றோடு “எப்படி கடைய திறப்பானு பார்ப்போம்?” என்று கடையை மூட பெண்களும், இளைஞர்களும் தயாராக இருந்தனர். இதை அறிந்த அதிகாரிகள் பெண்களின் உறுதியை கண்டு அஞ்சி 4 -ம் தேதி மாலையிலே பாட்டிலையாவது காப்பாற்றினால் போது என இரவோடு இராவாக கடையை ஏறக்கட்டினர்.
மே 5 தேதி, பல நூறு ‘குடி’மகன்களுடன் திருவிழா கோலமாக காட்சியளித்த அந்த கடை பெண்களின் உறுதிமிக்க போராட்டத்தால் டாஸ்மாக் கடை ஒன்று இருந்ததற்கான சுவடுகள் கூட இல்லாமல் போனது. பெண்கள், மாணவர்களிடத்தில் சாதித்த வெற்றிக் கொண்டாட்டத்தைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆறு ஆண்டுகளாக மனு கொடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி மூட முடியாத கடையை மக்களே அதிகாரத்தை கையிலெடுத்ததால் மூடப்பட்டது. அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
“டாஸ்மாக் கடை 5.5.2017 அன்று இயற்கை எய்தியதை மகிழ்ச்சியோடு தொரிவித்து கொள்கிறோம்! இப்படிக்கு மானோஜிப்பட்டி கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம்” என ‘கண்ணீர்’ அஞ்சலி பதாகை வைத்து அதற்கு மாலை மரியாதை செய்து ‘சிறப்பித்தனர்’ பகுதி மக்கள்.
“ குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே! மூடு டாஸ்மாக்கை!” என முழங்கி மக்கள் அதிகாரம் தொடர் போராட்டங்களை நடத்தியது. இப்போது மக்கள், மக்கள் அதிகாரத்தின் துணையுடன் போலீசைக் கண்டு அஞ்சாமல் டாஸ்மாக் கடைகளுக்கு பாடை கட்டுகிறார்கள். அரசு பல அடக்குமுறைகள் செய்து மக்கள் அதிகாரத் தோழர்களை மக்களிடமிருந்து பிரிக்க நினைத்தாலும் மக்கள் அதிகாரமும் மக்களும் ஒன்றுதான் என நிரூபிக்கின்றன மக்களது போராட்டங்கள்.
அரசு நம்மை ஆளும் தகுதி இழந்ததையும் நம் அனைத்து பிரச்சனைகளுக்கான தீர்வு மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதே என நடைமுறையில் மக்கள் உணர்ந்ததன் வெளிபாடே மக்களது இன்றைய தொடர் போராட்டங்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.
மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தின் கீழ் கடந்த 16.04.2017 அன்று மக்கள் அதிகரம் பெரும்பன்னையூர், காப்பனமங்கலம் மக்களை திரட்டி சாலை மறியல் 10.00 மணி அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.
மீண்டும் அந்த பகுதியில், மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தின் கீழ் 10.05.2017 அன்று மக்கள் அதிகரம் அமைப்பினர் மற்றும் ஊர் டாஸ்மாக் எதிர்ப்பு போரட்ட குழு கிராம மக்கள் இணைந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட திட்டமிட்டிருந்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி போலீசு டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக குண்டர் படையைப் போல் மக்களைத் தடுத்தது. இதைக் கண்டு அஞ்சாத மக்கள், மக்கள் அதிகாரம் தோழர்களை இணைத்து கொண்டு பேரணியாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுக்கையிட்டனர்.
அங்கு வந்த தாசில்தார் பேச்சுவர்தை நடத்தினார். மக்கள் கடையை மூடுறதை பத்தி பேசுங்க என்றனர். 90 நாள் அவகாசம் வேண்டும் என்றார் தாசில்தார். நாங்களே கடைய மூடிக்கிறோம், நீங்க போங்க என்று மக்கள் முழக்கம் போட்டனர். அதன் பிறகு 30 நாள் அவகாசம் வேண்டும் என்றார். அதற்கு உத்திரவாதமாக கடிதம் எழுதி கையொப்பம் போட்டுக் கொடுத்தார் தாசில்தார். சொன்ன தேதியில் மூடுலேன்னா எவன் வந்தலும் கடையை அடித்து நொறுக்குவோம் என்று மக்கள் எச்சரித்துவிட்டு வந்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகரம்,
திருவரூர் மாவட்டம்.
தொடர்புக்கு – 94454 75157.