Friday, December 13, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மார்க்ஸ் 200-ம் ஆண்டு : போராட்டமே அவருக்கு செய்யும் மரியாதை !

மார்க்ஸ் 200-ம் ஆண்டு : போராட்டமே அவருக்கு செய்யும் மரியாதை !

-

பேராசான் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் முன்னெடுப்பில் கோவை கணுவாய் பகுதியில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் கோபி எளிமையாக தனது தலைமையுரையை நிகழ்த்தினார். தோழர் சரவணன் உரை வீச்சினாலும் பாடல்களாலும் கூட்டத்தை சிறப்பித்தார். மாவட்ட பொருளாளர் தோழர் நித்தியானந்தன் தனது உரை வீச்சில் தொழிலாளியின் கோணத்தில் மார்க்ஸை நினைவு கூர்ந்தார். ம.க.இ.க. தோழர் சித்தார்த்தன் அவர்கள் மார்க்ஸின் சமூகப் பங்களிப்பை கோட்டு சித்திரமாக சொன்னார்.

பு.மா.இ.மு. தோழர் சக்தி, சம காலத்தில் கல்வியின் நிலையும் அது புதிய கல்விக் கொள்கை நீட் போன்ற தேர்வுகளாலும் எப்படியான நிலையை சென்றடையும் என்பதை தனது உரையில் குறிப்பிட்டார். காவிரி நீரில் மத்திய அரசின் வஞ்சகத்தையும் அதன் பின்னுள்ள ஆளும் வர்க்க நலன்களையும் தோலுரித்தார். கர்ணன் விவகாரத்தை கொண்டு நீதித்துறையையும் இன்ன பிற அரசு உறுப்புகளின் நெருக்கடி மற்றும் எதிர்நிலை தன்மையையும் அது எப்படி மக்களுக்கு சுமையாக மாறியுள்ளது என்பதையும் இதற்கான மாற்று மக்கள் அதிகாரம் தான் என்பதாக கூறி தனது உரையை முடித்தார்.

பு.ஜ.தொ.மு -வின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி தனது சிறப்புரையில், “1818 இல் துவங்கி 1883 -ல் தனது மண்ணுலக வாழ்வை தோழர் மார்க்ஸ் நிறைவு செய்தார். ஏங்கெல்ஸ் வார்த்தைகளில் கூறினால் “சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.”  தனது 65 ஆண்டு கால வாழ்க்கையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மனித குலம் மறக்க முடியாத அளவுக்கு மகத்தான பங்களிப்பை செய்து முடித்தார். இன்று அவரது 200 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்றாலே அதை தோழர் மார்க்ஸ் விரும்ப மாட்டார். உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்; அந்த நிலை வர போராடுங்கள் அதன் பிறகு எனது பிறந்த நாளை கொண்டாடுவது பற்றி யோசிக்கலாம் என்பார்.

காரல் மார்க்ஸ் காலத்தில் டெலிவிஷன் இல்லை. செல்போன் இல்லை. வாட்ஸ் அப் இல்லை. முகநூல் இல்லை. நமக்கு இருந்த வசதிகள் எதுவும் அவருக்கு இல்லை. ஆனால் லண்டனில் அகதிகளின் குடியிருப்பில் அந்த சின்னஞ் சிறு அறைக்குள் மனித குலத்தின் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் அனைத்தும் வந்து போனது. கணுவாய் பகுதியில் மக்கள் மத்தியில் மார்க்ஸ் பிறந்த நாளை நடத்திக் கொண்டிருக்கிறோம். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான குருடி மலை உயர்ந்து நின்று நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. குருடி மலை உச்சியிலே இயற்கையான ஊற்று உண்டு. நம் முன்னோர்கள் அதற்கு பொன்னூத்து என பெயர் வைத்தார்கள். பொன்னூத்து தண்ணீரைக் குடித்தால் தேன் தான். அடிவாரத்தில் வரப்பாளையத்தில் நின்று கொண்டு இருந்தால் அதனை சுவைக்க முடியாது. கஷ்டப்பட்டு கால் கடுக்க நடந்து மலை ஏற வேண்டும். உச்சியை அடைய வேண்டும். அதன் பின்பு தான் தண்ணீரின் ருசி நமக்கு கிடைக்கும். அது போல மார்க்சியத்தின் மகத்துவத்தை அறிய அந்த முக்கனி சாற்றை மொத்தமாக பருக போராட்டம் எனும் மலை ஏறுவது போன்ற கடும் பயிற்சி வேண்டும். செங்கொடி நம் தலைக்கு மேலே சுடர் விட வேண்டும். அதற்காகத் தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மக்கள் மத்தியில் மார்க்ஸ் நிகழ்ச்சியை நடத்துகிறது.

“கருத்து என்பது காகிதத்தில் இருக்கும் வரைதான் கருத்து அது மக்கள் மனங்களை பற்றிக் கொண்டால் பௌதீக சக்தி” என்றார் மார்க்ஸ். ரசிய தொழிலாளர்கள் மத்தியில் மார்க்சியம் எனும் கருத்தை தோழர் லெனின் கொண்டு சென்றார். பனிப்பிரதேசம் பற்றி எரிந்தது. முதலாளித்துவம் முறியடிக்கப்பட்டது. உலகின் முதல் சோசலிச அரசு உதித்தது.

சீனா மக்கள் மத்தியில் மார்க்சியம் கொண்டு செல்லப்பட்டது. அபினி மயக்கத்தில் இருந்த சீனா விவசாயிகள் செஞ்சேனையாய் சிலிர்த்து எழுந்தார்கள். மாவோ எனும் மகத்தான ஆளுமை உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு கிடைத்தது. நாமும் தடாகம் ரோட்டில் செங்கொடியை உயர்த்தினோம் டுகெதர் தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். என்பெஸ்ட், ரோடோரோ, கௌரி மெட்டல், நமது தோழர்கள் முதலாளித்துவ பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இவை அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாய் முடிவு காட்டுவோம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முட்டி போட வைப்போம். இன்றும் பல்லடம் ஜி‌.டி‌.என் போராட்டப் பந்தல் கடந்த மார்ச் 24 முதல் 50 நாட்களாக பற்றி எரிகிறது. நாம் பணிவதாகவும் இல்லை. அடங்குவதாகவும் இல்லை. மார்க்சினுடைய பிறந்த நாளுக்காக கூட்டம் நடத்துவதோ துண்டுப் பிரசுரம் அடிப்பதோ சுவரொட்டி போடுவதோ போதாது. மார்க்சியம் என்பது ஒரு ஜீவனுள்ள தத்துவம். போராட்ட நடைமுறையில் தான் அதன் ஆற்றல் வெளிப்படும். அந்த அடிப்படையில் ஜி‌டி‌என் போராட்டம் என்பது மார்க்ஸுக்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி செய்யும் மகத்தான பிறந்தநாள் மரியாதை.” எனக் கூறி நிறைவு செய்தார்.

நன்றியுரை கூறிய மாவட்ட செயலர் தோழர் வரதராஜன் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற உதவிய  கூட்டத்தினருக்கும் தோழர்களுக்கும் நன்றி கூறி முடித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க