Monday, March 1, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளிகளிடையே காரல் மார்க்ஸ் !

திருவள்ளூர் மாவட்ட தொழிலாளிகளிடையே காரல் மார்க்ஸ் !

-

திருவள்ளூர் மாவட்டம்: பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்சின் 200 – வது பிறந்த நாளில்
ஆலைவாயில் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள்!

முதலாளி முதல் போடுகிறான், அவன் பக்கம் அரசாங்கம் இருக்கிறது, நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம் தலையெழுத்து என்று வாழ்ந்து கொண்டிருந்த உழைப்பாளி மக்களை ஏமாற்றிச் சுரண்டுபவர்களின் தலையில் இடிவிழுந்ததைப் போல உருவானது கம்யூனிசத் தத்துவம். அனுதினமும் உழைப்பதும் அணுஅணுவாய்ச் சாவதும் உழைப்பாளிகளின் தலைவிதி அல்ல, அது முதலாளிகளின் சதி என்று உண்மையை உடைத்துக் காட்டியவர் காரல் மார்க்ஸ். உழைப்பின் மீதான மூலதனத்தின் மேலாதிக்கத்தையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்ட முடியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதன் மூலம் வர்க்கங்கள் இல்லாத கம்யூனிச சமூகத்தைப் படைக்க முடியும் என்பதைத் தனது ஆய்வுகள் மூலம் ஆணித்தரமாக நிறுவி உழைக்கும் வர்க்கத்துக்கு வழிகாட்டியவர் ஆசான் மார்க்ஸ். 1818-ஆம் ஆண்டில் பிறந்த மார்க்சின் 200-வது பிறந்த நாளைக் கொண்டாடுவது, மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற வகையில் ஆலைவாயில் கூட்டங்களும், தெருமுனைப் பிரச்சாரங்களும் திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட பு.ஜ.தொ.மு சார்பில் நடத்தப்பட்டன.

ஆலைவாயில் கூட்டங்கள்:

நெமிலிச்சேரியில் உள்ள டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் ஆலை வாயிலில் நடந்த கூட்டத்தில் பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர்.ப.விஜயகுமாரும், ஆவடி டி.பி.ஐ – ஐ.பி.பீ ஆலைவாயிலில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுர் (மேற்கு) மாவட்டத் தலைவர் தோழர்.மா.சரவணனும் கலந்து கொண்டு, ஆசான் மார்க்ஸ் படத்திற்கு மாலை அணிவித்து உரையாற்றினர்.

உழைப்பதைத் தவிர வேறொன்றும் அறியாமல் இருந்த உழைக்கும் வர்க்கத்திற்கு புதிய வெளிச்சத்தைக் காட்டிய மார்க்சின் தத்துவம் குறித்தும், அத்தத்துவத்தைப் படைப்பதிலும் செயல்படுத்துவதிலும் மார்க்ஸ் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டதைக் குறித்தும் உணர்வூட்டும் வகையில் விரிவாகப் பேசினர். இக்கூட்டங்களில் நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

தெருமுனைப் பிரச்சாரங்கள்:

பு.ஜ.தொ.மு  – பட்டாபிராம் பகுதிக்குழு சார்பில் மாலையில் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. சோழன் நகர், காந்தி நகர் பாரதமாதா தெரு 1&2, உழைப்பாளர் நகர், பாபு நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் ஆசான் மார்க்சின் படங்களையும், செங்கொடியையும் ஏந்தி, மெகா போன் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் (மேற்கு) மாவட்டப் பொருளாளர் தோழர் மேரிக்குமார் மற்றும் இணைச்செயலாளர் தோழர் லட்சுமணன், டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர் சங்க துணைத்தலைவர் தோழர் சேதுராமன் ஆகியோர் உரையாற்றினர்.

உழைப்பைக் கொள்ளையடிக்கும் முதலாளித்துவ சதியை அம்பலப்படுத்தியதோடு, அதை உடைத்தெறிந்து விடுதலை பெறும் வழியையும் படைத்துத் தந்தவர் மார்க்ஸ், அவர் வழி நின்று ரஷ்யாவிலும், சீனாவிலும் இன்னும் பல நாடுகளிலும் பாட்டாளி வர்க்கம் பூலோக சொர்க்கமான சோசலிசத்தைப் படைத்தனர் என்பதையும் விளக்கிப் பேசினர். இன்றைய சூழலில் மார்க்சின் தத்துவம் மட்டுமே நமக்கான ஒரே வழிகாட்டி, முதலாளிகளுக்கான இந்த அரசமைப்பு இனியும் நமக்கு சேவை செய்யும் என எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்காமல் உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் அணிதிரள வாருங்கள் என அறைகூவல் விடுத்தனர்.

மாலை நேரத்தில் தண்ணீர் பிடிக்கும் பெண்கள், கடைகளுக்கு வருவோர் என திரளான மக்கள் கூடி நின்று கவனித்தனர். 200 ஆண்டுகள் கழிந்தாலும் மார்க்சைப் பற்றிப் பேசுகிறீர்களே என்றும், இந்தக் காலத்து இளைஞர்களும் மார்க்சை உயர்த்திப் பிடிக்கிறார்களே என்றும் முதியவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர். பகுதியில் உள்ள வி.சி.கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் அவர் பகுதியில் நமது பிரச்சாரத்தைக் கவனித்துக் கேட்ட பிறகு அனைத்துப் பகுதிகளுக்கும் உடன் வந்து தனது ஆதரவை வழங்கினார். தலைவர் பிறந்த நாள் என்றால் சிலைக்கு மாலை போட்டுவிட்டு சென்றுவிடும் சூழலில், இதுவரை இல்லாத வகையில் அரசியல் தலைவர் ஒருவரின் பிறந்த நாளில் தெருத்தெருவாக நின்று மக்களுக்கு அவர் ஆற்றிய பணி குறித்து விளக்கிப் பேசுவதை மக்கள் வியப்போடு பார்த்தனர். பிரச்சாரக் கூட்டங்களின் முடிவில் மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. தெருமுனைப் பிரச்சாரத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.

தொடர்புக்கு: 94453 68009.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க