போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை என்ன ? நேர்காணல்

12
20

மிழகம் முழுவதும் கடந்த 15-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை போடப்படும் ஊதிய ஒப்பந்தம் இதுவரை போடப்படாததை கண்டித்தும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும், தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கும் அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

இந்த செய்தி வெளியானதும் பல இடங்களில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். மே 15, மே 16 ஆகிய இருதேதிகளில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அடிமைகளின் கூடாரமான அதிமுக தொழிற்சங்கம் மட்டும் பேருந்துகளை இயக்க விருப்பதாகக் கூறியது. அந்த சங்கத்திலும் கணிசமான தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். வேலை நிறுத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஓய்வு பெற்ற ஊழியர்களையும், பள்ளி – கல்லூரி பேருந்து ஓட்டுநர்களையும் வைத்து வாகனங்களை இயக்கப்போவதாகவும், கூடுதலாக சிறப்பு இரயில்களை இயக்குவதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கப் போவதாகவும் அறிவித்தது எடப்பாடி அரசு.

ஆனால் உண்மையில் இரத்த நாளங்கள் போல இரண்டு கோடி மக்களை அன்றாடம் தமிழகம் முழுக்கத் தாங்கிச் செல்லும் அரசுப் போக்குவரத்துத் துறையின் சேவையை வேறு எதனைக் கொண்டும் ஈடுகட்ட முடியாது. இந்நிலையில் நேற்று(16.05.2017) மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ‘பொது நல வழக்கை’ விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்மா சட்ட்த்தை வேலைக்குச் செல்லாத தொழிலாளர்கள் மீது ஏவப் போவதாக மிரட்டியது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடனடியாக ரூபாய் 1000 கோடியை ஒதுக்குவதாகவும், அதன் பின்னர் வரும் செப்டம்பர் மாதத்தில் மீதித் தொகையை ஒதுக்குவதாக தமிழக அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

தமிழக அரசு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான சுமார் 1,700 கோடியில் வெறும் 750 கோடியை மட்டுமே தற்போது ஒதுக்குவதாக பேச்சுவார்த்தையின் போது கூறியுள்ளது. ஆனால் தொழிலாளர்களின் ஈ.எஸ்.ஐ., பி.எஃப், க்ராஜுவிட்டி நிலுவைத் தொகையான சுமார் 4730 கோடி நிதியைப் பற்றி வாயே திறக்கவில்லை.  போக்குவரத்துத் துறை அமைச்சரோ தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் எனக் கோரினார்.

இந்நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முன்னர் கடந்த 13.05.2017 அன்று தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் போது அங்கு சென்றிருந்தோம்.

காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி அவர்கள், முதல்வரைச் சென்று பார்த்துப் பேசி ஒரு நல்ல முடிவை மாலை 4:00 மணிக்கு சொல்வதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துவிட்டு சென்றார்.

ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.லட்சுமனன்

அவரைத் தொடர்ந்து தி.மு.க –வின் தொ.மு.ச வின் செயலாளர் சண்முகம் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அதனால் வேலைநிறுத்தப் போராட்டமானது கட்டாயம் நடைபெறும். முதல்வரையும் அமைச்சரையும் சந்திப்பதாக கூறினார். அவர்கள் 4:00 மணிக்கு சொல்லும் முடிவில் இருந்து போராட்டத்தைப் பற்றி பரிசீலிப்போம் என ஊடகங்கள் மத்தியில் அறிவித்தார்.

அப்போது ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.லட்சுமனன் அவர்களிடம் போக்குவரத்துத் துறை, வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பற்றி கேட்டறிந்தோம்.

************

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா?

தமிழகத்தில் சுமார் 23,000 அரசுப் போருந்துகள் உள்ளன. அவை சென்னை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம், சேலம், கோயம்பத்தூர் மற்றும் அரசு விரைவுப் போக்குவத்துக் கழகங்கம் என நிர்வாக வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் சேர்த்து சுமார் 1,30,000 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். மேலும் 50,000 பேர் ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளனர்.

அதே போல நாள் ஒன்றுக்கு 2.2 கோடி பயணிகள் தமிழக அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மலைப் பிரதேசங்களில் அசாம் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் தான் சிறந்த சேவைகளை வழங்கிவருகின்றது. இந்தியாவின் மொத்த இரயில் சேவையைப் பயன்படுத்துபவர்களை விட, தமிழக பேருந்துகள் அதிக பயணிகளை ஏற்றிச் செல்கிறது. அதே போல இந்தியா முழுவதும் உள்ள 55 போக்குவரத்துக் கழகங்களை ஒப்பிடும் போது தமிழகம் தான் மக்களுக்கு அதிக அளவில் சேவை செய்யக்கூடிய பெரிய போக்குவரத்துக் கழகமாக உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.

 தற்போது போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிலைமை என்ன?

போக்குவரத்துத் தொழிலாளிகள் தமிழகம் முழுக்க உள்ளவர்கள் 1,70,000 அதில் சுமார் 40,000 பேர் அதிகாரிகளாக உள்ளனர். மீதமுள்ள தொழிலாளிகளில் 40% பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகளாக உள்ளனர். தற்போது ஒப்பந்தத் தொழிலாளிகளிலும் கணிசமான பேரை ரிசர்வ் தொழிலாளிகள் என மாற்றியுள்ளது அரசாங்கம். நிரந்தரப் பணிகளில் இது போன்ற ரிசர்வ் பணியாளர்களை வைத்திருக்கக் கூடாது என சட்டம் உள்ளது. பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் பேருந்துகளை இயக்கவே இவர்களை வைத்துள்ளதாகக் கூறுகிறது போக்குவரத்துத் துறை. ஆனால் இவர்களைக் கொண்டுதான் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

குறிப்பாக ஆளும் கட்சி ஊழியர்கள் பலரும் வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வேலையையும் ஒப்பந்த மற்றும் ரிசர்வ் தொழிலாளிகளை வைத்துச் செய்கிறார்கள். அதிலும் சம வேலைக்கு சம ஊதியம் என உத்திரவு இருந்தாலும் இவர்களுக்கு குறைவான சம்பளமே தரப்படுகிறது. 610 ரூபாய் சம்பளம் தரவேண்டிய தொழிலாளிகளுக்கு 310 ரூபாய் தான் சம்பளமாகத் தரப்படுகிறது. மற்ற அரசுத் துறை ஊழியர்கள் போல் உத்திரவாதமான 8 மணி நேர வேலை இங்கு கிடையாது.

ஒரு தொழிலாளி வேலைக்கு வருகின்றார், எனில் அவருடைய இடைவேளை நேரம் போக 6 மணி நேரம் தான் வேலை நேரம் (Wheel Hour) என விதி சொல்கிறது ஆனால் அப்படியான நடைமுறை இங்கு கிடையாது. 130-வது மேதினம் நிறைவடைந்துவிட்டது. ஆனால் இன்னமும் 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை எங்களுக்கு நிறைவேறவில்லை.

அதுமட்டுமல்லாது பணியில் உள்ள நெருக்கடி ஒரு பக்கம் என்றால் நிர்வாகம் மேலும் தொழிலாளிக்கு சுமையை ஏற்படுத்துகிறது. டீசல் லிட்டருக்கு 5 கி.மீ தர வேண்டும் என நெருக்கடி தருகிறது. அசோக் லேலண்ட் நிறுவனமே 4 ½ கி.மீ கிடத்தாலே பெரிய சாதனைதான் என்கிறது. அதே போல வழித்தடங்களில் வசூல் குறைந்தால் நடத்துநர் பொறுப்புடன் செயல்படுவது இல்லை என விசாரணை வைக்கிறது. அவர்களிடம் எதையும் பேசாமல் மெமோ அளிக்கிறது. பரிசோதகர்களுக்கும் இலக்கு வைத்து தொழிலாளிகள் மீது மெமோ தரவேண்டும் எனச் சொல்கிறது. இவ்வாறு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நெருக்கடிகள் தரப்படுகிறது. தொழிலாளிகளின் சோர்வைப் போக்க அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும். அதையெல்லாம் செய்வதே கிடையாது.

இவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் பல சலுகைகள் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு உள்ளதாக அமைச்சர்கள் கூறுகிறார்களே ?

தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைப் பணத்தின் விவரங்கள்

இங்கு உரிமைகளே இல்லை, சலுகைகள் எங்கிருந்து கிடைக்கப் போகிறது? எல்லாம் காகிதத்தில் தான் உள்ளது. ஒரு தொழிலாளிக்கு வருடத்திற்கு 5 சீருடை வழங்க வேண்டும். முறையான காலணிகள் வழங்க வேண்டும். போதிய விடுப்பு வழங்க வேண்டும். குடு்ம்ப உறுப்பினர்களைச் சேர்த்து 5,000 மணி நேர பயணம் இலவசமாக வழங்கப்பட வேண்டும். குழந்தைகளின் கல்விக்கான உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். திருமண உதவித்தொகை வழங்க வேண்டும். விபத்தில் உயிர் பிரிந்தால் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்றதும் வருங்கால வைப்பு நிதியை உடனே வழங்க வேண்டும். கிராஜுவிட்டி தொகையை ஓய்வு பெற்ற ஐந்தாண்டுகளில் வழங்க வேண்டும் என பல்வேறு உரிமைகளை வழங்க வேண்டும் என உத்திரவு உள்ளது. ஆனால் இவை எதுவும் தற்போது வழங்கப்படுவது இல்லை. இறந்தவர்களின் வாரிசுகளுக்கான வேலைக்குக் கூட லஞ்சம் தரவேண்டிய நிலை தான் உள்ளது.

தங்கள் வாழ்நாளில் குடும்பத்துக்காக ஒரு நல்லது கெட்டதில் பங்கெடுக்கமுடியாத தொழிலாளி தன்னுடைய ஓய்வுக் காலத்திலாவது நிம்மதியாக வாழமுடிகிறதா என்றால் கிடையாது.

சரி தற்போது நடைபெறும் (13/05/2017) பேச்சுவார்த்தையின் நிலை என்ன ?

ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் போடப்படும். ஆனால் கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் போட்டிருக்க வேண்டிய ஒப்பந்தம் இதுவரை போடப்படவில்லை. அதே போல கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியும் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமல்லாம தொழிலாளிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு பணம் என சுமார் 7000 கோடி ரூபாய் முறையாக செலுத்தப்படாமல் உள்ளது. இப்போது வரை இந்த நிலுவைப் பணம் பற்றித் தான் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது.

நாங்கள் மற்றவர்களின் பணத்தை கேட்கவில்லை. தொழிலாளர்களுடைய பணத்தை தான் கேட்கிறோம். நேற்று அமைச்சர் நிலுவைப் பணமான 750 கோடி ரூபாயை ஒதுக்குவதாக கூறியுள்ளார். ஆனால் தொழிலாளிகளுக்கு வரவேண்டிய 7,000 கோடியைப் பற்றி பதில் ஏதும் இல்லை. தற்போது பேச்சுவார்த்தையில் 1,200 கோடி ஒதுக்குவதாக கூறியுள்ளனர். ஆனால் அவை எப்படி எந்த வகையில், எத்தனை தவணையில் வழங்கப்படும் என இதுவரை சொல்லவில்லை.

இப்படி 7000 கோடிவரை நிலுவை வரக் காரணம் என்ன?

தமிழக அரசின் போக்குவரத்து துறையானது 1972-ல், 3000 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட அரசு நிறுவனமாக இருந்தது. அதன் பின்னர் அவை வெவ்வேறு கால கட்டங்களில் போக்குவரத்து கழகங்களாக மாற்றப்பட்டது. அதன் வரவு செலவு விவகாரங்கள் அந்தந்த கழகங்களுக்கு உட்பட்டதாகும். இதை காரணமாக வைத்து தமிழக அரசானது போதிய நிதியை ஒதுக்குவது கிடையாது.

மேலும் தமிழக அரசு வழங்கக்கூடிய சலுகைகள் மாணவர்களுக்கான இலவச பாஸ், முதியோர்களுக்கான இலவச பயணச்சீட்டு, கல்லூரிகளுக்கான சலுகை பயண அட்டை போன்று மக்களுக்கு சேவையாக வழங்கக் கூடிய சலுகைகளுக்கு அரசு போதிய நிதியை போக்குவரத்து கழகங்களுக்கு அளிப்பதில்லை. அதே போல மலைபகுதிகள் போன்ற இடங்களில் இலாப நோக்கில்லாமல் மக்களுக்கு சேவையாக போக்குவரத்து வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் எரிபொருள் சுங்கச்சாவடி கட்டணங்கள், வாகன உதிரி பாகங்களுக்கான செலவு இவற்றால் தான் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சரி செய்ய தொழிலாளர்களின் பணத்தில் இருந்து போக்குவரத்துக் கழகங்கள் முறைகேடாக செலவு செய்கின்றன. இது கடந்த பல ஆண்டுகளாக நிலவுவதால் சிறுகச் சிறுக இந்தத் தொகை சேர்ந்து தற்போது 7000 கோடி ரூபாயாக மாறியுள்ளது.

அப்படி என்றால் அரசாங்கம் மக்களுக்கு சேவையாக சலுகைகள் எதையும் வழங்கக் கூடாதா ?

மக்களுக்கு சலுகைகளை வழங்கக் கூடாது எனச் சொல்லவில்லை. மாறாக அதனால் ஏற்படும் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறோம். அதைக் கூட மக்களுக்கான சேவை எனும் அடிப்படையில் அரசுப் பேருந்துகளுக்கு எரிபொருளில் மானியம் வழங்குவது. மற்றும் சுங்கச் சாவடிகளில் கட்டனம் இரத்து செய்வது போன்றவற்றிம் மூலம் ஈடு கட்டலாம். விமானங்களின் எரிபொருளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது எனும் போது சாதாரண மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்துக்கு இது போன்ற சலுகைகள் அறிவிக்கலாம் அல்லவா?

அதைவிடவும் போக்குவரத்து துறையில் அதிகாரிகளின் விகிதம் அதிகமாக உள்ளது. இதில் அதிகாரிகளைக் குறைத்து நிர்வாகத்தை சீர்படுத்தினாலே இந்த இடைவெளியை குறைக்க முடியும். மேலும் அரசானது துறையை தனியார்மயப்படுத்தும் வேலைகளச் செய்து வருகிறது.

அரசாங்கப் பேருந்துகள் நட்டத்தில் இயங்குவதால் தானே தனியார்மயப் படுத்தப்படுகிறது. மேலும் தனியார் பேருந்துகள் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும் என்பது தானே  பலரின் கருத்து?

திட்டமிட்டே பல பணிமனைகளில் ஊழல் அதிகாரிகள் பல இடங்களில் பேருந்து எடுக்கும் நேரத்தை தனியார் பேருந்துகளுக்காக விட்டுக் கொடுக்கின்றனர். அதனால், அந்த வழித்தடங்களில் தேவை இல்லாத நேரங்களில் பேருந்துகளை இயக்குவதால் நட்டம் ஏற்படுகிறது. உதிரி பாகங்கள் வாங்குவதிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன.

தொழிலாளர்களைப் பிளவுபடுத்த அ.தி.மு.க அரசின் முயற்சி

சேவைகளில் குறைபாடு ஏற்படவும் இந்த அரசுதான் முக்கிய காரணமாக உள்ளது. வேண்டுமென்றே உதிரிபாகங்களை வழங்காமல் இருப்பது. புதிய பேருந்துகளை வாங்காமல் காலவதியான பேருந்துகளை இயக்கச் செய்வதன் மூலம் சேவை குறைபாடும் நட்டமும் ஏற்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். சுமார் 17,000 காலாவதியான பேருந்துகளை இன்னமும் இயக்கி வருகின்றனர். அதுமட்டுமல்ல தமிழகத்தில் இயங்கும் எந்த அரசுப் பேருந்துக்கும் காப்பீடு கிடையாது.

ஆனால் அதற்காக போக்குவரத்துத் துறையை தனியார்மயப் படுத்துவது என்பது தீர்வாகாது.  ஏனெனில் தற்போது வரை வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி இருந்தாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் போக்குவரத்துக்கான கட்டனம் குறைவாகத் தான் உள்ளது. தனியாரிடம் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு பண்டிகை கால கட்டணங்களைப் பார்க்கலாம். பல மடங்கு கட்டணம் அதிகரிக்கும். இன்று வரை தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை பேருந்து வசதி உள்ளது. தனியார்வசம் சென்றால் லாபம் அதிகம் இருக்கும் வழித்தடங்களில் மட்டுமே பேருந்து சேவை கிடைக்கும். இதனால் பாதிக்கப்படுபவர்களும் மக்கள் தான். அதே போல தொழிலாளிகளுக்கு தற்போது இருக்கும் பெயரளவிளான உரிமைகள் கூட கிடைக்காது.

நீங்கள் தற்போது வேலை நிறுத்தம் நடத்தினால் மக்கள் பெரிய அளவுக்கு பாதிக்கப்படுவார்களே?

மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கு  அரசு தான் காரணம். இந்த நிர்பந்தத்திற்கு எங்களை ஆளாக்கியது அரசுதான். அதனால் தான் எங்கள் கோரிக்கைகளை மக்களுக்கு புரிய வைக்க பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கேட்பது எங்களுடைய உரிமையைத்தான். அதற்காகத் தான் பேச்சுவார்த்தைக்கும் வந்துள்ளோம். ஆனால் இந்த அரசு அதற்கு செவிசாய்காமல் உள்ளது. இது தொழிலாளர்கள் மீதும் மக்கள் மீதும் இந்த அரசுக்கு அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.

பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் அரசின் கோரிக்கையை ஏற்றுவிட்டதாக சொல்கிறாரே அமைச்சர். அது பற்றி?

தமிழகப் போக்குவரத்துத் துறையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன அவற்றில் பல பெயர் பலகைச் சங்கங்கள். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி சார்பாக தொழிற்சங்கங்கள் வைத்துள்ளன. குறிப்பாக அ.தி.மு.க, தி.மு.க, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, வி.சி.க., பா.ம.க. என ஒரு பத்து தொழிற்சங்கங்களில் தான் பெரும்பாலான தொழிலாளிகள் உள்ளனர்.

தற்போது பேச்சுவார்த்தையில் 47 சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. விதிப்படி பேச்சுவார்த்தையில் 50 சதவிகித சங்கங்கள் முடிவை ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தை வெற்றி என உள்ளது. அதனால் தான் பெயர்பலகை சங்கங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கிறது. இது தொழிலாளிகளை அவர்களின் உரிமைக்காகப் போராடவிடாமல் பிளவுபடுத்தும் முயற்சியே ஆகும். ஆனாலும் இதைத்தாண்டி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கட்டாயம் வேலை நிறுத்தம் கட்டாயம் நடைபெறும்.


இந்நிலையில் நேற்று(16.05.2017) மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ‘பொது நல வழக்கை’ விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்மா சட்ட்த்தை வேலைக்குச் செல்லாத தொழிலாளர்கள் மீது ஏவப் போவதாக மிரட்டியது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடனடியாக ரூபாய் 1000 கோடியை ஒதுக்குவதாகவும், அதன் பின்னர் வரும் செப்டெம்பர் மாதத்தில் மீதத் தொகையை ஒதுக்குவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு பணிக்குத் திரும்பியிருக்கின்றனர், தொழிலாளர்கள். எஸ்மா கொண்டு மிரட்டிய உயர்நீதிமன்றம், தொழிலாளர்களின் பணத்தை அவர்களுக்குத் தராமல் ஏமாற்றிய அரசை பெயருக்குக் கூட கண்டிக்கவில்லை. ஆளும் அதிமுக அரசோ, தொழிலாளர் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய தனது தொழிற்சங்கம் மூலமாக உள்ளடி வேலை பார்த்தும், மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அனுபவமற்ற ஓட்டுநர்களை வைத்து வண்டி எடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது. முழுக்க முழுக்க தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான அமைப்பாகவே இந்த அரசுஇயந்திரம் மாறி இருப்பதையே இச்சூழல் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

– வினவு செய்தியாளர்

***

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்குத் தமிழக அரசே முழுப்பொறுப்பு !
பத்திரிகைச் செய்தி

நாள்: 15.05.2017

மிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முதல் நாளிலேயே பொது மக்களுக்குப் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசே முழுக்காரணம். ஊதியம், ஓய்வுகாலப் பயன்கள் எனப் பல்வேறு இனங்களில் சுமார் 7000 கோடியை அபகரித்துக் கொண்டு தொழிலாளர்களை வஞ்சிப்பதோடு பாதிக்கப் பட்டவர்கள் மீதே பழியையும் போடுகிறது.தொழிலாளர்களின் பணத்தைத் திருப்பித்தருவதற்கு போக்குவரத்துத் துறையின் நட்டத்தைக் காரணம் காட்டுவது மிகப்பெரிய மோசடி. நாளொன்றிற்கு ஒன்றரை கோடிபேர் பயணிக்கும் நிலையில், விரைவுப் பேருந்து என்ற பெயரில் மக்களிடம் கட்டணக் கொள்ளையை நடத்திக் கொண்டு, நட்டம் என்பது அரசு செய்யும் மிகப் பெரிய மோசடி.

ஊழலில் புழுத்து நாறும் துறைகளில் போக்குவரத்துத்துறை முதன்மையானவற்றுள் ஒன்று. கடந்த 15, 20 ஆண்டுகளில் வருமானத்தில் ஆகப்பெரும்பகுதி அமைச்சர்களாலும் அதிகாரிகளாலும் பங்கு போடப்பட்டுவிட்டது.உதிரிப்பாகங்கள் வாங்குவது தொடங்கி அற்றுக் கூலிக்கு வேலைக்கமர்த்துவது வரை அனைத்திலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுவது ஊரறிந்த ஒன்று.எனவே போக்குவரத்துத்துறையை சீரழித்த அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு, சொத்துக்களைப் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

தகுதியற்ற பேருந்துகள்,மனவுளைச்சலை உண்டாக்குமளவுக்குக் கடும் பணிச்சுமை இவற்றைத் தாங்கிகொண்டு உழைக்கும் போக்குவரத்துத்தொழிலாளர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.இந்தப் போராட்டம் போக்குவரத்து ஊழியர்களின் தனிப்பட்ட போராட்டமல்ல; மக்கள் வாழ்வைச்சூறையடும் அரசுக்கு எதிரான போராட்டமுமாகும்.எனவே அனைத்துத்தரப்பு உழைக்கும் மக்களும் இப்போராட்டத்தை ஆதரிப்பதோடு தற்காலிக இடயூருகளைப் பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். தமிழக அரசு காலங்கடத்தாமல் கோரிக்கைகளை நிறைவேற்றி இயல்பு நிலையை ஏற்படுத்தவேண்டுமென வலியுறுத்துகிறோம்.

தங்கள் அன்புள்ள,
காளியப்பன்.
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

சந்தா