இந்துத்துவத்தின் நேரடியான ஆட்சி அதிகாரத்திற்குள் சமீபத்தில் சிக்கியுள்ள உத்திரப்பிரதேசத்தில் இசுலாமியர்கள் மற்றும் தலித்துகளின் நிலை மட்டுமா மோசமாகவும் அபாயகரமாகவும் உள்ளது? அவர்கள் வேலையாக விதிக்கப்பட்ட மாட்டுத் தோலுறித்தல், தோல் பதனிடுதல் தொழிலும் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் தோல் தொழிலுக்கு வலுச் சேர்க்கும் இரு கிராமங்களின் நிலைமையை இப்புகைப்படங்கள் நமக்குக் காட்டுகின்றன.
உத்திரப்பிரதேசத்தில் ரோஹ்டா மற்றும் ஷோபாபூர் ஆகிய ஊர்களில் இரண்டு தோல் பதனிடும் நிலையங்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த பதனிடுபவர்களால் இயக்கப்படுகின்றன. அவர்கள் தங்களது தொழிலைக் கீழ்நிலையில் இருத்தி வைத்திருக்கும் சாதிய அமைப்பையே தங்களது துயர்மிகு வேலை நிலைமைகளுக்குக் காரணமாகக் குற்றம் சுமத்துகின்றனர். மற்ற தொழிற்சாலைகளைப் போல் ரோஹ்டா தோல் பதனிடும் நிலையம் நவீனமயமாக்கப்படவில்லை, மாறாக ஒரு நிலநடுக்கத்தால் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த பதனிடும் தொழிலாளர்களைக் கொண்ட கிராமம் தான் மேற்கு உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஷோபாபூர் கிராமம். பதனிடப்பட்ட தோல்கள் சூரிய வெப்பத்தில் காய வைக்கப்பட்டிருக்கும் காட்சி. இப்பதனிடப்பட்ட தோல்கள் மீரட்டில் உள்ள கிரிக்கெட் பந்து உற்பத்தியாளர்களுக்கு விற்கப்படுகின்றன
தற்போது 55 வயதாகும் கமல், தொடக்கப்பள்ளி முடித்தவுடன் தனது தந்தையைப் போலவே தோல் பதனிடும் தொழிலுக்கு வந்துவிட்டார். நாளொன்றுக்கு 200-250 ரூபாய்கள் சம்பாதிக்கும் இவர் மரப்பட்டையால் ஆன தேய்ப்பானைக் கொண்டு கால்நடைகளின் தோல்களிலிருந்து ரோமங்களை அகற்றுகிறார்.
கால்நடைகளின் தோல்கள் சிதைவடையாமல் தடுக்க உப்பிடப்பட்டு பின்னர் அடுக்கப்பட்டிருகின்றன. இதன் துர்நாற்றம் மிகவும் மோசமானதாக இருந்தாலும் ஷோபாப்பூர் தொழிலாளிகளுக்கு அதைத் தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில் இத்தொழிலை நவீனப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அவர்களிடம் வசதி இல்லை. நவீனப்படுத்திக் கொள்ள அரசாங்கத்திடம் தொடர்ந்து உதவி கேட்டுக் கோரிக்கைகள் விடுத்தும் எந்தப் பலனும் இல்லை.
34 வயதான மஹிந்தர், கால்நடையின் தோலை இரண்டாகப் பிளக்கின்றார். அதன் மிருதுவான கீழ்த் தோல் காய்ந்த பின்னர், வர்ணம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஷோபாப்பூர் தோல்பதனிடுபவர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு – சூழலியலாளர்களே பெரும் தலைவலியாக இருக்கின்றனர்.
ஷோபாப்பூரில் குடியிருப்பவர்களுக்கு தங்களது வாழ்க்கை நிலைமை மீது கசப்புணர்வே மிஞ்சியிருக்கிறது, அவர்களுக்கு வடிகால் வசதியும், மின்சார வசதியும் தேவைப்படுகிறது. “எங்கள் குழந்தைகளை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் சமூகம் ஒரு தலித் மருத்துவரை ஏற்றுக்கொள்வதில்லை எனக் கூறுகின்றனர் அம்மக்கள்.
பதனிடுவதற்கான இரசாயனங்களை சேமிப்பதற்கு தனிப்பட்ட இடமில்லாததால், சுண்ணாம்பை வெட்ட வெளியில் போட்டு வைத்திருக்கின்றனர். சுண்ணாம்பு அப்பகுதியில் மண்ணில் இயற்கையாக எங்கும் கிடைக்கிறது.
உத்திரப்பிரதேசத்தின் ரோஹ்டாவைச் சேர்ந்த பிரேமாவதி, பதனிடுவதற்குத் தோல்களை ஆயத்தம் செய்ய தோல் பரப்புகளை நார் கொண்டு தைத்துக் கொண்டிருக்கிறார். ரோஹ்டாவின் தோல் பதனிடும் நிலையம் சுதந்திர இந்தியாவின் முதல் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அரசாங்கத்தின் உதாசீனத்தாலும் புறக்கணிப்பாலும் சமீபத்திய நிலநடுக்கத்தாலும் தற்போது பாழ்படுத்தப்பட்டிருக்கிறது
ஷோபாப்பூரிலும் ரோஹ்டாவிலும் ரசாயனங்களை சேமித்து வைக்க கிடங்குகளோ, ரசாயனங்களை வெளியேற்ற வடிகால்களோ இல்லை.
இவ்விரு சகோதரர்களைப் போல ஷோபாப்பூரில் வாழும் மக்களுக்குத் தெரிந்த ஒரே தொழில் தோல் பதனிடுவது மட்டும் தான். ஒவ்வொரு வீடும் ஒரு தோல் பதனிடும் இடத்தையும் தோல் பதனிடுபவரையும் கொண்டுள்ளது. இவ்வேலையைத் தூய்மையுடையதாக்க எதையும் செய்யாமல் இது தூய்மையற்ற வேலையாக அழைக்கப்படுவதாகக் கூறி ஆத்திரமடைகின்றனர் இவர்கள்.
ரோஹ்டா தோல் பதனிடும் இடம் : தோல்கள் மற்றும் திறந்த வெளி வடிகால்களிலிருந்தும் வரும் துர்நாற்றம் எங்கும் நிறைந்திருக்கிறது. தோல் பதனிடும் நிலையத்தை நவீனப்படுத்த பல மனுக்கள் கொடுத்தும் எவ்விதப் பலனும் இல்லை. உள்ளூர் விவசாயிகள் இத்தோல் பதனிடும் தொழிற்கூடம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் ரோஹ்டாவைச் சேர்ந்த தலித்துகளுக்கு கடந்த 10 தலைமுறையாக இதனைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது.
ரோஹ்டாவில் உள்ள தோல் பதனிடும் இடத்தைச் சுற்றி சுதந்திரமாக அலைந்து திரியும் நாய்களின் கால்களில் நிரந்தரமாகவே சாயம் ஏறியிருக்கிறது.
ரோஹ்டா தோல் பதனிடும் நிலையம் கடந்த 20 ஆண்டுகளாகவே சிதைந்த நிலையில் உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதன் சுற்றுச் சுவரையும், கதவையும் தகர்த்துவிட்டது. பதனிடுபவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இங்கு நாய்கள் சுதந்திரமாக உலாவுகின்றன.
வேலையின் இடைவெளியில் நீர் அருந்தும் தலித் தொழிலாளி ராஜ்குமார். இங்கு பணிபுரியும் பதனிடும் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்புக் கருவியோ, தொழில் செய்யும் உடையோ வழங்கப்படாததால், உள்ளாடைகளுடனேயே வேலை செய்கின்றனர்.
தோல் பரப்பு ஒன்றை ராஜ்குமார் கழுவுவதை மெஹர் சிங்கும் விஜயும் கவனிக்கின்றனர். இந்த பதனிடும் நிலையத்தின் சுவர்களும், மேற்கூரையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றன. இவற்றைச் சரிசெய்வதற்குப் பதிலாக இவற்றை அப்புறப்படுத்துவதையே தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தோல்களைத் தைத்து தொங்கவிட்டு, சுண்ணாம்பு மற்றும் ரசாயனங்களை அதனுள் ஊற்றி, 3 வாரங்களுக்கு நீராற்றும் வரை அப்படியே விட்டுவிடுகின்றனர்.
நீராற்றப்படும் தோலிலிருந்து நீர் மெதுவாக சொட்டு சொட்டாக வெளியேறுகிறது. கைகளால் தயாரிக்கப்பட்ட இரசாயன நீரை மறுபடியும் அதில் ஊற்றி நிரப்புகிறார் தொழிலாளி ராஜேஷ். ஷோபாப்பூரிலோ அல்லது ரோஹ்டாவிலோ மின்சாரம் அறவே கிடையாது.
ஒரு தொழிலாளி குழிகளில் நீரை ஊற்றவும் , வெளியேற்றவும் பிளாஸ்டிக் வாளியை உபயோகிக்கிறார். இந்த வேலை நிலைமைகள் மிகவும் கடினமானவை. இங்கு இவர்களுக்கு மருத்துவ உதவி கூட கிடைப்பதில்லை.
தண்ணீரில் ரசாயனங்களை சேர்க்கும் போது உருவாகும் நச்சு நீராவியானது தொழிலாளர்கள் சுவாசிக்கும் காற்றில் மேகங்களை போல சூழ்ந்து கொள்கின்றன. இதன் விளைவாக அவர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுவதோடு சருமம் மற்றும் ஆடைகளில் நீங்காத துர்நாற்றம் வீசுகிறது.
ராஜ்குமாரை போன்ற தோல் பதனிடும் தொழிலாளிகள் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள். ஏனெனில் நம் அனைவருக்கும் தோல் பொருட்கள் தேவைப்படுகின்றது. ஆனால் அவர்கள் தலித் என்பதாலேயே அவர்களின் வாழ்க்கை பரிதாப நிலையில் இருப்பதாகவும், தங்களைப் பற்றி அரசாங்கம் உட்பட யாரும் கவலை கொள்வதில்லை என்றும் இத்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
– தமிழாக்கம்: நந்தன்
நன்றி : அவுட்லுக் ( Outlook )
Bakthas! Answer this question.Whether much boosted Swatch Bharat,Electricity for every village and Sab Ka vikas schemes of the Central Govt are not applicable to the above villages?