குலாம் அகமதுவைக் கொன்ற யோகி ஆதித்யநாத்தின் ஹிந்து யுவ வாகினி

1
14

த்திரப்பிரதேச மாநிலத்தின் புலாண்ட்ஷார் மாவட்டத்தில் சோஹி என்னும் கிராமம் உள்ளது. ஹிந்துக்களே பெரும்பான்மையாக வாழும் சோஹியில் நான்கு முசுலீம் குடும்பங்கள் மட்டும் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றன. இரு பிரிவினரும் நேசத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சோஹியைச் சேர்ந்த அனில் சர்மா என்பவரின் மாந்தோப்பில் குலாம் அஹமது மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தார்.

கடந்த ஏப்ரல்-27 அன்று குலாம் அஹமதுவின் அண்டை வீட்டுக்காரரான ரியாசுதீன்கானின் மகன் யூசஃப் அருகில் உள்ள ஃபாசல்பூர் என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு ஹிந்துப் பெண்ணுடன் ஊரை விட்டு வெளியேறியிருக்கிறார். அதன் பின்னர் உடனடியாக யூசஃபையும் அப்பெண்ணையும் ரியாசுதீன்கானின் குடும்பத்தினர் தேடி அலைந்திருக்கின்றனர். இந்நிலையில் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஹிந்து யுவ வாஹினியைச் சேர்ந்த குண்டர்கள், அக்கிராமத்திற்கு வந்து அங்கு வசிக்கும் 4 முசுலீம் குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளனர். யூசஃபும், அப்பெண்ணும் திரும்பவில்லை என்றால் ஒரு முசுலீம் குடும்பமும் ஊருக்குள் இருக்க முடியாது என்று மிரட்டியுள்ளனர்.

அதன் பின்னர், இந்துமதவெறியர்கள் தொடர்ந்து சோஹி கிராமத்திற்கு வந்து முசுலீம் வீடுகளுக்கு முன்னால் கூட்டம் போடுவது, கூச்சல் போடுவது என மிரட்டியுள்ளனர். வீட்டில் இருந்த பெண்களையும் மிரட்டியிருக்கின்றனர்.

அதன் பின்னர் அருகில் உள்ள அனில் சர்மாவின் மாந்தோப்பில் குலாம் அஹமது வேலை செய்வதை அறிந்து, அவரை மாந்தோப்பிற்கு வெளியே இழுத்துச் சென்று, இரும்புக் கம்பிகளால் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். அக்குண்டர்கள் சென்ற பிறகு குலாம் அஹமது, தட்டுத்தடுமாறி, அனில் சர்மாவை அலைபேசியில் அழைத்து தாம் தாக்கப்பட்ட தகவலைக் கூறியிருக்கிறார்.

உடன் சென்ற அனில் சர்மா, குலாம் அஹமதுவை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். உடல் முழுக்க ஏற்படுத்தப்பட்ட கொடுங்காயங்களின் காரணமாக குலாம் அஹமது மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

இசுலாமியர் குடியிருப்புப் பகுதிகளில் விசாரணை மேற்கொள்ளும் போலீசு

இது சோஹி கிராமத்தைச் சேர்ந்த ராம்பால் சிங் என்பவர் கூறுகையில், குலாம் அஹமதுவின் மரணத்திற்கு அரசியல்வாதிகளின் மரணத்திற்கு வரும் கூட்டத்தை விட அதிகமான மக்கள் கூட்டம் வந்திருந்தது என்று கூறியிருக்கிறார். இப்பகுதியில் முசுலீம்களும், இந்துக்களும் மிகவும் நெருக்கமாகப் பழகி வருவதாகவும், மதரீதியான பிரச்சினைகள் அக்கிராமத்தில் அதுவரை ஏற்பட்டது இல்லை என்றும் இது கண்டிப்பாக வெளியில் இருந்து வந்தவர்களால் செய்யப்பட்ட படுகொலை என்று கூறியிருக்கிறார்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், கொலை செய்யப்பட்ட குலாம் அஹமது மிகவும் நல்லவர் என்றும், அக்கிராமத்தில் முசுலீம்களும் இந்துக்களும் சகோதர சகோதரிகளாகப் பழகி வருவதாகவும் கூறினர். அதே போல அக்கிராமத்தைச் சேர்ந்த 4 முசுலீம் குடும்பங்களும் தங்கள் வீட்டு விழாக்களுக்கு இந்துக்கள் வந்து கலந்து கொள்ளும் காரணத்தாலேயே, உணவில் அசைவத்தை தவிர்த்து விடுமளவு பரஸ்பரம் நட்பும், அமைதியும் அப்பகுதியில் இருப்பதாகவும் கூறினர்.

குலாம் அஹமதுவின் மகன் சகீல் அஹமது

குலாம் அஹமதுவின் இளைய மகன் சகீல் அஹமது கூறுகையில், தங்களது கிராமத்தைச் சேர்ந்த எந்த ஹிந்துவும் இப்படி ஒரு கொலையைச் செய்வது குறித்து நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள் என்றும், தனது தந்தை ஒரு முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காகவே ஹிந்து யுவ வாஹினி இக்கொலையைச் செய்திருக்கிறது என்றார்.

இப்படுகொலை குறித்து விசாரணையை ஆரம்பித்திருக்கும் போலீசு, இதுவரை 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளது. ஹிந்து யுவ வாஹினி என்பது உத்திரப் பிரதேச முதல்வரின் அடியாள்படை என்பதால், போலீசு இந்த வழக்கை எப்படி விசாரிக்கும் என்பது ஊரறிந்த விசயமே.

இந்து-முசுலீம் கலவரத்தைத் தூண்டுவதற்காகவே குலாம் அஹமது கொலை ஹிந்து யுவ வாஹினி கும்பலால் நடத்தப்பட்டது என்பதை சோஹி மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால் தான் குலாம் அஹமதுவின் இறுதி ஊர்வலத்தில் பெருவாரியான ஹிந்துக்கள் கலந்து கொண்டு இந்துமதவெறியர்களின் முகத்தில் கரியைப் பூசியிருக்கின்றனர்.  இப்படிப்பட்ட ஒற்றுமையை அழித்து பார்ப்பனிய இந்துமதவெறியை நிலை நாட்டுவதே சங்க பரிவாரங்களின் நோக்கம்.ஹிந்து யுவ வாஹினியின் சதியை முறியடித்திருக்கும் சோஹி மக்கள் உத்திரப் பிரதேசத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஒரு மிகச் சிறந்த  முன்னுதாரணம்!!

மேலும் :

சந்தா