Thursday, December 12, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஐ.டி துறை வேலை பறிப்புக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம் !

ஐ.டி துறை வேலை பறிப்புக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம் !

-

விப்ரோ, காக்னிசன்ட் (சி.டி.எஸ்) நிறுவனங்களில் நடந்து வரும் ஆட்குறைப்பை கண்டித்தும், ஐ.டி ஊழியர்களை பு.ஜ.தொ.மு-வில் இணைய அறைகூவியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சார்பில் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் மே 18-ம் தேதி மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்களும், பு.ஜ.தொ.மு வாகன ஓட்டுனர்கள் சங்க உறுப்பினர்களும் தவிர பல்வேறு ஐ.டி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும்  கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகம் தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து பு.ஜ.தொ.மு-வின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சக்தி சுரேஷ் உரையாற்றினார். “ஐ.டி துறையில் வேலை பறிப்பு என்பது தமிழகத்தின் பிரச்சனை மட்டுமில்லை, பூனாவில், கொல்கத்தாவில், பெங்களூருவில் என்று இந்தியா முழுவதும் 37 லட்சம் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை. எனவே, இந்தப் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தலையிடும் அவசியம் இருக்கிறது.

ஐ.டி துறையில் ஊழியர்கள் பிற துறைகளைப் போல வலுவான யூனியன் இல்லாத நிலை உள்ளது. ஊழியர்கள் தனித்தனியாக பிளவுபட்டு இருக்கின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக ஐ.டி ஊழியர்கள் ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என்று பிற துறை பிரச்சனைகளுக்குக் கூட தெருவில் இறங்கி போராட முன்வந்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம் ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரையும் யூனியனாக திரட்டுவதற்கான ஒரு தொடக்கமாக அமையும்” என்று அவர் பேசினார்.

வாகன ஓட்டுனர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோழர் தெய்வீகன் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தின் அவசியம் பற்றியும் வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் மூலம் போராடி வென்ற உரிமைகள் பற்றியும் பேசினார்.

பி.பி.சி வேர்ல்ட், நியூஸ் 18, ராஜ் நியூஸ், சன் நியூஸ், கலைஞர் தொலைக்காட்சி, பாலிமர் தொலைக்காட்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்டு பல்வேறு ஊடகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்து செய்தி சேகரித்தனர். பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகமும், சட்ட ஆலோசகர் சக்தி சுரேஷூம் ஊடகங்களுக்கு நேர்முகம் அளித்தனர். பெங்களூருவைச் சேர்ந்த லைவ் மின்ட் பத்திரிகையாளர் பாதிக்கப்பட்ட ஐ.டி ஊழியர் ஒருவரிடம் பேசி நேர்காணல் பதிவு செய்து கொண்டார்.

உரைகளுக்கு நடுவே ஐ.டி துறை ஆட்குறைப்பை கண்டித்தும், அரசை தலையிட கோரியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்துக்காக போலீஸ் அமைத்திருந்த தடுப்பரண்கள் ஆர்ப்பாட்ட தட்டிகளை கட்டுவதற்கு பயன்பட்டன. 20-க்கும் மேற்பட்ட அத்தகைய தட்டிகள் கட்டப்பட்டு, ஆர்ப்பாட்டத்தை சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஐ.டி ஊழியர்களுக்கு தாம் ஏந்தியிருந்த செய்திகளை தெரிவித்துக் கொண்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த ஐ.டி ஊழியர் ஒருவர் தெரிவித்த கருத்தின் தமிழாக்கம்

“பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் பு.ஜ.தொ.மு நன்றாக செயல்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை.. ஆனால், ஐ.டி ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. தொழிலாளர் துறைக்கு மனு கொடுக்கப் போகும் போது கூட பல்வேறு நிறுவனங்களிலிருந்து சில உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். சி.டி.எஸ் ஊழியர்கள் தொழிலாளர்கள் இணை ஆணையரை சந்திக்கச் சென்ற போது ஒரு ஊழியர் மட்டுமே தனது குறையை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

இப்போது நடப்பதெல்லாம் நமக்குத்தான் நடக்கிறது என்பதையும், அதற்கு எதிர்வினை ஆற்றுவதில் இதை நிலைமை தொடர்ந்தால் நாம் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்குறைப்புகளுக்கு எதிராக போராடுவது குறித்து பு.ஜ.தொ.மு செய்துள்ள பிரச்சாரம், கூடிய விரைவில் ஐ.டி ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.”

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு,
தொலைபேசி : 90031 98576
இணையம் : new-democrats.com
மின்னஞ்சல் combatlayoff@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க