privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கநீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !

நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !

-

நாயைக் கொல்வதென்றாலும் சட்டப்படிதான் கொல்வாம் என ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்கள் தமது நேர்மைக்குத் தாமே சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டது போல, நீட் தேர்வை நியாயப்படுத்த தரம், தகுதி, தனியார் கட்டணக் கொள்ளையைத் தடுப்பது என வாதங்கள் அடுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்கு வக்காலத்து வாங்கும் மோடி அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், உச்ச மற்றும் உயர்நீதி மன்றங்கள் ஆகியவை எல்லாம் தாம் ஏதோ வானத்திலிருந்து குதித்த அப்பழுக்கற்றவர்கள் போலவும், நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் தரம், தகுதிக்கு எதிரான ஊழல் பேர்வழிகள் போன்றும் ஒரு சித்திரத்தைக் கட்டமைக்கின்றன.

ம.பி. பா.ஜ.க. முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் (இடது)ஆட்சியில்தான் வியாபம் ஊழல் அதன் உச்சத்தைத் தொட்டது. தரமற்ற, மோசடியான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி, கோடிக்கணக்கில் ஊழல் பணத்தோடு சி.பி.ஐ.யால் பிடிக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய். (கோப்புப் படம்)

இந்தியாவிலேயே, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய முறைகேடு வியாபம் ஊழல்தான். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த ஊழலின் சூத்திரதாரிகள் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். யோக்கியசிகாமணிகள். அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அவரது மனைவி என இந்த ஊழலில் கைநனைத்த பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் பட்டியல் நீளமானது. இந்த ஊழலை அம்பலப்படுத்தியவர்கள், முக்கிய சாட்சிகள் எனப் பலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, இந்த ஊழலின் தடயங்களை மறைக்க நடந்த முயற்சிகள் தனியொரு கிரிமினல் வரலாறாக நீள்கிறது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் யோக்கியதை என்ன? தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளில் 50 சதவீத இடங்களை மாநில அரசிடம் ஒப்படைத்து, அரசு நடத்தும் கவுன்சிலிங் மூலம் மட்டும்தான் அந்த இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்கிறது, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதி. இந்த விதியை கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தமிழக அரசும் பின்பற்றவில்லை. இந்திய மருத்துவ கவுன்சிலும் இந்த முறைகேட்டைக் கண்டு கொள்ளவில்லை. இந்த முறைகேட்டுக்காக சென்னை உயர்நீதி மன்றம் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவும், இந்த இழிநிலைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில்தான் காரணம் என்றே குற்றம் சாட்டியிருக்கிறது. போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து பல நூறு கோடி லஞ்சம் வாங்கிய இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாய், 2010-இல் சி.பி.ஐ.யால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார். டாக்டர் தொழில் செய்வதற்கான உரிமம் பறிக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேசாயை மீண்டும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நியமித்தது குஜராத் பல்கலைக்கழகம்.

ஒரு வழக்கை விசாரித்து முடிப்பதற்கு முன்பே தீர்ப்புக் கூறுவது ஊழலுக்கு நிகரான முறைகேடு. நீட் தேர்வு வழக்கில் இம்முறைகேட்டினைத் துணிந்து செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம். நீட் தேர்வு தேவையா என்பது குறித்து நடந்த வழக்கை விசாரித்த அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைக்கப்பட்ட அமர்வு, இத்தேர்வு தேவையில்லை எனப் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்புக் கொடுத்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மைய அரசு வழக்கு போட்டது. உச்ச நீதிமன்றம் அதனை இன்னும் விசாரிக்கவே இல்லை. இருப்பினும் அதற்குள் நீட் தேர்வை அமல்படுத்துவது என்ற முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான முடிவு அமல்படுத்தப்படுகிறது. நீட் தேர்வு சரியா, தவறா என்பது இனிமேல்தான் விசாரிக்கப்படும்.

வியாபம் ஊழல் விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே, மர்மமான முறையில் இறந்துபோன ஜபல்பூர்-நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் அருண் ஷர்மா (இடது), வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்திவந்த ஆஜ் தக் தொலைக்காட்சி நிருபர் அக்சய் சிங் (நடுவில்) மற்றும் மருத்துவ மாணவி நர்மதா. (கோப்புப் படங்கள்)

புரியும்படி சொல்வதென்றால் இப்படியும் கூறலாம். தற்போது சசிகலா போட்டுள்ள சீராய்வு மனு விவகாரத்தில் சசிகலாவை விடுதலை செய்து விட்டு, அதன் பிறகு, அவரை விடுவித்தது சரியா, தவறா என்று பொறுமையாக விசாரித்துத் தீர்ப்பு கூறினால், அது எத்தகைய கேலிக்கூத்தாக இருக்குமோ அதைவிடப் பெரிய கேலிக்கூத்து இது.

தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்தாக வேண்டும் என்ற தார்மீக ஆவேசம் காரணமாகத்தான் உச்ச நீதிமன்றம் அவ்வளவு அவசரப்பட்டது என்பதை அறிவோம். கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்தபின், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் தலையிட மைய அரசு மறுத்துவிட்டது. இதனால் வழக்கம் போல கொள்ளை நடந்தது. இதன் மீது உச்ச நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அடுத்த ஆண்டு முதல் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள்தான் நடத்த வேண்டும் என உத்தரவு போட்டு நழுவிக் கொண்டது. இன்னொருபுறம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தைப் பலமடங்கு உயர்த்த அனுமதிக்குமாறு அரசிடம் மனு போட்டுவிட்டன.

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நீட் தேர்வுக்கான தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாதென விதி இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. நீட் தேர்வு பயிற்சிக்கு 40,000, 50,000 எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மொத்தத்தில், நீட் தேர்வு கல்விக் கொள்ளையை ஒழிக்கவில்லை, மாறாக, அதனைச் சட்டபூர்வமாக்கியிருப்பதோடு, கொள்ளைக்குப் புதிய வழிகளையும் திறந்துவிட்டிருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு பத்தாம்பசலித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் எதிர்க்கப்படுவது போலக் கற்பிதம் செய்துகொண்டு, தமிழக மாணவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்களை முறையாக நடத்தினால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஊதித் தள்ளிவிடுவார்கள், தமிழகப் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ.-க்கு இணையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்றெல்லாம் நீட் தேர்விற்கு ஆதரவாகப் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நீட் தேர்வை எதிர்ப்பதற்குத் தமிழக மாணவர்களின் திறமையோ, தமிழகப் பாடத் திட்டத்தின் தரமோ முதன்மையான காரணமல்ல. நீட் தேர்வு, தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு, குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையைத் தமிழக அரசிடமிருந்து தட்டிப் பறிக்கிறது என்பதுதான் மையமானது. இந்த அநீதியை மிகவும் நைச்சியமான வழியில் மைய அரசும், நீதிமன்றங்களும் செய்கின்றன.

மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது, மாநில அரசு நடத்தும் தேர்வுகள் தரமற்றவை; மைய பாடத்திட்டம், தேசியத் தேர்வுகள் என்றால் தரமானது; மாநில அரசு நிர்வாகம் ஊழல்மயமானது, சி.பி.ஐ. போன்ற மைய அரசின் அமைப்புகள் அப்பழுக்கற்றவை; மாநிலக் கட்சிகள், குறிப்பாக திராவிடக் கட்சிகள் ஊழலும், முறைகேடுகளும் நிரம்பியவை, தேசியக் கட்சிகள் நேர்மையானவை என்றவாறு ஒரு பொய்யை தமிழகப் பார்ப்பனக் கும்பல் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. அதன் நீட்சிதான் நீட் தேர்வுத் திணிப்பு.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடை இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளைக் காட்டி சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்ததைக் கண்டித்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்வு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைப் பறித்துவிடவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த இட ஒதுக்கீடை இனி யார் அனுபவிப்பார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. நீட் தேர்விற்கு முன்னதாகவே, அரசுப் பள்ளிகளில் படித்த கிராமப்புற ஏழை மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு பறிபோய்விட்டது. கடந்த பத்தாண்டுகளில் வெறும் இருநூற்று சொச்சம் அரசுப் பள்ளி மாணவர்கள்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அவலத்தை நீட் தேர்வின் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கை மேலும் தீவிரப்படுத்தும். குறிப்பாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், 40,000, 50,000 கொடுத்து தனியார் பயிற்சிப் பள்ளிகளிலும் சேர வாய்ப்புள்ள நல்ல வசதி படைத்த பார்ப்பன, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இனி தமிழகத்தில் மருத்துவராக முடியும்.

மேலும், வட இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கக் கூடும். தமிழகத்திலுள்ள ரயில்வே அலுவலகங்களிலும், மைய அரசின் அலுவலகங்களிலும் வட இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை பெருத்துள்ளதைப் போன்ற நிலையைக் கூடிய விரைவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் தமிழக மக்கள் காணக் கூடும்.

நீட் தேர்வும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதும் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின், சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறைக்கு இட்டுச் சென்று, ஏழை நோயாளிகளின் உயிர் வாழும் உரிமையைப் பறிக்கும் நிலையை உருவாக்கும். தரமான, தகுதியான மருத்துவர்கள் என்பது இறுதியில் ஏழை மாணவர்களுக்கும் ஏழை நோயாளிகளுக்கும் எதிரானதாக அமைகிறது.

நீட் தேர்வானது, மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பைப் பணக்கார வீட்டு வாரிசுகளின் தனியுரிமையாக்குகிறது. பணக்கார மாணவர்களுக்கு நூறு சதவீத இட ஒதுக்கீடு என்ற புதிய சமூக நீதியை மருத்துவக் கல்வியில் புகுத்துகிறது. மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதாக கூறிக்கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு அதற்கு நேர் எதிரான விளைவையே அளித்திருக்கிறது. இந்த பணக்கார வாரிசுகளும், பார்ப்பன – ஆதிக்க சாதி மேட்டுக்குடியினரும் மருத்துவர்களாகி அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து ஏழைகளுக்குச் சேவை செய்யப்போவதில்லை. அமெரிக்காவுக்குப் பறப்பது எப்படி என்பதுதான் அவர்களது கவலையாக இருக்கும்.

மருத்துவக் கல்வியின் தரத்தையும் மருத்துவ சேவையின் தரத்தையும் மருத்துவர் தொழிலின் மாண்பையும் காப்பாற்றுவதற்குத்தான் அரும்பாடுபடுவதாக மோடி அரசும் உச்ச நீதிமன்றமும் கூறிக் கொள்கின்றன. அந்தக் கனவு நிறைவேறுமா?

2016 –17ஆம் ஆண்டுக்கான உலக மருத்துவக் கழகத் தலைவராக கேதன் தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது சி.பி.ஐ. போட்டிருக்கும் கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதாகப் பொய் சொல்லி, தேசாயை இந்தப் பதவிக்கு முன் மொழிந்திருக்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். இந்த அசிங்கமான உண்மையை ராய்ட்டர் நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. ராய்ட்டர் புலனாய்வு தேவைப்படாத வேறொரு உண்மையும் இருக்கிறது. 2013-இல் கேதன் தேசாய்க்கு குஜராத்தில் மறுவாழ்வு தரப்பட்டபோது, அங்கே முதல்வராக இருந்தவர் திருவாளர் மோடி. தேசாய்க்கு சர்வதேச கவுரவம் வழங்கப்பட்டிருக்கும் இந்த தருணத்தில், பிரதமராக இருப்பவரும் திருவாளர் மோடிதான்.

தகுதி வாழ்க, திறமை வாழ்க, நல்லொழுக்கம் வாழ்க, நீட் வாழ்க! பாரத் மாதா கி ஜெய்!

-அழகு
புதிய ஜனநாயகம், மே 2017