2-06-2017
அன்புடையீர் வணக்கம்!
மேலிடத்து உத்தரவு என்ற பெயரில் தமிழகத்தில் மோடி ஆட்சியைத்தான் போலீசு நடத்துகிறது. நெடுவாசல் போராட்டத்தை, டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஆதரித்து சென்னையில் போராட முயன்ற மாணவர்கள், இளைஞர்களை தீவிரவாதி போல் துரத்தி துரத்தி வேட்டையாடியது போலீசு. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தத் தடை விதிப்பது, போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யும் போது கடுமையாகத் தாக்குவது, பொய் வழக்கில் சிறையில் அடைப்பது என தொடர்ந்து ஒடுக்குவதோடு போராடும் உரிமைகளை மறுத்து வருகிறது.
டாஸ்மாக் கடையை திறக்காதே மூடு என போராடும் மக்களை கொடூரமாகத் தாக்குவது, கைது செய்வது என போலீசு தொடர்ந்து செயல்படுகிறது. அமைதியாக நடந்த மெரினா போராட்டத்தை சதித்தனமாக போலீசு வன்முறையில் முடித்ததை மறக்க முடியாது. மாட்டிறைச்சி தடைக்கு எதிராகப் போராடிய சூரஜ் என்ற சென்னை ஐ.ஐ.டி மாணவர் தாக்கபட்டதைக் கண்டித்து போராடிய மாணவர்களைத் தாக்கி கையை முறிப்பது, இடுப்பு எலும்பை முறிக்க முயல்வது என காவல்துறை வன்முறை தாக்குதல் நடத்தியது. இத்தகைய தவறு செய்யும் போலீசார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் சூரஜைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ் குண்டர் மனீஸ் என்ற மாணவர் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தை ஆள்வது டெல்லியா? சென்னையா என்ற கேள்வி தொடர்கிறது.
மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்றதற்காக திருமுருகன் காந்தி மற்றும் மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிமுக, பி.ஜே.பி.யைத் தவிர பெரும்பான்மையான கட்சிகள், அமைப்புகள் தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளன. மக்கள் அதிகாரமும் வன்மையாக கண்டிப்பதுடன் ஆள்தூக்கி சட்டமான குண்டர் தடுப்பு சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய அனைவரும் போராட வேண்டும் எனக் கோருகிறது. அரசியல் உரிமைகளுக்காக, மக்களுக்காக போராடுபவர்களை சமூக விரோதி போல் கருதி சிறையில் அடைக்கிறது. ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒரு எப்.ஐ.ஆர். போட்டு வைத்துக் கொண்டு அதையே காரணம் காட்டி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைப்பதென்றால் போடலாம் என்றால், போராடும் எந்த இயக்க தலைவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் போட்டு அச்சுறுத்தி ஒடுக்கலாம். ஆனால் நத்தம் விசுவநாதன், அமைச்சர் காமராஜ், டிடிவி தினகரன் போன்றோர் மீதும் சங்பரிவார் அமைப்புகள் மீதும் குண்டர் சட்டம் பாய மறுக்கிறது.
மெரினா சீரணி அரங்கத்தில் கடந்த காலங்களில் நடந்தது போன்று மீண்டும் அரசியல் கூட்டங்கள் நடத்தும் உரிமைக்காக அனைத்து கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும். போலீசின் பிடியிலிருந்து மெரினாவை விடுவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு போராட்டம் நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்ற மெரினா எழுச்சி, இது வேற தமிழ்நாடு என நிரூபித்த போராட்டம். இன்று மெரினாவில் வருவோர் போவோரை எல்லாம் சந்தேகிப்பது, விரட்டுவது, கைது செய்வது மிரட்டுவது என காஷ்மீர் போல் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க போலீசாருக்கு யார் அதிகாரம் வழங்கியது?
மாட்டுக் கறி உழைக்கும் மக்களின் உணவு உரிமை, அதற்குத் தடை போட ஆர்.எஸ்.எஸ் யார்? – மோடி யார்? மாடு வளர்ப்பது, விற்பது, உண்பது விவசாயியின் வாழ்வாதாரம். அதை அழிப்பது சமூக விரோத பார்ப்பன மதவெறி பயங்கரவாதமாகும். உள்நாட்டு கால்நடை சந்தைகளை அழித்து அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளின் மாட்டிறைச்சி, பால்பொருள்களை தாராளமாக இறக்குமதி செய்யவே மோடி அரசின் சதித்தனமான இந்த மாட்டு விற்பனை தடை உத்தரவு ஆகும். மோடி அரசுக்கு அடியாள் வேலை பார்ப்பது போல் தமிழக அரசு செயல்படுகிறது.
மாடு திண்ணும் புலையா உனக்கு மார்கழி திருநாளோ என நந்தனை அன்று எரித்தார்கள் தில்லை தீட்சிதப்பார்ப்பனர்கள். இன்று உ.பி.-யில் மாட்டுக்கறி தின்றார் என அக்லக் கொல்லப்பட்டார். செத்த மாட்டு தோலை உறித்தார்கள் என குஜராத்தில் தலித்துகள் கட்டிவைத்து தாக்கப்பட்டார்கள். சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி தின்றார் என சூரஜ் என்ற மாணவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் நடத்திய மதவெறியாட்டம்.
தற்போது சட்டபூர்வமாக இந்த அராஜகத்தை நிறைவேற்ற மோடி அரசு மாடு விற்கத் தடை விதித்து விட்டு மாட்டுக்கறிக்குத் தடையில்லை எனப் பித்தலாட்டம் பேசுகிறது. நாட்டில் ராமன், மாடு, சாதிவெறி மதவெறி, சமஸ்கிருதத் திணிப்பு, முஸ்லிம் எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் மீண்டும் கலவரத்தைத் தூண்டி எதிர்மறை விளம்பரம் மூலம் ஆட்சியை தக்க வைக்கும் தந்திரத்தை அமல்படுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ்.- பி.ஜே.பியின் இத்தகைய நடவடிக்கை, ஒட்டு மொத்த மக்களுக்கும் நாட்டுக்கும் பெரும் ஆபத்தாக முடியும். எனவே அனைவரும் மோடியின் இத்தகைய மதவெறி, கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்த்துப் போராட வேண்டும். இந்த அரசு கட்டமைப்பின் மூலம் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
உழைக்கும் மக்களின் உணவு உரிமைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் மோடியின் பார்ப்பன மதவெறி தாக்குதலை முறியடிப்போம் !
மக்களின் போராட்டக்களமாகிய மெரீனாவை போலீசின் பிடியில் இருந்து மீட்போம் !
போராடுபவர்களை அச்சுறுத்தி ஒடுக்க ஏவிவிடப்படும் குண்டர் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யப் போராடுவோம் !
– இக்கோரிக்கைகளுக்காக அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்துப் போராடுவோம்.
தங்கள்
சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாட்டின் தலைநகர் டில்லி, இந்தியாவின் தலைநகர் நாக்பூர்
அகில ‘லோகத்திற்க்கும்’ அவாள் உள்ப்பட அனைவர்க்கும் தலநகர் வாஷிங்டன்?
But they are slaves in Washington.
சே..சே..டெல்லியில்லை … பாஜக காவிகள்…! எடப்பாடி ஒரு எடுபிடி…!!
இதை பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதவும்..
https://www.google.co.in/amp/wap.business-standard.com/article-amp/news-ians/india-now-a-lower-middle-income-economy-for-world-bank-116060300595_1.html