Saturday, November 27, 2021
முகப்பு உலகம் ஐரோப்பா அரசோடு போர் புரியும் கிரீஸ் மக்கள் - படக்கட்டுரை

அரசோடு போர் புரியும் கிரீஸ் மக்கள் – படக்கட்டுரை

-

திவாலான கிரீஸின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக தங்கள் மீது சுமத்தப்படும் புதிய சிக்கன நடவடிக்கைகளை (உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள்) எதிர்த்து இலட்சக்கணக்கான கிரீஸ் மக்கள் தலைநகர் ஏதென்சில் போராடி வருகின்றனர். தனியார் முதலாளிகளின் கடனானது தேசத்தின் கடனாகிப் போனதால் மக்களுக்கான நலத்திட்டங்கள் பறிக்கப்பட்டிருப்பதுடன் ஐரோப்பாவிலேயே மிக மோசமான பொருளாதாரச் சிக்கலில் சிக்க வைக்கப்பட்டுள்ளது கிரீஸ்.

ஸ்பெயின் அரசின் சிக்கன நடவடிக்கைளுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் போராடி வரும் ஸ்பெயின் மக்களைப் பார்த்து கிரீஸ் மக்களும் போராடுகிறார்கள். நகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவன ஊழியர்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கிரீஸ் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுகின்றனர்.

2017, மே மாதம் 17ஆம் தேதி ஏதென்சில் நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு வர்க்கப் பின்னணியை சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர். அரசின் சிக்கன நடவடிக்கையை “காட்டுமிராண்டித்தனமானது” என்று விமர்சித்திருக்கிறது கிரேக்க பொதுத்துறை ஊழியர்கள் சங்கம். ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை கொள்ளையடிக்கவும் பொதுச்சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களையும் இந்த நடவடிக்கைகள் கடுமையாக பாதித்திருப்பதாக கூறுகிறார் கிரீஸ் தொழிலாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தானோஸ் வெசிலோபுலோஸ். 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு நிதியுதவி என்ற பெயரில் வழங்கப்பட்ட கடன் சுமார் 15 இலட்சம் வேலையற்றோரைத்தான் உருவாக்கியுள்ளது என்கிறார் அவர்.

கிரீஸை கைத்தூக்கி விடுவதற்காக அளிக்கப்படும் நிதியுதவிகளில் ஐரோப்பிய ஒன்றிய வங்கிகளால் 95 விழுக்காடு விழுங்கப்பட்டு வெறும் 5 விழுக்காடு மட்டுமே கிரீஸ் பொருளாதரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“எங்களது வாழ்க்கையை அழிக்க அவர்களை ஒருபோதும் விடமாட்டோம் என்ற உறுதியான ஒரு செய்தியை கிரீஸ் அரசிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் கூற விரும்புகிறோம்” என்று அனைத்துத் தொழிலாளர் இராணுவ முன்னணித் (PAME) தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் அலெகோஸ் பெராக்ஸிஸ் கூறுகிறார்.

17 மே 2017-ல் கிரீசின் போராட்டக் காட்சிகள்:

கிரீஸை கைத்தூக்கி விடுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் ஓய்வூதிய வெட்டு, வரி உயர்வு உள்ளிட்ட புதிய சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்படுவதை எதிர்த்து நடைபெற்ற அமைதிப் பேரணியில் கிட்டத்தட்ட 12,000 மக்கள் கலந்து கொண்டனர்.

“ஒரு கிரேக்க காவலரின் வாழ்க்கை எவ்வளவு மதிப்பு மிக்கது?” என்று ஜெர்மனிலும் கிரீசிலும் எழுதப்பட்ட பெரிய பதாகையை, மத்திய ஏதென்சில் இருக்கும் லைக்காபெட்டஸ் ஹில்லில் தொங்க விட்டுள்ளனர் கிரீஸ் காவலர் தொழிற்சங்கத்தினர்.

பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்னதாக நாட்டின் ஒட்டுமொத்த பொதுச்சேவைகளை நிறுத்தி 24 மணி நேர பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர் கிரீஸ் தொழிலாளர்கள்.

கிரீஸ் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்துத் தொழிலாளர்கள் இராணுவ முன்னணியைச் (PAME-Panergatiko Agonistiko Metopo) சேர்ந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் கிரீஸின் வங்கித் தலைமையகத்தை கடந்து செல்லும் காட்சி.

போராட்டத்தில் கலவரத்தடுப்புக் காவலரை நோக்கி முகமூடியணிந்த ஒரு போராட்டக்காரர் குழல் துப்பாக்கியால் (projectile) சுடுகிறார்.

கலவரத் தடுப்புக் காவல்துறையினரை எதிர்க்கின்றனர் போராட்டக்காரர்கள். அதே நேரத்தில் கிரீஸ் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே இருக்கும் காவலர்களை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலப்பத்து இளைஞர்கள் கற்களை எறிந்ததுடன் குழல் துப்பாக்கியாலும் சுட்டனர்.

போராடும் இளைஞர்களுக்கும் கிரீஸ் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் கண்ணீர் புகைக்குண்டுகளால் பதில் தாக்குதல் நடத்தியது காவல்துறை.

போரட்டக்காரர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை எறிந்ததால் தலைநகரின் தெருக்கள் விரைவில் போர்க்களமாகின.

நன்றி : Russia today
தமிழாக்கம்: சுந்தரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க