காக்கைக் குருவி போல விவசாயிகள் சுட்டுக் கொல்லும் மத்திய பிரதேச அரசு !

1
5

த்திய பிரதேசத்தில் பா.ஜ.க. அரசு, விவசாயிகள் 5 பேரை சுட்டுக்கொன்றுள்ளது. விளைவித்த விளைப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யவும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் விவசாயிகள் 2017 ஜூன் 1-ம் தேதியிலிருந்து போராடி வருகின்றனர். அவ்வாறு போராடிய விவசாயிகளை சுட்டுக்கொன்றுள்ளது ஆர்.எஸ்.எஸ். சவுகான் அரசு. இது ஏதோ சவுகான் அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தப்பித்தவறி செய்துவிட்ட ஒரு சம்பவமாக சுருக்கிப் பார்க்க முடியாது.

டெல்லியில் தமிழக விவசாயிகள் 40 நாட்களுக்கு மேலாக போராடியும் திரும்பிப் பார்க்காத ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. மோடி அரசு; பா.ஜ.க. ஆட்சி செய்யும் மராட்டியத்தில் பால் விவசாயிகளை வஞ்சித்தது அந்த மாநில அரசு; மறைமுகமாக விவசாயிகளைக் கொல்லும் இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகத்தான் சவுகான் அரசு விவசாயிகளை நேரடியாக சுட்டுக் கொன்றுள்ளது.

அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என உறுதியாக அறிவித்தது. தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய சொன்ன உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. பினாமி தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. இந்த திசையில்தான் சவுகான் அரசு அடுத்தக்கட்டத்திற்கு சென்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது.

வறட்சியினால் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாததால் தமிழ விவசாயிகள் 200-க்கும் அதிகமானொர் தற்கொலை செய்து கொண்டபின்னரும் தமிழக அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகள் சொந்தக் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று சொன்னதே ஒரு படுகொலைதான். அந்த படுகொலையை சுட்டுக்கொல்வதன் மூலம் நேரடியாக சவுகான் அரசு செய்துள்ளது. இந்த சவுகான் ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில்தான் விவசாயிகள் தற்கொலை என்பது அதிக அளவில் நடந்து வருகிறது என்பதுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

விவசாயத்தில் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வேலையில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க அரசு தீவிரமாக செய்துவருகிறது. அந்த வகையில் தன்னுடைய பசுவதை தடுப்புச்சட்டத்தைக் கொண்டுவந்து நாடு முழுவதிலும் விவசாயிகள் மாடு வளர்க்கும் தொழிலை ஒழித்துக்கட்டி விவசாயிகளை அழித்தும் வருகிறது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது; விவசாயத்திற்கான மானியங்களை நிறுத்துகிறது. மற்றொருபுறம், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் மானியங்களையும் வரிச்சலுகைகளையும் வாரி வழங்குகிறது.

ஒரு புறம் ஜிஎஸ்டி மசோதாவை விவசாயிகளுக்காகக் கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டே விவசாயிகளை அழிக்கிறது. உண்மையில், ஜிஎஸ்.டியின் நோக்கம் விவசாயிகளை அழிப்பதை உள்ளடக்கியதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயிகளைக் கொன்றொழித்து வருகின்ற இந்த அரசுக் கட்டமைப்பு நம்மை ஆளும் தகுதியிழந்துவிட்டது; அதற்கான நியாய உரிமையையும் இழந்துவிட்டது. அடிப்படை கோரிக்கைகள், நியாயமான உரிமைகள் எல்லாவற்றையும் பயங்கரவாத செயல்பாடுகளாக சித்திரிக்கும் இந்த அரசுக்கட்டமைப்பை இனியும் சகித்துக் கொள்ள வேண்டுமா? உண்மையில், நடப்புகள் எல்லாம் உழைக்கும் மக்களாகிய விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள் மற்றும் சிறுதொழில் புரிபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரான, ஆக அதிகபட்ச கொடுமைவாய்ந்த, பாசிச கொடுங்கோல் ஆட்சி. இதற்கு ஒரு துலக்கமான எடுத்துக்காட்டு, உரிமை கோரிய விவசாயிகளைச் சுட்டுக்கொன்ற ஆர்.எஸ்.எஸ். சவுகான் அரசு!  ஆகையால், இந்த கட்டமைப்பை தூக்கியெறிவதே மாற்று! இதில் முதலிடம் வகிக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி கும்பலை விரட்டியடிப்பதே உடனடி தேவை!

விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் பேரழிவு. அனைத்து மக்களும் ஒன்று திரளுவோம். விவசாயியை வாழவிடு… என்ற குரல் ஓங்கட்டும்!

மக்கள் அதிகாரம் :
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு: 81485 73417

1 மறுமொழி

  1. ஜெய் கிசான் என்ற மோடியின் வாய்ச்சவடால் இங்கு பல்லிளித்திருக்கிறது. விவசாயளின் போராட்டம் வெல்லட்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க