Friday, August 12, 2022
முகப்பு போலி ஜனநாயகம் போலீசு கோவை : போலீசா - மக்களா? டாஸ்மாக்கை மூடிய போராளிகள் !

கோவை : போலீசா – மக்களா? டாஸ்மாக்கை மூடிய போராளிகள் !

-

கோவை சித்தாபுதூர் பகுதியில் கடந்த 18.05.2017 அன்று அப்பகுதி டாஸ்மாக் கடையை மக்கள் அடித்து நொறுக்கி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசு இனி கடை திறக்கப்படாது என வாக்குறுதி அளித்து மக்களைக் கலைத்தது. இத் தகவல் அறிந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் அப்பகுதி மக்களைச் சந்தித்தனர். அவர்களிடம் காவல்துறை மக்களை எப்படியெல்லாம் பொய் வாக்குறுதி தந்து ஏமாற்றும் என்பதை எடுத்துச் சொல்லி போராட்டத்தைத் தொடரவது தான் நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை மூட ஒரே வழி என உற்சாகப்படுத்தினர்.

அதை ஏற்றுக் கொண்ட மக்களும் கடையை மீண்டும் திறக்க முயற்சி செய்தால் போராட்டததை தொடருவோம் எனக்கூறினர். இந்நிலையில் 31.05.2017 அன்று மீண்டும் அதே டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கினர். இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மக்கள் அதிகாரம் தோழர்களை தொடர்பு கொண்டு “அண்ணா நாங்க தனலட்சுமி நகர்ல இருந்து பேசுறோம். கடைய திரும்ப தொடங்க சரக்கெல்லாம் கொண்டுவந்து எறக்குறாங்க” என போராட்டத்துக்கு உரிமையோடு அழைத்தனர்.

அச்சமயத்தில் தோழர்கள் அனைவரும் சென்னை ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இத்தகவல் கிடைத்தவுடன் ம.க.இ.க, பு.மா.இ.மு., மக்கள் அதிகாரம் தோழர்கள் திரண்டு சென்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

பிறகு பிற பகுதி மக்களும் அணிதிரட்டப்பட்டனர். பகுதி பெண்கள் கடுமையான குடிநீர் பிரச்சினையிலும் 15 நாளுக்கு ஒருமுறை வரும் குடிநீரை பிடிக்கும் வேலையைக் கூட விட்டு விட்டு கடையை மூடும் போராட்டத்துக்காக வந்தனர்.

மக்கள் கூட்டம் குறைவாக இருந்த போது இளைஞர்கள், பெண்களைச் சேரவிடாமல் கலைக்க முயன்ற போலீசு மக்கள் திரண்ட பின்னர் போராட்டத்தை சுத்தமாக கண்டும் காணாமல் சென்றுவிட்டது. இதனால் அப்பகுதியில் போராட்டம் மேலிம் தீவிரமடைந்து சாலை மறியலாக மாறியது. அதன் பின்னர் மக்களின் முற்றுகை முக்கிய சாலையை நோக்கி சென்றது. இதனைக் கண்டு மேலும் பல மக்கள் போராட்டத்தில் இணைய ஆரம்பித்தனர். அதுவரை அலட்சியமாக இருந்த போலீசு பதறியடித்து ஓடோடி வந்தது.

தோழர்கள் முழக்கமிட்டதை மக்கள் தங்கள் முழக்கமாக மாற்றிக் கொண்டனர். அத்துடன் அவர்களாகவே மேலும் பல முழக்கங்களைப் போட ஆரம்பித்தனர். அதன் பின்னர் போராட்டத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த தோழர்களை தனியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தது போலீசு. எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசுங்கள் என தோழர்கள் அறிவித்துவிட்டனர்.

அப்போது சீருடையில்லாமல் இருந்த போலீசு ஒருவர் நேரடியாக மக்களை மிரட்டும் தொனியில் “மக்கள் அதிகாரம் உங்களை தவறான பாதைக்கு தூண்டுகிறது நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள்” எனக் கூறினார். நாங்கள் தான் அவர்களை அழைத்தோம் எங்களை யாரும் தூண்டிவிடவில்லை என மக்கள் பதிலளித்தனர். சரி எதுவானாலும் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என மீண்டும் கூறியது போலீசு. மக்களோ நாங்கள் ஏன் கலெக்டரைப் போய் சந்திக்க வேண்டும்? அவரை வரச்சொல்லுங்கள். பலமுறை மனு கொடுத்துப் பார்த்துவிட்டோம் என பதிலடி கொடுத்தனர்.

போராட்டத்தில் முதியவர் ஒருவர் அன்றாடங்காய்சியான எங்கள் இடத்தில் டாஸ்மாக்கை திறக்கும் அரசு அதையே கலெக்டர் ஆபிசுலயோ அல்லது போலீஸ் ஸ்டேசன்லயோ கடைய திறக்கிறது தானே எனக் கேட்டார். வயதில் முதியவர் என்று கூட பார்க்காது அவரை “என்ன லூசு மாதிரி பேசுற?” என அவமானப்படுத்தியது போலீசு.

போராடும் மக்களைப் பார்த்தால் உங்களுக்கு லூசு மாதிரி தெரிகிறதா? என தோழர்களும் மக்களும் போலீசை அம்பலப்படுத்தினார். மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுவதை பொறுக்கமுடியாது போலீசு மக்களைத் தாக்கத் தொடங்கியது.

மக்களிடம் இருந்து தோழர்களைப் பிரிக்க முயன்று புமாஇமு தோழர் வினோத்தை குறிவைத்து கொடூரமாக தாக்க ஆரம்பித்தது. மக்கள் அவருக்கு அரணாக இருந்து அவர் மீது விழுந்த அடிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து தோழரைப் பிரித்து வண்டியில் ஏற்றிச் சென்றது போலீசு.

இதையெல்லாம் படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து இதெல்லாம் எடுக்காதே எனக் கூறியுள்ளனர். அதை மீறி போராட்டத்தை பதிவு செய்து கொண்டிருந்த ஒருவரது கேமாரா பேட்டரியை பிடுங்கியது போலீசு.

மக்களும் தோழர்களை கைது செய்து கொண்டு போன வாகனத்தின் பின்னாலே ஓடிச் சென்றனர். அதன் பின்னர் வாகனங்களை ஏற்பாடு செய்து காவல் நிலையம் சென்றனர். மக்களைப் பார்த்த போலீசு தோழர்களை விடுவிப்பதாக வாக்களித்தது. பின்னர் இரவு 12:00 மணிக்கு மேல் வழக்கு பதிவு செய்துவிட்டு விடுவித்தது. மக்களும் அதுவரை காத்திருந்து தோழர்களை அழைத்துச் சென்றனர்.

இறுதியாக அன்று மூடப்பட்ட தனலட்சுமி நகர் டாஸ்மாக் கடை இன்று வரை திறக்கப்படவில்லை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க