அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணனது கூவத்தூர் பணபேர வீடியோக்கள் வெளியானதை அடுத்து தமிழக சட்டப்பேரவை பரபரப்பாக கூடுகிறது என்றன ஊடகங்கள். இது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். காரணம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது இங்கே விவாதிக்க இயலாது என்று சட்டரீதியாக வாயடைத்தார் சபாநாயகர் தனபால்.
பிறகு வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களுடன் ஸ்டாலின் சாலைமறியல் செய்ய போலீஸ் கைது செய்ய, குதிரைப் பேர ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அவர் ஊடகங்களிடம் கூற இந்த நாளின் பரபரப்பு இனிதே முடிந்தது.
இனி விசயத்திற்கு வருவோம்.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையை நடத்திய பாஜக -வை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியது தெகல்கா பத்திரிகை. அதன் செய்தியாளரான ஆஷிஸ் கேத்தன் சில மாதங்கள் தங்கி சங்க பரிவார குண்டர்கள், தலைவர்களிடம் வீடியோ பூர்வமாக கலவர கொலை குற்றத்தை வரவழைத்தார். அது வெளிவந்த போது பெரும் வரவேற்பு இருந்தாலும் குற்றவாளிகளை தண்டிக்க முடியவில்லை என்றார் தெகல்கா ஆசிரியர். இந்த அமைப்புமுறை குற்றவாளிகளை தண்டிப்பதற்கு போதுமானதாக இல்லை என்பதாக அவர் சலிப்போடு கூறியிருந்தார்.
அத்வானி புகழ் ஊழல் ஜெயின் ஹவாலா டைரி, நீரா ராடியா டேப், மோடி புகழ் பிர்லா டைரி என எண்ணிறந்த முறையில் இத்தகைய ஊழல் குறித்த செய்திகள் ஆதாரப்பூர்வமாகவே வெளிவந்திருக்கின்றன. அவற்றில் பல நேரடி ஆதரங்களாவும் சில விசாரிப்பதற்கு போதுமான முகாந்திரங்களைக் கொண்டதாகவும் இருந்தன. இருப்பினும் எந்த நீதிமன்றமும் இந்த வழக்குகளில் யாரையும் தண்டிக்கவில்லை.
ரெய்டு நடத்தப்பட்ட ராம் மோகன் ராவ் இப்போது மீண்டும் தமிழக அரசு அதிகாரியாக தொடர்கிறார். சேகர் ரெட்டியின் பெரும்பாலானா தொழில்கள் அவர் சிறையில் இருந்தாலும் செவ்வனே தொடர்கின்றன. திருப்பூர் கன்டெயினர் ஊழல், வடிவேலுவில் காணாமல் போன கிணறு போல மறைந்த போய்விட்டது.
ஆகவே கூவத்தூர் குதிரைப் பேரத்தை திருமங்கலம் உறுப்பினர் சரவணன் புட்டுப் புட்டுப் வைத்தாலும் அது ஓட்டுக் கட்சி பரபரப்பிற்கும், ஊடகங்களின் மாலை நேர அரட்டை விவாதத்திற்கும், பாஜகவிற்கு நினைத்தபடி தமிழகத்தின் அரசாங்கத்தை ஆட்டுவிப்பதற்கும் பயன்படுமே அன்றி வேறு என்ன பயன்?
“வீடியோவில் இருப்பது நான்தான் – ஆனால் குரல் என்னுடையதல்ல” என்று ஒரே போடாக போட்டு விட்டார் சரவணன். இதை எந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்? கூவத்தூரில் விநியோகிக்கப்பட்ட பணமோ இல்லை விருந்திற்கு செலவழிக்கப் பட்ட கட்டணமோ உலகறிந்த உண்மை. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரும் அளவிலான பணம் யாருக்கும் தெரியாமல் நகர முடியாது என்பது உண்மையானால் கூவத்தூர் கோடிகளில் குளிப்பது எப்படி சாத்தியம்?
அல்லது ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்திய தேர்தல் கமிஷன் அதற்காக புதுப்பணம் எப்படி வெளியே வந்தது என்று மத்திய நிதி அமைச்சகத்திடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. ஆனால் பெரும் பணம் வினியோகிப்பட்டதால் தேர்தலை நிறுத்தி ஜனநாயகத்தை காப்பாற்றியதாக கூறியது தேர்தல் ஆணையம். காப்பாற்றப்பட்டது ஜனநாயகமல்ல, மோசடி என்பது தேர்தல் ஆணையம் வைத்திருக்கும் அடையாள மை பாட்டிலுக்கு கூட தெரியும்.
சரவணன் வீடியோவை வைத்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறது. அந்த வழக்கை வைத்தே இங்கே பேசக்கூடாது என்கிறார் சபாநாயகர். பிறகு நீதிமன்றம் இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு நிரூபிக்க முடியாது என்று கூறும். இறுதியில் இந்த மிரட்டல் நாடகத்தை வைத்து பாஜக ஏதாவது சில ஆதாயத்தை ஈட்டுமே அன்றி வேறு என்ன?
ஜெயாவின் கன்டெயினர் ஊழலையே மறைத்து விட்ட பாஜக அரசை எதிர்த்து திமுக -வால் என்ன செய்ய முடிந்தது? இல்லை மக்கள் பணத்தை ஆட்டையைப் போட்டு இலண்டனில் பாப்கார்ன் சாப்பிட்டவாறு கிரிக்கெட் போட்டியை ரசித்தும், பின்னர் வீரர்களோடு விருந்தில் கலந்தும் ஜனநாயகத்தின் கோவணத்தை அவிழ்த்தாரே மல்லையா, அவரை யார் என்ன செய்ய முடியும்?
இந்த நீதிமன்றம், இந்த பாராளுமன்றம், இந்த சட்டமன்றம், இந்த ஊடகங்கள் எவையும் எந்த ஊழலையும், அந்த ஊழலின் ஒரு சல்லிக்காசையும் பிடுங்கவோ இல்லை குற்றவாளிகளை தண்டிக்கவோ முடியாது. மெரினா போல அதிகாரத்தை நாம் எடுத்துக் கொண்டு போயஸ் தோட்டத்தை கைப்பறி ஆரம்ப சுகாதார மருத்துவமனையாகவும், கொடநாட்டு தோட்டத்தை டான்டி தோட்டமாக மாற்றவும் வேண்டும். பிறகு ஓபிஎஸ் முதல் எடப்பாடி வரை அவர்களது மற்றும் பினாமி சொத்துக்களை ஊர் ஊராக கைப்பற்றி மக்களுடைமையாக்க வேண்டும்.
இதன்றி சரவணின் காமடியான, ஆள் நான்தான்,குரல் நானல்ல என்ற கருமத்தை எப்படி தண்டிப்பது?
ஆம், இதுதான் பிரச்சினை. குற்றவாளிகள் யார் என்று தெரிகிறது, என்ன குற்றம் எந்த அளவுக்குச் செய்திருக்கிறார்கள் என்றுகூடத் தெரிகிறது, ஆனால் அவர்களை எந்த வழியிலும் தண்டிக்க இயலவில்லையே? இப்படியே சென்றால் நாடு என்ன ஆகும்?