Monday, July 13, 2020
முகப்பு செய்தி ஸ்மார்ட் சிட்டி : பாஜக -வின் புது அக்கிரகாரங்கள் !

ஸ்மார்ட் சிட்டி : பாஜக -வின் புது அக்கிரகாரங்கள் !

-

ந்தியா நெடுகிலும் 109 நகரங்களைத் தெரிவு செய்து அவற்றை பட்டி டிங்கரிங் பார்த்து அழகுபடுத்தும் திட்டம் ‘ஸ்மார்ட் சிட்டி’. 2015 -ம் ஆண்டு மோடி அரசால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 59 நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 40 நகரங்களின் பட்டியலை இம்மாதம் இறுதி செய்து வெளியிடுவதாக திட்டம். ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 59 நகரங்களுக்கு சுமார் 1.31 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்.

ஒதுக்கப்பட்ட நிதியில், தெரிவு செய்யப்பட்ட நகரங்களுக்கு வைஃபை வசதி, சென்சாரின் அடிப்படையில் இயங்கும் தெருவிளக்குகள், தெருக்கள் மற்றும் சாலைகள் மறுவடிவமைப்பு உள்ளிட்ட மேக்கப் சாதனங்கள் வழங்கப்படுவதோடு புதிய தொழில்கள் துவங்குவதற்கு ஏதுவான அடிக்கட்டுமான மற்றும் நிர்வாக வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளது.

மேற்படி மேல்பூச்சுக்களை வளர்ச்சி என்றோ, முன்னேற்றம் என்றோ சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பது ஒருபுறமிருக்க, இதுவும் தெரிந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போவதில்லை என்கிறது மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட ஆவணங்கள்.

“மேக்கப்” என்று வந்த பின் அது முகத்துக்கு மட்டும் தானே முதுகுக்கு எதுக்கு பவுடர் என்கிறார் மோடி. அதாவது, தெரிவு செய்யப்பட்ட நகரங்களுக்குள்ளேயே தெரிவு செய்யப்பட்ட குறிப்பான பகுதிகளில் மட்டுமே மேற்படி வசதிகள் குவிக்கப்படவுள்ளன (Area Based Development). இதன்படி மொத்த நிதி ஒதுக்கீட்டான 1.31 லட்சம் கோடிகளில் சுமார் 1.05 லட்சம் கோடிகள் நகரங்களுக்குள்ளேயே மேட்டுக்குடியினரின் அக்கிரகாரத்தில் மட்டும் கொட்டப்படவுள்ளது.

தெரிவு செய்யப்பட்டுள்ள 59 நகரங்களின் மொத்த பரப்பளவு 9311 சதுர கிலோமீட்டர்கள். இதில் 1.31 லட்சம் கோடிகள் வெறும் 246 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியில் கொட்டப்படவுள்ளது – அதாவது மொத்த பரப்பளவில் வெறும் 2.7 சதவீத பரப்பளவுக்கு எண்பது சதவீத நிதி ஒதுக்கீடு (1.05 லட்சம் கோடிகள்) செய்துள்ளது மோடி அரசு. மீதமுள்ள 9,065 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நகரப் பகுதிகளுக்கு 26,141 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

உதாரணமாக, இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பூனாவில் மதிப்பிடப்பட்டுள்ள 2,870 கோடியில் 76 சதவீதம் (அதாவது 2,196 கோடி) வெறும் 3.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பணக்காரர்களின் அக்கிரகாரமான அவந் – பனேர் – பாலேவாடி பகுதிகளின் ‘மேம்பாட்டுக்கென’ ஒதுக்கியுள்ளனர். இது மொத்த நகரத்தின் பரப்பளவில் வெறும் ஒரு சதவீதம் தான்.

பூனாவின் மேட்டுக்குடிகளின் பனேர் பகுதி

பார்ப்பானுக்கு சத்திரியன் கீழே ,சத்திரியனுக்கு சூத்திரன் கீழே, இவர்களுக்கு கீழே பஞ்சமர் என்ற மனுநீதியின் நவீன வடிவம் தான் இத்திட்டம். ஊரகப்பகுதிகளுக்கு நகரப்பகுதிகள் மேன்மையானது – நகரப்பகுதிகளிலேயே பணக்காரர்கள் வசிக்கும் பகுதி மேன்மையிலும் மேன்மையானது என்கிறார் மோடி. நாட்டின் பெருவாரியான மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளையும் அங்கே வாழும் மக்களின் பிரதான தொழிலான விவசாயத்தையும் நிர்மூலமாக்கி விட்டு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நகரங்களுக்குள்ளேயே அக்கிரகாரங்களை அமைப்பதைத் தான் வளர்ச்சி என்கின்றனர் இந்துத்துவ அயோக்கியர்கள். நகரங்களிலும் குடிசைப் பகுதி மற்றும் நடுத்தர வர்க்கம் வாழும் பகுதிகள் எவையும் இந்த ஸ்மார்ட் சிட்டியின் அலங்காரத்திற்குள் வராது. பெரு நகரங்களையே இனி அக்கிரகாரம், சேரி என்று பிரிப்பதின் நவீன வடிவம்தான் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்.

வர்ணாசிரம தருமத்தை மனிதர்களின் மேல் பிரயோகித்தது போய், இன்று நாட்டின் புவியியல் அமைப்பையே வருணாசிரம ரீதியில் மறுவரையறை செய்ய முயலும் இந்த எத்தர்கள் கூட்டம் தமிழகத்திலும் காலூன்றப் போகிறோம் எனச் சவால் விடுகின்றனர். தமிழக மக்களே சவாலைச் சந்திக்கத் தயாரா?

செய்தி ஆதாரம் :

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. ஸ்மார்ட் சிட்டியின் அறிவிக்கப்பட்ட நோக்கமே நகர மேம்பாடுதான். இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. கிராமம், நகரம், மற்றும் பெருநகரம் என்ற படிநிலைகளை தாண்டி மேலும் ஒரு ஒளிவட்ட பகுதியை உருவாக்குவதே நோக்கம். இது தகவல் தொழில் நுட்ப புரட்சி என்ற பெயரில் நடத்தப்படும் புதிய ஆட்சி முறை. அங்குள்ள அனைத்து குடிமக்களின் ஒட்டு மொத்த தகவல்களும் ஓரிடத்தில் சேகரிக்கப்படும், அவர்களின் அத்தனை நடவடிக்கைகளும் கண்காணிப்பில் அடங்கும், புதிய வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்படும், அப்பகுதியில் குடியேறும் உரிமை உட்பட அனைத்திற்கும் அனுமதி பெறவேண்டியதிருக்கும். அரசு மக்களின் பணத்தை முதலீடாக போடும். பராமரிப்பை பகாசுர கம்பெனியிடம் கொடுக்கும்.அவை கொள்ளை அடிக்கும்.முதலீடு போடாத வியாபாரம். இது தவிர வேறேதும் இதில் இல்லை.சற்றேறக்குறைய தோல் கேட் சாலை போல பிரமாண்டமாக இருக்கும். பயன்படுத்த அதிக விலைகொடுக்க வேண்டும். இதில் மயங்க ஒன்றும் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க