ரயில்வே விரைவு வண்டிகளில் பயணிப்போர் இனி போரடிக்கும் இட்லி, சப்பாத்தி, வடை, சமோசா முதலான சுதேசி உணவுகளோடு மல்லுக்கட்டத் தேவையில்லை. ஜூன் 15 முதல் ராஜ்தானி, சதாப்தி அதிவிரைவு சொகுசு வண்டிகளில் பயணிப்போர் தங்களுக்கு பிடித்த விதேசி உணவுகளான பிட்சா, பர்கர், சிக்கன் ஃபிரை போன்றவற்றை இணையம், தொலைபேசி, குறுஞ்செய்தி மூலம் வரவழைக்கலாம்.
புழுத்த அரசி – கோதுமைக்காக ரேசன் கடைகளில் காத்திருப்போரையும், விளைந்த பயிர்களுக்கு விலை இன்றி, வாங்கிய கடனை கட்ட முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளையும் செய்திகளில் பார்த்துச் சலித்த தேசத்திற்கு மோடி அரசு இந்த அல்ட்ரா மாடர்ன் சேவைகளை பெருமையுடன் வழங்குகிறது.
டொமினினோஸ், கே.எஃப்.சி, மெக்டொனால்டு, சாகர் ரத்னா இதர நிறுவனங்களோடு இந்திய ரயில்வே இணைந்து பயணிகளுக்கு இந்த சேவையை வழங்குகின்றது. இருப்பினும் முதல் நாளன்று லூதியானாவிலிருந்து புதுதில்லிக்கு சதாப்தியில் பயணிப்போருக்கு டொமினினோஸ், கியான் சைவம், பாபி மீன் – கோழி உணவுகள் மட்டும் கிடைத்ததாம். வரும் நாட்களில் அனைத்து அமெரிக்க – ஐரோப்பிய உணவுகளும் கிடைக்கும் என்று பயணிகள் நாக்குச் சொட்ட எதிர்பார்க்கிறார்கள்.
கே.எஃப்.சி, மெக்டொனால்டு போன்ற நிறுவனங்கள் வடக்கு ரயில்வேயில் இருக்கும் பெரோஸ்பூர் மண்டலத்தில் இன்னும் சேவையை துவக்கவில்லை. இந்த சோகமான நிலை விரைவில் மாறவேண்டும் என்று தில்லியின் பண்ணை வீட்டு கனவான்கள் வட இந்திய ஊடகங்களுக்கு இன்னேரம் வாசகர் கடிதம் எழுதியிருக்க வேண்டும்.
ரயில்வேயின் மண்டல வணிக மேலாளர் ரஜ்னீஷ் ஸ்ரீவஸ்த்தவா கூறும் போது இந்த முயற்சி பயணிகளின் சுவையான பயண அனுபவத்திற்கு உதவும் என்கிறார். பயணிகள் தமது உணவு வகைகளை இரண்டு மணிநேரத்திற்கு முன்னால் பதிவு செய்ய வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறார்.
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் தமக்கு தேவையான மற்றும் அங்கே கிடைக்கும் உணவு வகைகளை தெரிவு செய்து பதிவு செய்ய வேண்டும். பணத்தை இணையத்திலும் கட்டலாம் அல்லது உணவு நேரில் வினியோகிக்கப்படும் போதும் கட்டலாம். குறிப்பிட்ட நேரத்தில் அந்த ரயில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட உணவுகளை வினியோகிப்பதை உத்திரவாதப்படுத்துவது சம்பந்தப்பட்ட உணவு நிறுவனங்களின் பொறுப்பு என்கிறார் ஸ்ரீவஸ்த்தவா. பாருங்கள் நமக்கெல்லாம் கார்ப்பரேசன் தண்ணீர் வருமா வராதா என்பதை உறுதி செய்யவோ, இல்லை யாரிடமாவது விசாரித்து தெரிந்து கொள்வதோ சாத்தியமில்லை. சதாப்தி பயணிகளுக்காக இந்திய அரசின் பொறுப்பை பார்க்கையில் நமக்கு இமயமலையும் கூட சிறியதாகத்தான் தெரியும்.
கடந்த வருடம் இந்த பீட்சா சோதனையை பாட்னா ராஜ்தானி, டெல்லி – மும்பை, கிராந்தி ராஜ்தானி, புனே செகந்திராபாத் சதாப்தி, ஹௌரா – பூரி சதாப்தி ஆகிய ரயில்களில் சுமார் 45 நாட்களுக்கு இந்திய ரயில்வே நடத்தியிருக்கிறது. மேலும் இந்திய ரயில்வேயுடன் கூட்டணி வைத்துள்ள இதர நிறுவனங்கள் ஸ்விட்ஸ் ஃபுட்ஸ், ஒன்லி அலிபாபா, ஹல்திராம், பிகனெர்வாலா, நிரூலாஸ், பிட்சா ஹட் போன்றவையாகும்.
சென்னை சென்ட்ரலில் காயந்து போன சப்பாத்திகளை கட்டிக் கொண்டு வட இந்தியத் தொழிலாளிகள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் இறங்குகின்றனர். எழும்பூரில் இருந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஈ, எறும்புகள் கூட நுழைய முடியாத் அளவுக்கு, தென்மாவட்டத்திற்கு பயணிக்கும் மக்களால் நிரம்பி வழிகிறது.
ஜப்பானிலிருந்து புல்லட்டின் ரயில் வரப்போகிறது. சதாப்தியில் பீட்சா வந்து விட்டது! என்ன சொகுசு இல்லை இந்தத் திருநாட்டில்?
செய்தி ஆதாரம் :