Wednesday, June 3, 2020
முகப்பு கட்சிகள் பா.ஜ.க மாட்டுக்கறி பிரியாணியுடன் திருச்சியைக் கலக்கிய சர்வகட்சி போராட்டம் !

மாட்டுக்கறி பிரியாணியுடன் திருச்சியைக் கலக்கிய சர்வகட்சி போராட்டம் !

-

விவசாயிகள், உழைக்கும் மக்களுக்கு எதிராக மாடு விற்பனை மற்றும் மாட்டுக்கறிக்கு விதித்துள்ள தடை உத்தரவை திருப்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக திருச்சியில் 10.06.2017 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில்  பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்தவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர், தோழர் ஜீவா தலைமையுரையில் “BJP-யினர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது விவசாயத்தில்,பொருளாதாரத்தில், சிறிதும் அக்கறை காட்டாமல் இருக்கிறது. மக்கள் எங்களுக்கு வாக்களித்தால் அத்தனையும் நிறைவேற்றுவோம் என கூறி ஓட்டு வாங்கினார்கள். ஆனால் நடந்தது என்ன 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களை துளி கூட மதிக்காமல் தொடர்ந்து மக்களுக்கு எதிரான சட்டங்களை அமுல்படுத்தி, மறுபிறப்பு எடுத்த இட்லர் ஆட்சி போல இயங்கும் BJP யை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே துரத்தியடிப்போம் அதற்கு அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் இது போல ஒன்றாக இணைந்து போராடுட வேண்டும்”. என அறை கூவினார்.

தோழர் சந்துரு

திராவிடர் விடுதலை கழகத்தின் மாணவர் அமைப்பின் தோழர் வழக்கறிஞர் சந்துரு பேசுகையில் “மாட்டுக்கறிக்கு தடை என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இன்று தடை விதிப்பவர்கள்தான் இதிகாச  காலகட்டத்தில் நிறைய மாமிசங்களை தின்றிருக்கிறார்கள். உடல் வலுவிற்கும்,ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவு என்றார்கள். தான் மட்டுமல்ல தன் சந்ததிகளையும் ஆற்றல் மிக்கவர்களாக்கினர். ஆனால் இன்று மலிவு விலையில் கிடைக்கும் மாட்டிறைச்சியின் சத்துக்களை நமக்கு கிடைக்க விடாமல் செய்வதற்கும், அவர்களை போல் நாமும் வளர்ந்து விடக்கூடாதெனவும் இப்படி கோமாதா, பசு பாதுகாப்பென  கூறி மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கிறது மோடி அரசு. பார்பனியத்தின் வெற்றி சாதிகளாக பிரித்து வைத்திருப்பதுதான். தனக்கு கீழ் உள்ள சாதிகள் சண்டையிட்டு கொண்டிருப்பதால் உயர் சாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் தனக்கு மேல் உள்ள பார்பனியத்தை எதிர்ப்பதில்லை. சாதியாக பிரிந்து கிடப்பது பார்பனியத்திற்கு தேவைபடுகிறது. அதே சமயம் இந்துக்கள் எல்லாம் வாருங்கள் என்கின்றனர். இந்துக்களுக்கு என்ன வரையறை எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, முஸ்லீம் இல்லையோ, பௌத்தர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள் என்று சேர்த்துக் கொண்டனர். நான் உண்ணும் உணவு வேறு நீ உண்ணும் உணவு வேறு, நான் உடுத்தும் உடை வேறு நீ உடுத்தும் உடை வேறு, உன்னுடைய பார்ப்பன கலாச்சாரம் வேறு, என்னுடைய கலாச்சாரம் பண்பாடு வேறு, இப்படி வேறுபாட்டை வைத்து கொண்டு நாமெல்லாம் இந்துகள் என்று கூறுவது மோசடி”. என BJP RSS -ஐ அம்பலப்படுத்தி பேசினார்.

தோழர் முகிலரசன்

தமிழ் புலிகள் கட்சியின் மாநில அமைப்பாளர், தோழர் முகிலரசன் பேசுகையில் “மோடி அரசு மக்களிடம் நயவஞ்சகமாக பேசி ஓட்டு வாங்கி ஏமாற்றி விட்டது. மாட்டிறைச்சிக்கான தடை என்பது சிறுபான்மையினர்,தலித்துக்களை ஒடுக்குவதற்க்காக கொண்டு வந்துள்ளது இதனை புரிந்து கொண்டு தமிழகத்தில் இவர்களை கால் பதிக்க விடாமல் செய்ய இவர்களுக்கு ஓட்டுப்போடாமல் புறக்கணிப்போம்” என்றார்.

தோழர் சுரேஸ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்,தோழர் சுரேஷ் பேசுகையில்இன்றைய சூழலில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் இம்மாதிரியான கூட்டுத்துவ போராட்டம் சிறப்பானது. மிகவும் அவசியமானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மோடி அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றோம். இனி இது போன்று அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் BJP,RSS கும்பல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்” என்றார்.

தோழர். சுந்தரராஜூ

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைப்பு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர், தோழர் சுந்தரராஜு பேசுகையில் “மத்திய அரசு இந்தியா முழுவதும் தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை இயற்றி தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில் தற்போது விவசாயத்திற்க்கும் மாடு வளர்ப்பிற்கும் அழிவை  ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே தொழிற்சாலைகளில் வேலை இழப்பு , விவசாயம் பாதிப்பு என மக்கள் துன்பத்தில் இருக்கும் போது பணமதிப்பிழப்பு என்ற கொள்கையை நாடு முழுவதும்  அமுல்படுத்தி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடி அரசு தற்போது மீண்டும் பசு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மக்களை மேலும் வஞ்சிக்கிறது. BJP க்கு எதிராக போராடும் மக்களுடன் தொழிற்சங்கங்கள் என்றும் துணைநிற்கும்” என பேசினார்.

தோழர் ஆதி நாரயண மூர்த்தி

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட உறுப்பினர், வழக்கறிஞர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி பேசுகையில் “மத்திய அரசு இந்திய அரசியல் சட்டத்தை துளி கூட மதிப்பதில்லை அதை குழி தோண்டி புதைக்கிறது. தான் வைத்ததுதான் சட்டம் என பாசிச தன்மையோடு ஜனநாயகத்திற்கு விரோதமான செயலில் ஈடுபடுகிறது. தனக்கேற்ப சட்டங்களை வலைத்து கொள்வதும், உழைக்கும் மக்கள் மீது கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவது என செயல்படுகிறது. BJP அரசை சட்டப்பூர்வமான முறையில் நின்று முறியடிக்க முடியாது. இதுபோன்று களத்தில் இறங்கி போராடினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்” என்று பேசினார்.

தோழர் சீனி விடுதலை அரசு

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு இனைச்செயலாளர், தோழர் சீனி விடுதலை அரசு பேசுகையில் “மாடு விற்பனை மற்றும் மாட்டுகறிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசு மக்களிடம் எதாவது ஒரு விசயத்தை பேசி கொண்டே இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. தமிழிசை கூறுகிறார். மாட்டுக்கறி தின்னக்கூடாது என்று சட்டம் சொல்லவில்லை, மாடு வெட்ட கூடாது என்று தான் கூறுகிறது என்கிறார். இவர் எவ்வளவு பெரிய அறிவாளி பாருங்கள் மாட்டை வெட்டாமல் கறி எப்படி சாப்பிடுவது. H.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஸ்ணன் இவர்கள் அவைவரும் மாட்டுக்காக அக்கறைப் படுகிறார்கள். மக்களைப் பற்றி, விவசாயிகள் பற்றி கவலை பட்டது கிடையாது. பசுவை பாதுகாக்க வேண்டுமாம் அதற்கு ஏசி வைக்கனுமாம்,லாரியில் ஏற்றி வரும்போது அடிப்படுகிறதாம் அடிமாட்டுக்கு கொடுக்கிறார்களாம் இப்படியே சென்றால் மாட்டு இனமே அழிந்து விடுமாம். எங்க அம்மா அப்பாவிற்கு எனது குடும்பத்திற்கு ஒழுங்கான வீடு இல்ல, மாடுகளை லாரியில் அடைத்து கொடுமை படுத்துகிறார்களாம். பள்ளிக்கூட புள்ளைங்கள பஸ்ஸில் அடைத்து மாட்டை விட கேவலமாக கொண்டு செல்லும் போது இவர்களுக்கு பாவமாக தெரியவில்லை. விவசாயிகள் 400 -க்கும் மேற்பட்டோர் இதுவரை தற்கொலை செய்துள்ளனர் அது பற்றி கவலை இல்லை. ஸ்ரீரங்கத்தில் இருக்கின்ற கோசாலையில் உள்ள மாடுகளை இரண்டு வேளை குளிக்க வைப்பது, சாம்பிராணி புகை போடுவது, ஏசி ரூமில் படுக்க வைப்பது என செய்கிறோம் என  கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பொய் கூறுகிறார்கள். இவர்களை மீடியாவில் வேறு பேச அனுமதிக்கிறார்கள் குறிப்பாக தந்தி டிவியில் சாமானியன் என்று இணைத்துக் கொண்டு பேச வைக்கிறார்கள். இப்படி இவர்கள் பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகிறார்கள் என்றார். நான் மாட்டை வளர்ப்பேன், உண்ணுவேன் அதன் தோலை பயன்படுத்தி பறை செய்வேன் அதை கிளர்ச்சிக்கான ஆயுதமாகவும் மாற்றுவேன் என்றார். இனி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி இது தந்தை பெரியார் பிறந்த மண் என்பதை எதிரிகளுக்கு உணர்த்த வேண்டும்”. என்று பேசினார்.

திருச்சி வேலுச்சாமி

காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி பேசுகையில் “நான் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை, எந்த இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. ஆனால் என் வீட்டில் மகள், மனைவி என அனைவரும் அசைவம் சாப்பிடுவார்கள். நான் சாப்பிட மாட்டேன் என்பதற்காக அவர்களை சாப்பிடக்கூடாது என தடுத்தால் எப்படி? எந்த உணவை உண்பது என்பது அவர் அவர் விருப்பம் சார்ந்தது அதில் எவரும் தலையிட முடியாது என்றார். மேலும் பசுவை பாதுகாப்போம் என்று சொல்லிக் கொண்டு டன் கணக்கில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது இந்த அரசு. ஏற்றுமதியில் முதலிடத்தில் இந்தியா உள்ளதாம். இதற்கு யாரை தூக்கில் போடலாம் கூறுங்கள், நான் எதை சாப்பிட வேண்டும், எதை உடுத்தவேண்டும், எந்த இடத்தில் வசிக்க வேண்டும் என்று சட்டம் போட்டால் ஜனநாயகம் இருக்குமா? ஜெர்மனியில் இட்லர் செய்ததை இங்கு மோடி அரசு நடைமுறைப்படுத்தப் பார்க்கிறார்கள். இதை வீழ்த்த நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம் வெற்றி பெருவோம்” என்றார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப்பொதுச் செயலர், தோழர் காளியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றும் போது “ஜெர்மனியில் இட்லர் கொண்டு வந்ததை போல் இந்தியாவில் RSS-BJP இந்துத்துவத்தை கொண்டு வர வேண்டும் என துடிக்கிறது. இட்லர் மக்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருக்க வேண்டும். இடை விடாமல் கொள்கைகளை பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என கூறினான். இந்த இரண்டையும் மோடி தற்போது செய்து கொண்டிருக்கிறார். தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன் என்றார். ஆனால் நடப்பது விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. நாடு முழுக்க விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

தோழர்.காளியப்பன்

மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழகம் என போராட்டம் நீண்டு செல்கிறது. ம.பியில் சிவராஜ் சிங் சவுகான் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் இறந்துள்ளனர். அதை மறைக்க உண்ணாவிரதம் இருக்கிறார். BJP எப்போதும் இரட்டை வேடம் போடுகிறது. மாட்டுகறி தடை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றதும் மாட்டு சந்தையை ஒழுங்குபடுத்ததான் சட்டம் கொண்டுவந்தோம் என்கின்றனர். மாட்டை வாங்குவோருக்கும் விற்ப்போருக்கும் நிலம் இருக்க வேண்டும் என்கிறது சட்டம். இது சாத்தியமா? மாட்டை விற்க தடை போட்டுவிட்டு மாட்டுகறிக்கு தடை போடவில்லை என்று கூறுகிறார்கள். மோடி என்றால் மோசடி, RSS என்றால் அயோக்கியதனம் என்று பொருள். இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பசுவை கொன்று சாப்பிடுகிறார்கள், இவர்களை ஒழிக்க வேண்டும் என்கின்றனர். ஆதிசங்கரர் மாட்டுகறி சாப்பிடுங்கள் என்கிறார். ரிக் வேதத்தில் மாட்டுகறி சாப்பிடுபவர்களை பற்றி உள்ளது. உன்னுடைய மகன் சிறந்த பாடகராக, உடல் கட்டுமானவனாக வளர வேண்டுமா? மாட்டுகறி சாப்பிட வேண்டும் என்று வேதத்தில் உள்ளது. ஓம் ஓம் என்று கூறுகிறார்களே அது ஓம் இல்லை அது சோம், சோம் என்றால் கஞ்சா, கஞ்சா குடித்துவிட்டு ஆடு, மாடு, குதிரைகளை கொன்று சாப்பிடுவார்கள் பார்ப்பனர்கள். ஆனால் இன்று பசுவை பாதுகாப்பதாக துடிக்கிறார்கள்.

இந்து… இந்து… என்று இல்லாத பண்பாட்டை தினிக்கிறார்கள். தமிழர் பண்பாடு வேறு, அது சிறந்த பண்பாடு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிறது தமிழர் பண்பாடு. ஆனால் பார்பனியத்தின் பண்பாடு இவர்கள்தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிறது. இந்தியை திணிப்பது, சமஸ்கிருதம் திணிப்பது பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை ஒற்றைப் பண்பாடாக மாற்ற முயற்சிக்கிறது. இதற்கு கலவரத்தை தூண்டுவது, மக்களை திசை திருப்பிவிடுகிறது. மூன்றாண்டு சாதனை என்று எதையும் கூற முடியாது. மக்கள் BJP-RSS மோடி கும்பலை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர். இதை திசைதிருப்ப புது புது பிரச்சனைகளை உருவாக்குவது, அதை நோக்கி மக்களை கொண்டு செல்வது என்பதை திட்டமிட்டே செய்கிறார்கள். தமிழகம் இதை புரிந்து கொண்டதால் தான் BJP எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் புறக்கணிக்கிறார்கள், மறுக்கிறார்கள். BJP-RSS காரர்கள் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் அந்த முகத்தை கிழித்து நொறுக்கிவிடுவோம். பார்பனியத்திற்கு கல்லறை கட்டுவோம்” என்று கூறி தனது சிறப்புரையை முடித்துக் கொண்டார்.

தோழர்.விஜய்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட ஒருங்கினைப்பாளர், தோழர் விஜய் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் அதற்கு மாணவர் அமைப்பு என்றும் துணை நிற்கும் என்று நன்றியுரையுடன் கூட்டத்தை முடித்து வைத்தார்.

இடையிடையே BJP-RSS ஐ கண்டிக்கும் விதத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது, மேலும் ம.க.இ.க தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடினார்கள் அதில் உலகம் சுற்றும் வாலிபனாம் நரேந்திர மோடி அவர் கருப்பு பணத்தை ஒழிக்க போராராம் ஜேம்சுபாண்டா மாறி என மோடியை கிண்டலடித்தும் சத்தான மாட்டுக்கறி சுவையான மாட்டுக்கறி என்ற பாடலையும் பாடினர். புதிய பாடலான மாடு எங்க மாடு வளப்பது எங்க பாடு என்ற பாடலை தோழர்.கோவன் பாடினார். இப்பாடல்கள் பார்ப்போரை உற்சாக மூட்டியது.

இவ்வார்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. BJP-RSS காவி கும்பல்களுக்கு எதிரான புரட்சிகர அமைப்புகளின் போராட்டகள் வெல்லட்டும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க