Friday, May 29, 2020
முகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் ஐ.டி. ஆட்குறைப்பு : கனவு கலைகிறது - நிஜம் சுடுகிறது !

ஐ.டி. ஆட்குறைப்பு : கனவு கலைகிறது – நிஜம் சுடுகிறது !

-

பூனாவில் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்வப்னா போஸ்லே-யின் வேலை பறிக்கப்பட்ட போது, அவர் அப்போதுதான் தனது 3 வயது குழந்தையை ஒரு மேட்டுக்குடி மழலையர் பள்ளியில் சேர்த்திருந்தார். மாதந்தோறும் குடும்பத்தின் இரண்டு படுக்கையறை வீட்டுக்கான கடன் தவணையை கட்டும் பொறுப்பும் அவருக்கு இருந்தது. இன்னொரு வேலை தேடுவதற்கு அவகாசம் தருமாறு அவர் கெஞ்சியும் அது மறுக்கப்பட்டு, இரண்டு மாத அவகாசத்தில் அவரது வேலை பறிபோனது.

சென்னை விப்ரோவில் வேலை செய்து வந்த பார்வதி சுப்பிரமணியனின் (பெயர் மாற்றப்பட்டது) நிலைமையும் கிட்டத்தட்ட இதே போலத்தான். புதிய புராஜக்டில் சேர்ப்பதற்கு நிறுவன கணினி அனுமதிக்காத நிலையில், ஒரு முக்கியமான இன்டர்வியூ என்று அழைத்து பேசிய எச்.ஆர். அதிகாரிகள், இனிமேல் அவருக்கு விப்ரோவில் இடம் இல்லை என்று அறிவித்தார்கள். “இரண்டு பசங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்க ஸ்கூல் ஃபீஸ் கட்டணும், மத்த பொறுப்புகளும் இருக்கு. என் குடும்பம் இந்த சம்பளத்தை நம்பித்தான் இருக்கு. இந்த வேலை போனா வாழ்க்கையே பிரச்சனையாகி விடும்” என்று கெஞ்சியிருக்கிறார், பார்வதி. அங்கும் கருணை கசியவில்லை; ஒரு எந்திர மனிதனின் இரக்கமற்ற தன்மையோடு ஆட்குறைப்பு அமல்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் இந்நிலையை எதிர்கொள்கிறார்கள்.  பெங்களூரு ”மின்ட்” என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில் இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல்., டெக் மகிந்த்ரா, காக்னிசன்ட், கேப்ஜெமினி, டி.எக்ஸ்.சி. ஆகிய 7 முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் இந்த ஆண்டு 56,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன என்று தெரிய வந்தது. ஹெட் ஹன்டர்ஸ் (Head Hunters) என்ற வேலைக்கு ஆள் அமர்த்தும் நிறுவனம், ஐ.டி. துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 2 இலட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்று கணித்துள்ளது. இவ்வாறாக, 40 இலட்சம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி, அந்நியச் செலாவணியை ஈட்டி, இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் என்ஜினாகக் கருதப்பட்ட இந்திய ஐ.டி. துறை பனிப்பாறையில் மோதி, மூழ்கிப் போகும் அபாயத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது.

25 வயது இளைஞர்களும், 40 வயது ‘முதியவர்’களும் தமது கனவு மயக்கத்திலிருந்து முரட்டுத்தனமாக எழுப்பப்பட்டிருக்கிறார்கள். “என் வேலை, என் உழைப்பு, என் அப்ரைசல்” என்று இருந்தால், “என் சம்பாத்தியம், என் குடும்பம், என் எதிர்காலம்” என்று மேலே மேலே பறக்கலாம் என வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஐ.டி. துறையில் திணிக்கப்படும் கட்டாய வேலையிழப்பைக் கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-ஐ.டி. ஊழியர் பிரிவு சென்னை-சோழிங்கநல்லூரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஹைதராபாத்-விப்ரோவில் வேலை செய்யும் நாகேஸ்வர் ரெட்டிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 15 ஆண்டு கால பணி வாழ்க்கைக்குப் பிறகு, “திறம்படப் பணியாற்றாதவர்” (under performer) என்று முத்திரை குத்தியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவரைப் பணிவிலகல் கடிதம் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். “குறிப்பான காரணம் எதுவும் இல்லை, நிர்வாகம் செலவுகளைக் குறைக்க போட்ட திட்டத்தில் உங்கள் பெயரும் சேர்ந்திருக்கிறது” என்றிருக்கிறார் அவரது மேலாளர்.

ஐ.டி. துறை நண்பா, உனக்கு ரோசம் வேணும்டா!” என்று வினவு தளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய போது, “ரோசம் எல்லாம் வேண்டாம், ரொக்கம் போதும்” என்று பணிப்பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகியவற்றை அலட்சியப்படுத்தினார்கள் பல ஐ.டி. ஊழியர்கள். இன்று தொழில் தகராறு சட்டம் 1947-இன் ஷரத்துகளைத் தேடித்தேடிப் படிக்கிறார்கள். தொழிற்சங்கம் அமைப்பதற்கு என்ன விதிமுறை என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். “அவமானப்படுத்தி விட்டார்கள்” என்று கொதிக்கிறார், ஒருவர்; ”இத்தனை ஆண்டுகள் வேலை வாங்கிய பிறகு, திடீரென்று நான் திறமை இல்லாதவன் என்று கண்டு பிடித்தீர்களா?” என்று பொங்குகிறார், இன்னொருவர்.

”ஆட்குறைப்பே இல்லையே, ஒரு சில திறமை இல்லாதவர்கள் வெளியேறுகிறார்கள். இது வழக்கமாக நடப்பதுதான்” என்று ஐ.டி. நிறுவனங்களும், அவர்களது கூட்டமைப்பான நாஸ்காமும் எழுதிக் கொடுத்ததை வாசிக்கிறார் மோடியின் ஐ.டி. துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். “சங்கராச்சாரி கொல்லவில்லை என்றால், சங்கரராமனைக் கொன்றது யார்?” என்று கலங்கும் பக்த கோடிகளைப் போல, “ஆட்குறைப்பே நடக்கவில்லை என்றால், இவ்வளவு பேர் எப்படி வேலை இழந்தார்கள்?” எனக் குழம்புகிறார்கள், ஐ.டி. ஊழியர்கள்.

ஐ.டி. துறை கனவில், “1990-களுக்குப் பிந்தைய ‘வளர்ச்சி’ வண்டியில் நமக்குத்தான் இடம் கிடைக்கவில்லை. நமது பிள்ளைகளாவது படித்துக் கை நிறைய சம்பளம், ஏ.சி. அலுவலக வேலை, அமெரிக்கப் பயணம் என முன்னேறி விட வேண்டும்” என்று சொத்தை விற்று, கடன் வாங்கி பொறியியல் படிக்க வைத்த உழைக்கும் வர்க்கப் பெற்றோர் கதிகலங்கி நிற்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு 12 இலட்சம் பேர் என்ற வீதத்தில் வெளிவரும் பொறியியல் பட்டதாரிகள், ஐ.டி. நிறுவனங்கள் உருவாக்கும் 1.5 இலட்சத்துக்கும் குறைவான வேலைவாய்ப்புகளை மொய்க்கிறார்கள்.

பொறியியல் அல்லாத பட்டதாரிகளையும் சேர்த்து ஆண்டுக்கு 60 இலட்சம் பேர் இந்திய உழைப்புச் சந்தையில் சேர்கிறார்கள். இந்த உபரி பட்டாளத்தைப் பயன்படுத்தி அதிக சம்பளம் வாங்கும் பழைய ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அடிமாட்டு விலையில் ஒப்பந்த ஊழியர்களாகப் புதிய பட்டதாரிகளை அமர்த்திக் கொள்கின்றன ஐ.டி. நிறுவனங்கள். மற்ற தொழில்துறைகளில் நடப்பதைப் போல, சம்பளமே இல்லாமலோ அல்லது மிகக் குறைந்த உதவித்தொகை கொடுத்தோ பல்வேறு பெயர்களில் இளம் பட்டதாரிகளை பணியமர்த்திக் கொள்ளும் போக்கும் ஐ.டி. துறையில் வளரத் தொடங்கி விட்டது.

இதற்கெல்லாம் காரணம் ஆட்டோமேஷன், “அமெரிக்க வேலை வாய்ப்பு அமெரிக்கர்களுக்கே” என அமெரிக்க அதிபர் டிரம்ப் முழங்குவது, எச்-1பி விசா நடைமுறைகளை இறுக்கமாக்கியது என்று சொல்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள். ஆனால், ஆட்டோமேஷனுக்கும், அமெரிக்க அரசியலுக்கும் அடிக்கொள்ளியாக இருந்து இயக்குவது நிதி மூலதன இரத்தக் காட்டேறியின் அடங்காத இலாப வேட்கை.

உதாரணமாக, 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1500 கோடி டாலர் கொடுத்து 4% காக்னிசன்ட் பங்குகளை வாங்கிய எலியட் மேனேஜ்மென்ட் என்ற நிதி மூலதன நிறுவனம் காக்னிசன்டின் இலாப வீதம் போதாது என்று கண்டிப்புக் காட்டியிருக்கிறது. மொத்த இலாபத்தை 18.5%-லிருந்து 21% ஆக உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. அதை ஏற்று எலியட்-உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது காக்னிசன்ட். நேற்று வந்த எலியட்டின் உத்தரவு, 15 ஆண்டுகளாக உழைத்த ஊழியரின் நலனை வென்று விட்டது. அதன்படி ஆட்குறைப்பு, தலை வெட்டு நடந்து கொண்டிருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு அதிக சம்பளம் வாங்கிய அமெரிக்க ஊழியர்களைத் தூக்கி விட்டு அந்த வேலைக்கு இந்திய ஊழியர்களை அமர்த்தி இலாபம் சம்பாதித்த முதலாளிகள், இன்றைக்கு இந்திய ஊழியர்களைத் தூக்கி விட்டு, அதைவிடக் குறைந்த செலவில் வேலையை செய்து வாங்க எந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். “எந்திரங்களுக்குத் தூக்கம் வராது, அரட்டை அடிக்காது, தம் அடிக்க நடுநடுவே வெளியில் போகாது, மகப்பேறு விடுப்பு எடுக்காது, நிர்வாகத்துடன் வாதம் புரியாது” என்று பல ஆதாயங்கள் இருக்கின்றன.

மனிதர்கள் செய்யும் வேலையை எந்திரங்களால் செய்விக்க முடியாத இடத்தில் மட்டும்தான் மனிதர்களுக்கு இடம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் விதி. வேலை செய்வதற்கான திறமையும், விருப்பமும் இருந்தும் இலாபம் ஈட்டுவதற்குத் தேவைப்படாத காரணத்தினால் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகிறார்கள்.

அப்படி மனிதர்களின் இடத்தில் எந்திரங்களை அமர்த்திக் கொண்டே போவதால், உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதற்கு ஆளில்லாமல் சந்தை சுருங்குகிறது. இந்த முரண்பாடு தோற்றுவிக்கும் நெருக்கடி முற்றிப்போய் மீளமுடியாத சிக்கலில் சிக்கியிருக்கிறது முதலாளித்துவம். நானோ தொழில்நுட்பம், கிளவுட் தொழில்நுட்பம், செயற்கை அறிவு தொழில்நுட்பம், விண்வெளிப் பயணம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரிய எரிசக்தி தொழில்நுட்பம் இவற்றின் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொள்கிறது.

ஆனால், வேலை கொடுப்பதல்ல; இலாபம் ஈட்டுவதே மூலதனத்தின் நோக்கம். இந்நிலையில் “என் வேலை, என் வாழ்க்கை” என்று சிந்திப்பதிலிருந்து, “நம் வேலை, நம் வாழ்க்கை” என்று சிந்திப்பதும், “நம் மக்கள், நம் நாடு” என்று அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வதும் தவிர்க்க முடியாதது என்பதை ஐ.டி. துறை ஊழியர்கள் உணரவேண்டும்.

– சாக்கியன்

**********

பெட்டிச் செய்தி : நெருக்கடி தற்காலிகமானதா?

இந்த நெருக்கடி தற்காலிகமானதா அல்லது திரும்பிப் போகமுடியாத மாற்றமா என்பதுதான் கேள்வி.

இந்திய ஐ.டி. நிறுவனங்கள் மேற்கத்திய நிறுவனங்களுக்கான கணினி உள்கட்டமைப்பு பணிகளை, அயல்பணி சேவை மூலம் செய்து வருகின்றன. அத்தகைய பணிகளைச் செய்து கொடுப்பதற்குத் தேவையான நிறுவனக் கட்டுமானங்களை இங்கே உருவாக்கி, மேற்கத்திய ஊழியர்களைவிடக் குறைந்த சம்பளத்தில் ஆள் அமர்த்துவதன் மூலம் இலாபமீட்டுகின்றன.

இந்நிலையில் 2008 பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள், சேவை நிறுவனங்களுக்கிடையேயான கழுத்தறுப்பு போட்டி, அரசியல் மாற்றங்கள், இவற்றோடு தொழில்நுட்ப மாற்றங்களும் இணைந்து ஐ.டி. நிறுவனங்கள் அனுபவித்து வந்த அதீத வளர்ச்சிக்கும், பெருவீத இலாபமீட்டலுக்கும் முடிவு கட்டியிருக்கின்றன.

காகிதக் கோப்புகள், அவற்றை வைப்பதற்கான அறைகள், அதனைப் பராமரிப்பதற்கான பணியாட்கள், குமாஸ்தாக்கள் என்ற பழைய அலுவலக கட்டுமான முறையை கணினிமயமாக்கம் மாற்றியமைத்தது, அன்று. இன்று, கணினித்துறைக்குள்ளேயே நிகழ்ந்துவரும் கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற கட்டுமான மாற்றம், நிறுவனங்களின் கணினிக் கட்டமைப்பு, பராமரிப்பு சார்ந்த பணிகளைப் பெருமளவில் குறைத்துள்ளது.

அதேபோல, முன்னர் மற்ற தொழில்துறை உற்பத்தி செயல்பாடுகளைக் கணினி தொழில்நுட்பமும் கணினி ஊழியர்களும் தானிமயமாக்கினர் (automated). இப்போது கணினித்துறை தன்னைத்தானே தானிமயமாக்கிக் கொள்கிறது. மென்பொருள் சோதனை, வாடிக்கையாளர் சேவை போன்ற மனிதத் தலையீடு அதிகம் தேவைப்படும் பணிகள் மென்பொருள்களால் இயங்கும்படி தானிமயக்கமாக்கப்பட்டு விட்டன. மேலும் தன்னைத்தானே கண்காணித்துக் கொள்ளவும், தனக்குத்தானே பழுது நீக்கிக்கொள்ளவுமான ஆற்றலைக் கணினிகளுக்கு வழங்கும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் (artificial intelligence), நிரல் எழுதுதல், மென்பொருள் வடிவமைப்பு போன்ற பணிகளையும் தானிமயக்கமாக்குகின்றது.

அதாவது, இதுநாள்வரை இலட்சக்கணக்கான ஊழியர்கள் தமது அறிவுத்திறன் கொண்டு செய்த பணிகளில் பலவற்றை எந்திரம் உள்வாங்கிக் கொண்டுள்ளது. பணிகளைத் தொகுத்தும் பகுத்தும் பார்க்கின்ற ஆற்றலையும் கணினி தொழில்நுட்பம் பெற்றுவருவதால், கணினிகளை இயக்குவதற்கு தனியே ஊழியர்கள் தேவையில்லை என்ற நிலை உருவாகி வருகிறது.

உள் கட்டுமானங்களின் தேவையை கிளவுட் கம்ப்யூட்டிங் குறைத்திருக்கிறது என்றால், ஊழியர்களின் தேவையை ஆட்டோமேசன் குறைத்து வருகிறது. இது திரும்பிப் போக முடியாத மாற்றம்.

**********

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. I’m also experienced in this cultural. Yes I am one of the past/ existing staff of ICICI Bank credit manager. I know rules and regulations of the bank but same like position faced that time I wrote 1 mail to modi for save salary a person​ live but he is reply you go to meet your area supervisor for this query ..Any one is ready to reply this met making possible. By that BJP.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க