Monday, January 27, 2020
முகப்பு கட்சிகள் பா.ஜ.க நாப்கினுக்கு வரி போடும் மோடி அரசு

நாப்கினுக்கு வரி போடும் மோடி அரசு

-

ந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்துகையில், வரி வீதங்களை தீர்மானிக்கும் ஜி.எஸ்.டி குழு பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்கள் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு 12% வரி நிர்ணயித்துள்ளது. பெண்களின் வளையல், குங்குமம் போன்றவற்றை “அத்தியாவசிய” பொருட்களாக வகைப்படுத்தியுள்ள மத்திய அரசு அவற்றுக்கு ஜி.எஸ்.டி-யில் வரி விலக்களித்துள்ளது.

இதற்கு எதிராக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நாப்கின்கள் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு வரிவிலக்கு அளிக்குமாறு கோரி “லாகு கா லகான் – நாப்கின்களுக்கு வரி” (#LahuKaLagaan) என்ற குறிச்சொல்லுடன் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இன்று வரை சுமார் 70% பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான நாப்கின்களை பயன்படுத்துவதில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்களை தீட்டு என்று ஒதுக்கி வைப்பது, அவர்களது சுகாதாரம் மற்றும் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காத ஆணாதிக்க, பார்ப்பனிய கலாச்சார பின்புலம் ஒரு புறம், மறுபுறம் வறுமை; இவையே இதற்கு காரணம். இன்றும் கூட பெண்கள் வெளியில் சொல்ல வெட்கிகுறுகுவதும், ரகசியம் காக்கவேண்டிய ஒன்றாகவும் தான் மாதவிடாயை பார்க்கின்றனர்.

மாதவிடாய் என்பது சாதாரண உடலியல் சுழற்சி நடைமுறை. சுழற்சியின் முதல் கட்டத்தில் கருப்பையில் கருவை சுமப்பதற்கான மிருதுவான உட்சுவர் தயாராகிறது. சுழற்சியின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயாரானவுடன், சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறி கருமுட்டைக் குழாய் வழியாக கருப்பையை அடைந்து கருப்பை சுவற்றில் ஒட்டிக் கொள்ளும். இந்த மத்திய கட்டத்தில் கருப்பை கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருக்கிறது. கருத்தரிக்காத போது அடுத்த கட்டத்தில் கருப்பையின் மிருதுவான உட்சுவர் தேவையில்லை. அதனால் உட்சுவர் உடைந்து சிதைந்து, அதனுடன் கரு முட்டையும் சேர்ந்து இரத்தப் போக்காக வெளியேறுகிறது. மாதவிடாய் நின்றவுடன், கருப்பையின் மிருதுவான உட்சுவர் மீண்டும் தயாராகி அடுத்த சுற்று துவங்குகிறது.

மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தத்தின் மூலம் நுண்ணுயிர் கிருமி தொற்றுகள், நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன, அவ்வளவே. ஆனால், மாதவிடாயின் இரத்தமே சுகாதாரக் கேடானது என்பது உண்மை இல்லை.

சுகாதாரக் குறைவான மாதவிடாய் கால அணுகுமுறைகளால் பல நோய்த் தொற்றுகள் ஏற்படுவதோடு, கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்று நோய்கள் தொற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சுகாதாரக் குறைவான அணுகுமுறைகள் சில நேரங்களில் குழந்தையின்மைக்கும் வழிவகுக்கக் கூடுமென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் வருடத்திற்கு 1,22, 844 பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், 67, 477 பேர் கொல்லப்படுவதாகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் நாப்கின்களுக்கு 12% ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது ஏழை எளிய பெண்களுக்கு நாப்கின்கள் கிடைக்கப் பெறுவதை மேலும் அரிதாக்குகிறது. இன்று உலக அளவில் நாப்கின்களின் பயன்பாட்டை உயர்த்தும் பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்களில் அரசுகள் ஈடுபட்டு வரும் போது மோடி அரசின் இவ்வரிவிதிப்பு இந்தியாவில் நாப்கின்கள் பயன்பாட்டை மேலும் குறைக்கும்.

வரிவிதிப்பை ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் விவாதங்களில் இந்திய பெண்கள் போதுமான அளவுக்கு நாப்கின்களை பயன்படுத்துவதில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. மறுபுறம் சிலர் நாப்கின்கள் ஆடம்பரமானது, அவை ஒருவரின் தனிப்பட்ட தேர்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இரு தரப்பினரும் விவரங்களையும் புள்ளிவிவரங்களையும் தமது கருத்துக்கு ஆதரவாக முன்வைக்கின்றனர்.

ஹுயிண்ட் (The Quint) இணையபத்திரிக்கையின் இந்த காணொளி இந்திய பெண்களது மாதவிடாய் தூய்மை பழக்கங்கள் எவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை நோய்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருக்கும் சில பெண்களின் குரலின் மூலம் அறியத்தருகிறது.

***

வீடியோவின் தமிழாக்கம்:

நாப்கின்களுக்கு வரிவிதிப்பது நல்லறிவுள்ள செயலல்ல!
ஜி.எஸ்.டி குழு 66 உற்பத்தி பொருட்களுக்கு வரி குறைப்பு செய்துள்ளது. ஆனால் நாப்கின்களுக்கு அல்ல.
ஆணுறைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் நாப்கின்களுக்கு இல்லை.
பெண்கள் தங்கள் ரத்ததிற்கு வரி ஏன் செலுத்த வேண்டும்?

கவிதா, வயது – 47
மாதவிடாயின் போது நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள்?
நாப்கின் பட்டைகளை பயன்படுத்துகிறேன்.
அவற்றால் நீங்கள் வசதியாக உணர்கிறீர்களா?
ம்.
நீங்கள் ஆரம்பத்திலிருந்தே நாப்கின் பட்டைகளை பயன்படுத்துகிறீர்களா?
இல்லை.

கிரண் தேவி, வயது – 31
அவை விலையுயர்ந்தவை அதனால் பணத்தை சேமிக்க அவற்றை மொத்தமாக வாங்கிக்கொள்வோம்.

அனிதா நாயர், வயது – 17

முதலிரண்டு மாதங்களில் நான் துணிகளை பயன்படுத்த ஆரம்பித்தேன்.
அதன் பின்னர் நாப்கின்களை பயன்படுத்துகிறேன்.
நாப்கின்கள் துணியை விட சிறந்தவை என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் 12% மட்டுமே உள்ள நாப்கின்களைப் பயன்படுத்தும் பெண்களில் அனிதாவும் ஒருவர். மீதமுள்ள 88% பேரின் நிலை என்ன?

பீபி சலேஹா, வயது – 48
எனக்கு மாதவிடாய் துவங்கிய நாளில் இருந்து நான் துணிகளையே பயன்படுத்துகிறேன். ஏழையான என்னால், நாப்கின்களை வாங்க முடியாது.

அவர்கள், துணி, சாம்பல், உலர்ந்த இலைகள் மற்றும் மண்ணைக் கூட பயன்படுத்துகின்றனர்.

நீங்கள் துணிக்கும் நாப்கினுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்கிறீர்களா?
துணியைப் பயன்படுத்தும் போது எனக்கு முதுகு வலி இருந்தது. நாப்கின் பயன்படுத்தும் போது அது இல்லை.

பலர் சுகாதாரமானது என்று நாப்கின்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். சிலர் அக்கருத்தில் மாறுபடுகிறார்கள்.

பூனம் குப்தா, வயது 23
நான் இப்போது துணிகளை பயன்படுத்துகிறேன்.
கருத்தரிப்பதற்கு முன்னால் நான் நாப்கின்களை பயன்படுத்தினேன்.
கருத்தரித்த பின் நாப்கின் பயன்படுத்துவது குத்த ஆரம்பித்தது. அதனால் இப்போது துணியை பயன்படுத்துகிறேன்.
உங்களுக்கு குத்துவதைப் பற்றி எந்த மருத்துவரிடமாவது கலந்தாலோசித்தீர்களா?
இல்லை, நான் எந்த மருத்துவரையும் பார்க்கவில்லை.

மேலும் சிலருக்கோ சுகாதாரம் என்பதே ஆடம்பரம் தான்

மாலா தேவி, வயது 43
குழந்தை பெற்றுக்கொள்ளும் போது எனக்கு சிசேரியன் செய்யப்பட்டது. டாக்டரும் செவிலியர்களும் எனக்கு நாப்கின் பயன்படுத்துவதை அறிமுகப்படுத்தி பரிந்துரைத்தனர்.
நீங்கள் அந்தப் பரிந்துரையை ஏற்கவில்லையா?
டாக்டர் அதற்கு பணம் கொடுப்பாரா? அல்லது நீங்கள் அதற்கு பணம் கொடுப்பீர்களா?
நான் என்னுடைய சொந்த தர்க்கத்தை பின்பற்ற வேண்டும்.
இங்கு எங்களுக்கு உணவுக்கே பணமில்லை. நீங்கள் எங்களை நாப்கின் வாங்கச் சொல்கிறீர்கள்.

வரிவிலக்கு அவர்களுக்கு சிறந்த மாதவிடாய் சுகாதாரத்தை அளிக்குமா?

பூனம் குப்தா
உள்ளூர் கடைகளில் நாப்கின்களின் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு விலை மலிவான ஒன்று கிடைக்க வேண்டும். சில கட்டுகளின் விலை ரூ.40, சிலவற்றின் விலை ரூ.50 விலை. இத்தனைக்கும் அதில் 7 எண்ணிக்கை மட்டுமே இருக்கும். நீண்ட மாதவிடாய் காலம் கொண்டவர்களால் அதை வாங்க முடியாது.

கிரண் தேவி
நாப்கின்களின் விலை குறைந்தால், மேலும் பல பெண்கள் அவற்றை பயன்படுத்த துவங்குவார்கள். அதன் பின் சுகாதாரமற்ற மாதவிடாய் பழக்கங்கங்களால் ஏற்படும் நோய்களும் குறையும்.

விலை மலிவானால் நீங்கள் நாப்கின்களை பயன்படுத்துவீர்களா?

மாலா தேவி
ஆம், மலிவானால் நான் பயன்படுத்த முயற்சிப்பேன். என்ன விலை இருந்தால் உங்களால் வாங்க முடியும்? ஒரு கட்டின் விலை ரூ.10 அல்லது ரூ.20 இருக்கலாம்.

பணம் மட்டுமே பிரச்சினையா?

கிரண் தேவி
படித்தவர்களுக்கு மட்டும் தான் நாப்கின் என்றால் என்னவென்று தெரியும். என் தாய், மூத்த சகோதரியைப் போல் வயதானவர்களுக்கு தெரியவில்லை. எங்கள் கிராமத்தில் எங்கள் அண்டை வீட்டார்களுக்கும் தெரியாது. குடும்பத்திலுள்ள ஆண்களை ஏற்றுக்கொள்ள செய்வதும் கடினம். நாங்கள் அவர்களை நாப்கின்கள் வாங்கிவரச் சொன்னால், வீட்டிலுள்ள ஏதாவதொன்றை பயன்படுத்திக் கொள் என்பார்கள்
அவர்கள் வாங்கிவர மாட்டார்கள். எதற்கு வீண் செலவு?

இளந்தலைமுறையினர் இந்த இடைவெளியை இட்டு நிறப்புகிறார்கள்.

அனிதா நாயர்
சில நேரம் என் தாயை நாப்கின்களை பயன்படுத்த சொல்லிம் போது அவர் முயற்சிக்கிறார். ஆனால் அவர் பெரும்பாலும் துணியையே பயன்படுத்துகிறார்.

கவிதா
பத்தாண்டுகள் முன்னரே நாப்கின்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் பயன்படுத்தவில்லை.
ஏன்?
எப்படி பயன்படுத்துவதென்று எனக்கு புரியவில்லை. பின்னர் எனது மகள் வளர்ந்த பின் அவள் எனக்கு அதை விளக்கினாள். அவள் அவளுக்கான அடிப்படை தேவையாக இதை தொடர்ந்து வாங்க ஆரம்பித்த பின் நானும் உணர்ந்து கொண்டேன்.

நன்றி : the quint

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. சமுக ஊடகங்களில் விவாதிக்கபட்ட இந்த விசயத்தை வினவு ரொம்ப லேட்டாக தான் கவனத்தில் கொண்டு உள்ளது… ஆனாலும் பரவாயில்லை….உண்மையை கூறுவது என்றால் இது தப்பு இல்லை…மோடி வெளிநாட்டு சுற்ற ஆகும் செலவுக்கு இந்த 12% வரிவிதிப்பு பயன்படும் என்ற நிலையில் அதில் ஏதும் தவறு இல்லை…. தேவை பட்டால் 20% மாக நப்கின் வரியை உயர்த்துவோம்…நடுத்தர வர்கத்தை முடிந்த வரையில் பொருளாதார ரீதியில் தாக்குவோம்….

    இப்படிக்கு

    மோடியின் சகி மணிகண்டன், RRS prepaid nagar, பிஜேபிபுறம், ஹிந்துத்துவா மாவட்டம், ஹிந்தியா..

  2. பிஜேபி rss சங்கிகள் அடுத்த கதையை விடுகிறார்கள்…. நாப்கின் பயன்படுத்துவது சுற்றுசூழலுக்கு கேடாம்…. அதனால்நப்கின் பயன்பாட்டை குறைக்க வரியை அதிகரித்து விட்டார்களாம்…. ஜெய் ஸ்ரீ ராம்…. ஜெய் அனுமன்….. ஜெய் மோடி !வேத காலத்தை நோக்கி நம்மை எல்லாம் அழைத்து செல்கிறார் மோடி….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க