Friday, September 18, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் தவிச்ச வாயிக்கி தண்ணி குடுண்ணு யாருகிட்டயும் கேக்க முடியல

தவிச்ச வாயிக்கி தண்ணி குடுண்ணு யாருகிட்டயும் கேக்க முடியல

-

மிழகத்தில் விவசாயம் முதல் குடிநீர் வரை வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு. சென்னை வடபழனி கோவிலில் மக்களைச் சந்தித்து குடிநீர் அரசியல், மெரினா கோக் பெப்சி எதிர்ப்பு குறித்து பேசிய போது மழை வெள்ளமாக பொங்கித் தீர்த்தனர்.

இந்த வறட்சி என்பது தானாக உருவான இயற்கை நிகழ்வு இல்லை என்பதை பல பேர் விளக்கவும் செய்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு கோக் பெப்சிக்கான எதிர்ப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவு தமிழகத்தில் வலுவடைந்திருக்கிறது.

சென்னையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர்.

“ஒரு கேனு தண்ணீ கொறஞ்சது 40 ரூவாங்க ரெண்டு புள்ளைங்க கொண்ட குடும்பத்துக்கு ஒரு கேனு தண்ணி பத்தமாட்டேங்குது. மாசம் 20,000 சம்பாதிக்கிறேன் கிட்டத்தட்ட தண்ணிக்கே 1,500 செலவழிக்கிறேன். பொறவு வாடக, ஸ்கூல் பீசு, சாப்பாடு நல்லது கெட்டது மனுசனுக்கு எங்கிட்டு நிம்மதி இருக்கும் சொல்லுங்க. அரசாங்கம் நமக்கு நல்ல குடிதண்ணிய குடுக்காம மெத்தனமா இருக்கக் காரணமே தனியாரு வித்துக்கட்டும் நமக்கு கமிசனா ஒரு தொக தருவான் அப்படிங்கறதுதான்.“

சென்னையில் வாழும் இல்லத்தரசி

“நுங்கம்பாக்கத்துல 12,000 ரூபாய் வாடகையில குடியிருக்கேன். பாத்தரம் கழுவும் போது ரெண்டு சின்ன டப்புல தண்ணி வச்சுட்டு வெளக்குன பாத்தரத்த முக்கி முக்கி எடுக்குறேன். ஏன்னா குழாயில தண்ணி வரல. பாத்தரம் கழுவுன தண்ணியையும் பத்தரபடுத்தி பாத்ரூமுக்கு யூஸ்பன்றேன். வாட்டர் பில்டர் போட்டுருந்தும் கேன் தண்ணி வாங்குறேன். பன்னாண்டியிரம் வாடக குடுக்கிறேனே தண்ணி வரமாட்டேங்குதேன்னு ஓனருட்ட கேக்க முடியல. அவரு என்ன செய்வாரு பாவம் நெலம நமக்கே தெரியுது.

ஆத்துல தண்ணி வராம வெவசாயம் இல்லாம சனங்க சாகுது. சொந்த நெலமிருந்தும் தருசா கெடக்கறதால எங்க மாமா ஒருத்தரு வாச்சுமேனு வேலையாவது பாத்து தான்னு திருச்சியில இருந்து நெதமும் போன் பன்றாரு. அந்த நெலமையில இருக்கு தண்ணி பஞ்சம். தாமிரபரணி ஆத்துத் தண்ணிய கோக்குக்காரன் எடுத்துக்கலான்னு கோர்ட்டுல தீர்ப்பு சொல்றான்னா அவன செருப்பாலடிச்சா என்ன. குடிக்க தண்ணியில்ல குண்டி கழுவ பன்னீரு தேவையா?

வேலையில்லா பட்டதாரி இளைஞன்

“நான் இதுவரைக்கும் கோக்கு பெப்சியெல்லாம் குடிச்சதில்ல. நம்ம தண்ணி பிரச்சனைக்கி அவங்கள ஒரு காரணமா நெனச்சதுமில்ல. ஜல்லிக்கட்டுக்கு பிறகு பயங்கரமா எதுக்குறேன்.

நான் பட்டுக்கோட்டை பக்கத்துல உள்ள கிராமத்த சேந்தவன். ரெண்டு ஏக்கர் நிலத்துல எங்க குடும்பமே பாடுபட்டு பத்தாததுக்கு கூலிக்கி வேலபாத்து வல்லம் பெரியார் கல்லூரியில பி.இ படிக்க வச்சாங்க. 2012-ல படிப்ப முடிச்சேன். வேல தேடுற தேடுறன் தேடிட்டே இருக்கேன். சென்னையில தங்கி வேலை தேடவும் அரை வயித்துக்கு சாப்பிடவும் கெடைக்கிற கூலி வேலைக்கி போறேன். எங்க போறது என்ன செய்றதுன்னு தெரியாம இன்னைக்கி இங்க வந்து குந்திருக்கேன். அப்பா ஊருலேருந்து போன் பண்றாரு ஆத்துல தண்ணி வராம வயல்ல ஒரு பயிரு கூட ஊனல. எப்படியாவது செலவுக்கு கொஞ்சம் பணம் அனுப்புடான்னு. கையாலாகாதவனா இருக்கேன்”

குரோம்பேட்டையை சேர்ந்த பள்ளி மாணவி

“எங்க வீட்டுல குழாய் தண்ணிதான் குடிக்குறோம். எந்த நேரத்துல சாக்கட வாசன வரும்னே சொல்ல முடியாது. அத விட்ட வேற வழியும் கெடையாது.. எங்க ஸ்கூல் டாய்லெட்ல தண்ணியே கெடையாது. (அரசு பள்ளி) நான் 12 படிக்கிறேன் பீரியடு நாள்ல கூட அப்படியே வீட்டுக்குதான் வருவேன். விவசாயிங்க டெல்லியில போராட்டம் பன்றாத நியூசுல பாத்தேன் பாவமா இருக்கு. நமக்கு தேவையான தண்ணி பிரச்சனைக்கு வழி செய்ய முடியாத அரசாங்கம் கோக்கு தயாரிக்கவும் விக்கவும் தடை செல்ல முடியாதுங்குது.

மாதிரிப் படம்

தாமிரபரணி ஆத்துல தண்ணி எடுத்துக்கலான்னு அரசு லைசன்சு குடுத்துருக்கும் போது எடுக்க கூடாதுன்னு சொல்ற உரிமையும் அவங்களுக்கு இருக்குமில்ல. விவசாயிங்க தண்ணி இல்லாம கஷ்டப்படும் போது கோக்குக்காறன் தண்ணிய எடுத்துக்கலாம்னு சொன்னா அரசுக்கு நம்மள பத்தின அக்கற இல்லன்னுதானே அர்த்தம். நாங்க பெரியவங்களா ஆகும் போது தண்ணிப் பிரச்சனை எப்படி இருக்குன்னு நெனச்சு பாத்தேலே பயமாருக்கு”

தள்ளுவண்டியில் கூழ் விற்பவர். 

எந்த நாட்டுலங்க சோறு போட்ற விவசாயத்த பத்தி எந்த கவலை இல்லாம இருங்காங்க. தண்ணியில்ல… தண்ணியில்ல… வறட்சி வறட்சின்னு கத்துறது காதுல கேக்குதா எவனுக்காச்சும்? என்னடா இப்புடி பேசுறானேன்னு நெனைக்காதிங்க.

மாதிரிப் படம்

எனக்கு 50 வயசாகுது. ஆத்துல ஓடுற தண்ணி ஓட்டத்துல, வத்திப் போன கெணத்துல கூட ஊத்துக் கண்ணு தொறந்துடும். இன்னைக்கி ஊறே வறண்டு கெடக்கு. கிராமத்துல சனங்க குடிதண்ணிக்கி கொடத்த தூக்கிட்டு அலையிரத பாக்கும் போது வேதனையாருக்குங்க. இப்படி ஒரு நெலம வந்து ரெண்டு மூணு தலமொற ஆகலங்க. எங்கண்ணு பாத்துருக்க உருவானதுதான். அவ்வளவு ஏங்க தவிச்ச வாயிக்கி தண்ணி குடுண்ணு பக்கத்துல இருக்கவன கேக்க முடியல. காசு போட்டு வாங்குன தண்ணிய கேக்கறதான்னு நமக்கு பயம். தண்ணிய கேட்டு இல்லன்னு சொல்றதான்னு சங்கடப்பட்டு பைக்குள்ள மறச்சு வைக்கிறான். இப்படி ஒரு நெலம யாரால வந்துச்சு. பாலைவனம் போல வறண்ட பூமியாங்க இது தண்ணி பஞ்சம் வர? எல்லா வளமும் கொட்டி கெடக்குற நாடுங்க. குட்டிச்சுவரா ஆக்கிட்டானுங்க பாவிங்க.”

சென்னையில் ஆட்டோ மொபைல் கடை வைத்திருப்பவர்.

“எங்க வீட்டுல போர் தண்ணி தாங்க குடிக்கிறோம். கோக்கு பெப்சியெல்லாம் குடிக்கிற பழக்கமில்லைங்க. நான் பாக்குறது ஆட்டோ மொபைல் தொழில். உடம்பு வலிக்க வேல பாத்துட்டு ஒரு டீ குடிச்சா அடுத்த வேலை பாக்க சுறுசுறுப்பா இருக்கும். கூல்டிரிங்சல்லாம் மெழுக்கா வேலை செஞ்சுட்டு ஒதட்டுல ருசி தெரிய குடிக்கிறது. நமக்கு அதெல்லாம் ஒத்து வராது.

ஆரம்பத்துல புடிக்காமதான் குடிக்காம இருந்தேன். ஜல்லிக்கட்டுக்கு பிறகு நம்ம நாட்டுலேயே இவனுங்க இருக்க கூடாதுங்கறதுல உறுதியா இருக்கேன்.  நமக்கு விவசாயத்துக்கே தண்ணி இல்ல, குடிக்க தண்ணியில்ல, இவனுங்க என்ன இங்க ராஜியம் பண்றது. அதுக்காக கோக்கு முதலாளிய தேடி போயி எதுவும் பண்ண முடியாது. அதுக்கு அனுமதி கொடுத்த அரசதான் நாம கேக்கனும். இங்க அடிக்கிற அடியில அங்க நெறி கட்டணும்.”

சென்னையில் ஐ டி வேலை செய்யும் ஊழியர்.

நான் ஏ.டி.எம்.கே –ங்க அம்மா செத்ததுலேருந்து மனசு ஒடிஞ்சு போச்சுங்க. அவவனும் பொறுக்கித் திங்க என்னாமா நாடகம் நடத்துறானுங்க. வெறுத்துப் போயிட்டேன் இப்ப நான் எந்த கட்சியும் இல்ல. ஜல்லிக்கட்டு போராட்டத்தப் பாத்த பிறகு கட்சியே தேவை இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்.

அதுல ஒரு விசயத்த கவனிச்சிங்களா ஜல்லிக்கட்டு போராட்டத்துல கோக்கு பெப்சிக்கு எதிர்ப்பு கெளம்புன ஒடனே ட்ரம்பு (டொனால்ட் ட்ரம்பு) மோடிக்கு போன போட்டு வடிவேலு மாறி “என்னடா நடக்குது அங்க” ஏதோ மாடு புடி மேட்டருன்னு. பாத்தா நம்ம பாட்டில போட்டு ஒடைக்கிறான், கீழ ஊத்துறான் பாட்லுக்கு மாலை போட்டு சங்கூதுறான் இதெல்லாம் ஆவாதுப்பு மாட்ட ஒடனே அவுத்துடுன்னா அதுக்கு பிறகுதான் மோடி அவுத்துட்டார். இதுலேருந்து என்ன தெரியிது தும்ப விட்டுட்டு வால புடிக்க கூடாது. நாம விக்க மாட்டோன்னு சொல்றத விட வெளிநாட்டுக்காரன் இனி இங்க இருக்க கூடாதுன்னு சொல்லனும்.

ஐ.டி-யில இருந்துட்டு என்னடா இப்படி பேசுறேனேன்னு நெனைக்கிறீங்க அதானே! அவன் குடுக்குறத விட புடுங்குறதுதாங்க அதிகம். யோசிச்சு பாருங்க பத்து பேருக்கு வேலை கொடுக்குறா போல இருக்கும். நூறு பேரு உயிரு போக காரணமா இருப்பான். நாளைக்கே அவன் மூட்ட கட்டிட்டா நான் சொன்னது நடக்கும். நான் கை நெறையா சம்பளம் வாங்குறேன் இல்லேங்கல. ஆனா எங்க அப்பா விவசாயம் செய்ய முடியாம நெலத்த தரிசா போட்டுருக்காரு. இப்ப நெலமைக்கி நான் ஒரு கிராமத்தானா இருக்கதாங்க ஆசப்படுறேன்.”

வினவு செய்தியாளர்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க