Tuesday, May 24, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மணலில் சொட்டுவது எங்கள் ரத்தம் - வெள்ளாறு பகுதியிலிருந்து நேரடி ரிப்போர்ட்

மணலில் சொட்டுவது எங்கள் ரத்தம் – வெள்ளாறு பகுதியிலிருந்து நேரடி ரிப்போர்ட்

-

டலூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் மதகளிர்மாணிக்கம். விருத்தாசலத்தில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செல்லும் வழியெங்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையும் நம்முடன் பயணிக்கும். சில்லென்ற காற்று முகத்தை வருடிக் கொடுத்தவாரே எதிர்கொள்ளும். தென்னை மரங்கள் சூழ வயல்களை ஒட்டியே வீடுகளைப் பார்த்தால் ஒரு  கணம் கேரளாவா என்று தோன்றும். வீடுகளை சுற்றியே நெல் வயல்களையும் காணலாம். வயல்களை சுற்றி நூற்றுக்கணக்கான மயில்கள் தோகை விரித்தாடுவதை நிச்சயம் பார்க்க இயலும். எப்போதும் வயல்களில் மக்கள் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். இக்கிராமத்தின் பசுமை போர்த்திய அழகுக்கு முக்கிய காரணம் வெள்ளாறு.

சேலத்தில் சேர்வராயன் மலைத்தொடரில் தோன்றும் வெள்ளாறு, பரங்கிபேட்டையில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வெள்ளாற்றின் வலது கரையோரம் ஆனந்தகுடி, முத்துகிருஷ்ணாபுரம், ஆத்தூர், எசனுர், மதளிர்மாணிக்கம், குணமங்கலம், பூண்டி, கள்ளிப்பாடி, புத்தூர், இனமங்கலம், அம்புஜவல்லிப்பேட்டை, கூடலையாத்தூர், காவாலக்குடி, சோலைவழி, நெடுஞ்சேரி ஆகிய கிராமங்களும், இடது கரையோரம் கார்மாங்குடி, வள்ளியம், சக்கரமங்கலம், கீரனூர், மருங்கூர், காவனூர், கீழப்பாளூர், பவழங்குடி, கீரமங்கலம்,மேலப்பாலையூர்,நேமம், உள்ளிட்ட கிராமங்களும் உள்ளது. அனைத்து கிராமங்களுமே பசுமையாகத் தான் இருக்கின்றன. இந்த வெள்ளாற்றை நம்பி சுமார் 7000 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்து வருகிறார்கள்.

நெல், கரும்பு போன்றவையும், சாமந்தி, குண்டுமல்லி, சம்பங்கி, கோழி கொண்டை, பட்டன் ரோஸ் ஆகிய பூ வகைகளையும், வெண்டை, கத்தரி, வாழை காய்வகைகள் என அனைத்து வகை பயிர்களும் இங்கு பயிரிடப்படுகின்றன. எந்தப் பயிர் வைத்தாலும் செழித்து வளரும் என்பதே இந்த மண்ணின் சிறப்பு. எந்த ஆறு இந்த வளமான விவசாயத்திற்கு வித்திட்டதோ அந்த ஆற்றை சிதைத்து விவசாயத்தையும் சீரழித்து வருகிறது இந்த அரசு.

வெள்ளாற்றில் கார்மாங்குடி மணல் குவாரியில் மணல் எடுத்த பிறகு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால், “மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்” மற்றும் கிராம மக்கள் போராட்டத்தின் விளைவாக அந்த குவாரி மூடப்பட்டது. தற்பொழுது கொஞ்ச நஞ்சம் இருக்கும் விவசாயத்தையும் அடியோடு அழிக்க அதே ஆற்றில் மதகளிர்மாணிக்கம் என்ற கிராமத்தில் குவாரி அமைக்க அனுமதி கொடுத்துள்ளது எடப்பாடி அரசு. தங்களின் வாழ்வை அழிக்கும் மணற் குவாரி வேண்டாம் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள் மதகளிர்மாணிக்கத்தை சுற்றியுள்ள கிராம மக்கள்.

மணல் குவாரியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

இந்த போராட்டத்தில் முன்னணியாக உள்ள தமிழரசன், “19.05.2017 அன்று எங்கள் கிராமத்தில் ஆற்றை சர்வே செய்ய வந்தார்கள். மக்கள் நாங்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தவுடன் நான்கு கல்தூண்களை மட்டும் நட்டு விட்டு சென்று விட்டனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். அதன் பிறகு மீண்டும் 02.06.2017 அன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மண் வெட்டும் இயந்திரம், நான்கு லாரிகளுடன் வந்ததால் நாங்கள் குவாரியை முற்றுகையிட்டு போராடினோம்.

ஏற்கனவே கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து கூடலையாத்தூர் வரைக்கும் 2001 – 2015 காலகட்டத்தில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும், சேத்தியாத்தோப்பு முதல் பரங்கிப்பேட்டை வரை சுமார் 20 கிலோ மீட்டருக்கும் மணல் கொள்ளையடித்து விட்டார்கள். 3 அடி தான் அள்ள வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி 30 அடி ஆழம் வரை அள்ளியுள்ளார்கள். இரண்டு யூனிட் வரை தான் லாரிக்கு பெர்மிட் வாங்குகிறார்கள். ஆனால் ஆறு யூனிட் வரை அள்ளுகிறார்கள். ஆற்றின் கரையோரம் மணல் அள்ள கூடாது என்ற விதிமுறையை மீறியதன் விளைவு கரையோரம் உள்ள விவசாய நிலங்களளை அறுத்துச் சென்று விட்டது.

விவசாயிகள் புகார் கொடுத்த பிறகு விவசாயிகளின் பட்டா நிலத்தில் தடுப்பணையை கட்டியுள்ளார்கள். மணல் இருக்கும் பொழுது 30 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 300 அடிக்கும் கீழே சென்று விட்டது. இதனால் வெள்ளாற்று கரையோரம் உள்ள 35 கிராமங்களில் 2,450 ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் மூடிவிட்டனர். “விவசாயத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தது போக இப்பொழுது குடிநீருக்கு அலைய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இன்னும் மிச்ச மீதி மணல் இருக்கும் இடம் எங்கள் ஊர் தான். அதனையும் அள்ளிவிட்டு எங்கள் வாழ்வை சூறையாட துடிக்கிறார்கள்”, என்கிறார்.

“சார், ஆத்துல மணல் அள்ளுறதுக்கு முன்னாடி மூணு போகம் பயிர் வச்சோம். இப்ப ரெண்டு மூணு வருசமா கரம்பா தான் கெடக்கு. தண்ணியே இல்ல சார். எங்க போரை பாருங்க. இன்னும் மோட்டார் கூட கெணத்துல தான் இருக்க. சர்விஸ் எல்லாம் இருக்கு. ஆனாலும் எங்களால பயிர் வக்க முடியல. இதை எல்லாம் எப்படி சரி செய்றதுன்னே தெரியல. புதுசா போர் போடணும்னா லட்சக்கணகுல ஆகும். அவ்ளோ பணத்துக்கு எங்க போறது” என்று கேட்கிறார் விவசாயி கருணாமூர்த்தி.

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு வலுவாக இருந்ததால் 11.06.2017 அன்று எந்த தகவலும் தெரிவிக்காமல் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் போலிசை வைத்து மிரட்டினார்கள். “மணலை அள்ளியே தீருவோம், மணலை அள்ளினால் தான் தண்ணீர் இருக்கும்” என்று பேசுகிறார் தாசில்தார். மணல் அள்ளுவதற்கான அரசு ஆவணங்களை கேட்டால் “ மழையில் நனைந்து விட்டது” என்கிறார்கள் அதிகாரிகள். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லாமல் நாங்கள் திரும்பி விட்டோம்.

12-ம் தேதி 500 -க்கும் மேற்பட்ட லாரிகள் ஆற்றில் இருந்தது. ஆற்றின் இரு கரைகளிலும் 400 க்கு மேற்பட்ட போலிசை நிறுத்தி யாரும் ஆற்றின் உள்ளே செல்ல முடியாதபடி மிரட்டினார்கள். உளவுத்துறை தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்துள்ளனர். பதினைந்து நாள் சிறை, ஒரு மாதம் சிறை என்று ஒவ்வொரு நாளும் உளவியல் ரீதியாக மிரட்டியுள்ளார்கள். சாலையில் நடந்து சென்றவர்களை கைது செய்திருக்கின்றனர். போலிசின் இந்த மிரட்டலை எல்லாம் மீறித்தான் வயலுக்குள் புகுந்து மணல் குவாரிக்கு சென்றிருக்கிறார்கள் கிராம மக்கள்.

கீரனூர், வள்ளியம், சக்கரைமங்கலம், கார்மாங்குடி கிராம மக்கள், பெண்கள் யாரும் ஆற்றினுள் வந்து விடாதபடி போலிசு விரட்டியடித்தார்கள். இது அரசு குவாரி தடுத்தால் கைது செய்வோம் என்று நேரடியாக சிதம்பரம் ஆர்.டி.ஒ மிரட்டியிருக்கிறார். இன்று வரை மதகளிர்மாணிக்கத்தில் போலிசு குவிக்கப்பட்டு மக்கள் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 250 பேரை கைது செய்து வேனில் ஏற்றியது போலிசு. கைது செய்து சென்ற வேனை முற்றுகையிட்ட எங்களை எல்லாம் பெண்கள் என்று கூட பார்க்காமல் தரதர வென்று இழுத்துச் சென்ற ஆண் போலிசு, “அரசு மணல் குவாரியையே நீங்க தடுப்பிங்களா? இன்னா திமிர் இருந்தா அரசாங்க ரோட்டுல வண்டிய போக விடாம தடுப்பிங்க”னு அடித்ததாக சொல்கிறார்கள் கிராமத்து பெண்கள்.

“வயலுக்கு செல்லும்போது அடித்தார்கள். நான்கு பேருக்கு மேல் கூடி நின்றால் துரத்தினார்கள். காலை கடன் முடிக்க கூட எங்களால் செல்ல முடியவில்லை. 24 மணி நேரமும் நாங்கள் போலிசின் கண்காணிப்பில் தான் இருந்தோம். ஒரு அகதியைப் போல சொந்த கிராமத்தில் நாங்கள் நடத்தப்பட்டோம்” என்கிறார் போராட்டத்தில் கைதான ஜான்சன் என்ற இளைஞர்.

ஜான்சன்

போராட்டத்தை முன்னின்று நடத்திய கிராம இளைஞர்கள் 6 பேரை காவல் நிலையத்தில் வைத்து “மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜு உடன் செல்லாதீர்கள். அவர்கள் தீவிரவாதத்தை பரப்புகிறார்கள். உங்களை சிறையில் போட்டுவிடுவோம்”, என்கிறார் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் செல்வம். இரவு பன்னிரெண்டு மணிக்கு தான் “மும்முனை இணைப்பு மின்சாரம்” வரும். அதற்காக வயலுக்கு சென்ற விவசாயிகள் நான்கு பேரை கடுமையாக தாக்கியதோடு, “ஊருக்குள் புகுந்த காட்டு யானை மக்களை மிரட்டுவதைப் போல், பயிற்சி எஸ்.ஐ ரங்கராஜன் எங்களை மிரட்டினார்” என்று அப்பகுதி இளைஞர்கள் கூறுகிறார்கள்.

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

மறுநாள் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் தாசில்தாரிடம் “ போலிசு எங்களை மிரட்டுகிறது” என்று புகார் கூறினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை”. 14-ம் தேதி அனைத்து கிராம மக்களும் சேர்ந்து ரேசன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினோம். ஆனால் அட்டையை வாங்க மறுத்து விட்டார் தாசில்தார். 15 -ம் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், 16 -ம் தேதி “வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்” சார்பாக ஆர்ப்பாட்டம் என்று தொடர்ந்து போராடி வருகிறோம்.

மணல் லாரிகளை மக்கள் ஊருக்குள் விடாததால் ஆற்றுக்குள் பாதை அமைக்கும் மணல் மாஃபியாக்கள்

மணல் லாரிகள் ஊருக்குள் வரவிடாமல் நாங்கள் தடுப்பதால் ஆற்றுக்குள்ளேயே பாதை அமைக்கிறார்கள். எம்.பி அருண்மொழி தேவனிடமும், எங்க தொகுதி எம்.எல்.ஏ முருகுமாறனிடமும் குவாரியை மூடச் சொன்னோம். அதற்கு குவாரி இருக்கும், நீங்க கிராமத்துல இருந்தா இருங்க… இல்லனா கிராமத்த காலி பண்ணுங்க” என்கிறார்கள். எங்களின் வாழ்வாதாரத்தையே அழிக்க நினைக்கும் இந்த அரசு எங்களுக்கு எதற்கு” என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

இது தான் எங்களுக்கு மெரினா -கிராம மக்கள்

பரந்து விரிந்த மணற்பரப்பை காட்டி “சென்னைக்கு மெரீனா’னா எங்களுக்கு இந்த ஆறு தான் சார் மெரீனா” இங்கு தான் நாங்கள் வளர்ந்தோம். இதனை வெறும் ஆறாக நாங்கள் பார்க்கவில்லை. “இது தான் எங்களின் வாழ்வாதாரம்”. இதை எப்படி சார் நாங்க விட்டுக்கொடுப்போம் மணிகண்டன் என்ற இளைஞர்.

பி.எஸ்.சி, பி.எட் முடித்துள்ள வெற்றிவேல், “நான் ஏர்டெல் டிஸ்டிபியுட்டராக வேலை செய்தேன். அந்த வேலையை விட்டுவிட்டு விரும்பி வந்து விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இந்த வெள்ளாத்த நம்பித்தான் பயிர் செஞ்சிருக்கேன். இப்ப தண்ணி போர்ல விட்டுட்டா என்ன பண்றது? இது மணல் பகுதி சார். நார்மலா போர் போடுற செலவை விட கூடுதலா செலவாகும்.

வெற்றிவேல்

இப்ப முன்னூறு அடிக்கு கீழ தான் தண்ணி இருக்கு. நாம நானூறு அடி போர் போடணும்’னா ஒரு அடிக்கு ரூ.190 மேனிக்கு 400 அடிக்கு ரூ.76,000, போரை சுற்றி பேக்கிங் ஜல்லி கொட்டனும் அதுக்கு ஆறு யூனிட் 36000, 8 அங்குலம் பைப் ஒரு மீட்டர் 1840 x 133 மீட்டர் ரூ.2,44,720., மட்டு ஜல்லி ரூ.6000, 20hp மோட்டார் ரூ.70,000, கருப்பு ஓஸ் பைப் ரூ.1,52,000, கேபிள் வயர் 266 மீட்டர் ரூ.26,600 மொத்தம் 6,11,320 ரூபாய் செலவாகும். “இந்த மணலை வாரி விட்டால் புதுசா தான் நாங்க போர் போடனும். அதுக்கு இதவிட கூடுதல் ஆழம் தான் போடணும். அந்த பணத்துக்கு எங்க போறது, அரசாங்கம் லோனும் தராது” நான் என்ன பண்றது? என்ன விட்டுடுங்க, நான் படிச்சிருக்கேன் வேற வேலை பார்த்தாவது பொழச்சிக்குவேன்.

படிக்காத விவசாயிங்க என்ன பண்ணுவாங்க? விவசாயிகள் ஏன் தற்கொலை பண்ணிகிறாங்கன்னு இப்ப தான் சார் தெரியுது. “இயற்கை எங்களை பாழ்படுத்தியதுன்னா, அதுக்கும் மேல இந்த அரசு இருக்கு சார்.” என்கிறார்.

மணலை அள்ளும் போது சொட்டுவது நீர் அல்ல எங்கள் ரத்தம் கொதிக்கும் பெண்கள்

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான பெண்கள், “மணலை அள்ளும் பொழுது சொட்டுவது வெறும் தண்ணீர் இல்லை சார்…. அது எங்களோட ரத்தம். எங்களை புதைத்து விட்டு தான் இந்த மணலை அள்ள முடியும் என்கிறார்கள் பெண்கள். ஆற்றில் இறங்கினால் “காலை தட்டிவிட்டு தான் வெளியேற வேண்டும். இங்கு இருந்து ஒருபிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம்” என்கிறார்கள் கிராம இளைஞர்கள்.

மணல் கொள்ளையர்களால் சுரண்டப்பட்டு கட்டாந்தரையாகிய ஆற்றுப்படுகை

பயிற்களுக்காக பாலாய்ச் சுரக்கும் வெள்ளாற்றின் ஊற்றுகள்

விளைநிலங்கள் வரை மணலை அள்ளிவிட்டார்கள் கொள்ளையர்கள்

மணல் கொள்ளையர்கள் ஆற்றில் உருவாக்கியுள்ள சாலை

தங்களை வாழவைத்த வெள்ளாற்றையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் இந்த அரசை எதிர்த்து போராடினால் தான் முடியும் என்பதை வெள்ளாற்று கரையோர கிராம மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த கட்ட போராட்டத்திற்கும் தயாராகி வருகிறார்கள்.

செய்தி, படங்கள் : வினவு செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க