Thursday, June 30, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் சிறு தொழில்கள் மோடி அரசின் அடி மேல் அடி : அழிகிறது மும்பையின் தோல் தொழில் !

மோடி அரசின் அடி மேல் அடி : அழிகிறது மும்பையின் தோல் தொழில் !

-

“தாராவியில் உள்ள எங்களைப் போன்ற சிறு மற்றும் நடுத்தர தோல் தொழிலகங்களின் இருப்பையே இது மிகச் சிரமமாக்கி விடும்” என்று குறிப்பிடும் வஸீர் தமானி, “நாங்கள் வெறும் பத்து அல்லது இருபது சதவீத லாபம் வைத்து தொழில் செய்கிறோம். ஆனால், அரசாங்கம் எந்த அடிப்படையில் 28 சதவீதம் வரி விதிக்கிறது என்றே புரியவில்லை” என்கிறார்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது திருவாளர் மோடியால் பெற்றெடுக்கப்பட்ட ‘புதிய’ இந்தியாவால் புரட்டியெடுக்கப்பட்ட மும்பை தாராவியின் தோல் தொழில்கள், ஆறுமாதம் கழித்து சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப் படுத்தப்பட்ட போது மீண்டும் அழித்தொழிக்கப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. இதற்கிடையே ‘பசுநேசர்’களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையேயான கள்ள உறவில் பிறந்த இன்னொரு ‘புதிய’ இந்தியா ஏற்கனவே தோல் தொழில் துறையின் வயிற்றில் கத்தியைப் பாய்ச்சியது.

ஜூலை 1 -ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ஆடம்பரமானவையாக இனம் காணப்பட்டிருக்கும் தோல் பொருட்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மும்பை தாராவியில் மட்டும் சுமார் 4000 தோல் பொருள் உற்பத்தி மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன.

“தாராவியில் உள்ள எங்களைப் போன்ற சிறு மற்றும் நடுத்தர தோல் தொழிலகங்களின் இருப்பையே இது மிகச் சிரமமாக்கி விடும்” என்கிறார் வஸீர் தமானி

“இது வரை சுமார் 1000 ரூபாய்க்கு விற்று வந்த தோல் கைப்பைகளை இனி 1,280 ரூபாய்க்கோ அல்லது அதற்கும் கூடுதலான விலைக்கோ தான் விற்க வேண்டியிருக்கும்” என்கிறார் தமானி. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பரிசுகளாக வழங்கி வந்த சிறு சிறு தோல் பொருட்களுக்கு இனி மாற்று தேடுவார்கள் என்பது இப்பகுதி வணிகர்களின் அச்சமாக உள்ளது. “கார்ப்பரேட் கம்பெனிகளைப் பொருத்தவரை, தாம் பரிசுகளாக கொடுக்கும் பர்சுகள், காலணிகள், சிறு கைப்பைகள் போன்ற பொருட்களை குறைந்த விலைக்கே வாங்குவார்கள். இப்போது தோல் பொருட்கள் ஆடம்பரமானவையாக வகைப்படுத்தப்பட்டிருப்பதால் வேறு பொருட்களை பரிசுகளாக வழங்குவார்கள்” என்கிறார் தமானி.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக தாராவியின் தோல் தொழில்கள் அடைந்திருந்த சுமார் 50 சதவீத வீழ்ச்சியில் இருந்து நிமிராத நிலையில் தான் புதிய வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் இமேஜ் லெதர் கூட்ஸ் நிறுவனத்தின் முதலாளி சையது அலீம். மேலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கை பொதுவாக மக்களிடையே பண சுழற்சியை குறைத்திருப்பதன் விளைவால் ஏற்படும் தாக்கம் தனி. “மக்களின் வாங்கும் திறன் குறைந்து போன நிலையில் எங்களது பொருட்களின் விலைகள் அதிகரிக்க உள்ளதால், இத்தொழிலின் எதிர்காலம் அச்சமூட்டுவதாக உள்ளது” என்கிறார் அலீம்.

அசோக் ஜெய்ஸ்வால் (வலது)

கான்பூர், சென்னை மற்றும் கொல்கொத்தாவில் உள்ள தோல் பதனிடும் பட்டறைகளில் இருந்தே தாராவியின் தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்கள் வந்து சேர்கின்றன. “மாட்டுக்கறி தடை விவகாரத்திற்குப் பின் கால்நடைச் சந்தைகளுக்கு மாடு வரத்து குறைந்திருப்பதால், சிறு அளவில் தோல் பதனிடும் பட்டறைகள் வைத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்கிறார் குப்தா பெல்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அசோக் ஜெய்ஸ்வால்.

புதிதாக அமல்படுத்தப்பட்டிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரிவிதிப்பு முறையே சிக்கலாக இருப்பதால், கச்சாப் பொருட்களுக்கு கட்ட வேண்டிய வரி குறித்த தெளிவு பல சிறு உற்பத்தியாளர்களுக்கு இல்லை. “நான் பதனீட்டுப் பட்டறைகளில் இருந்து வாங்கிய பதப்படுத்தப்பட்ட தோலுக்கு முன்பு 5 சதவீத வாட் வரி செலுத்தினேன். இப்போது புதிய வரிவிதிப்பு முறையில் நான் 5 சதவீதம் கட்ட வேண்டுமா 12 சதம் கட்ட வேண்டுமா என்பது எங்களது ஆடிட்டருக்கே புரியவில்லை” என்கிறார் ஹீரா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஏக்நாத் மானே.

ஏக்நாத் மானே

புதிய வரிவிதிப்பு முறை கள்ளச்சந்தையையும் பதுக்கலையும் ஒழித்து விடும் என்றும், அது ஏழைகளுக்கு பலனளிக்கும் என்று சொல்லப்படுவதை ஏக்நாத் மானே நம்பவில்லை. மாறாக சிறு அளவிலான தொழிற் பட்டறைகளை இம்முறை கடுமையாக பாதிக்கும் என்கிறார். “பெரிய கம்பெனிகள் ஒட்டகங்களைப் போல, அவர்களிடம் கடினமான சூழலைச் சமாளிக்கும் அளவுக்கு கச்சாப் பொருட்களின் சேமிப்பு இருக்கும். சிறிய தொழிற் பட்டறைகள் இனி ஒழிந்து போக வேண்டியது தான்” என்கிறார் மானே.

கச்சாவான தோலுக்கும், பதப்படுத்தப்பட்ட தோலுக்கும் எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்கிற தெளிவு இல்லாத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 37 முறை வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்கிற விதிமுறை சிறு அளவில் தொழில் செய்கின்றவர்களை திகைப்படையச் செய்கிறது. ஒருபுறம், மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பது, இன்னொரு புறம் மாடு வெட்டுத் தடையின் காரணமாக கச்சாப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி, என தோல் பொருள் உற்பத்தித் துறை அழிவின் விளிம்பில் ஊசலாடி வரும் நிலையில், புதிய வரிவிதிப்பின் விளைவாக ஏற்படவுள்ள தோல் பொருட்களின் விலையேற்றம் இத்துறையை மொத்தமாக மரணக் குழியில் தள்ளி விட்டுள்ளது.

மொத்தத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளை மொத்தமாக அழித்தொழித்து விட்டு பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தரகு கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் உற்பத்தித் துறையை தாரைவார்ப்பதே மோடி அரசின் லட்சியமாக உள்ளது. இந்த லட்சியத்தின் விளைவாக வேலையிழப்புக்கு ஆளாகவிருக்கும் கோடிக்கணக்கான மக்களைப் பற்றியோ, இந்திய உற்பத்தித் துறை ஒழிந்து போவதைப் பற்றியோ திருவாளர் மோடிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லை.

படங்கள், செய்தி நன்றி: scroll.in

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க