Wednesday, January 22, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் விவசாயிகள் மாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல் - கொதித்தெழும் விவசாயிகள்

மாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல் – கொதித்தெழும் விவசாயிகள்

-

சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மாட்டு வியாபார்கள் சங்கப் பிரதிநிதிகள், தங்களது தொழிலில் ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளையும், தற்போது புதியதாக வெளியிடப்பட்டிருக்கும் மத்திய அரசின் மாடு விற்பனைக்கான ஒழுங்குமுறை அரசாணையைத் தொடர்ந்து தமிழகத்தில் இத்தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் குறித்துப் பேசியுள்ளனர். இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை “ரெட் பிக்ஸ்” என்ற “யூ-டியூப்” சேனல் பதிவேற்றியுள்ளது.

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மாட்டு வியாபாரிகளின் சங்கப் பிரதிநிதிகள், மத்திய அரசு வெளியிட்டுள்ள மாடு விற்பனை ஒழுங்குமுறை அரசாணையை உபயோகித்து தமிழகத்தில் இந்துமுன்னணி, பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள் மாட்டு வியாபாரிகளிடம் மிரட்டி பணம் பறிக்கிறார்கள். என்பதையும் இத்தொழிலில் ஆரம்பம் முதலே அரசு ஒழுங்குமுறைக்கான வழிவகைகள் எதையும் செய்து தராமல் இருப்பதையும் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். இந்த நேர்காணலின் சாராத்தை இங்கே தொகுத்திருக்கிறோம்.

டந்த மே மாதம் பாஜக அரசு மாட்டு விற்பனை ஒழுங்குமுறை அரசாணையை வெளியிட்ட பின்னர், பல்வேறு மடங்களைச் சேர்ந்த சாமியார்கள், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்துமத அமைப்புகள், மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வியாபாரிகளின் மாடுகளையும் வாகனங்களையும் பறிமுதல் செய்து கொள்கின்றனர்.

இதில் குறிப்பாக இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., பாஜகவைச் சேர்ந்தவர்கள் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்த அரசாணை இத்தகைய கும்பல்களுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, மாட்டை பாதுகாப்பதற்காக அல்ல.

சமீபத்தில் பழனியில் ஒரு விவசாயி வீட்டிற்கு எடுத்துச் சென்ற மாட்டை வாகனத்தோடு மடக்கி போலீசு நிலையத்திற்கு ஒரு இந்து மதச் சாமியார் கொண்டு சென்றுள்ளார். இதே போல, கிருஷ்ணகிரி, பெருந்துறை எனப் பல இடங்களிலும் நடந்து வருகிறது.

மாடு பாதுகாப்பு என்ற பெயரில் இயங்கி வரும் இத்தகைய ரவுடிகளுக்கும், கட்டப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும் ஆதரவாக மாநில அரசும் மவுனம் சாதிக்கிறது.
தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த அரசாணையால், சுமார் பத்து இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கே தண்ணீர் இன்றி கடும் பிரச்சினைக்குள் விவசாயிகள் சிக்கிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் எப்படி பால் கொடுப்பதை நிறுத்தி விட்ட மாடுகளைப் பாதுகாக்க முடியும்? பால் உற்பத்திக்கு புதிய மாடுகளை வாங்க வேண்டுமெனில், அவர்கள் பழைய மாடுகளை விற்பதைத் தவிர வேறு வழியில்லை. தற்போதைய சட்டத்தால் அவர்களால் உபயோகப்படாத மாடுகளை விற்க முடிவதில்லை.
அதே போல், ஆம்பூர், வாணியம்பாடி தோல் தொழிற்சாலை மற்றும் அது சார்ந்த தொழில்கள், மாதம் சுமார் 8000 கோடி பணம் ஈட்டக் கூடியவையாகும். அந்தத் தொழில்களும் இதனால் நசிந்து போயுள்ளது. மாட்டு எலும்பை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 இலட்சம் பேர் பாதிக்கப்படுவர்.
இந்த அரசாணை வெளியான பிறகு கடந்த 10 நாட்களாக போலீசும் வாகனங்களில் கால்நடைகளை ஏற்றக் கூடாது எனக் கெடுபிடி விதிக்கிறது. எந்தச் சட்டத்தின் அடிப்படையில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றக் கூடாது என்பது குறித்து பதிலேதும் கூறாமல், மொட்டையாக கலவரம் வரும் என்பதால் அனுமதிக்க முடியாது என்கிறது போலீசு. கலவரத்தைத் தடுப்பது தான் போலீசின் வேலை. அதை விட்டுவிட்டு, கலவரம் வரும் என்பதால் மாடுகளை வாகனங்களில் ஏற்றக் கூடாது என்று சொல்வது தான் போலீசின் வேலையா? அப்படியெனில் இந்த அரசு கலவரக்காரர்களுக்கு பயப்படும் அரசாக இருக்கிறதா?

கர்நாடகா, மே.வங்கம், கேரளம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இந்த அரசாணையைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாக அறிவித்திருக்கின்றனர். ஆனால் எடப்பாடி அவர்களோ அரசாணை வெளியிடப்பட்ட உடன் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கக் கோரினால், அதனை முழுமையாகப் படிக்கவில்லை என்றார். அரசாணை வெளியிடப்பட்டு 2 மாதம் ஆகியும் இன்னமும் இது குறித்து வாய் திறக்கவில்லை.

மே மாதத்திற்குப் பின்னர் பல்வேறு இடங்களில் மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை இடைமறித்து போலீசு நிலையத்திற்கு இட்டுச் செல்கின்றனர். கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதியன்று, பொன்னேரியில் மாடு ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்து காவல் நிலையத்திற்கு கொண்டு போய் 7 பேர் மீது வழக்கு தொடுத்து, 51 மாடுகளையும் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட மாடுகளை கோசாலைகளுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மாடுகளை மாநகராட்சி கோசாலைகளுக்கு அனுப்பாமல், தனியார் கோசாலைகளுக்கு அனுப்பினர். அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது அங்கு கொண்டு போய் சேர்க்கப்பட்ட 51 மாடுகளில் 10 மாடுகள் இறந்து விட்டதாக தனியார் கோசாலை நடத்துபவர்கள் கூறுகின்றனர். குறுகிய காலகட்டத்தில் 10 மாடுகள் இறந்திருக்கின்றன என்றால், தனியார் கோசாலைகளில் மாடுகளின் உயிருக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

தமிழகத்தில் பல்வேறு தனியார் கோசாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஓட்டேரியில் பல தனியார் கோசாலைகள் செயல்படுகின்றன. இராஜஸ்தானிலிருந்தும் இங்கு வந்து கோசாலைகள் நடத்துகிறார்கள். இவர்கள் மாடுகளை ஒழுங்காகப் பராமரிப்பது கிடையாது. கோசாலைகள் என்ற பெயரில் மாடுகளைக் கடத்தி விற்கிறார்கள். குஜராத் போன்ற மாநிலங்களில் சுமார் பத்தாயிரம் மாடுகள் கோசாலைகளில் இறக்கின்றன என்று கூறுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், மாட்டு வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கால்நடை இயக்குனரகம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் படி பறிமுதல் செய்யப்படும் மாடுகள் அரசாங்க கோசாலைகளுக்குத் தான் அனுப்பப்பட வேண்டும். ஆனால் அந்த விதிமுறை எப்போதுமே பின்பற்றப்படுவதில்லை.

பொதுவாக, மாடுகள் வாகனத்தில் ஏற்றி அனுப்பப்படுவதில் விதிமீறல்கள் குறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறும் சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் கோசாலைகளில் ஒப்படைக்கப்படும். அவ்வழக்குகள் முடிவடைந்த பின்னர் நீதிமன்றங்கள் மாடுகளை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கக் கூறி உத்தரவிடுவர். வழக்கு நடைபெறும் காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் அரசாங்கக் கோசாலைகளுக்கு அனுப்பப்பட்டிருந்தால், அவை உடனடியாக திருப்பித் தரப்படுகின்றன. ஆனால் தனியார் கோசாலைகளுக்கு அனுப்பப்பட்ட மாடுகள் இதுவரை திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகச் சரித்திரம் இல்லை.

தனியார் கோசாலைகள், மாடுகளை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க நீதிமன்றங்கள் போடும் உத்தரவுக்கு முட்டுக்கட்டையாக, உடனடியாக வேறு ஒரு நீதிமன்றத்தில் தவறான தகவல்களைக் கூறி வேறு ஒரு வழக்கைப் போட்டு மாடுகளை ஒப்படைக்காமல் தப்பிவிடுகின்றன. இப்படிப்பட்ட பல மோசடியான வழக்குகள் இன்னமும் நிலுவையிலேயே உள்ளன. அதனால் தான் தனியார் கோசாலைகள் மூடப்பட வேண்டும் என மாட்டு வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாடுகளை ஏற்றிச் செல்ல அரசு அளித்துள்ள விதிமுறை மீறல்களுக்காக போலீசால் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டால், பத்திரிக்கைகளும், ஊடகங்களும் கடத்தப்பட்ட மாடுகள் பறிமுதல் என்று செய்திகளை வெளியிடுகின்றன. வெளிமாநிலங்களுக்கோ, உள்ளூரிலோ கொண்டு செல்லப்படும் மாடுகள் அனைத்தும் முறையான இரசீதோடு தான் கொண்டு செல்லப்படுகின்றன. விதிமுறை மீறலுக்காக பறிமுதல் என்று எழுதாமல், மாட்டு வியாபாரிகளைக் கடத்தல்காரர்களைப் போல் சித்தரித்து ஊடகங்கள் எழுதுகின்றன. பணம் கொடுத்து வியாபாரிகள் வாங்கி வரும் மாடுகளை கோசாலை என்ற பெயரில் தடுத்து நிறுத்தி நீதிமன்ற வழக்குகளின் துணையோடு வியாபாரிகளிடம் இருந்து மாடுகளைப் பறித்துச் செல்லும், தனியார் கோசாலைகளே கடத்தல்காரர்கள்.

விலங்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி, மாடுகளை ஏற்றிச் செல்வதற்கு அச்சட்டம் விவரிக்கின்ற நீளம், அகலம், உயரம் கொண்ட வாகனங்கள் இந்த நொடி வரையிலும் இந்தியாவில் எங்கும் உற்பத்தியிலோ, விற்பனையிலோ இல்லை. ஆனால் அப்படி ஒரு வாகனத்தில் தான் ஏற்றிச் செல்லவேண்டும் என சட்டம் சொல்கிறது. இதற்கு வியாபாரிகள் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் தான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் கால்நடை இயக்குனரகம் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி 16 மாடுகளை ஒரு லாரியில் ஏற்றிச் செல்லலாம். என அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு நடைமுறையில் 16 மாடுகளை ஏற்றுவதை அனுமதிக்க மறுக்கிறார்கள். அந்த தீர்மானத்தை சட்டமாக்கவும் மறுக்கின்றார்கள்.

மாடுகளை லாரிகளில் ஏற்றிச் செல்லும் போது ‘ஓவர்லோடு’ கணக்குப் பார்த்து லாரிகளை பறிமுதல் செய்கிறார்கள். ஆனால் மனிதர்களின் போக்குவரத்திற்காக அரசாங்கம் இயக்குகிற பேருந்துகளில் சட்டப்படி 55 பேர் தான் பயணிக்க வேண்டும், ஆனால் அன்றாடம் நூற்றுக்கணக்கான பேர் தொங்கிக் கொண்டு போகிறார்கள். அவ்வாறு மக்களை அள்ளிச் செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலோ, மற்ற தனியார் போக்குவரத்துகளின் மேலோ, இரயில்வேயின் மீதோ எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதில்லை.

கால்நடைகள் குறித்து ஒரு சட்டம் இயற்றுவதற்கு முன்னால், அது சம்பந்தப்பட்ட நபர்களிடம் (வியாபாரிகள், விவசாயிகள்) கருத்துக் கேட்டு, கலந்துரையாடி அதன் பின்னர் தானே சட்டம் இயற்றவேண்டும்? ஆனால் இங்கு அப்படி என்றுமே நடைபெறுவதில்லையெனில் இது என்ன ஜனநாயகமா அல்லது மன்னராட்சியா?
மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசாங்கத்திடம் ஏற்கனவே மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் பின்வருமாரு:

  • போலீசு, வாகனங்களில் கால்நடைகளை ஏற்றுவதற்கு விதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.
  • தமிழகத்தில் இருக்கும் தனியார் கோசாலைகளை இழுத்து மூட வேண்டும். மாநிலம் முழுவதும் தமிழக அரசே கோசாலைகளை நிறுவ வேண்டும். தனியார் கோசாலைகளில் இதுவரை இருக்கும் பசுக்களின் எண்ணிக்கையையும், நிலைமைகளையும் பெற்று தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்
  • கடந்த ஆண்டுகளில் தனியார் கோசாலைகளிடம் ஒப்படைக்கப்பட்ட மாடுகளை, விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் திரும்பி ஒப்படைக்கச் செய்ய வேண்டும்.
  • மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
  • ஒரு மோட்டார் வாகனத்தில் 20 கால்நடைகள் வரை ஏற்றிச் செல்வதற்கு அனுமதியளித்து மோட்டார் வாகனச் சட்டத்தில் அனுமதியளிக்க வேண்டும்.
  • மாட்டை முன் வைத்து அரசியல் செய்யும் மதவாத அமைப்புகளை தமிழக அரசும் காவல் துறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
  • கால்நடைச் சந்தைகளில் கால்நடைகளைப் பராமரிப்பதற்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை முன் வைத்திருக்கும் மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர், இதன் மீது அரசு கவனம் செலுத்தாவிட்டால், அடுத்தகட்டமாக தமிழகம் தழுவிய அளவில், அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தவிருப்பதாகக் கூறியுள்ளனர்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. MAATTU VIYABARIGAL SANGATHIN KORIKKAIGAL MIGAVUM NERMAYANAVAI.AVASIYAMANAVAYUM KOODA.MAATTU VIYABARA NANBARGALE THOLAI URIKKAVUM THERIUMDHANE UNGALUKKU?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க