privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்ஜிஎஸ்டி : ஒரு வழிப்பறிக் கொள்ளை ! சிறுவணிகர்கள் நேர்காணல்

ஜிஎஸ்டி : ஒரு வழிப்பறிக் கொள்ளை ! சிறுவணிகர்கள் நேர்காணல்

-

“ஒரே இந்தியா ஒரே வரி”  என மோடி அரசாங்கத்தால் விதந்தோதப்படும் புதிய சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின் அதன் நடைமுறை விளைவை அறிந்து கொள்ள சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வணிகம் புரியும் சிறு கடை வியாபாரிகளைச் சந்தித்தோம்.

ஆனந்தா சில்க் பேரடைஸ் என்பது பார்வைக்கு “பாரடைசாக” இல்லை. சென்னை எம்.ஜி.ஆர் நகரின் சந்தைக்கு நுழையும் வழியிலேயே அமைந்துள்ளது. சாதாரண உழைக்கும் மக்களையும் நடுத்தர வர்க்க மக்களையும் வாடிக்கையாளர்களாக கொண்ட சிறு கடை. கடையின் முதலாளி ராஜூ அறுபது வயதைக் கடந்தவராக இருந்தார். பல்லாண்டு கால தொழில் அனுபவம் கொண்டவர்.

“முறையா வரி கட்டி தொழில் செய்யிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை? கருப்புப் பணம் உருவாக கூடாது என்கிறதுக்காகத் தான் அரசாங்கம் இந்த மாதிரி புதிய திட்டங்களை எல்லாம் அறிவிக்கிறதா சொல்றாங்களே?”

“ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், ஒரு திட்டத்தை ஒழுங்கா போடறாங்களா? ஆயிரம் ரூபாய்க்கு மேல உள்ள துணி வகைகளுக்கு 18 சதவீத வரியாம். அதுக்குக் கீழ உள்ளதுக்கு 5 சதவீட வரியாம். மாசம் மூன்று தடவை வரி தாக்கல் செய்யனுமாம். ஒவ்வொரு முறை வரி தாக்கல் செய்ய ஆடிட்டருக்கு கட்டணமா 700 ரூபா தர வேண்டியிருக்கு. வருசத்துக்கு 37 முறை தாக்கல் செய்யனும். இதுக்கே இருபத்தி ஆறாயிரம் ரூபா. இதுல வருமான வரி அலுவலகத்தில அவன் கேட்கிற லஞ்சம் கணக்குல வராது” என்கிறார் ஆனந்தா சில்க் பேரடைஸ் கடையின் முதலாளி ராஜூ.

“ஏன் லஞ்சம் கொடுக்கனும்? வியாபாரிகள் நேர்மையா நடந்துக்கிடலைன்னா கருப்புப் பணம் அதிகரிக்கத் தானே செய்யும்?”

“அட… இது விதிமுறையை மீறுவதற்கு கொடுக்கும் லஞ்சம் இல்லீங்க.. வருமானவரி அலுவலகத்தில இருக்கிற அதிகாரிகள் அவங்களோட வேலையை முறையா செய்யிறதுக்கே லஞ்சம் கேட்பான். நீங்க நேர்மை நாணயம்னு பேசிட்டு தரலைன்னு சொன்னா எல்லாம் சரியா இருந்தாலும்.. இதுல நொட்டை அதுல நொள்ளைன்னு இழுத்தடிப்பான்”

“சரிங்க.. எங்களோட கேள்விக்கு சரியான பதிலை நீங்க சொல்லலையே. முறையா வரி கட்டுறதுல அப்படி என்ன பிரச்சினை உங்களுக்கு?”

”அது தான் சொல்லிட்டனே, ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனா அப்படிக் கட்ட முடியாதபடி குழப்பமா திட்டம் போட்டிருக்காங்கன்னு தான் சொல்ல வர்றேன். இருபது லட்சத்துக்கு கீழ தொழில் செய்யிறவங்க ஜி.எஸ்.டி கட்ட தேவையில்லைன்னு சொல்றாங்க.. ஆனால், அதே இருபது லட்சத்துக்கு கீழ தொழில் செய்யிறவங்க கிட்ட ஜி.எஸ்.டி நம்பர் இல்லேன்னா சரக்கு தர முடியாதுன்னு டீலர் சொல்றான்”

“சின்னதோ பெரிசோ.. எல்லாமே கணக்குல வரனும்னு அரசாங்கம் சொல்றது நியாயம் தானே?”

“சரி இருக்கட்டும், இப்ப ஒருத்தர் சின்னதா தறி வச்சி கைலி ஓட்றாருன்னு வைங்க. அவரு ஒரு பத்து கைலிய என்கிட்டே நேர்ல கொண்டாந்து கொடுத்து காசு வாங்கிட்டுப் போறாரு. இத எந்த கணக்குல கொண்டாறது?”

“அப்ப ரெண்டாங் கணக்கைத் தடுக்க முடியாதுன்னு சொல்ல வர்றீங்களா?”

“இல்லை. சின்ன அளவுல தொழில் செய்துகிட்டு இருக்கறவங்களை தொந்தரவு செய்ய கூடாதுன்னு சொல்ல வர்றேன். இங்கே வேலைக்கு கூட ஆள் வைக்காம நாங்களே பார்த்துகிட்டு இருக்கோம். இதுல மாசம் மூணு வரி தாக்கல், ஒவ்வொரு வகையான துணிக்கும் தனித்தனியான வரி அளவு அப்படி இப்படின்னு இதுக்கே ஒரு ஆளை தனியா போடனும். நாங்க வாடகை கட்டுவோமா. ஆள் கூலி கட்டுவோமா, எங்க வயித்துப் பாட்டை பார்ப்போமா?”

ராஜூ தொடர்ந்து பேசிச் சென்றார். புதிய வரிவிதிப்பு முறையின் கீழ் உள்ள விதிமுறைகள் குறித்துக் கேட்டோம். அவையெல்லாம் என்னவென்ற ஆடிட்டருக்கே தெரியாது என்றார். புதிய வரிவிதிப்பு முறையின் கீழ் உள்ள விதிகளைக் குறித்த கேள்விக்கு நாங்கள் சந்தித்த அனேகரின் பதிலும் இப்படியாகத் தான் இருந்தது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு விலையேற்றத்துக்கு விளக்கம் கொடுப்பதும், சமாளிப்பதும் தனி பிரச்சினையாக முன் வைத்தனர்.

“சார் நேத்து ஒருத்தன் வந்து நூத்தம்பது ரூபாய்க்கு சாப்பிட்டான். ஏ.சி ரூமுன்றதால 18 சதவீத வரி சேர்த்து 177 ரூபா பில்லைக் கொடுத்தா கட்ட முடியாதுன்னு மூஞ்சில வீசி அடிச்சிட்டுப் போறான். லோக்கல் ஏரியா சார். ஆளு வேற குடிச்சிருந்தான். மீறி பேசினா பொருள் எதையாவது ஒடைச்சிட்டுப் போயிட்டான்னா யார்ட்ட போயி கேட்கிறது? வேற வழியில்லாம காசு போனா போவுதுன்னு வேடிக்கை பார்க்க வேண்டியதா போயிடிச்சி” என்கிறார் ஆனந்தா சில்க் பேரடைசின் அருகில் உள்ள தேவர் ஓட்டலின் முதலாளி. சிறு வியாபாரிகளுக்கோ வேறு பிரச்சினைகள்.

“நானெல்லாம் பிளாட்பார்ம்ல வண்டி போட்டி யாவாரம் பார்க்கிறேன் சார். எனக்கு எந்த ஆதாரத்தை வச்சி ஜி.எஸ்.டி நெம்பர் தருவாங்க?” என்கிறார் தள்ளு வண்டியில் உள்ளாடைகள் விற்கும் மொய்தீன்.

“ஜி.எஸ்.டி நம்பர் இல்லாம மொத்த வியாபாரி சரக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டா என்ன செய்வீங்க?”

“என்னா செய்யிறது சார்.. வேற எதுனா பொழப்பு கிடைக்குமான்னு தேடிப் போக வேண்டியது தான். கவுருமெண்டே நாம தொழில் செஞ்சி பிழைக்க கூடாதுன்னு முடிவு செஞ்ச பின்னாடி நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க?” என்றார்.

”கவர்மெண்ட் வரி கட்டி நியாயமா தொழில் செய்யுங்கன்னு தானே சொல்லுது?” என்றோம்.

“சார்.. ஒரு நாளைக்கு நூத்துக்கோ இருநூத்துக்கோ தொழில் செய்யுறோம். இது வரைக்கும் பொருள் வாங்கும் போதே வரியும் சேர்த்துக் கட்டி தானே பொருள் வாங்கியிருக்கோம்? இனி நாங்க ஆடிட்டரு அங்க இங்கன்னு போயி வரி கட்டனுமா? ஒன்னுமே புரியலை சார்” என மொய்தீன் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் சிறிய மளிகை கடை ஒன்றை நடத்தி வரும் விவேகானந்தன் என்பவரும் எங்களது உரையாடலில் புகுந்தார்.

சார் எனக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு யாவாரம் நடக்குது. இதுல என்ன லாபம் கிடைச்சிரும்னு நினைக்கிறீங்க? இதுல கடைக்கு மாசம் ஆறாயிரம் வாடகை கட்டணும், ரெண்டு பசங்களோட படிப்பு செலவு, குடும்ப செலவுன்னு இருக்கு. இப்ப ஜி.எஸ்.டி நெம்பர் வாங்கினாத் தான் சரக்கு தருவோம்னு சொன்னா நான் எங்கே போவேன்?” என்கிறார் விவேகானந்தன்.

சிறு கடைகள் நடத்தி வரும் வணிகர்களின் சிக்கல் இவ்வாறு இருக்கின்றது என்றால், நடுத்தர கடைகள் நடத்துபவர்களோ பெரும் குழப்பத்தில் உள்ளனர். விவேகானந்தன் நடத்தி வருவதை விட கொஞ்சம் பெரிய கடை நடத்திக் கொண்டிருக்கும் தென்னரசுவிடம் நாங்கள் பேசினோம்.

“சார், இப்ப புது ஜி.எஸ்.டி வரியை சேர்த்த பின்னாடி ஒவ்வொரு பொருளும் எம்.ஆர்.பி ரேட்டை விட அதிகமா வருது.. கஸ்டமருக்கு பதில் சொல்லி மாளலைங்க” என்ற தென்னரசு, மேலும் தொடர்ந்தார்.

“நானெல்லாம் அந்தக் காலத்துல டி.எம்.ஈ படிச்சவன். இப்ப எனக்கு வயது 45. வேலைவாய்ப்பு அலுவலகத்தில பதிஞ்சி வச்சும் வேலை கிடைக்காமத் தான் இந்த மளிகைக் கடையை நடத்திகிட்டு இருக்கேன். ஒவ்வொரு மாசமும் கடைக்கு 17 ஆயிரம் வாடகை கட்டறேன். கரண்டுக்கு ஆறாயிரத்திலேர்ந்து ஏழாயிரம் வரை ஆவுது. ஆண்டவன் புண்ணியத்துல சொந்த வீடு இருக்கு சார். இதே வாடகை வீட்ல இருக்கிறவங்க அந்த வாடகையும் கட்டணும். இப்ப இருக்கிற போட்டில வியாபாரமே குறைவாத் தான் நடக்குது சார். இதுல மாசத்துக்கு மூனு தடவை வரி தாக்கல் செய்யணும்னா வருசத்துக்கு இருபது முப்பதாயிரம் அதுக்கும் செலவாகும். நாங்க எல்லாம் தொழில் செய்யிறதா மூடிட்டுப் போறதா? அரசாங்கத்துக்கு என்னோட படிப்புக்கு வேலை கொடுக்க முடியலை, நானே ஏதோ செய்து பிழைச்சிக்கலாம்னு பார்த்தா அதுக்கும் விட மாட்டேங்குறங்க” எனக் குமுறுகிறார்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு சிறுமி தயிர் பாக்கெட் வாங்க வந்தார். அதன் விலையை முப்பது ரூபாய் எனச் சொல்லி எடுத்துக் கொடுத்தவர், எங்களிடம் திரும்பி “நீங்களே பாருங்க, இதோட பழைய விலை 26 ரூபா. இப்ப 30 ரூபா. இப்படி ஒவ்வொரு பொருளும் விலை ஏறியிருக்குங்க” என்றார்.

“சரிங்க.. நீங்க புலம்பறீங்க. ஆனா பெரிய சூப்பர் மார்க்கெட்டுங்களுக்கும் இதே நிலைமை தானே?” என்றோம்.

“அப்படி இல்ல சார். இப்ப பார்த்தீங்கன்னா.. நான் ஒரு பெட்டி சோப் வாங்கறேன். அவன் நூறு பெட்டி வாங்குவான். அப்ப சோப்பு தயாரிக்கிறவன் மொத்தமா தரும் போது விலை குறைத்து தருவான். ஜி.எஸ்.டி வரி கட்டி எம்.ஆர்.பி விலையே வச்சி வித்தாலும், அவனுக்கு லாபத்தில கொஞ்சம் குறையும் அவ்வளவு தான். ஆனா, இங்கே எம்.ஆர்.பி ரேட்டுக்கு மேல வச்சி வித்தா தான் கட்டுபடியே ஆகும். நாளைக்கு கஸ்டமர் எங்க கிட்டே வருவானா? நேரா நீல்கிரீஸ் போயிடுவானே?” என்கிறார்.

“அப்ப வரி கட்டாம அரசாங்கத்த ஏமாத்தறது சரின்னு எடுத்துக்கலாமா?”

“சார், நாங்க வாங்கற பொருளுக்கு வரி சேர்த்து தான் விலை குடுத்து வாங்கறோம். அதுக்கு என்ன லாபம் வச்சி விக்கிறோமோ அதுக்கான வருமான வரியும் வருசத்துக்கு ஒரு தரம் கட்டிட்டு தானே வந்தோம்.. அப்புறம் எதுக்கு புதிய வரியெல்லாம் போட்டு சித்திரவதை செய்யணும்?”

செருப்புக் கடை ஒன்றை வைத்து நடத்தி வரும் தார்வேஷ் என்பவரைச் சந்தித்தோம்.

“500, 1000 ரூபாய்த் தாள் செல்லாதுன்னு அறிவிச்சதோ, இப்ப ஜி.எஸ்.டி வரி முறை கொண்டாந்திருக்கிறதோ இதெல்லாம் கருப்புப் பொருளாதாரத்தை ஒழிக்கிற வழின்னு தானே அரசு சொல்லுது?” எனக் கேட்டோம்.

“எங்க சார் கருப்புப் பணம் ஒழிஞ்சது? பணம் செல்லாதுன்னு சொன்ன பின்னாடி நாமெல்லாம் ஐநூறு ரூபா கிடைக்குமான்னு ஏ.டி.எம் வாசல்லே காத்து நின்னோம்.. அதே அதிகாரிங்க வீட்லேர்ந்து கட்டுக் கட்டா பணத்தை எடுக்கிறாங்க. அவங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சது? ரூபாய்த் தாள் செல்லாதுன்னு சொன்ன அடுத்த நாளே எங்களுக்கு ரெண்டரை லட்சம் நட்டம். அதிலேர்ந்து இன்னும் எழுந்திருக்க முடியலை. இந்தக் கடைல இருக்கிற சரக்குல, இருபத்தி ஐந்தாயிரம் தான் என்னோட காசு.. மீதி மூனேமுக்கால் லட்சம் வெளியே வட்டிக்கு கடன் வாங்கிப் போட்டிருக்கேன்”

“இருக்கட்டும் சார்.. வரி கட்டி தொழில் செய்யிறதுல என்ன தான் பிரச்சினை உங்களுக்கு?” என்றோம்.

“எனக்கும் ஆசை தான் சார். ஆனா, இதோ நீங்களே பாருங்க.. கல்லாவுல 4200 ரூபா கிடக்குது. இதுல இருநூறு ரூபா தான் என் காசு.. மத்ததெல்லாம் வெளியே போக வேண்டிய காசு. சாயந்திரம் ஆச்சின்னா நானூறோ ஐநூறோ கிடைச்சா போதும்னு வியாபாரம் பார்த்துகிட்டு இருக்கோம். இதுல வருசத்துக்கு முப்பத்தேழு தடவை வரி தாக்கல் செய்யச் சொல்றதும், அதுக்கே வருசத்துக்கு இருபது முப்பதாயிரம் செலவு செய்யச் சொல்றதும் நியாயமான்னு நீங்களே சொல்லுங்க” என்றார்.

“வரி கட்றோம், வரி கட்றோம்னு சொல்றீங்களே… நீங்க என்ன உங்க கைலேர்ந்தா கட்றீங்க? அதை வாடிக்கையாளர் கிட்டே இருந்து தானே வசூலிக்கறீங்க? அதைத் தானே அரசாங்கம் கேட்குது?”

“சார் இந்த செருப்போட எம்.ஆர்.பி 249 ரூபா. என்னோட கொள்முதல் விலை 189 ரூபா. அறுபது ரூபா லாபத்துக்கு அப்படியே விற்க முடியாது. வாங்க வர்ற கஸ்டமர் பேரம் பேசி முப்பது நாப்பது ரூபா குறைச்சிடுவாரு.. அப்படி இருக்கும் போது வரின்னு தனியா கஸ்டமர் கிட்டே வசூலிக்க முடியுமா? இங்கே எல்லா வியாபாரமும் போட்டில தான் ஓடிகிட்டு இருக்கு.. நான் விலை குறைக்க மாட்டேன்னு சொன்னா குறைக்கிற கடைக்கு போயிடுவாங்க… கடைசில நானும் பிழைக்க முடியாம என்னை மாதிரி இன்னொரு சின்ன வியாபாரியும் குறைஞ்ச லாபத்துக்கு தொழில் செய்ய வேண்டி இருக்கு. அதுக்கு மேல ஜி.எஸ்.டியும் கட்டினா எப்படி தொழில் செய்ய முடியும் சொல்லுங்க?” என்றார் தார்வேஷ்.

“இதே பிரச்சினை தானே பெரிய முதலாளிகளுக்கும் இருக்கும்?”

“இல்ல சார். ஷோரூம்களுக்குப் போகிறவங்க கம்ப்யூட்டர் என்ன தொகையை பில்லா அடிச்சுக் கொடுக்குதோ அதை மறு பேச்சில்லாம கொடுத்துட்டு வந்துடறாங்க. ஆனா, எங்க கஸ்டமருங்க அப்படியில்ல.. பேரம் பேசித் தான் வாங்குவாங்க. பாதிப்பு எங்களை மாதிரி சிறு கடை வச்சிருக்கிறவங்களுக்குத் தான் சார்” என்கிறார் தார்வேஷ்.

மொத்தத்தில் நாங்கள் சந்தித்த அனைவருமே புதிய வரிவிதிப்பு முறையை ஒரு வழிப்பறிக் கொள்ளையாக பார்த்ததோடு, இதற்கென வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் அனைத்தும் வணிகர்களை சித்திரவதை செய்து தொழிலை விட்டே விரட்டுவதற்காவே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவே முன்வைத்துப் பேசினர். ஏக காலத்தில் அனைவரும், இந்தப் புதிய முறை என்பது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமானதென்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதென்றும் ஆத்திரத்தோடு குறிப்பிட்டனர்.

ஆயிரம் பொதுக்கூட்டங்கள் போட்டு, லட்சக்கணக்கான நோட்டீசுகள் அடித்து “மோடி அரசு கார்ப்பரேட் கைக்கூலி” என விளக்கியும் புரிய வைக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஜனநாயக சக்திகளின் வேலையை மோடி எளிதாக்கியுள்ளார். தனது புதுப் புதுத் திட்டங்களின் மூலம் தனது கார்ப்பரேட் கைக்கூலித்தனத்தை மக்களின் சொந்த வாழ்க்கை அனுபவங்களில் இருந்தே புரிய வைக்கத் துங்கியுள்ளது மோடியின் மத்திய அரசு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க