Tuesday, June 2, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க சசிகால சிறை ஊழலை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா பணிமாற்றம் !

சசிகால சிறை ஊழலை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா பணிமாற்றம் !

-

தையெல்லாம் காணக்கிடைக்காத துர்பாக்கியத்துடன் ஏ 1 மறைந்து விட்டார். அவருக்கும் சேர்த்து ஆடுகிறார் ஏ 2. தமிழகத்தில் திருட்டுச் சொத்து சேர்த்ததில் நம்பர் ஒன் குடும்பம் என்றால் அது போயஸ் தோட்டம் மற்றும் மன்னார்குடி மாஃபியாதான். தற்போது மன்னார்குடியின் பிடியில் போயஸ் தோட்டம் இருந்தாலும் கமலாலயத்தின் தயவு வேண்டி சசிகலா கும்பல் தவமாய் தவமிருந்து வருகிறது. அந்த தவத்தின் பலன் குடிசரயரசுத் தலைவர் தேர்தலாகவோ இல்லை பரபரப்பன அக்ரகார சிறையில் சசிகலாவுக்கு கிடைக்கும் நட்சத்திர வசதிகளாகவோ இருக்கலாம்.

பா.ஜ.கவை எதிர்க்கும் காங்கிரசு ஆளும் மாநிலம் என்றாலும், ஆச்சார்யா போன்ற நேர்மையான வழக்கறிஞர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெய – சசி கும்பலை தண்டிப்பதற்கு காரணமாக இருந்த மாநிலம் என்றாலும் சசிகலா கும்பலின் கொட்டத்திற்கு அங்கே குறைவில்லை.

சசிகால கும்பலின் ஊழல் தீர்ப்பும் தண்டனை அளித்தும் முடியவில்லை என்பதை போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா அம்பலப்படுத்தினார். அவர் நடத்திய விசாரணையில் சசிகலா & கோ-விற்கு என்னன்ன வசதிகள் சிறையில் கிடைத்தன என்பது அம்பானியின் ஆன்டிலியா மாளிகையின் மலைப்புக்கு நிகரானது. டி.வி, ஏ.சி, செல்பேசி, உதவியாளர்கள், சமையற்கலைஞர்கள், மெத்தை, பார்வையாளர் அறை, அதற்குரிய நாற்காலி மேசைகள், ஒரு வாரத்தில் எத்தனை பேரை பார்க்கவும் வசதி என்று பட்டியல் நீள்கிறது.

ரூபா இதை விசாரித்து மேலதிகாரிகளுக்கும், அரசுக்கும் அறிக்கை அனுப்பினார். அரசோ ரூபா அம்பலப்படுத்திய ஊழலை விடுத்து அந்த அறிக்கை எப்படி ஊடகங்களுக்கு கிடைத்தது என்று கவலைப்பட்டது. ஏனெனில் ரூபா கூற்றுப்படி டி.ஜ.பி சத்யநாராயண ராவுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது போக சொத்து, மனை, இதர அதிகாரிகள் – போலீசுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை கண்டுபிடிக்க ஆயிரம் ரூபாக்கள் வந்தாலும் முடியாது.

மேலும் ரூபா தனது விசாரணையின் போது பதிவு செய்த பல ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. சசிகால கும்பல் செய்த அட்டூழியங்களை அம்பலப்படுத்திய சிறையாளர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி அரசின் பெயர் பழுதானதால் சசிகலா எனும் ஊழல் விலங்கு செய்த தவறுகளை – சதிகளை விட்டு விட்டு அரசின் பெயரை சரிப்படுத்தும் வேலையில் சித்தராமையா அரசாங்கம் ஈடுபட்டது. இறுதியில் ரூபா பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆதாரங்களை அழித்துவிட்டபடியால் சத்யநாராயணராவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 16 வருடங்கள் பணியில் இருக்கும் ரூபாவுக்கு இது 31-வது பணிமாற்றமாகும்.

இவ்வளவு நடந்த பிறகும் ரெட்டி சகோதரர்கள் ஊழல் புகழ் கர்நாடகா பாஜக உடனே சசிகாலவை தண்டிக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. ஒரு வேளை அறிக்கை கேட்டால் நடப்பது காங்கிரசு ஆட்சி என்று புன்சிரிப்பார்கள். இன்று நடக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏக்-களின் பெருச்சாளி ஓட்டுக்கள் லம்பாக பாஜகவிற்கு விழுவதால் சசிகலா கும்பல் இது குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளாது.

அடுத்த அதிகாரிக்கு பேரம் பேச நாள் குறித்திருப்பார்கள்.

ஒரு பெரும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கு சிறையிலேயே இவ்வளவு வசதிகள் பணத்தை இறைத்தால் கிடைக்குமென்றால் இந்த அரசமைப்பு சசிகாலவையோ, ஜெயலலிதாவையோ தண்டிக்குமென்று இன்னும் நம்புவீர்களா?

________________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க