Sunday, September 20, 2020
முகப்பு கலை கவிதை மோடியின் டீக்கடை சுற்றுலாத் தலம் ! வாடிய பயிருடன் உழவரின் சவம் !

மோடியின் டீக்கடை சுற்றுலாத் தலம் ! வாடிய பயிருடன் உழவரின் சவம் !

-

மருதம் என்பது
போராட்டமும் போராட்டம் சார்ந்ததும்….

விவசாயி இல்லாமல்
வேறென்ன நாடு
விவசாயம் அழிந்திடில்
நாடே சுடுகாடு!

புன்செய் வருத்தி
நன்செய் திருத்தி
நெஞ்சை நிமிர்த்தி
தன் செய் உழவரின்றி
தஞ்சை ஏது? தரணி ஏது?

மண்ணில் பசுமை
நெய்தது உழவு
விண்நீர் மேகம்
கொய்தவர் உழவர்.
தன்னில் இயற்கை
விதைத்தவர் உழவர்
தன்னையே இயற்கைக்கு
விதைத்தவர் உழவர்.

ஒரு பிடிச்சோறு
கொடுத்தவர் யாரு?
உழுதவர்
கணக்கு பார்த்தால்
மிஞ்சுமா ஊரு!

விதையோடு விழுந்து
கதிரோடு அசைந்து
பசியோடு நனைந்து
ஊர் பசியாற அலைந்து
வரப்போடு தேய்ந்து

உன் உதிரத்தில்
கலந்தவர் யாரு?
அவருக்கு,
உழவரென்று பேரு!

வயலே கதியென்று
வாழ்பவர் விவசாயி.
நல்ல சேதி, கெட்ட சேதி
எல்லாமே
வயக்காற்றில் வந்தது.
மகள்
பூப்பெய்திய சேதியை
களத்துமேடு தந்தது.

அவர்
மூப்பெய்திய விபரமும்
கட்டு தூக்கும் போது சொன்னது.
அந்தி மந்தாரை பூத்தபின்தான்
வீட்டு நினைப்பே வந்தது.

எந்நேரமும் இதயத்தில்
வயலே துடித்தது.
உறங்கும் போதும்
சேத்து வாசமே
கனவில் முகர்ந்தது.

உடை மாற்ற நினைத்ததில்லை
மடை மாற்றும் கைகள்.
நடைபோட நினைந்ததில்லை
நாற்றாங்காலாய் கால்கள்.
பெற்ற மகவின்
கன்னச்சிராய்ப்பைக் கண்டாலும்
பெரிதேதும் படுத்தாமல்,
நட்ட பயிரில்
வண்ணச்சிராய்ப்பை பார்த்தாலே
பதறும் கண்கள்.

போவோர் வருவோரிடமெல்லாம்
பொழுதுக்கும் வயலே பேச்சு
வாழ்வின் பொழுதெல்லாம்
வயல்வெளியாகிப் போச்சு!

அந்த
விவசாயியை வாழவிடாமல்
அழிப்பவரை அழிக்காமல்
எதற்கு நம் மூச்சு?

பயிர் நிலம் பரப்பி
விவசாயி
பாதுகாத்திராவிட்டால்
வாழ
உயிர்நிலம் இருக்குமோ
இன்று.
விளைநிலம் அழிக்கும்
தேசத்துரோகிகளை ஒழிக்காமல்
யாரும் வாழமுடியுமோ
நன்று.

தாழப் பறந்து வந்து
தான் வாழ வழியின்றி
வரப்பின் நெருஞ்சி முள்ளில்
செத்துக்கிடக்குது தட்டான்.

நீர்த்துளிக்கு நா தவித்து
நிலம் பெயரமுடியாமல்
வாய்க்காலில் முகம் புதைத்து
காய்ந்து கிடக்குது ஓணாண்.
குட்டையில்
காய்ந்த அல்லித் தண்டின் உள்ளே
கருகிக் கிடக்கும்
குரவை மீனின் கண்கள்.

உட்கார்ந்து
குஞ்சுகளுக்கு ஊட்டிவிட
கூடு கட்ட வழியின்றி
ஈரப் பசையிழந்த மரம்பார்த்து
அஞ்சி சிறகடிக்கும் குருவி.

உணர்ச்சி இழந்த
தொட்டால் சிணுங்கிகளைப் பார்த்து
பயந்து ஓடும் பட்டாம் பூச்சிகள்.

மரம் கொத்தி ஓசையில்லை
மைனாவின் மொழியில்லை
வயல் காற்றில் உயிரில்லை…
கொலையுண்டு கிடக்குது காவிரி
அதன் குரல்வளை நெறிக்குது குவாரி.

பயிர், பச்சை இன்றி
உயிர் பிச்சை கேட்கும் கால்நடைகள்.
கழுநீர் நனைய வழியின்றி
உலர்ந்த மோவாயை
நாவால் வருடி
காம்பு காயும் பசுக்கள்.
இலை தழை தேடி ஏமாந்து
தன்நிழல் மேயும் ஆடுகள்.

இறுகி, இறுகி
ஈரப்பசையற்றுப் போன நிலம்
இறுதியில்
விவசாயியின் நெஞ்சில் வெடிக்கிறது.

அந்தச் சாவின் அலறல்
சகலத்திலும் படிகிறது,
கைத்தொழில், நெசவு,
சிறுவணிகம், கால்நடை வளர்ப்பு,
இன்னும்… அனைத்திலும்
அந்தச் சாவின் வலி பரவுகிறது…

இதைத் தடுக்க வக்கில்லாமல்
என்னடா தேசப்பாதுகாப்பு?
விவசாயத்தை அழிப்பவர்கள்
தேசவிரோதிகள்!
விளை நிலத்தை ஒழிப்பவர்கள்
பயங்கரவாதிகள்!

கல்லிலும் விளையும்
கதிராமங்கலம்
இப்போது
மண்ணில் விளையவும் மறுக்கிறது.
புல்லிலும் பசுமை தலைகாட்டாமல்
நம் ஈரக்குலையை
எரிவாயுத் திட்டம் அறுக்கிறது.

ஊற்றுக்கண் நோகாமல்
ஒவ்வொரு கண்ணும்
நட்டு வைத்தோம்.
நம் சோற்றுக்கண்ணே
குருடாக
எத்துனை துளைகள்
நம் நிலத்தில்.

நல்லரிசி தரும்
நன்செய் நரம்புகளை
அறுத்துவிட்டு
வல்லரசாம், வளர்ச்சியாம்!

வெட்டாறையும், காவிரியையும்
வெறிச்சோட வைத்துவிட்டு
கச்சா எண்ணெய்
கரை புரண்டு ஓடுவது யாருக்கு?

ஒண்ட வந்த ஓ.என்.ஜி.சி.
இப்போது ஊர்மக்களை விரட்டுகிறது.
ஒதுங்க வந்த காவிக் கம்பெனி
நெடுவாசலை அதட்டுகிறது.
நம் கழனிகளுக்கில்லை
காவிரிப் பாசனம்
கார்ப்பரேட் செழிக்க
காவிப் பாசனம்.

‘மேக் இன் இந்தியாவை’
பார்க்க முடிந்தவர் பார்க்கலாம்,
மோடியின் டீ க்கடை
சுற்றுலாத்தலம்.
வாடிய பயிருடன்
உழவரின் சவம்!

காவிரியில் எங்கே
தேசிய நீரோட்டம்,
கடன் தள்ளுபடியில் எங்கே
ஒரே சட்டம்?
விவசாயிக்கு எங்கே
ஒரே நாடு!
அயோத்தியில்
ராமனுக்கு கோயில்
கதிராமங்கலத்தில்
ஓ.என்.ஜி.சி.க்கு ஆயில்!
பசுவுக்கு பாதுகாப்பு
நெடுவாசலில் பசுமைக்கு ஆப்பு!

சந்து பொந்தெல்லாம்
சேட்டுக்களின் கந்துராஜ்ஜியம்
யாரை ஏய்க்க
இந்து ராஜ்ஜியம்?
நாட்டையே சூறையாட
கார்ப்பரேட் தாதா
நடுவில் பஜனைக்கு மட்டும்
பாரத மாதா!

அம்பானி பெட்ரோலுக்கு
அவன் விரும்பும் விலை நிர்ணயம்,
அதானி மின்சாரத்திற்கு
அவன் விரும்பும் விலை நிர்ணயம்
விளைவிக்கவும் வழியின்றி
வெடித்து சாவதுதான்
விவசாயிக்கு நிர்ணயம்.
இது கார்ப்பரேட்
மனுநீதி ஆட்சி
காய்ந்த நம் வயல்களே
சாட்சி!

விளைநிலம் என்பது நாகரிகம்
விவசாயம் என்பது பண்பாடு
இயற்கையை இழப்பது பெருங்கேடு
இயற்கையாய் எழுந்து போராடு!
விவசாயிக்காக துடிக்காமல்
வேறு எதற்கு உயிர் உடலோடு!
மண்ணின் மார்பு நிமிரும்படி
மாநிலமே! திரண்டு போராடு!

-துரை. சண்முகம்

______________________

இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. அருமை அத்தனை வரிகளும் அருமை நடப்பு நிலவரத்தை … கவிதையாக தாெகுத்த சாெல் வளம் … உரைக்குமா …கேடுகெட்ட கெடு மதியாளருக்கு…! கார்ப்பரேட் கால் நக்கிகளுக்கு …?

  2. தோழர் துரைசண்முகம் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் உயிர்துடிப்பானவை. வரட்சியால் விவசாயத்தை இழந்து விவசாயி மட்டும் சாகவில்லை, காக்கை குருவி தொட்டு புல் பூண்டு வரை அனைத்து அழிவையும் கண்முன் கொண்டுவந்துள்ளார். அழிந்துவரும் விவசாயத்தின் நிலையை மீட்டெடுக்க அனைவரும் ஓர் அணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தும் உருக்கமான கவிதை.

  3. விவசாயி வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும் வயக்காட்டில் தான் என்ற வரியை படிக்கும் போது அந்த உண்மையை ஒரு நிமிடம் என்னை மௌனமாக்கியது. நான் பூப்பெய்தியதை என் அம்மாவிடம் சொல்ல என் தம்பி வயலுக்குத்தான் ஓடினான். அத்தை வீட்டு மாமா இறந்ததை கேள்விப்பட்டு அம்மா அப்பா வந்ததும் வயலில் இருந்துதான். இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்…..

  4. Cinima kalisadaigale endrenum eluthiyadhunda ungal eludhugol ippadi?vivasayithane endru alatchiyamaga kadanthu pogum yarayum pidithu ulukkum varigarl.kalivirakkam enbathu thuliyum indri sariyana arasiyal paarvayil vilaintha varigal.nee enna seithai vivasaym kaakka endru nermayaai nammai porada sollum varigal.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க