privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவல்லரசு இந்தியாவின் சாதனை : உலகளவில் புதிய தொழு நோயாளிகளில் 60% இந்தியர்கள் !

வல்லரசு இந்தியாவின் சாதனை : உலகளவில் புதிய தொழு நோயாளிகளில் 60% இந்தியர்கள் !

-

டந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய ஆறுமாத காலகட்டத்தில் மட்டும் இந்தியாவெங்கும் சுமார் 79,000 புதிய தொழு நோயாளிகள் கண்டறியப் பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்திரபிரதேச மாநிலத்தில் சுமார் 13,423 பேருக்கும், பீகாரில் 12,742 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 8,000 பேருக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்களில் பத்தாயிரத்துக்கு 8 பேரிடம் இந்நோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு பத்தாயிரம் பேரில் ஒருவருக்கும் குறைவான தொழு நோய்த் தாக்கம் இருக்கும் நாடுகளில் அந்நோய் ஒழிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் என்கிற வரைமுறை ஒன்றை வகுத்துள்ளது. இதனடிப்படையில் 2005 -ம் ஆண்டே இந்தியாவில் தொழு நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக ஆரவாரமாக அறிவிக்கப்பட்டது. எனினும், சமீப ஆண்டுகளில் உலகளவில் கண்டறியப்படும் தொழு நோயாளிகளில் 60 சதவீதம் இந்தியாவில் கண்டறியப்படுகின்றது.

2014 -ம் ஆண்டு 1,25,785 புதிய நோயாளிகளும், 2015 -ம் ஆண்டு உலகளவில் கண்டறியப்பட்ட 2,11,973 புதிய நோயாளிகளில் 1,27,362 பேர் (60 சதவீதம்) இந்தியர்கள். அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படும் நோயாளிகள் ஒருபக்கமென்றால், பல்லாயிரக் கணக்கானவர்கள் தங்களுக்கு தொழுநோயின் தாக்கம் இருப்பதை சமூகப் புறக்கணிப்புக்கு அஞ்சி வெளிப்படையாக தெரிவிப்பதையோ, சிகிச்சை எடுத்துக் கொள்வதையோ தவிர்த்து விடுகின்றனர்.

2016 -ம் ஆண்டு செப்டெம்பர் – அக்டோபர் மாதங்களில் இவ்வாறு அறிவிக்கப்படாத நோய் தாக்கத்தை கண்டறிய மத்திய அரசால் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட மருத்துவ சர்வேயின் முடிவில், ஆயிரக்கணக்கான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். பீகாரில் மட்டும் இவ்வாறான நோயாளிகள் சுமார் 4,400 பேர் கண்டறியப்பட்டனர்.

இந்தியா தற்போது புயல் வேகத்தில் வல்லரசாகி வருவதால் நிலவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் விண்கலன்களை அனுப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு. ஒரு வல்லரசுக்கு அழகு, சுத்தமான தூய்மையான நகரங்கள் என்பதால், நமது நகரங்களுக்கு ஒப்பனை செய்யும் திட்டங்கள் அதி வேகத்தோடு நடந்தேறி வருகின்றன. மெட்ரோ இரயில் திட்டங்கள் ஒரு சில பெருநகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேறு பல நகரங்களுக்காக மெட்ரோ அல்லது மோனோ இரயில் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

தொழுநோய், மலேரியா, அம்மை போன்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்த வாய்ப்புள்ள நோய்களையே கூட கட்டுப்படுத்த வக்கற்ற அரசு தான் வல்லரசு கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம், பசி பட்டினிச் சாவுகளையோ, விவசாயிகள் தற்கொலையையோ கூட தடுக்க முடியாத இந்த நாட்டின் பேரரசர் மற்ற நாட்டுத் தலைவர்களின் முன் தனது முகத்தைக் காட்ட கொஞ்சமும் கூச்சப்படுவதில்லை.

தொழுநோய், மலேரியா போன்ற நோய்களில் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஏழை மக்களே பெருவாரியான அளவில் பாதிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு குறைந்தபட்ச நம்பிக்கையையாவது கொடுத்து வந்தன அரசு மருத்துவமனைகள். இப்போது, அரசு மருத்துவமனைகளையும் தனியார் வசம் ஒப்படைக்க வரைவுத் திட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைக் கட்டிடங்களைத் தனியார் மருத்துவமனைகளின் வசம் 30 ஆண்டு லீசுக்கு விட மேற்படி வரைவுத் திட்டம் வகை செய்கின்றது. லீசுக்கு எடுத்த அரசு மருத்துவமனைக் கட்டிடங்களில் 50 -ல் இருந்து 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளைத் தனியார் முதலாளிகள் ஏற்படுத்திக் கொண்டு லாபம் சம்பாதிக்கலாம்.

அதே போல் மாவட்ட அரசு மருத்துவமனைகள் தங்கள் வசமுள்ள இரத்த வங்கி, ஆம்புலன்சு உள்ளிட்ட வசதிகளைத் தனியார் மருத்துவ கார்ப்பரேட்டுகளோடு பங்கிட்டுக் கொள்ளவும் இப்புதிய சட்டம் வகை செய்யவுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு போதுமான வாடிக்கையாளர்கள் கிடைப்பதை உத்திரவாதப்படுத்தும் வகையில், ஒவ்வொரு நாளும் ஆயிரம் நோயாளிகளுக்கு மேல் கையாளும் அரசு மருத்துவமனைகளையே முதற்கட்டமாக தனியார்மயமாக்க வேண்டும் என நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதாரத் துறை வகுத்துள்ள வரைவுச் சட்டம் தெரிவிக்கின்றது.

கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல தூண்டி விடப்பட்டு தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் பசுபயங்கரவாதத்தின் நோக்கமே அரசாங்கம் தனியார் முதலாளிகளின் கால்களை நக்கும் செயல்களை மக்களின் கண்களில் இருந்து மறைப்பதற்காகத் தான் என்பதை மைய அரசின் இந்தப் புதிய முயற்சி அம்பலப்படுத்துகின்றது. இந்துத்துவ அரசியலும் கார்ப்பரேட் அடிவருடித்தனமும் வேறுவேறல்ல என்பதை நிரூபிக்கும் வேலையை நமக்கு அவர்களே மிச்சப்படுத்திக் கொடுக்கின்றனர்.

செய்தி ஆதாரம் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி