Wednesday, April 21, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க PRPC : ராவ் - ரெட்டி - விஜயபாஸ்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன்...

PRPC : ராவ் – ரெட்டி – விஜயபாஸ்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன் ?

-

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

150-இ, ஏரிக்கரை சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை-20.தொடர்புக்கு: 9865348163  vanchiadv@gmail.com
______________________________________________________________________

பத்திரிக்கை   செய்தி

  • மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்!
  • மணல் மாபியா சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ், வருமானவரித்துறை சோதனையில் பிடிபட்ட அமைச்சர் விஜயபாஸ்கரை குண்டர் சட்டத்தில் அடைக்காதது ஏன்?

தழியல் மாணவியும், இயற்கை பாதுகாப்புக் குழு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வளர்மதியை தமிழக அரசு கடந்த 17.07.2017 அன்று குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில்  மத்திய, மாநில அரசுகளைப் பணிய வைத்து,வெற்றி பெற்ற, தமிழக மாணவர்களை திட்டமிட்டு ஒடுக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியே வளர்மதி கைது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின் தமிழகத்தில் மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் மத்தியில் உரிமை சார்ந்த விழிப்புணர்வும், போராட்டமும் அதிகரித்துள்ளது. ஆனால் தங்கள் ஆட்சி எவ்வளவு நாள் இருக்குமோ? தெரியவில்லை! முடிந்த அளவு சம்பாதிப்போம் என்பதே  அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நிலையாக உள்ளது. இதற்காக, பாஜக மோடி அரசுக்கு தமிழகத்தை கிட்டத்தட்ட தாரைவார்த்து விட்டது எடப்பாடி அரசு.

மாணவி வளர்மதி, திருமுருகன்காந்தி

இப்புரிந்துணர்வின் ஓர் அங்கமாக மோடி அரசுக்கு எதிரான நெடுவாசல், நீட், கதிராமங்கலம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களையும் மிகக் கடுமையாக ஒடுக்கி வருகிறது தமிழக அரசு. முகநூலில் எழுதுபவர்கள், கல்லூரிகளில் துண்டறிக்கை விநியோகிப்பவர்கள், ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் என அனைவரையும் கைதுசெய்கிறார்கள்.

பொய்வழக்கு, குண்டர் சட்டம், தேசத் துரோகம் எனச் சொல்லி சிறையில் அடைக்கிறார்கள். கதிராமங்கலத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 65 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது இதற்கு ஓர் உதாரணம். அரசியல் சட்ட அடிப்படை உரிமை என்பதே தமிழகத்தில் இல்லை எனும் நிலை உருவாகியுள்ளது. சிறிய ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்ட அனுமதி கூட நீதிமன்றம் சென்று வாங்கும்நிலை உள்ளது.

இச்சூழலில்தான் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கு உட்பட்டு அமைதியாகக் கூடிய மே 17  திருமுருகன், துண்டறிக்கை விநியோகம் செய்த மாணவி வளர்மதி ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கதிராமங்கலம் போராளிகளுக்கு பிணை மறுக்கப்படுகிறது.

வெள்ளையர் காலத்தில் பெங்கால் ஒழுங்குமுறைச் சட்டம் 1818, இந்திய பாதுகாப்புச் சட்டம் 1939 மற்றும் ரவுலட் சட்டத்தின் கீழ், அரசை எதிர்த்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக போர்க்காலத்தில் மட்டுமே இத்தடுப்புக் காவல் சட்டங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இன்று அரசியல்சட்டத்தின் ஆட்சி நடப்பதாகச் சொல்லி, வெள்ளையர் ஆட்சியை விடக் கொடுமையான முறையில் தடுப்புக் காவல் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1268 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 90% பேரின் கைது தவறென விடுவிக்கப்பட்டுள்ளனர். இதே சமயத்தில் கர்நாடகாவில் 232, குஜராத்தில் 219 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் போர்க்காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் தடுப்புக் காவல் சட்டங்கள், இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக எல்லாக் காலத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. இது மாபெரும் மனித உரிமை மீறல் குற்றமாகும். தடுப்புக் காவலில் தவறாகக் கைது செய்யப்பட்டவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இதற்கான சட்டமே இந்தியாவில் இல்லை.

சமீபத்தில் தெலுங்கானாவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விதை உற்பத்தியாளர் மீதான வழக்கை(வி.சாந்தா எதிர் தெலுங்கானா அரசு) ரத்துசெய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், நவீன் சின்கா அமர்வு “மற்ற சட்டங்களில் வழக்குப் போட வாய்ப்புள்ளபோது, குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது; குடிமகனின் வாழ்வு, சுதந்திரத்தைப் பாதிக்கும் தடுப்புக் காவல் உத்தரவு, அரசியல் சட்ட  சரத்துக்கள் 14,19,21,22-யை மீறக்கூடாது. என்ன நோக்கத்திற்கு சட்டம் இயற்றப்பட்டு, அதிகாரம் வழங்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கே சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்; ஏனெனில் ஒரு குடிமகனின் தனிமனித சுதந்திரம் மிகவும் முக்கியமானது; இதில் அதிகார துஷ்பிரயோகம் கூடாது” என்று தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தொடர்ச்சியாகச் செய்து, பொது ஒழுங்கு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் கிரிமினல்களை மட்டும்தான் குண்டர் சட்டத்தில் அடைக்க முடியும். மாறாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் போராடுபவர்கள், போராட்டத்தைத் தூண்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என சட்டசபையிலேயே அறிவிக்கிறார்.

இந்திய அரசியல் சட்டம் சரத்து 19-ல் போராடுவதும், போராட்டம் செய்யச் சொல்வதும் அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்தவருக்கு இது தெரியுமா? எனத் தெரியவில்லை. மேலும் வளர்மதி, திருமுருகன் மீது ஏற்கனவே இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் அனைத்து அமைப்புகள், கட்சியினர் மீதும் போராடியதற்காக வழக்குகள் நிச்சயம் இருக்கும். அனைவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கலாமா? குண்டர் சட்டத்தை, போராடுபவர்களுக்கு எதிராக விரிவுபடுத்துவது, மிகவும் அபாயகரமானது.

தி.மு.க ஆட்சியின்போது அதிமுகவினர் போராடவில்லையா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்ப்பாட்டம் நடத்தியதில்லையா? மக்களை போராடச் சொல்லவில்லையா? ஜெயலலிதா தண்டனைக்குள்ளானபோது அதிமுகவினர் செய்த அட்டூழியங்களை விடவா வளர்மதியும், திருமுருகனும் செய்து விட்டார்கள்? சேகர் ரெட்டியும், ராம்மோகன்ராவும், விஜயபாஸ்கரும், குட்கா ஊழலில் உள்ள காவல்துறை அதிகாரிகளும் குண்டர் சட்டத்தில் அடைக்கத் தகுதி அற்றவர்களா?

லஞ்சம், ஊழல் அடிமைத்தனத்தில் ஊறி தமிழ்நாட்டை விற்பவர்கள், மக்களுக்கு அறிவுரை சொல்வது அருவெறுப்பாக உள்ளது. மக்கள்தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும். உடனே வளர்மதியும், மே17 திருமுருகனும் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக அமைச்சர்கள், எம்.பி.க்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு, தமிழகத்தை ஆள்வதற்கு எவ்வித அருகதையுமற்று, பிஜேபி-யின் வழியில் நடக்கும் பினாமி அரசு தூக்கி எறியப்பட வேண்டும். அடக்குமுறையாளர்களுக்குப் பாடம் புகட்ட,  நெடுவாசல், கதிராமங்கலம், தமிழக விவசாயிகளைக் காக்க மாணவர்கள், விவசாயிகள், மக்கள் இணைந்து மீண்டும் ஓர் மெரினா எழுச்சியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும்.

வழக்கறிஞர்
சே.வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.
_____________

இந்த செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க