Sunday, November 29, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி ஏழைகளுக்கு எதற்கு எட்டாவது வரை படிப்பு ! - கவிதா சொர்ணவல்லி

ஏழைகளுக்கு எதற்கு எட்டாவது வரை படிப்பு ! – கவிதா சொர்ணவல்லி

-

ந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி கிடையாது என்கிற மசோதாவை தாக்கல் செய்யப் போவதாக “குலக்கல்வியின்” பால் வெறி கொண்டுள்ள மத்திய அரசு கூறி இருக்கிறது. (மதிப்பெண் இல்லாவிட்டால் 5-ம் வகுப்பிலேயே பெயில் ஆக்கும் திட்டமும் இதில் அடக்கம்)

காலையில் இதைப்பற்றிய விவாதமொன்றில் பேசிய அத்தனை பேரும் “கட்டாயத்தேர்ச்சிக்கு” எதிர்ப்பு தெரிவிக்கும் எலைட்டாகவே இருந்தார்கள். மாநகராட்சியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் ஏன் கருத்துக் கூற வரவில்லை என்பதை யோசித்துக்கொண்டே இருந்தேன்.

படிப்புக்கு மட்டுமே அதி தீவிர அக்கறை அளிக்கும் (தங்களது சொத்துக்களை குழந்தைகளின் மீது Invest செய்யும் ) ஒரு சமூகமும், பள்ளிக்குச் சென்றாலே போதும் (அன்றாடங்காய்ச்சி ) என்கிற மற்றொரு சமூகமும் என்றுமே நேர்கோட்டில் இணையமுடியாது என்பதற்கான எளிதான சான்று இது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் பதிவை சிலநாட்களுக்கு முன் கடக்க நேரிட்டது. அதில் “பொது தேர்வுக்காக பிறசாதி பிள்ளைகள் பத்து டியூஷன்களுக்கு சென்று கொண்டிருக்கையில், வீட்டில் சண்டையில்லாது அமைதியான ஒரு சூழலுக்காக நாங்கள் போராட வேண்டி இருந்தது. பாதி நேரங்கள் தெருவிளக்கில் படித்துதான் பரீட்சை எழுதினேன்” என்றிருந்தது. எவ்வளவு உண்மை இல்லையா இது ?

“எல்லாருக்குமான வாய்ப்புகள்” என்பதே இங்கு பொய்யான ஒன்று. ஏனென்றால் அரசாங்கம் அளிக்கும் வாய்ப்புகள், அதற்கானவர்களுக்கு போய் சேருகிறதா ? என்பதும் அப்படியே கிடைக்கும் வாய்ப்புகளை யார் யாராரெல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிகிறது என்பதும் இன்றும் பதிலேயில்லாத கேள்விதானே.? பத்தாம் வகுப்புடன் குடும்ப பாரத்தை தன் தலையிலேற்றும் குழந்தைகள் பெரும்பாலானோர் வசிக்கும் நாடல்லவா இது ?

இப்படிப்பட்ட நாட்டில் ஒரு அரசின் வேலை என்னவாக இருக்க வேண்டும்? குறைந்தபட்ச அடிப்படைக்கல்வியை எந்த தடையுமின்றி ஒரு குழந்தைக்கு அளிப்பதைத்தவிர வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்?

என் சிறுவயதில் கூட “இந்த பஸ் எந்தூருக்கு போகுதுன்னு பாத்து சொல்லு தாயி”க்களை கேட்டிருக்கிறேனே. இன்று யார் அப்படி கேட்கிறார்கள்? எட்டாவது வகுப்பு வரையாவது எந்த தடையுமின்றி நம் குழந்தைகள் படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது தானே அதற்கு காரணம்.

பள்ளிக்குள் காலெடுத்து வைக்கிற குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் தார்மீக கட்டாயக் கடமை. ஆனால், மக்களால் தேர்வு செய்யப்பட்டாலும் பாசிச அரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு குலக்கல்வியை கொண்டு வருவதில்தான் பெரும் ஆர்வம். செருப்பு தைப்பவரின், மரம் வெட்டுபவரின், விவசாயக்கூலியின் மகன் /மகள் மாவட்ட ஆட்சியராக அமர்வதை இந்த பாசிச இந்துத்துவ அரசால் தாங்கிக்கொள்ள முடியுமா ?

முடியாதல்லவா ? இங்குதான் நம்மைப்போன்ற எலைட்களை குறி வைத்து “தரமானக்கல்வி” என்கிற சுவிசேஷ ஆராதனையை தொடங்குகிறது.தொடக்கக் கல்வியில் இருந்தே தரத்தை புகுத்துகிறோம் என்ற பெயரில் ஐந்தாம் வகுப்பு படிக்கிற குழந்தையையும் பெயில் ஆக்குகிற திட்டத்திற்கு வழிவகுக்கும் மசோதாவை தாக்கல் செய்யப்போவதாக மிரட்டுகிறது. எதிர்கட்சிகள் வலுவாக இல்லாத நேரத்திலும்,(இருந்தாலும் கிழிச்சுதான்) தைரியமான மாநில அரசுகள் இல்லதாத சூழலிலும் இப்படியான சட்டம் வருவதற்கான 100 % சாத்தியக்கூறுகள் உண்டு.

இப்படியான மசோதா வரும்போது என்ன நடக்கும் ? நான் முன்னமே சொன்னது போல “படிப்பதற்கு அமைதியான சூழல் கூட கிடைக்காத ஒடுக்கப்பட்ட(அனைத்து சாதியிலும்) குழந்தைகள் தங்கள் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் அல்லது எட்டாம் வகுப்புடன் நிறுத்தும் அவலங்கள் நடக்கலாம். நடக்கும்.தானாக குலக்கல்வி இங்கு உட்கார்ந்து கொள்ளும்.

இதையும் தாண்டி ஒன்று இருக்கிறது. பத்து வயதிலயே அந்தக் குழந்தையை “நீ படிப்பதற்கு லாயக்கில்லாதவன்” என்று மன ரீதியாக சிதைப்பது. படிப்பை பாதியில் நிறுத்தினால் கூட பிழைத்துக் கொள்ளும் நம்முடைய குழந்தைகள், இது போன்ற மனரீதியான சிதைவுகளை எப்படிக் கடப்பார்கள் ? வாழ்நாளுக்கும் துரத்தும் தோல்வி ஒன்றைத்தானே இந்த அரசாங்கம் அவர்களுக்குப் பரிசளிக்கக் காத்திருக்கிறது. இதை ஒருங்கிணைந்து தடுக்காவிட்டால் நம்முடைய குழந்தைகள் வாழ்நாளுக்கும் தோல்வியுற்றவர்களாக திரிவதைப் பார்க்கும் ஒரு கேடுகெட்ட சமூகமாக நாம் மாறிப்போயிருப்போம். அவ்வளவுதான்.

நன்றி: கவிதா சொர்ணவல்லி

_____________

கல்வி மக்களின் அடிப்படை உரிமை என்பதற்காக குரல் கொடுக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

 1. குலக்கல்வி முறையை கொண்டு வருவதுதான் மத்திய பார்ப்பன பி.ஜே.பி இன் சதித்திட்டம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும்!

 2. பத்தாம் வகுப்பில் அரசு பொது தேர்வு இருக்க அப்புறம் எதற்கு ஐந்திலும் ,எட்டிலும் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்யாத இந்த பெயில் முறை?அதனால் என்ன ஆகும் ? பெயிலாகும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் இருந்து விடுபடுவது தான் நடக்கும். அப்படி பள்ளியில் இருந்து விடுபடும் மாணவர்கள் எதார்த்தத்தில் சிறுவர் தொழிலாளராக தான் மாறுவார்கள்… அல்லது சமுக விரோதிகளால் கவரபட்டு செயின் சிநாட்சிங் ,திருடு ,கொள்ளை போன்ற சமுக விரோத செயல்களில் ஆசிரியர் இன்றியே தேறுவார்கள்..

  எனவே முதலில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை அரசு அரசு பள்ளிகளில் நியமிக்கட்டும்.. பின்பு அந்த மாணவர்களின் பருவ தேர்சியை (Tern progress) மாவட்ட கல்வி அலுவலர்(DEO) கண்காணிகாட்டும்.அந்த பருவத்தில் சரியான அறிவை பெறாத மாணவர்களுக்கு பள்ளியிலேயே தனி சிறப்பாக (Tuition) வகுப்புகளை நடத்தி அவர்களை மற்ற மானவர்கள அளவுக்கு கொண்டு வரட்டும்..இதற்கு என்று தனி சிறப்பாசிரியர்களை அரசு நியமிக்கட்டும்.. அதனை விட்டுவிட்டு ஐந்திலும் , எட்டிலும் எதற்காக மதிய அரசின் பேச்சை கேட்டுகொண்டு மாநில அரசு மாணவர்களை பெயிலாக்கி மட்டம் தட்டவேண்டும்…?

 3. கற்பனை உலகில் இருக்கும் சோசியலிசவாதிகள் , புத்தர்கள் மட்டுமே ஆசிரியராக கற்பனை செய்து கொண்டு எழுதிய உளறல் கட்டுரை.

  ஒரு ஆசிரியர் எந்த கல்வியும் புகட்டாமல் , தனது சொந்த வேலையை பார்த்து கொண்டு வந்தால் அதை எப்படி கண்டு பிடிப்பது ?

  சிறப்பாக செயல்படும் பள்ளியை எப்படி பிரித்தறிவது ?

  மாணவர்கள் எதுவும் கற்காமல் எட்டாவது வரை சென்று விட்டால் போதுமா ? கல்வி வேண்டாம் வெறும் சான்றிதழ் போதும் என்றால் , ஏழைகளுக்கு நீட் ஆக பிறந்தவுடனே எட்டாவது சான்றிதழ் கொடுத்துவிடலாமே?

  பெயில் செய்வதால் ஏழைகள் கல்வி கொடுக்கமாட்டார்கள் என்பது தவறு . ஒரு சிலர் படிப்பு வரவில்லை என்று செய்யலாம் ஆனால் பெரும்பான்மை ஏழைகள் படிப்பை தொடரவே செய்வார்கள் .

  • You only look at the world from your ivory tower.Like you said all teachers are not buddhas.At the same time,all the teachers are not scoundrals either.At least next time when Std 10 and Std 12 results are released,read some newspapers to know about the success stories of Govt school students/Corporation school students.Many no of govt school students scored high marks without attending tuition classes (they can not afford)and the rising no of 100% pass rates in Corporation schools.
   Teachers cannot remain absent nowadays,attendance figures are reported thro’SMS to Education deptt officials.Even in the present set up,there is alarming rate of drop-outs among the school students.

   • //Many no of govt school students scored high marks without attending tuition classes (they can not afford)and the rising no of 100% pass rates in Corporation schools.//

    How will you get these statistics, if there is no evaluation criteria?
    how many of your relatives sending their kids or will send their kids to schools where they wont get these statistics?
    Will you send your grand kid without knowing the school standard? With this kind of “all pass” system, how will you navigate and provide best education for your grand kids?
    What kind of information your son used before selecting a school?

    //Even in the present set up,there is alarming rate of drop-outs among the school students.//

    Doesnt it mean, problem lies elsewhere?

  • இராமன்,
   உண்மையில் கட்டாயத் தேர்ச்சி என்பது கிழிந்த காகிதத்தில் எழுதிய கிறுக்கல் போன்றது. கட்டாயத் தேர்ச்சியினால் அறிவுடைய மாணவ சமுதாயம் உருவாகாமல் போய் விடும் என்ற உங்களது கருத்து நல்லெண்ணத்தின்பால் கட்டமைக்கப்பட்டு இருப்பினும் எதார்த்தம் அதற்கு வலுவாக இல்லை.

   எடுத்துக்காட்டாக விக்கிபீடியாவின்படி இந்தியாவின் எழுத்தறிவு விழுக்காடு ஆண்கள்(82%) மற்றும் பெண்கள் (65.4%) என்பதாக இருக்கிறது. இதுவே உலகின் சராசரியை விட இரண்டு விழுக்காடு குறைவாக உள்ளதாக அதே விக்கி பக்கம் கூறுகிறது. தற்போதைய நிலவரப்படி உலக தரத்தை எட்டுவதற்கு 2060 ஆம் ஆண்டு நெருங்கி விடும். அதே போல 2000 க்கு முந்தைய பத்தாண்டுகளை விட 2001-2011 ஆம் பத்தாண்டுகள் படிப்பறிவு குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

   நடைமுறையில் கட்டாய தேர்ச்சி இருந்த போதிலும் பள்ளியில் இருந்து இடையில் நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு வெறும் வாய்ஜாலங்கள் தேவையில்லை. அரசுப் புள்ளி விவரங்கள் இருக்கின்றன.
   அதாவது மக்கள் கையெழுத்து போடுவதையே எண்ணிக்கையாக காட்டி உலக சராசரியுடன் மோத வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ஏற்கனவே அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசுப் பள்ளிகளின் தரம் பாரதூரமாக விழுந்து கொண்டிருக்கும் தற்போதைய நிலைமைகளிலேயே பள்ளிகளில் இருந்து இடை நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

   எங்களது கிராமத்துக்கு அருகில் இருக்கும் ஓராசிரியர் தொடக்கப்பள்ளிக்கு விரைவில் மூடு விழா நடத்தப்போகிறார்கள். அப்புறம் என்ன அங்கிருக்கும் ஏழை மாணவர்கள் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வேறொரு அரசுப்பள்ளியில் தான் சேர வேண்டும். அல்லது ஆங்காங்கே முளைத்திருக்கும் தனியார் பள்ளிகள் சேர்க்க வண்டும். அதே நேரத்தில் காலியாக இருக்கும் அரசு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதாலும் ஆசிரியர் பற்றாக்குறையினாலும் பள்ளிகளில் மாணவர்கள் / ஆசிரியர் விகிதம் குறையும்.

   அருகமை பள்ளிகளில் படித்துக் கொண்டு பெற்றோர்களுக்கு கிடைத்து வந்த சிற்சில உதவிகள் இனி கிடைக்காது. அருகமை தொடக்கப் பள்ளிகளில் தமது குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை விட்டு கூலிவேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் இனி அவ்வாறு அப்படி செல்ல முடியாது. ஏற்கனவே கழிவறை, தண்ணீர், மின் காற்றாடி, பெண் குழந்தைகளுக்கான நாப்கின் வசதிகள் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இல்லையென்பதால் ஏழைப் பெண்குழந்தைகள் குறிப்பிட்ட கட்டத்தில் தங்களது படிப்பினை நிறுத்துகின்றனர். இதில் கணிசமானோர் தற்போதைய கல்வி கட்டமைப்பினால் தேர்ச்சி செய்யப்பட்டவர்கள்.

   ஆசிரியர்கள் எண்ணிக்கையும் உள்கட்டமைப்பு வசதிகளும் கொண்ட சிலப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உண்மையில் தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் அளவிற்கு உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளுக்கும் ஏழை மாணவர்களுக்கும் அந்த கொடுப்பினை இல்லை.

   கட்டாயத் தேர்ச்சிக்கு எதிராக பேசுபவர்கள் முதலில் புதிய பள்ளிகள் கட்டபடமால் இருப்பதற்கும் இருக்கும் பள்ளிகளை பராமரிக்காமல் இருப்பதற்கும் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் இருப்பதற்கும் தரமில்லாத தனியார் பள்ளிகள் உருவானதிற்கும் பதில் சொல்ல கடமை பட்டவர்கள்.

   அரசுப்பள்ளியில் ஆசிரியர்/மாணவர் விகிதம் சரியாக இல்லையென்றால் கல்வித்தரம் குறையும். உள்கட்டமைப்பு வசதிகள் இல்லையென்பதால் குழந்தைகள் குறிப்பாக பெண்குழந்தைகள் விரைவிலேயே பள்ளியில் இருந்து நிற்கும் சூழல் ஏற்படுகிறது. அப்புறம் என்ன குழந்தை திருமணம் தான். உலகிலேயே குழந்தைத் திருமணம் அதிகமாக நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை நினைவில் கொள்க. அதனால் தான் கல்வியறிவு விழுக்காட்டில் ஆண்களை விட பெண்கள் குறைவாக இருக்கிறார்கள். இதன் விளைவு அரசுப்பள்ளிகள் தரமில்லாதவை. கல்வித்திறன் இல்லாத குழந்தைகள் இடையிலேயே நின்றி விடுகின்றனர். அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டும்(ஏற்கனவே நடக்கிறது) என்ற ஒப்பாரி காதைக் கிழிக்கிறது.

  • இராமன்,

   முதலில் இந்தக் கட்டுரை ஒரு சோசலிசவாதி எழுதியது இல்லை என்பதை நீங்கள் அணிந்திருக்கும் கூகிள் கண்ணாடியை சுழற்றி எடுத்து வைத்து விட்டு கருணையுடன் பார்க்குமாறு பணிவுடன் கேட்கிறேன். கண்ணாடியை போட்டுக் கொண்டு அனைத்தையும் மேட்டிமைத்தனத்துடன் பார்ப்பதால் வரும் வினை இது. சரி விடுங்க. அது உங்க வர்க்கத்துடன் பிறந்தது.

   சிறப்பாக செயல்படும் பள்ளி, ஆசிரியர்கள்,மாணவர்களை எப்படி பிரித்தறிவது? இது உங்களது கவலை.

   ஓராசிரியர் பள்ளிகள், கழிவறை, தண்ணீர் வசதிகள், நாப்கின் வசதிகள் இல்லாத அரசுப்பள்ளிகளில் படித்து எப்படியாவது எழுத படிக்க தெரிய வேண்டும் இது ஏழைகளின் கவலை.

   என்ன ஹேருக்கு எங்களது வரிப்பணத்தில் அரசுப்பள்ளிகள் இயங்க வேண்டும்…உங்களது மைன்ட்வேர்ட்ஸ் கேக்குது. கவலைபடாதீர்கள்.

   ஆனால் எப்படியும் இந்த நிலையே நீடித்தால் புதிய சட்டம் கூட தேவையில்லை. அதாவது கூடிய விரைவில் அரசுப்பளிக்களே ஒழிந்து விடும். அதாவது சோசலிசம் ஒழிந்துவிடும். அப்புறம் என்ன நீங்கள் விரும்பியது போல 100 விழுக்காடு தரமான தனியார் பள்ளிகள், தரமான ஆசிரியர்கள், தரமான மாணவர்கள் உருவாகி விடுவார்கள். சம்பளம் எங்கு அதிகம் கிடைக்குமோ அங்கே உழைக்க சென்று விடுவார்கள்.

   ஆனால் என்ன? அந்த 100 விழுக்காடு அறிவாளிகள் ஒட்டுமொத்த மக்களை கணக்கிடும் போது கால்வாசி கூட தேறமாட்டார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க