கென்யாவில் கடந்த 2006-ம் ஆண்டு எடுக்கப்பட்ட யூனிசெஃப் அறிக்கையின்படி மூன்றில் ஒரு குழந்தை விபச்சாரத்தில் தள்ளப்படுகிறது.
கென்யாவில் 50% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிப்பதாலும், ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாததாலும் கென்யக் குழந்தைகள் இந்த அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இன்றைய நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி விபச்சாரம் தான். குழந்தைகளை விபச்சாரத்தில் தள்ளுவது சட்டப்படி தவறு என்றாலும் அது குறித்து கொஞ்சம் கூட கவலையின்றி வெளிப்டையாகவே நடத்தி வருகின்றனர் விபச்சாரத் தரகர்கள். விபச்சார சுற்றுலா என்ற பெயரில் ஐரோப்பாவிலிருந்து 50 வயதைக் கடந்தவர்கள் இங்கு அதிகம் வந்து செல்கின்றார்கள்.
குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதில் உலகளவில் கென்யா 5-ம் இடத்தில் உள்ளது. 8 முதல் 9 வயதுடைய பெண் குழந்தைகள் கூட விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். புத்தகம் மற்றும் சீருடை வாங்க முடியாத பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் நின்று விடுகின்றனர். இவர்களில் பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் குழந்தைகள் காப்பகத்தில் தஞ்சமடைகின்றனர். இப்படி இவர்கள் தஞ்சமடையும் காப்பகங்கள் தான் விபச்சாரத்திற்கான தொடக்கப் புள்ளிகளாகின்றன.
இன்னொரு புறத்தில் குழந்தைகளைக் காக்கின்றோம் என்ற பெயரில் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இவையனைத்துமே குழந்தைகளை விபச்சாரத்திலிருந்து காப்பதற்குப் பதிலாக அவர்களை வைத்து விபச்சாரம் நடத்தி காசு சம்பாதிப்பதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
ஒரு வேளை உணவுக்காக உடலை விற்கும் அவலத்திலும், தங்க இடம் தந்தால் உடலுறவு இலவசம் என்ற நிலையிலும் வாழ வேண்டிய அவலத்தில் கென்யக் குழந்தைகள் தவிக்கின்றனர்.
தானே ஒரு குழந்தை மனநிலையில் இருக்குபோது, தன் கையில் ஒரு கைக்குழந்தையுடன் அவர்கள் இருக்கும் காட்சி நம்மை உறைய வைக்கிறது. அதில் ஒருவர் தனக்குப் பிறந்த குழந்தைக்கு அப்பா யார் என்று தெரியவில்லை என்று சொல்லும்போது நம் நெஞ்சம் பதறுகிறது.
ஏகாதிபத்தியங்களால் சூறையாடப்பட்ட ஆப்ரிக்க நாடுகளின் அவல நிலைக்கு கென்யா ஒரு சான்று. மனிதாபிமானம், ஜனநாயகம், குழந்தைகள் நலன், பெண்ணுரிமை, வறுமைக்கு எதிரான போர் என பல்வேறு வார்த்தைகளில் தமது நாகரீகத்தைப் பேசி ஏமாற்றும் ஏகாதிபத்தியங்களின் உண்மை முகத்திற்கு கென்ய குழந்தைகள் உதாரணம்.
இந்த ஆவணப்படம் கென்ய குழந்தைகளின் அவல நிலையை படம்பிடித்துக் காட்டுகிறது.
நன்றி : RT Documentary
_______________________
ஆப்ரிக்க நாடுகளில் அவலநிலையை எடுத்துக் கூறும் இந்தப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக்குரலான வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி