Tuesday, March 21, 2023
முகப்புசெய்திதாய்ப்பாலுக்கு சமமான தண்ணி விசமானது - மக்கள் நேருரை !

தாய்ப்பாலுக்கு சமமான தண்ணி விசமானது – மக்கள் நேருரை !

-

ஞ்சையில் ஆகஸ்டு 5, 2017 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “விவசாயியை வாழவிடு” மாநாட்டின் மாலை அமர்வில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், கதிராமங்கலகம் மற்றும் நெடுவாசல் கிராமங்களில் இன்றுவரை தங்களின் உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்து வரும் மக்கள் நேருரையாற்றினர்.

கதிராமங்கலம்

ங்கள் போராட்டத்தை கலைக்க போலீசு கொடுமையாக  தாக்கினாங்க. எங்க கிராமத்த சேர்ந்த 9 பேரைக் கைது செய்து கூட்டிட்டு போனாங்க. அதுல நாலு பேர்  பெண்கள்.  நாங்க எல்லோரும் பெண்களை  விட சொல்லி போராடினதும் பெண்களை மட்டும் விட்டுடாங்க. மறுநாள் சாயங்காலம் வீட்டுக்குள்ள புகுந்து ஒரு பெண்ணை அடித்து இழுத்து போனாங்க. இன்றுவரை 37 நாள் ஆகுது. ஆனாலும் நாங்க போராட்டத்த கைவிடல.

எங்களுக்கு ஆதரவா குரல் கொடுக்கிறவங்கள, எங்க கிராமத்துக்குள்ளேயே விடுறது இல்ல. எங்களுக்காக நோட்டிசு கொடுத்த வளர்மதிய குண்டாசு சட்டத்துல போட்டுடாங்க. அதுக்காக மாணவர்கள் போராடுகிறார்கள். பெண்கள் தைரியமாக போராடுகிறார்கள்.  இந்த போலீசு நம்மை பயமுறுத்த பார்க்கிறாங்க. நாம பயப்பட வேண்டாம். டாஸ்மாக் பிரச்சனையை முடிச்ச மாதிரி இதையும் முடிச்சிட்டு தான் போகணும். நாம இப்ப விட்டுட்டோம்னா வீட்டை எல்லாம் காலி பண்ணுங்கனு சொல்லிடுவாணுவ. மக்கள் சக்தியை மீற உலகத்தில் வேற எந்த சக்தியும் இல்லை. நாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

தாய்ப்பாலுக்கு சமமான தண்ணிய குழந்தைங்களுக்கு ஒவ்வொரு முறையும் கொடுக்கும் போது விசத்த கொடுக்கிற மாதிரியே இருக்கு. அந்த அளவுக்கு தண்ணிய நாசமாக்கிடானுங்க ONGC -காரனுங்க. கேட்டா எங்களால பாதிப்பு இல்லை. நாங்க தண்ணி ரிப்போர்ட்ட கலக்டருகிட்ட கொடுத்துட்டோம்னு சொல்லுராங்க. உங்களால பாதிப்பு இல்லனா? வேற யாரு குழாய் போட்டதுன்னு சொல்லுங்கடா? விவசாயியா போட்டது? எங்க இடத்த நாசமாகிட்டு வேற இடத்துக்கு நீங்க போய்டுவிங்க. நாங்க எங்க போறது?

எங்களுக்காக போராடின ஐயா ஜெயராமன் மேல கத்தி, அருவா வச்சிருந்தார்னு கேசு போட்டிருக்கீங்க. அவரு என்ன பேட்ட ரவுடியா? சொல்லுங்க? எங்களுக்காக போரடினவரு. நாங்க எங்க நிலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் நிலம்னு அறிவிக்க சொல்லி போராடுறோம். அவனுங்க பாதுகாக்கப்பட்ட பெட்ரோலிய பகுதியா அறிவிக்க பாக்குறாங்க. எங்களை போராட தூண்டுறது அரசு தான். ஆனா போராடுறவங்க மேல  குண்டாசு போட்டு தண்டிக்கிது போலீசு. நம்மளோட போராட்டம் மட்டும் தான்  இதுக்கு தீர்வு.

பசுமை ராமநாதன், நெடுவாசல் போராட்டக்குழு.

விவசாயியை வாழவிடு என்ற இந்த மாநாடு காலை முதல் சிறப்பாக நடந்து வருகிறது. தம்பிக்கோட்டை பகுதியில் இருந்து ஐம்பது விவசாயிகள் வேன் வாகனம்  வைத்து வந்துள்ளோம். இது மக்கள் வெள்ளம் தானா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்த மாநாட்டை தமிழகம் முழுவதும் நடத்தினால் விவசாயம் பாதுகாக்கப்படும்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க போறாங்க என்ற செய்திய கேட்டதும் எங்க நெஞ்சே வெடித்து விட்டது போல இருந்துச்சி. அன்று முதல் இன்று வரை போராடி வருகிறோம். தமிழகத்தில் நெல் முதல் அனைத்து பயிர்களும் செழிப்பாக வளரக்கூடிய பகுதி நெடுவாசல்.

நெடுவாசல் திட்டம் நிறைவேறாது என்று வாக்குறுதி கொடுத்த கொள்ளையடிக்கும் ஒரு கும்பலால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். பிஜேபி அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நான் பார்த்துக் கொள்கிறேன் சென்னை வாங்க என்றார். நாங்க ஒரு முப்பது பேரு போனோம். ஆனா எங்களுக்கு எந்த நல்ல தீர்வும் கிடைக்கல. டெல்லிக்கு போகலாம்னு அழைத்து பேசினாங்க. உங்க பகுதிக்கு அந்த திட்டம் வராது என்று சொல்லிய உதடு காயரதுக்குள்ள ஜென் கம்பனியோட ஒப்பந்தம் போடுறாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் போராடிகிட்டு இருக்கோம்.

திரு சின்னத்துரை, மாவட்டச் செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம், திருச்சி

கதிராமங்கலம் மக்கள் என்ன கேட்கிறார்கள்? எங்களைக் காப்பாற்றுங்கள் என்றா இல்லை உதவி செய்யுங்கள் என்றா? அப்படியல்ல மாறாக வாழவிடுங்கள் என்று கதறுகின்றனர். போலிசை விட்டு மிருகத்தனமாகத் தாக்கவிடும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இயக்குவது யார்? எடப்பாடி தானே. விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவன் நான் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இல்லையா இ.பி.எஸ்-க்கு.

வறட்சி குறித்த ஆய்வறிக்கை தயார் செய்த ராஜீவ் ரஞ்சன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழகத்தில் வறட்சியினால் யாருமே தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று வாய் கூசாமல் சொன்னார்.போராட்டத்தைத் தவிர இவர்களை எதிர்க்க வேறு வழியில்லை. மக்கள் அதிகாரம் அமைப்புடன் சேர்ந்து இந்த அரசை எதிர்த்துப் போராட வேண்டியது நம் கடமை.

வரதராஜன், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தலைவர்.

“நெஞ்சு வெடித்து சாகிறான்” என்ற முழக்கத்துடன் திருவாரூரில் தொடங்கிய எழுச்சி, இன்று தஞ்சையில் “விவசாயியை வாழவிடு” என்ற முழக்கத்தில் எழுச்சிகரமாக நடக்கிறது. கடந்த மூன்று மாதமாக இந்த மாநாட்டிற்காக உழைத்த அத்தனை தோழர்களுக்கும் நன்றி. தமிழகத்தில் மதுவுக்கு எதிராக மக்கள் போராடிய போது ஒரு பெரும் எழுச்சியை உருவாக்கியது மக்கள் அதிகாரம். அதை முடித்தும் காட்டியது.

ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் விவசாயிகள் மடிந்தார்கள். அது செய்தியாக நாம் பார்த்தது. இன்று நம் வீட்டில் அது நடந்துள்ளது. ஆனால் இந்த அரசு மவுனமாக இருக்கிறது. இது எவ்வளவு வெட்கக்கேடானது.

இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தை நினைத்து  பார்த்தால் நெஞ்சை உலுக்குகிறது.  இந்த குடும்பங்களுக்கு ஆட்சியாளர்கள் எந்த ஆதரவும் தராமல், ஆறுதலாக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இறந்தவர்களின் குடும்பத்தைக் கொல்கிறது அரசு.

விவசாயியின் மரணத்தை காதல் தோல்வி, வயது மூப்பினால் இறந்தார்கள் என்று கூறி அவர்களை அவமானப்படுத்துகிறார்கள். டெல்டா மாவட்ட பகுதியில் வறட்சியின் காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளதே, இந்த கால்நடைகள் மரணத்திற்கு என்ன காரணம் சொல்வீர்கள்?

பிஜேபி-காரன் ஒருவன் தியாகம் செய் என்று சொல்லுகிறான்.  ஒரு ஆராய்ச்சி மாணவன் தவளையின் நான்கு கால்களை வெட்டிய பிறகு தவளைக்கு காது கேட்காது என்று தனது முடிவுக்கு வந்தானாம். அதுபோல நமது விவசாயத்தில் சுயசார்புகளை அழித்து விட்டு வளர்ச்சிக்காக தியாகம் செய்வதில் தவறில்லை என்கிறான். அப்படி கூறிவிட்டு இன்னும் திரிகிறான் என்றால் நாம் முன்னேறி செல்ல வேண்டிய தூரம்  நிறைய உள்ளது.

தமிழகத்தில் விவசாயத்தை  அழிப்பதையே ஒரு கொள்கையாக வைத்துள்ளது அரசு,  பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது.  நம்மை வாழவைக்கும் நிலத்தில் செருப்பு போட்டு நடப்பது தவறு என்று நினைக்கும் பண்பாடு நம்மிடம் உள்ளது. அந்த நிலத்தில் பன்னாட்டு கம்பனிக்காரன் ஒருவன் கால் வைக்கிறான் என்றால் அவன் காலை நாம்  வெட்ட வேண்டும்.

– வினவு செய்தியாளர்கள்

_____________

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க