privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசு வழிப்பறி – நேரடி ரிப்போர்ட் !

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசு வழிப்பறி – நேரடி ரிப்போர்ட் !

-

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 3 போலீஸார் கடந்த 08-08-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமாநிலங்களில் விவசாய அழிவு, விவசாயத்தில் இருந்து அந்த மக்கள் படிப்படியாக வெளியேற்றப்படுவது, குறைந்த கூலிக்கு கொத்தடிமையாக  வேலை செய்வது என்ற நிலை தான் உள்ளது. இச்சூழலில் வடமாநில மக்களின் இடம்பெயர்வு அதிகரித்து வருகிறது. அப்படி வருபவர்களின் முதல் தெரிவு  தமிழ்நாடாகத் தான்  இருக்கிறது. அப்படி வந்தவர் தான் ஒடிசாவைச் சேர்ந்த 23 வயது பீரேந்திர ரெட்டி.

பீரேந்திர ரெட்டி பி.ஏ. இளங்கலை மாணவனாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது தந்தை இறந்து விட்டார். அவருடைய அண்ணன் மாற்றுத் திறனாளி. தாய் உடல் நிலை சரியில்லாதவர் என்ற நிலையில் குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இரண்டு மாதத்துக்கு முன்பு சென்னை வந்து நாளொன்றுக்கு ரூ.300 சம்பளத்தில் முகலிவாக்கத்தில் கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார்.

வழிப்பறியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட காவலர்கள் அருள்தாஸ் (இடது), ராமகிருஷ்ணன், இருதயராஜ்

இந்நிலையில் கேரளாவில் சாப்பாட்டுடன் தினமும் ரூ.350 சம்பளம் தருவதாக நண்பர் ஒருவர் கூறியதால் அங்கு செல்வதற்காக 6-ம் தேதி இரவு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். கேரளாவுக்கு செல்லும் ரயில் புறப்பட்டு சென்றுவிட்டதாக ரயில்வே பணியாளர்கள் கூறியதால் மறுநாள் செல்லலாம் என நினைத்து ரயில் நிலைய நடைபாதை  அருகே படுத்துவிட்டார். அதிகாலை 2 மணிக்கு 3 போலீஸார் வந்து, அவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி இருட்டறைக்கு அழைத்துச் சென்று பணம், செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர். பீரேந்தர் தன் குடும்ப நிலையை விளக்கியும் கேளாத போலிசார் அவரைக் கடுமையாகத் தாக்கி பணம், கைக்கடிகாரம், செல்போனை பறித்துக் கொண்டனர்.

‘பெற்றோரிடம் பேச வேண்டும். போனையாவது கொடுங்கள்’ என்று அவர்களின் காலில் விழுந்து கதறியதை சில பயணிகள் பார்த்து விட்டதால் செல்போனை மட்டும் கொடுத்து விட்டுச் சென்றனர். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை  நினைத்து போலீசில் புகார் அளித்துள்ளார் பீரேந்தர். வழக்கமாக இத்தகைய புகார்கள் கொடுக்கச் சென்றால் கூடுதல் தண்டனை தான் மக்களுக்கு கிடைக்கும்.

ஆனால் பீரேந்தர் விவகாரம், முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யும்  தற்போதைய ரயில்வே ஐ.ஜி. யுமான பொன் மாணிக்கவேலுக்கு சென்றிருக்கிறது. அதன் பின்னர் நடத்தப்பட்ட  விசாரணையைத்  தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் வழிப்பறியில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன், இருதயராஜ், அருள்தாஸ் மூவரும்தான் குற்றவாளிகள் என உறுதி செய்தனர்.

இந்த 3 போலீசும் பூந்தமல்லியில் உள்ள 13-ம் சிறப்புக் காவல் படை பிரிவைச் சேர்ந்தவர்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்றங்களை தடுக்கவும் ரயில்வே போலீஸாருடன் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட வந்தவர்கள்.இவர்கள் பயணிகளாக வரும் வடமாநிலத் தொழிலாளர்களை குறி வைத்து வழிப்பறி செய்து வந்திருக்கின்றனர். வழிப்பறி செய்த பணத்தில் மது அருந்துவது, சினிமா, வணிக வளாகங்களுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வாழ்வது இவர்களது வாடிக்கை.

கைது செய்யப்பட்ட 3 போலீஸார் மீதும் இந்திய தண்டனை சட்டம் 341 (சட்ட விரோதமாக தடுத்தல்), 342 (சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்), 393 (வழிப்பறி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வினவு செய்தியாளர் நேரில் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றார். அங்கே சுமை தூக்கும் பணியாளர்கள், ஆட்டோ தொழிலாளிகள் சொல்வது என்ன?

சுமை தூக்கும் பணியாளர் ஒருவர்:

சென்ட்ரல் ஸ்டேசன்ல இது மாதிரி நிறைய நடந்திருக்கு. நாங்க இங்கயே வேலை செய்வதால் இதையெல்லாம் கண்டுக்க மாட்டோம்.  இங்க எதுவா இருந்தாலும் காசு தான். பொதுவா பயணிகள் கிட்ட போலீசு நடந்துக்கிற விதமே மோசமாத்தான் இருக்கும். நம்மள மாதிரி சாதாரண ஆளா இருந்தா அசிங்கமாத் திட்டுவாங்க, அடிப்பாங்க.  இதுவே கொஞ்சம் பணக்காரனா இருந்தா கண்டுக்கவே மாட்டாங்க. முக்கியமா சேட்டுப் பசங்க கிட்ட போகவே மாட்டாங்க.

சுமைதூக்கும் தொழிலாளர்கள்

லக்கேஜ் ஏத்திக்கிட்டு வர வியாபாரிங்க தான் பாவம். 40 கிலோ லக்கேஜ் எடுத்துட்டு வரணும். ஒரு ஒரு கிலோ அதிகமாயிட்டா கூட  600,700-ன்னு காச புடிங்கிடுவானுங்க.  சோதனை பண்றோம்னு பயணிகளோட பாக்கெட்ல இருக்குற செல்போனை முதல்ல எடுப்பாங்க. அப்புறம் பணம் இருக்கான்னு செக் பண்ணுவாங்க. ஏதாவது நீங்க எதுத்து பேசினா, ஸ்டேசனுக்கு வா, அங்க வந்து எல்லாத்தையும் சொல்லுன்னு மிரட்டுறது ஒரு தொழிலாவே இருக்கு. இது போக TTR க்கும் செம கலக்சன் வரும்.

நாப்பதாயிரம், அம்பதாயிரம் சம்பளம் வாங்குற இவனுங்களுக்கு எதுக்கு சார் இன்னொரு வருமானம்? எப்படியும் ஒரு நாளிக்கு ஆயிரம் ரூபா இல்லாம வீட்டுக்கு போகவே மாட்டங்க. நாங்க பயணிகள் கிட்ட பத்தோ, இருபதோ கேட்டு தான் வாங்குவோம். இன்னிக்கு எல்லாம் வீல்வச்ச பேக்கா வந்துடுச்சி, அதனால அவங்களே எடுத்துகிட்டு போயிடுறாங்க. எங்களுக்கு சுத்தமா வருமானமே இல்ல,  நாங்க உழைக்கிறோம் கேட்டு வாங்குறோம், அவங்களா விருப்பட்டுத் தருவாங்க.. ஆனா இவங்களுக்கு இன்னா சார் கேடு?  ஏமாந்தவன் யாராவது கெடச்சா உருவிக்கினு விட்டுரானுங்க.

பிரிபெய்ட் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்

இங்க வடமாநில தொழிலாளி, தமிழ் தெரிஞ்சவங்க அப்படிங்குற பாகுபாடு எல்லாம் கிடையாது. எல்லாருக்கும் ஒரே நிலைமை தான். வேற மொழிக்காரங்கன்னா, கொஞ்சம் பயம் இல்லாம பண்ணுவாங்க.  அது தான் வித்தியாசம். அதோட, கேசு போடுற சீட்டு ஒரிஜினலே இல்ல சார். எங்க கிட்ட கொடுத்து தான் சார் ஜெராக்ஸ் போடச் சொல்லுவாங்க.

இங்க ஆயிரம் ஆட்டோ தொழிலாளி இருக்கோம். யார எப்ப புடிச்சினு போவானுங்கன்னே தெரியாது. அவனுங்களுக்கு கேசு வேணும்னா புடிச்சி அபராதம் போடுவாங்க. நாங்க உள்ள கேட்டுகிட்டே (gate) போயிட்டு சவாரிக்கு கூப்பிட்டா உடனே ஃபைன் போடுவாங்க என்று கூறிக்கொணடே தான் கட்டிய அபராத தொகைக்கான  ரசீதை காண்பித்து, இப்படி இருந்தா நாங்க எப்படி சார் பொழப்ப பாக்குறது. இவங்க அட்டூழியம் மோசமா இருக்கு சார். நான் சொல்றதை விட நீங்களே நேரடியா எல்லாத்தையும் பாக்கனும்னா, ஒரு நாள் வேணும்னே கைதாகி ஸ்டேசன்ல உட்காருங்க. எவ்ளோ அப்பாவிய புடிச்சின்னு வந்து கேசு போடுவாங்கன்னு உங்களுக்கே தெரிஞ்சிடும் என்கிறார்.

தடையின்றி வந்து போகும் கால் டாக்சி

பாஸ்ட் ட்ராக், ஓலா உள்ளிட்ட கார்கள் தாரளமாக உள்ளே வரும். பயணிகள் நடந்து செல்லும் வழியில் அடைத்து கொண்டு நிற்கும். இதை எல்லாம் கொஞ்சம் கூட போலிசு கண்டுக்காது. கால் டாக்ஸி வரும்… இதுக்கெல்லாம் சவாரி புடிச்சி கொடுக்கிறதுக்குன்னே புரோக்கர்ஸ் இருக்காங்க. இவங்கள எல்லாம் எந்த தடையும் இல்லாம போலீசு அனுமதிக்குது .

அதேபோல ரயில்வேக்கு சொந்தமான யானைக்கவுணி நுழைவாயில் அருகே கஞ்சா,சரக்கு உள்ளிட்ட போதைப் பொருட்கள் எல்லாம் விக்கிறாங்க. அந்த ஏரியாவுல இருக்க பசங்க எல்லாம் சுத்தமா கெட்டு போறாங்க. பெண்கள் எல்லாம் நடமாடவே கஷ்டமா இருக்கு. இந்த இடத்துல இதெல்லாம் விக்கறது ரயில்வே போலீசுக்கு தெரியும். ரெண்டு முறை ரெய்டு வந்தாங்க.. அதுக்கப்புறம் கண்டுக்கிறதே இல்ல.அதனாலேயே இங்க நிறைய தப்பு நடக்குது. வழிப்பறி, செல்போன் திருட்டு எல்லாம் இங்க சாதாரணம்.

அப்படி யாரு அத பண்றாங்கன்னும் ரயில்வே போலீசுக்கு தெரியும். இப்ப தான இவங்கள புடிச்சிருக்காங்க. இந்த மாதிரி ஸ்ட்ரிக்டா நடவடிக்கை எடுக்கிறவங்க நூத்துல ஒருத்தவங்க தான் இருக்காங்க. அதுவும் எவ்ளோ நாளைக்குன்னு தெரியல. ஆனா ஒன்னு எங்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறது பயணிகள் தான். அவுங்க தான் எங்களுக்கு கடவுள் மாதிரி. இந்த மாதிரி பயணிகள் கிட்ட கொள்ளையடிக்கிறவங்களோட கைய வெட்டனும்.

——————–

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து போகும் ஒரு பெரிய ரயில் நிலையம். முழு இந்தியாவும் இங்கே வந்து போகிறது. போலீசுக்கு இது போதாதா ? இங்கே பல்வேறு வகைகளில் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். அதுவும் போதாது என்று இப்படி நேரடியாக வழிப்பறியும் செய்கிறார்கள். பீரேந்தர் துணிந்து புகார் கொடுத்தார். அதை ஏற்று நடவடிக்கையும் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி போலீசு வழிப்பறி செய்வது, மாமூல் வாங்குவது எல்லாம் ரயில்வே போலீசு அதிகாரிகள், ரயில்வே உயர் அதிகாரிகள் அனைவரும் தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த டீக்கடையில் தொங்கிய மாலை நேர செய்தித்தாளில் “ வழிப்பறி செய்த மூன்று போலீசார் கைது” என்ற செய்தித் தலைப்பைப் படித்து விட்டு  ” போலீசு வழிப்பறி பண்றது எப்பவும் நடக்கிறது தான். ஆனா போலீசையே கைது பண்ணினது தான் அதிசயமா இருக்கு”  என்று சொல்லிக் கொண்டே ஆர்வமாக செய்தித்தாளை வாங்கிச் சென்றார் ஒருவர்.

வழிப்பறி, கொள்ளையிலிருந்து மக்களைக் காப்பதற்காக இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் போலீசு, எதார்த்தத்தில் வழிப்பறிக் கொள்ளைக் காரனாகவே இருக்கிறது. இதன் மூலம் மக்களின் மீது அதிகாரம் செலுத்தும் தனது தகுதியை இழந்துள்ளது. ஒரு கொள்ளைக் கும்பலின் பாதுகாப்பிலா நாம் வாழ முடியும்? மக்களைக் காப்பதற்காக இருப்பதாகக் கூறிக் கொள்ளும் போலீசின் அருகதை இதுதான் என்றால் மக்கள் ஏன் தம்மைக் காப்பாற்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது?

_____________

போலீசு – அதிகாரவர்க்கத்தின் அராஜகங்களை அம்பலப்படுத்தும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க