privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விசென்னை ஐஐடி : சூரஜ்ஜை தாக்கிய மணீஷுக்கு தண்டனை இல்லை !

சென்னை ஐஐடி : சூரஜ்ஜை தாக்கிய மணீஷுக்கு தண்டனை இல்லை !

-

சென்னை ஐ.ஐ.டி.யில், இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர் சூரஜ் தாக்கப்பட்ட சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். அது குறித்து விசாரிக்க ஐஐடி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டி, நடப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், நடந்த சம்பவங்கள் குறித்த தனது பார்வையையும், குற்றமிழைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ’தண்டனை’களையும் குறிப்பிட்டுள்ளது.

தாக்கப்பட்ட மாணவர் சூரஜ் – ஐ.ஐ.டி. இயக்குனர் வீட்டு முன் மாணவர்களின் போராட்டம் – பேரணி

மத்திய அரசு, கறிக்காக மாடு விற்கத் தடை விதித்து இயற்றிய அரசாணையை எதிர்த்து ஐஐ.டி. சென்னையில் கடந்த மே மாதம் சில மாணவர்களால் மாட்டுக்கறித் திருவிழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளே அவ்விழாவில் பங்கேற்ற சூரஜ் என்ற மாணவர், ஐ.ஐ.டி. வளாகத்திற்குள்ளேயே, மணீஷ் என்ற ஹிந்துத்துவ வெறியனால் தாக்கப்பட்டார்.  இது தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். அதோடு ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் மாட்டுக்கறித் திருவிழாவை நடத்தினர்.

இத்தாக்குதல் குறித்து விசாரிக்க, சென்னை ஐ.ஐ.டி.-ன் இயக்குனர், விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டி ஒன்றை உருவாக்கினர். இச்சம்பவத்தை விசாரிக்க 2 முழு மாதங்களை எடுத்துக் கொண்ட அக்கமிட்டி, கடந்த வாரத்தில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் சூரஜ் மீது தாக்குதல் தொடுத்த மணீஸ்-ற்கு விடுதியில் தங்குவதற்கு ஆறு மாத காலத்திற்குத் தடையையும், ’கடும் கண்டனத்தையும்’ கமிட்டி விடுத்துள்ளது. அதே போல, தாக்குதல் சம்பவம் குறித்து மற்றவர்களிடம் தெரிவித்த ’குற்றத்திற்காக’, தாக்கப்பட்ட சூரஜ்-ன் நண்பர் ஒருவருக்கும் ’கடும் கண்டனத்தைத்’ தெரிவித்துள்ளது. இத்தகைய ’கடும் கண்டனத்தை’ இரண்டு முறை ஒரு மாணவர் பெற்றால், அவருக்கு விடுதியில் தங்க அனுமதி மறுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்த்துவா கிரிமினல் மணீஷ்

தாக்குதல் தொடுத்த குற்றவாளி மணீஷுக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள தண்டனை என்பது மிகச் சாதாரணமானது. விடுதியில் மது அருந்தினாலோ, புகை பிடித்தாலோ கொடுக்கப்படும் தண்டணை தான் ”கடும் கண்டனம்” தெரிவிப்பது. சக மாணவர் மீது கொலை வெறித் தாக்குதல் தொடுத்த ஒருவனுக்கும் அதே தண்டனை தான் என்றால் அது எவ்விதத்தில் நியாயமானது?

இந்தியாவின் முதன்மைக் கல்வி நிறுவனத்தில் ஒரு மாணவனைக் கொலை வெறியோடு தாக்க முயற்சித்த ஒரு கிரிமினலை, நியாயப்படி கல்லூரியை விட்டு நிரந்தரமாக நீக்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சமாக அந்தக் கிரிமினல் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, பாதிக்கப்பட்ட மாணவரிடம் மன்னிப்புக் கேட்டு, அவரும் அதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இடை நீக்கமாவது செய்ய வேண்டும். ஆனால் இங்கு வெறும் அறிக்கையில் “கடும் கண்டனத்தை’த் தெரிவித்து தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டி.

மேலும் அவ்வறிக்கையில், நடந்த தாக்குதல் சம்பவத்தை ’வெவ்வேறு கருத்தியல்களைக் கொண்ட இருதரப்பு மாணவர்களுக்கு இடையிலான மோதல்’ எனக் குறிப்பிட்டுள்ளது. அதோடு  மாணவர்கள் சக மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் என்று புத்திமதியும் கூறியிருக்கிறது.

இந்த அறிக்கை குறித்து சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், தமது முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டியின் இந்த அறிக்கையை முழுக்க முழுக்க பொய்யும், வஞ்சகமும் கலந்த அறிக்கை எனச் சாடியிருக்கிறது.

நடந்த சம்பவத்தை இருதரப்பு மாணவர்களுக்கிடையிலான மோதல் என்று குறிப்பிடுவதன் மூலம், சூரஜ்ஜையும் குற்றவாளியாக்க முயற்சிக்கிறது விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டி. அதாவது குற்றவாளியிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக புகாரும், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களையும் குற்றவாளியாக்கி, வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் போலீசு கிரிமினல்களின் அதே உத்தியை ‘தேசத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனத்தின்’ நிர்வாகமும் செய்துள்ளது.

மாட்டுக்கறி திருவிழாவில் மாட்டுக்கறி சாப்பிட்ட ஒரு மாணவரிடம், ’மாட்டுக்கறி திருவிழாவில் பங்கேற்ற அனைவரையும் கொன்று விடுவேன்’ என மறுநாள் பகிரங்கமாக மிரட்டியிருக்கிறான் மணீஷ். அது குறித்து அம்மாணவர் ’மாணவர்களுக்கான டீன்-னிடம்’ மணீஷ் கொலை மிரட்டல் விடுப்பதாகப் புகார் அளித்துள்ளார். அது குறித்து டீன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மறுநாள் தான் மணீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சூரஜ்ஜைத் தாக்கியுள்ளான். இதில் இருதரப்பு மோதல் என்பது எங்கே இருந்து வந்தது?

இந்த விவகாரத்தில் சென்னை ஐ.ஐ.டி.யைப் பொறுத்தவரையில், அதன் நிர்வாகம் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்.-ன் ஒரு ’ஸ்லீப்பர் செல்’-லாகவே வேலை பார்த்துள்ளது. இப்பிரச்சினையை விசாரித்த மாணவர்களுக்கான ’டீனு’ம், இணைப் பதிவாளர் ஜெயக்குமாரும், வளாகத்தின் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்குமாறு சூரஜை நிர்பந்தித்திருக்கின்றனர். அதற்கு உடன்படாமல் மறுத்த சூரஜ்ஜுக்கு ’தண்டணை வழங்கப் போவதாக’ மிரட்டியுள்ளார் ஜெயக்குமார். அப்படியிருந்தும் பணியாத அவருக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு சமாதானப்படுத்தி கையெழுத்துப் பெற முயற்சித்து இருக்கின்றனர், ஐ.ஐ.டி. நிர்வாகத்தினர். இப்போது சொல்லுங்கள், இவர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் ’ஸ்லீப்பர் செல்’லா இல்லையா ?

ஏற்கனவே மணீஷின் மிரட்டல்கள் குறித்து டீன் அலுவலகத்தில் புகார் செய்யச் சென்ற மற்றொரு மாணவரிடம், அவரது முகநூலில் உள்ள அரசியல், சமூகக் கருத்துக்களை நீக்குமாறும், அவையே இப்படிப்பட்ட பிரச்சினைகளை வளர்க்கின்றன என்றும் மாணவர்களுக்கான டீன் கூறியுள்ளார். ஆனால் மணிஷை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை. இது தான் மாணவர்களுக்கான டீனின் இலட்சணம். சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் இப்படி இருக்கையில், அங்கிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்பான “மாணவர் சட்டசபை மன்றம்” நிர்வாகத்திற்கு அப்பட்டமான ஊதுகுழலாகவே இருந்து வந்திருக்கிறது.

சூரஜ் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்

சென்னை ஐ.ஐ.டியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ’ஃபிஃப்த் எஸ்டேட்’ (Fifth Estate) என்ற இணையதளத்தின் செயல் ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட வருண் ஸ்ரீதர் என்ற மாணவரின் நியமனத்தை இரத்து செய்திருக்கிறது மாணவர் சட்டசபை மன்றம். அம்மாணவர் செய்த குற்றம் என்னவெனில், சூரஜ்ஜின் மீதான தாக்குதலைக் கண்டித்து ”மாட்டுக்கறியும் தாக்குதலும்: சென்னை ஐஐடியில் என்ன நடக்கிறது?” என்ற கட்டுரையை வேறொருவருடன் இணைந்து எழுதியது தான். ஒரு பானைச் சோற்றுப் பதத்திற்கான ஒரு சோறு தான் இந்தப் பொய்.

ஏற்கனவே மாணவர்களின் பிரச்சினைகளுக்காகவும், சமூக, அரசியல் பிரச்சினைகளுக்காகவும், ’அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச்’ சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பிரசுரங்கள் கொடுத்து வந்ததைத் தடுக்க இதே மாணவர் சட்டசபை மன்றத்தை ஐ.ஐ.டி. நிர்வாகம் உபயோகித்தது. ’பிரசுர காகிதங்களால்’ ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மான்களுக்கு உடல் உபாதை ஏற்படும் என்ற ’அரிய கண்டுபிடிப்பை’ முன் வைத்து பிரசுரங்கள் கொடுப்பதைத் தடை செய்தது  மாணவர் சட்டசபை மன்றம்.

கடந்த ஆண்டு மாணவர் சட்டசபை உறுப்பினரான, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒருவரை மாணவர் சட்டசபை மன்றக் கூட்டத்திலேயே, தாக்கியுள்ளான் மணீஷ். மாட்டுக்கறி விவகாரத்திலும், தாக்குதல் தொடுப்பதற்கு முந்தைய நாள் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து, திட்டமிட்டு தான் சூரஜ் மீதான தாக்குதலையும் தொடுத்துள்ளான் மணீஷ்.

இப்படிப்பட்ட தொடர் குற்ற வரலாறு கொண்ட ஒரு கிரிமினலை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டிய போலீசோ, வழக்கம் போலக் குற்றவாளியிடம் பொய்ப் புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்கை நீர்த்துப் போகச் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனம் என்று தம்மைத் தாமே பீற்றிக் கொள்ளும் ஐ.ஐ.டி.யோ போலீசை விட கேடு கெட்டுப் போய், பொய்க்கதைகளை சித்தரித்து அறிக்கை தயாரித்துக் குற்றவாளிக்கு மொன்னைத் தனமான தண்டனைகளைக் கொடுத்து தமது நிறம் காவி தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

நிகழ்ந்துவரும் நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றை மட்டும் மிகத் தெளிவாக நமக்குக் காட்டிச் செல்கின்றன. அரசு, போலீசு, கல்வி, என அனைத்துத் துறைகளும் காவித் தேள்களின் விசக் கொடுக்குகளுக்கு இடையே சிக்கியிருக்கின்றன. மற்றுமொரு குஜராத்தாகவோ, உத்திரப் பிரதேசமாகவோ தமிழகம் மாறாமல் காக்க, ஒட்டுமொத்தத் தமிழகமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது!

மேலும் படிக்க:

“Severe reprimand” For murderous attack!! What next? Double-Severe reprimand for Murder?

Student who attacked beef-eaters punished

——————————————————————————
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் ! – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி