முகப்புஅரசியல்ஊடகம்பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா ?

பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா ?

-

பிக்பாஸ் இரசிக்கப்படுவது ஏன்? பாகம் 2

“பிக்பாஸ் வீட்டிலிருந்தால் ஓவியாவுக்கு விதவிதமா சமைத்துப் போட்டு அசத்தியிருப்பேன், மிஸ் பண்ணிட்டேனே” என்று வருந்தினார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அந்த நேரம் ஓவியாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கவில்லை. பிக்பாஸ் குடும்பத்தினர் வெளியேற்றும் பட்டியலில் ஓவியாவை முன்னிறுத்திய நாட்களில், அவர் பெற்ற மக்கள் ஆதரவு குறித்து சாரு நிவேதிதா நிச்சயம் கொண்டாடியிருப்பார்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா

பிறகு சாருவும் ஓவியா – பிக்பாஸ் குறித்து நிறைய எழுதி விட்டார். ஒருவேளை தான்தான் ஓவியா குறித்த ரசனையை மக்களுக்கு கற்றுக் கொடுத்ததாகக் கூட அவர் நினைத்திருக்ககலாம். மோடியை அவர் ஆதரித்த போது சாருவின் ரசிகர் வட்டமே ஏற்கவில்லை போன்ற பிரச்சினை பிக்பாஸில் இல்லை. இது எல்லா வகையிலும் பாதுகாப்பானதோடு, பலவகைகளில் அவருக்கு ஆதாயங்களையும் தரும்.

சாருவின் சீடரான அராத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பங்கேற்று, கமலஹாசனைப் பற்றி ஒரு விசயத்தைக் கூறினார். தமிழ் சினிமா புதுமைகள் பல கமலிடமிருந்தே துவங்கினாலும் கீழே மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கேட்க முடியாத உயரத்தில் கமல் இருப்பதாக வருத்தப்பட்டார் ஜெயமோகன். “பாபநாசம்” படத்திலிருந்து அவருக்கு கமல் நெருக்கமாகி பல ‘டிஸ்கஸன்கள்’ முடிந்திருந்தாலும் ஜெயமோகனால் கூட கமலின் “நானேதான்” பேச்சுக்குள் புகுந்து கருத்தை தெரிவிப்பது மிகுந்த சிரமம் என்றார்.

ஜெயமோகனும் கூட கழிப்பறை, தூக்கம் தவிர வருடம் முழுவதும் பேசக்கூடியவர்தான். அப்பேற்பட்டவர் கூட கமலின் சன்னிதானத்தில் பாட முடியவில்லை.

கமல் என்றில்லை தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றாலே அந்த இயக்குநரின் அலுவலகத்தில் உள்ள பெரிய படுக்கையறையில் விரிக்கப்பட்டிருக்கும் உரையாடல் மெத்தையின் தலைமூலையில் அவரும், படுக்கையின் பக்கவாட்டில் ஐந்து – பத்து உதவி இயக்குநர்களும் அமர்ந்திருப்பார்கள். அவ்வப்போது சிற்றுண்டி எடுத்து வரும் பணியாளர்களின் பாத அதிர்வு தவிர அங்கே வேறு மனிதச் சப்தம் இருக்காது. அதாவது இயக்குநர் மட்டும் நான்ஸ்டாப்பாக “நானேதான்” என பேசிக் கொண்டிருப்பார்.

சினிமாவில் கலையை கட்டுப்படுத்துவது மூலதனம் என்பதால், சினிமா-மாந்தர்களை சர்வாதிகாரம் கட்டுப்படுத்தும். நாட்டாமைத்தனத்தில் நாட்களைக் கழிப்பவர்கள் முந்தைய அடிமை – இன்றைய ஆண்டான் எனும் இரட்டைப் பிறவிகளைத் தாண்டி வேறு பாத்திரத்தை ஏற்பதில்லை. காயத்ரியை வெறுப்பவர்களுக்கு இது புரிந்திருக்கலாம்.

அப்பேற்பட்ட கமலை பிக்பாசின் நெறியாளராக இறக்கியிருக்கிறார்கள். அவரது பெரு ஊதியம், சபாஷ் நாயுடு, விஸ்வரூபம் 2 திரைப்படங்களை நல்ல விலைக்கு விஜய் டிவியே வாங்கும் ஒப்பந்தம் போக இமேஜும் முக்கியம். ஆரம்ப நாட்களில் அவரது கெட்டப் சோபிக்கவில்லை என்று ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள்.

முதல் எலிமினேசன் (நீக்கம்) நபரை அறிவிக்கும் நேரத்தில் (காதில் இருக்கும் கருவி மூலம்) “உடனே யாரெனச் சொல்லாதீர்கள் என்கிறார்கள்” என கமல் நகைப்புடன் சமாளித்தார். நீயா நானா-வில் கோபிநாத்தை இயக்குநர் ஆன்டனி இயக்குவது போல கமலையும் யாரோ ஒருவர் இயக்குகிறார். கௌரவமாகக் கூறுவதென்றால் யாரோ ஆலோசனை கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் பங்கேற்பு இல்லாமல் வெற்றியடையாது என்பது ஓர் அடிப்படை நிபந்தனை. ஆகவே ஆரம்பத்தில் கமல் தானே பேசும் மூடில் இருந்தாலும் பின்பு கைதட்டலுக்காக பேச வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார் அல்லது ஓதக் கேட்டு ஏற்றிருப்பார்.

பரணி வெளியேற்றப்பட்ட நாளில் அவர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பரணி சிக்சராக அடிக்க அடிக்க மக்கள் கைதட்டல் அலைஅலையாகக் கிளம்ப சில நேரம் டியூப்லைட் போல தாமதமாகவே கைதட்டினார் கமல். பிறகு அவரது கிச்சன் கேபினட் வகுப்பெடுத்திருக்கும். பிந்தைய வாரங்களில் அவர் பொதுப்புத்தியை கைப்பற்றும் நோக்கில் முயன்றார். தான் மக்களின் பிரதிநிதி என்றும், ஓவியாவை ஆதரிப்பதும், காயத்ரியை எதிர்ப்பதுமான பாணியில் காட்டிக் கொண்டார்.

இதன் போக்கில் இருட்டறையில் காண்பிக்கப்படும் “ஆடியன்ஸ்” ஒத்திகையை சரி செய்து கொண்டார்களோ என்னவோ, எப்போது கைதட்டல் வேண்டுமோ அப்போது கமல் மக்களைக் கண்ணால் பார்ப்பார், அமைதி இடைவெளி விடுவார், கையாலேயே தட்டச் சொல்வார். பிறகு டியூப்லைட் சரியான நேரத்தில் எரிய ஆரம்பித்தது.

சென்ற வாரம் காயத்ரிக்கு பெருவாரியான மக்கள் வாக்களித்து வெளியேற்றும் நேரத்தில் வியாழக்கிழமை அன்று பிக்பாஸ் காயத்ரியை காப்பாற்றியதாக பலர் பொங்கினர். அந்த பொங்கல் தனக்கும் உண்டு எனக் கமலும் இலை-காய் மறையாக பேசி அதை பிக்பாசிடமே கேட்டார்.

விசித்தரமானது என்று நாம் உச்சரிப்பதை விஜித்திரமானது என்று யார் உச்சரிப்பார்கள்? அந்த ‘ஜி’-யை உச்சரிக்கும் பிக்பாஸ் ஜி, காயத்ரியை காப்பாற்றிய கதையைச் சொன்னார். “பிக்பாசின் விதிகள் விஜித்தரமானது, இது இன்டர்நேஷனல் ஃபார்மெட்டில் ஆடப்படும் விளையாட்டு, பார்வையாளர்களுக்கு பல விதிகள் தெரியாது, வீட்டில் இருப்போரால் வெளியேற்றப்படும் நபரை மக்கள் காப்பாற்றுவது போல, மக்கள் வாக்களித்து வெளியேற்றும் நபர் வேறு விதிகளால் காப்பாற்றப்படலாம் – திருப்பி அழைக்கப்படலாம் என்றார்.”

சரிங்க ஆபிசர், அது என்ன இன்டர்நேஷனல் ஃபார்மெட்?

கிரிக்கெட்டில் எல்.பி.டபிள்யூ, கால்பந்தில் ஆஃப்சைடு, கூடைப்பந்தில் ஐந்து ஃபவுல் போலவா அந்த விதிகள்? ஒரு வெங்காயமும் கிடையாது. பிக்பாஸ் வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் கம்பெனி விளம்பரங்கள். ஊர்க் கோவில்களில் கூட டியூப்லைட்டில்தான் எழுதியிருப்பார்கள். இங்கோ லைட்டு வெளிச்சத்தின் நிழலே விளம்பரமாக இருப்பது போல எங்கு பார்த்தாலும் ஆச்சி, ஆயுஸ், விவோ என்று ஒரே கூச்சல்.

ஐந்து நாட்களில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களின் கதையை பார்க்கும் மக்கள் வார விடுமுறை நாட்களில் ஒரு நபரின் வெளியேற்றுப் படலத்தையும், வெளியேறுபவரோடு கமல் உரையாடுவதையும் பார்க்கிறார்கள். இதில் எல்லா நாட்களிலும் விறுவிறுப்பு, சண்டை-சச்சரவு இருந்தாக வேண்டும். அப்படி இல்லாமல் வீடு அமைதியாக இருந்தால், டாஸ்க் என்ற பெயரில் பிக்பாசே கொளுத்திப் போடுவார். இந்த விறு விறுப்பின்றி நிகழ்ச்சியின் விளம்பரங்களும் சூடுபிடிக்காது. வேறு ஆட்களை கொண்டு வருவது, வெளியேறியர்களை மீண்டும் இறக்குவது என்று என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்பதே பிக்பாஸ் சொல்லும் அந்த “இன்டர்நேஷனல் ஃபார்மெட்”!

இப்படி விதிகளோ, வரம்புகளோ நடுவருக்கு அதாவது பிக்பாசுக்கு இல்லை என்பதை விதியாக வைத்திருக்கும் இந்நிகழ்வை, விளையாட்டு – கேம் என்று சொல்வது அபத்தம். ‘’ஜெயலலிதா இயற்கையாக மரித்தார் என்பதே என் கருத்து; ஆனாலும் மக்களின் கேள்விகளுக்கு விடை வேண்டும் என்றே விசாரணைக் கமிஷன் கோரினேன்’’ என்று ஓபிஎஸ் பேசினார் அல்லவா? அதையே இங்கு கமல் கொஞ்சம் நாடகத் தன்மையுடன் மக்களுக்காக பேசுவதாக நடிக்கிறார்.

நெதர்லாந்தில் பிக்பிரதராக இருந்து இந்தியாவில் பிக்பாசாக குதித்திருக்கும் இந்நிகழ்வின் கருவே போட்டிக்கு வருவோரிடம் நடக்கும் சண்டை, பொறாமை, சச்சரவு, கோள் மூட்டுதல், புறம் பேசுதல், வயிற்றெரிச்சல் போன்ற அற்பத்தனங்களை வைத்து சன் டிவியின் மாமியார் – மருகமகள் சீரியல் போல பரபரப்பேற்றுவதுதான். இதுதான் பிக்பாஸ் டீம் – விஜய் டிவி – கமல் – பிக்பாஸ் மற்றும் போட்டியில் இருக்கும் நடிகர்களின் இலக்கு. இதில் முதல் இருவருக்கு விளம்பரம், பின்னிருவருக்கு ஊதியம். இந்த யதார்த்த வகை நாடகத்தின் உணர்ச்சி அலையில் தத்தளிக்கும் ஏமாளிகளாய் மக்கள்.

நன்கு கவனித்துப் பாருங்கள். பிக்பாஸ் வீட்டில் நூறு கேமராக்களும், அவற்றின் படப்பதிவை அதாவது 100 X 24 மணிநேர பதிவுகளை ஒரு மணிநேரத்தில் எடிட் செய்தும் காட்டப்படும். பிறகு வார இறுதியில் கமல் வரும் போது, அந்த சண்டைகளின் தொடர்ச்சியாக மக்கள் யாரை வெளியேற்ற வேண்டும் என்று வாக்களித்து சமூக வலைத்தளங்களில் லா பாயிண்டுகளை அடுக்கி பேசுகிறார்களோ… அதில் பெரும்பான்மைக் கருத்தை பிரதிபலிப்பது போல பேசுவார் – விவாதிப்பார் – கேட்பார். ஆக போட்டியாளர்களின் கோணம், பிக் பாஸின் விதிகள், மக்களின் கருத்து, கமல் அதை பிரதிபலிப்பது என இந்த தொடரில் விறுவிறுப்பு ஏற்றுகிறார்கள். ஒருக்கால் பிக்பாஸை விளையாட்டு என்றால் அதன் விதிகள் இப்படித்தான் போங்காட்டமாக இருக்கின்றன.

அடுத்து பிக்பாஸ் தொடரை வைத்து மக்கள் பேசும் நீதி நியாயங்களை பார்ப்போம்.

பிக்பாஸ் வார நாட்களிலும், கமல் வார இறுதியிலும் வேலை செய்கிறார்கள். மக்களோ 24 X 7 என வாரம் முழுமையும் வேலை பார்க்கின்றனர். அதன்படி இவர்கள் தினசரி ஒன்றரை மணிநேரம் பார்க்கும் பிக்பாஸ் தொடரை வைத்து அந்த வீட்டில் இருக்கும் 101-ஆவது கேமராவாக மாறுகின்றனர். இதுதான் என்டமோல்ஷைன் – விஜய் டிவி-யின் வெற்றி.

அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதிலும் நமக்கு எப்போதும் ஆர்வம் அதிகம்.

அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதிலும் நமக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். அதிலும் அது இரகசிய காமரா என்றால் இரட்டை மகிழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தவர் அந்தரங்கம்+இரகசிய கேமரா ஒரு காம்போ என்பதால் பார்வையாளர்களுக்கு ஒரு கிளுகிளுப்பு. போர்னோ வகை படங்களில், தொழில்முறை போர்னோ நடிகர்கள் நடிக்கும் படங்களைக் காட்டிலும், திருட்டு கேமரா வைத்து படம் பிடிக்கப்படும் தனிநபர்களின் படுக்கையறைக் காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவமும், அதிக பார்வையாளர்களும் கிடைக்கிறார்கள். ஏனெனில் தொழில்முறை போர்னோ படங்கள் பார்வையாளனுக்கு அந்தரங்கமான உணர்வைத் தருவது இல்லை.

மாறாக இரகசிய கேமரா படங்களில், ஏதோ அவனே மறைந்திருந்து அதைப் பார்ப்பதைப் போன்ற உணர்வை அவன் பெறுகிறான். இதே அளவுகோலை பிக்பாஸுக்கும் பொருத்தலாம். இது, கூடவே உட்கார்ந்து விளக்குப் பிடித்துக்கொண்டிருக்கும் திருப்தியை நமக்கு வழங்குகிறது. அதனால்தான் காயத்ரி பேசும் கெட்டவார்த்தையின் மீது கெட்டகோபம் கொள்கிறீர்கள். ஓவியாவின் காதல் தோல்வி உங்களை மனத்தளர்ச்சி கொள்ள வைக்கிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பது அந்த 10 பேர் மட்டுமல்ல… நீங்களும்தான்.

அரபு நாடுகளில் குற்றம் இழைத்தவர்களை நடு வீதியில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்கிறார்கள். அதை ஊரே சேர்ந்து வேடிக்கைப் பார்க்கிறது. இந்த தண்டனையில் பார்வையாளர்களின் பாத்திரம் என்ன? கைகளால் அல்லது மனதால் அவர்களும் இரண்டு கல்லை எறிகிறார்கள். ஒரு பார்வையாளராக பிக்பாஸ் வீட்டில் நாமும் ஒரு உறுப்பினராக மாறிவிடுகிறோம்.

முதலில் இது வீடா? மூன்று வேளையும் தின்றுவிட்டு புறணி பேசிக்கொண்டு வீட்டிலேயே உடகார்ந்திருப்பதற்குப் பெயர் வீடா? எந்த வீட்டில் இப்படி இருக்கிறார்கள்? ஒரு மேட்டுக்குடி வீட்டில் கூட இப்படி இருக்கமாட்டார்கள். முதலில் இதை வீடு என அழைப்பதே அயோக்கியத்தனமானது.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நபர்களின் வர்க்க சேர்க்கையும், ஆளுமை பின்னணியும் கூட யாரும் இயக்காமலேயே முரண்படும்.

பலரும் நினைப்பது போல இந்த நிகழ்வை ஏதோ முன்கதை – திரைக்கதை எழுதி நடத்த முடியாது – அது தேவையும் இல்லை. ஆனால் இந்த யதார்த்தக் கதையின் பாதையையும், பல்டிகளையும் ஒரு திறமையான இயக்குநர் முன்கூட்டியே வடிவமைக்க முடியும். அதைத்தான் வார நாட்களில் பிக்பாஸ் ஜியும், வார இறுதியில் கமல்ஜியும் செய்கிறார்கள்.

இதை போட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதே நேரம் வாழ்க்கைக்கு தேவையான சில படிப்பினைகளையும் இதில் கற்கலாம் என்று பிக்பாஸ் தொடரை பொழுதுபோக்கு + வாழ்வியல் பாடம் என்று கமல் அடிக்கடி சூளுரைப்பதன் பின்னணியும் இதன் தீர்மானிக்கப்பட்ட பாதையை சமநிலையோடு ஏற்கச் செய்வதற்கே!

பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நபர்களின் வர்க்க சேர்க்கையும், ஆளுமை பின்னணியும் கூட யாரும் இயக்காமலேயே முரண்படும். சினிமா பின்புலத்திலிருந்து மார்க்கெட் இழந்தவர்களை எடுக்கும்போது அந்த முரண்பாடு வீரியமாகவும் இருக்கும். மற்றவர்கள் இயல்பாக சண்டை போட்டால் இவர்கள் அதை காவியச் சண்டையாக்கும் முன் அனுபவமுள்ளவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சினிமா மாந்தர்களிடையே வேர்விட்டிருக்கும் அடிமைத்தனம் கலந்த தனிநபர்வாதம் ஒன்றே ஒரு பெரும் போரை தோற்றுவிக்கும் சக்தி வாய்ந்தது.

சினிமா நடிகர்கள் என்பதால் மேக்கப், கவர்ச்சி, டயலாக், நடனம், நாடகம், நகைச்சுவை என மக்களுக்கும், சண்டை போக அழுகை, அமைதி, குமுறல், கோபம், சிரிப்பு, வருத்தம், கேலி என எல்லா உணர்ச்சிகளிலும் முக்குளிக்கலாம். எல்லா ‘ஜெனர்’களிலும் ரசிக்கலாம்.

முத்தாய்ப்பாய் வெளியேற்ற விரும்பும் நபர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். இந்நிகழ்வை நான்கு கோடிப்பேர் பார்க்கிறார்கள், ஒரு கோடியே முப்பது இலட்சம் பேர் வாக்களிக்கிறார்கள் என்று கமலஹாசன் முதல் வாரத்தில் அறிவித்தார். சமூகவலைத்தளங்களிலோ ஒவ்வொருவரும் ஆளுக்கு ஐம்பது – நூறு ஓட்டுப் போடுவதை பெருமையாக அறிவிக்கிறார்கள். ஐந்து லட்சம் பேர் போட்டாலே அதைக் கோடியாக காட்ட முடியும். அதே நேரம் இந்நிகழ்வை அதிகம் பேர் பார்க்கிறார்கள், வாக்களிக்காதவர்கள் கூட ஓவியா – காயத்ரி என்று சார்பு எடுப்பதை நாம் மறுக்கவில்லை.

காயாத்ரி காப்பாற்றப்பட்டதும் இனி ஓட்டே போட மாட்டேன் என பலரும் தேர்தல் புறக்கணிப்பு பேசுகிறார்கள். தமிழ் பிக்பாஸ் இவ்வளவு பிரபலமானதற்கு ஒரே காரணம் காயத்ரிதான். காயத்ரி இல்லாமல் மக்களின் பங்கேற்பு இந்த அளவுக்கு இருக்க முடியாது. ஆரம்பத்தில் காயத்ரி பேசிய “ஜல்லிக்கட்டு போராட்டம்”, ஜூலியை அழவைத்தது, பிறகு ஓவியாவை தனிமைப்படுத்தியது, தற்போது ரைசாவிற்கு டார்கெட் வைத்திருப்பது, இடையில் சேரி பிகேவியர், எச்சைங்க, மயிர் என ஐம்பது நாட்களையும் தனது தோளில் சுமந்து சென்றிருக்கிறார் இந்த அம்மணி!

எனவே காயத்ரி எனும் “வில்லன்” பிக்பாஸ் நிறுவனம் – கமலுக்கு மட்டுமல்ல, ஓவியா ஆர்மி துவங்குமளவு ஒன்றிய ரசிகர்களுக்கும் மிக மிக அவசியம். ஒருவேளை காயத்ரி ஆரம்ப வாரத்திலேயே சென்றிருந்தால் மக்கள் ஈடுபாடு இல்லாமல் ஷோ டல்லடித்திருக்கும். காயத்திரியை காப்பாற்றியதாக பிக்பாஸ் மேல் கோபம் கொள்வதற்கு பதில் நன்றி சொல்வதே ஓவியா ரசிகர்களின் முதல் கடமை.

பிக்பாஸ் போட்டியாளர்களை அரசியல் – சமூகம் – ஆளுமை சார்ந்து மக்கள் பரிசீலிப்பது சரியா?

(தொடரும்)

இதன் முந்தைய இறுதி பாகங்களுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் :

_____________

இந்தப் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க