privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது !

சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது !

-

ந்த ஆண்டும் குறுவை சாகுபடியை இழந்து நிற்கிறது, தமிழகம். வடகிழக்குப் பருவமழை பெய்யுமா, பெய்யாதா, சம்பா சாகுபடியாவது நடக்குமா, நடக்காதா எனத் தவித்துப்போய் நிற்கிறார்கள் விவசாயிகள்.

தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக குறுவையும், கடந்த ஆண்டு சம்பா அறுவடையும் இல்லாது போன நிலையில், ரேஷன் அரிசியும் பள்ளிக்கூட சத்துணவும்தான் கூலி, ஏழை விவசாயக் குடும்பங்களின் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் போயிருந்தால், தமிழகத்தின் நெற்களஞ்சியம் பட்டினிச் சாவிற்குத் தப்பியிருக்காது.

தலைஞாயிறு ஆற்றுப்பாலம் அருகே வேலைக்காகக் காத்திருக்கும் கூலி, ஏழை விவசாயிகள்

இது வாசகர்களை அதிர்ச்சியடைய வைப்பதற்காக மிகைப்படுத்திக் கூறப்பட்ட அனுமானம் அல்ல. உண்மை இதனைவிட அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் பரிதாபகரமானதாகவும் இருக்கிறது.

கீழத்தஞ்சை பகுதியில், தலைஞாயிறு ஒன்றியத்திலுள்ள உம்பளச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம், தாழ்த்தப்பட்ட கூலி விவசாயி. வறட்சியையும் சாகுபடி பொய்த்துப்போன துயரத்தையும் அப்பகுதி மக்கள் எப்படி எதிர்கொண்டு வருகிறார்கள் என்பது குறித்துத் தெரிந்துகொள்ள அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபொழுது, அவர் சொன்னார், ”காலையில நீராகாரம் சாப்பிட்டதுதான் சார், இனி ராத்திரி சோறு வடிச்சு, பிள்ளைங்க சாப்பிட்ட பிறகு இருப்பதைச் சாப்பிடணும்.”

இதனை எவ்வித மிகை உணர்ச்சியுமின்றி, மிக இயல்பாக என்னிடம் சொன்ன அந்த ரத்தினத்தின் வயது 71. பட்டினியைத் தாங்கக்கூடிய வயதா அது?

அதே ஊரைச் சேர்ந்த பொன்னுரங்கத்தின் கதை, ரத்தினத்தின் நிலையே மேல் என எண்ண வைத்துவிடுகிறது. பொன்னுரங்கத்திற்குப் புருஷனும் கிடையாது, பிள்ளைகளும் கிடையாது. ஆதரவற்ற அனாதை அவர். எட்டி நடக்க முடியாதபடி அவரது கால்கள் துவண்டு போய்விட்டன. அதனால் எந்தவொரு வேலைக்கும் அவரால் போகமுடியாது. ஊர்க்காரர்கள் கொடுக்கும் சோறு தண்ணியில்தான் அவரது வாழ்க்கை ஓடுகிறது.

71 வயதில் தினந்த்தோறும் அரைப்பட்டினியோடு போராடும் உம்பளச்சேரியைச் சேர்ந்த கூலி விவசாயி ரத்தினம்

கஞ்சி கிடைக்காத சமயங்களில் வெத்தலை பாக்குதான் அவரது உணவு. காலை நேரத்திலேயே வேப்ப மரத்தடியில் போய் உட்கார்ந்துகொள்கிறார். மரத்திலிருந்து விழும் வேப்பங்கொட்டைகளை ஒன்று ஒன்றாகப் பொறுக்கி எடுத்து, அதனைக் கடையில் கொடுத்துப் பண்டமாற்று முறையில் வெத்தலை பாக்கு வாங்கி வைத்துக் கொள்கிறார்.

இந்த மூதாட்டிக்கு முதியோர் ஓய்வூதியத் தொகையைக் கொடுக்க மறுத்துவருகிறது, அதிகார வர்க்கம். ரேஷன் கார்டு, ஆதார் அட்டை என எல்லாம் இருந்தும் அதிகார வர்க்கம் கேட்ட ரெண்டாயிரம் ரூபாய் இலஞ்சத்தை அவரால் கொடுக்க முடியவில்லை என்பதுதான் ஓய்வூதியம் மறுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம். ஊருக்குள் புதிதாக யாரைப் பார்த்தாலும், ”ஓ.ஏ.பி.யை எப்படியாவது வாங்கிக் கொடுங்க சாமி” எனக் கையெடுத்துக் கும்பிடுகிறார், அவர்.

ஓ.ஏ.பி.க்கு அனுமதி கொடுக்க மேல்சாதியைச் சேர்ந்தவர்களுக்கு 2,500 ரூபாயும், தாழ்த்தப்பட்டோர் என்றால் இரண்டாயிரம் ரூபாயும் இலஞ்சம் வாங்குகிறார்கள் எனக் கூறினார்கள், உம்பளச்சேரி மக்கள். இது அ.தி.முக. பிராண்டு சமூக நீதி!

உழைப்பதற்கு உடம்பில் வலு இருக்கும் சம்சாரிகளின் நிலையும், இன்று உணவுக்குத் திண்டாடும் நிலையில்தான் இருக்கிறது. தலைஞாயிறுக்கு அருகிலுள்ள காடந்தேத்தி என்ற கிராமத்தில் நூறுநாள் திட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களைச் சந்தித்து, குடும்பம் நடத்துவதிலுள்ள சிரமங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது, சுசீலா என்ற நடுத்தர வயதைக் கடந்த பெண், ”எங்களப் பார்க்கணும்னு வந்திருக்கிற நீங்க, ரெண்டு சாப்பாடு பொட்டலமும் வாங்கியாந்திருக்கலாம்” எனச் சாதாரணமாகச் சொன்னார். பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்பார்களே, அந்த நிலை!

சுசீலாவின் கணவர் கணபதிக்குச் சரிவர கண் தெரியாது. வயலுக்கு ஜிப்சம் அடித்துக் கொண்டிருந்தபோது, அந்த இரசாயனம் கண்ணில்பட்டு பார்வை ஏறத்தாழ பறிபோய்விட்டது. அவரின் மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் நிரந்தர வேலை கிடையாது. மின் வாரியத்தில் தினக்கூலியாக உள்ள ஒரு மகனின் வேலையை நிரந்தரமாக்க ஒரு இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்கிறார்கள். ”கஞ்சிக்குத் தொட்டுக்கறதுக்கே வக்கத்துப் போய் நிற்கும் நான், இலட்ச ரூபாய்க்கு எங்கே போவேன்?” என குமுறினார் சுசீலா.

***

காவிரியின் கடைமடைப் பகுதி நாகப்பட்டினம் மாவட்டம். அம்மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்திருக்கிறது தலைஞாயிறு ஒன்றியம். தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் நிறைந்த பகுதி அது. தமிழக வறட்சி குறித்து ஆய்வு செய்ய வந்த மைய அரசின் குழு பார்வையிட்டுச் சென்று போன ஊர் தலைஞாயிறு. பாசனத்திற்கு மட்டுமல்ல, குடிநீருக்கே திண்டாடும் அளவிற்கு வறட்சி பாதித்திருக்கும் பகுதி தலைஞாயிறு ஒன்றியம்.

தலைஞாயிறு கடைவீதியையொட்டி அமைந்துள்ள ஆத்துப் பாலத்தில் காலை எட்டு மணிக்கெல்லாம் ஒரு ஐம்பது, அறுபது பேர் வேலைக்காகத் திரண்டு விடுகிறார்கள். அவர்களுள் ஆகப் பெரும்பாலோர் நிலமில்லாத கூலி விவசாயிகள். இத்துணை பேருக்கும் வேலை கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றபோதும், அவர்கள் அங்கே காலையிலேயே கூடுவதற்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் தாண்டி வேறு காரணங்களும் உள்ளன.

”ரேஷன் அரிசியும், நூறு நாள் வேலையும் இல்லேன்னா, தூக்கு போட்டு சாக வேண்டியது தான்” எனத் தங்களின் வாழ்க்கை அவலத்தை எடுத்துச் சொன்ன காடந்தேத்தி கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயப் பெண்கள்.

”வீட்டுல இருந்தா, இன்னக்கி சோத்துக்கு என்ன பண்ணுவது, சில்லறை செலவுக்கு என்ன பண்ணுவது என்ற கவலையே பெரிதாகிவிடும். இங்க வந்தா, வேலை கிடைக்குதோ இல்லையோ, நாலு பேரிடம் சிரித்துப் பேசிவிட்டுக் கவலையை மறந்துவிட்டுப் போகலாம்” என்றார் ஒருவர்.

”வேலைக்கு யாரும் கூப்படலைன்னாலும், நாங்க பதினொரு, பன்னிரெண்டு மணி வரை இருந்துவிட்டுப் போவோம். காலை சாப்பாட கட் பண்றதுக்கு நாங்க கண்டு பிடிச்ச வழி இது” என்றார் மற்றொருவர்.

இக்கூலி விவசாயிகளுக்கு எந்தவொரு நிவாரணமும் தமிழக அரசால் அறிவிக்கப்படவில்லை. நூறு நாள் வேலையை 150 நாளாக உயர்த்தித் தருவோம் என்ற அரசின் அறிவிப்பும் காகிதத் திட்டமாகவே நின்றுவிட்டது. தங்கள் கையை ஊன்றிக் கரணம் போட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

”விவசாயியெல்லாம் இப்ப கொத்தனார், சித்தாளாகிட்டான்” என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.சம்பந்தம். கொத்து வேலையும், ரோட்டில் ஜல்லி கொட்டும் வேலையும்தான் இப்பொழுது ஏழை, கூலி விவசாயிகளுக்கு அரை வயிறு கஞ்சியை ஊற்றுகின்றன. இந்த வேலைகளை விட்டால், இறால் குட்டை வேலை, நூறு நாள் வேலை, ராட்டு (இறால் மீன்கள்) தடவி விற்கும் வேலைகளுக்குச் செல்கிறார்கள்.

இந்த வேலைகளும் மாதம் முப்பது நாளும் கிடைப்பதில்லை. ”மணலுக்குத் தட்டுப்பாடு இருப்பதால், கொத்து வேலை மாதத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள்தான் கிடைக்கும்” என்கிறார் கூலி விவசாயி கண்ணன். வேலை தெரிந்திருந்தால் கும்பகோணம் பக்கம் செங்கல் அறுக்கவும், வேதாரண்யம் உப்பளங்களுக்கும் செல்ல முடியும். விவசாய வேலைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், போர் தண்ணீர் கிடைக்கும் திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும்.

தலைஞாயிறைச் சேர்ந்த லேபர் காண்டிராக்டரான ராஜனே இப்பொழுது வேலை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். நான் அவரைச் சந்தித்த அன்று, அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. வீட்டில் சோறு பொங்க அரிசியும் இல்லை.

ஓய்வெடுக்க வேண்டிய முதிய வயதில் முதுகெலும்பு ஒடிந்து போன மகன், மருமகள், நான்கு பேரக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைச் சுமக்கும் கூலி விவசாயி வேலு

”வேலைக்குப் போன இடத்துல ”‘மண்வெட்டியோட வா” -ன்னாங்க, அதனால் இன்னிக்கு வேலைக்கு போக முடியல. மண்வெட்டி செய்ய புடிய கொடுத்தாம்ன, ஆசாரிங்க கொழுவ கோர்த்துக் கொடுப்பாங்க, அதற்கு முன்னூறு ரூபாயைத் தயார் செய்யணும்‘ என்றார் கூலி விவசாயி வேலு.

”மண்வெட்டிக்கு டாடா கொத்து வாங்கணும்னா ஐநூறு ரூபாய் ஆகும். பழைய கொத்துன்னா முன்னூறு ரூபாய். இருக்குறத தட்டிட்டுப் போட முன்னெல்லாம் முப்பது ரூபாய் கேட்பாங்க. இப்ப நூற்றைம்பது ரூபாய். எங்கே போறதுன்னுதான் தெரியல” என்றார் காடந்தேத்தியைச் சேர்ந்த கணபதி.

வேலு, கணபதியின் கதைகள் எனக்கு உலகப் புகழ் பெற்ற இத்தாலியத் திரைப்படமான ”பைசைக்கிள் தீவ்ஸ்” கதையை நினைவூட்டின. (இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், ஐரோப்பாவில் நிலவிய வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றிப் பேசிய அத்திரைப்படத்தின் கதாநாயகன், சுவரொட்டி ஒட்டும் வேலையில் சேருவதற்கு சைக்கிள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பான்.)

தலைஞாயிறு பேரூராட்சி என்பதால், அந்த ஊரில் நூறு நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்த சட்டத்தில் இடமில்லையாம். இதனால் தலைஞாயிறைச் சேர்ந்த ஏழை, கூலி விவசாயிகளுக்கு நூறு நாள் வேலையும் கிடைப்பதில்லை. அதேசமயம், தலைஞாயிறு ஒன்றியத்திற்குள் வரும் காடந்தேத்தி, உம்பளச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளில் நூறு நாள் வேலை தரப்படுகிறது.

”முன்னாடியெல்லாம் விவசாயம் கையைவிட்டா, முள்ளு பொறுக்கியும் எரு போட்டும் விற்போம். அதெல்லாம் இப்ப இல்லை. இப்ப நூறு நாள் வேலையை மட்டும்தான் நம்பியிருக்கிறோம்” என்கிறார்கள் காடந்தேத்தியைச் சேர்ந்த கூலி விவசாயப் பெண்கள். அத்திட்டத்தில் வேலை கிடைத்தாலும் முறையாகக் கூலி கிடைப்பதில்லை என்பது இன்னொரு பிரச்சினை.

பயிர்க் காப்பீட்டுத் தொகையாக வெறும் 500 ரூபாய் மட்டுமே கிடைக்கப் பெற்ற் உம்பளச்சேரியைச் சேர்ந்த சிறுவிவசாயி அமாவாசை

”காடந்தேத்தியில் ஐந்து வாரமாக நூறு நாள் வேலை நடைபெறுவதாகவும், ஆனால், இன்னும் ஒரு நாள் கூலியைக்கூட கையில் வாங்கவில்லை” என்றும் கூறினார் ஆரோசனை. உம்பளச்சேரியில் ஐந்து நாட்கள் மட்டும்தான் நூறு நாள் திட்டம் நடந்திருக்கிறது. அதற்கும் கூலி வழங்கப்படவில்லை.

நூறு நாள் வேலைக்குக் கூலி கொடுக்க நிதியில்லை எனக் கையை விரிக்கும் எடப்பாடி அரசு, எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை லம்ப்பாக 50,000 ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டிருக்கும் அநியாயத்தையும் அப்பெண்கள் அறிந்து வைத்துள்ளார்கள். ”அவனுங்களையெல்லாம் குழியில போட்டு புதைக்கணும்” எனக் குமுறினார், காடந்தேத்தியைச் சேர்ந்த சுசீலா.

”ஏ.சி.யில உட்கார்ந்துகிட்டு லட்ச ரூபாய் சம்பளம் கேட்டா, மண்ணு சுமக்குறவனுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கணும்?” என்றும் கேள்வி எழுப்பினார், அவர். நூறு நாள் வேலைக்கு கூலியாக நானூறு ரூபாய் தர வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரி வருகின்றன. ஆனால், அரசாங்கம் நிர்ணயித்திருப்பது 205 ரூபாய்தான். அதுகூட எங்களுக்கு முழுசா கிடைப்பதில்லை என்கிறார்கள் அக்கூலிப் பெண்கள்.

***

வேலைக்கும் உத்தரவாதம் இல்லை, கிடைக்கும் கூலியும் குடும்பத்தை ஓட்டும் அளவிற்கு இல்லை என்ற நிலையில் அன்றாடப் பாடே பெரும் போராட்டமாக இருக்கிறது. கொத்து வேலைக்குப் போகும் கண்ணன், தனது குடும்பத்திற்கு மாதமொன்றுக்குக் குறைந்தது மூவாயிரம் ரூபாய் தேவை. ஆனால், கொத்து வேலையில் அந்தளவிற்குக்கூட வருமானம் கிடைப்பதில்லை. கிடைக்கும் கூலியில்தான் சாப்பிட்டுக்கணும். அடுத்த நாள் வேலைக்குப் போக பஸ் காசும் எடுத்து வெச்சுக்கணும். வேலை கிடைச்சு, வேலைக்குப் போக காசு இல்லைன்னா, சுருட்டிக்கிட்டு கிடக்க வேண்டியதுதான் என்கிறார்.

அங்காடியில் போடப்படும் இலவச அரிசிதான் விவசாயத்தை மட்டுமே நம்பிவாழும் குடும்பங்களின் உயிரைப் பிடித்து வைத்திருப்பதோடு, அவர்கள் பஞ்சம் பிழைக்க ஊரை விட்டு அகதிகளாக வெளியேறாமல் தடுத்து வைத்திருக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வரும் குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசியும், மற்றவர்களுக்கு 20 கிலோ அரிசியும், துவரம் பருப்பு அரை கிலோவும் ரேஷனில் கிடைத்துவிடுகிறது. பாமாயிலுக்கு உத்தரவாதம் கிடையாது. ”நாலு அல்லது ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த அரிசி போதாதே” என நான் குறுக்கிட்டபோது, ”அங்காடியிலேயே ஒரு கிலோ ரேசன் அரிசியை 12 ரூபாய்க்குக் கொடுப்பாங்க” என்றார் உம்பளச்சேரியைச் சேர்ந்த செல்வி.

”ஒரு நாள் குழம்பு வைக்கிறோம், ஒரு நாள் ரசம் வைக்கிறோம், ஒரு நாள் வெறும் துவையல்தான். நூறு நாள் காசை நம்பி, மளிகைக் கடையில் கடன், காய்கறிக் கடையில் கடன். இப்படித்தான் இந்த வருடம் சாப்பாடு பிரச்சினை ஓடுது. ஆனா என்ன, அங்காடியில பாதிக்குப் பாதி பச்சரிசிதான் போடுறாங்க. கூலி வேலைக்குப் போறவனுக்குப் பச்சரிசி சோறு பசி தாங்குறதும் இல்ல, கை, கால் குடைச்சலையும் கொண்டுவருது” என்றார் ஆரோசனை.

புள்ளைங்க படிப்புக்கும் சாப்பாடுக்கும் பிரச்சினை வந்திடக் கூடாது எனப் பெண்கள் தவித்துப்போய் நிற்கிறார்கள். குழந்தைகளின் மதிய சாப்பாடை சத்துணவு தீர்த்து வைக்கிறது. சத்துணவு பிடிக்கவில்லை, சாப்பாடு கட்டிக்கொடு எனக் குழந்தைகள் அடம்பிடித்தாலும், அதைத் தவிர இப்பொழுது வேறு வழியில்லை என்கிறார், உம்பளச்சேரியைச் சேர்ந்த சின்னபொண்ணு.

ரோட்டுக்கடைகளில் பத்து ரூபாய்க்கு விற்க்கப்படும் சிக்கன் பக்கோடாதான் கூலி விவசாயிகளுக்கு இப்போது கறி விருந்து. ஒரு பொட்டலத்தைக் குடும்பத்தில் உள்ள எல்லோரும் பங்குபோட்டுக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் நோட்டு, புத்தகம் வேணும் எனப் புள்ளங்க வந்து கேட்கும்போது பிரச்சினை வந்துவிடுகிறது. நோட்டு வாங்க காசைப் புரட்டுவதற்கு இரண்டு நாள் ஆகும்னு புள்ளங்களிடம் சொன்னா, வாத்தியார் அடிப்பார், ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு நின்னுடுதுங்க என்கிறார்கள் காடந்தேத்தியைச் சேர்ந்த பெண்கள்.

பள்ளிக்கூடப் பசங்க பிரச்சினையைவிட, காலேஜுக்குப் போகும் வயதில் பிள்ளைகள் உள்ள வீடுகளில் காலேஜ் பீஸ் கட்டுவதில் தொடங்கி பஸ்ஸுக்குக் காசு புரட்டிக் கொடுப்பது வரையில் தினந்தோறும் பிரச்சினைகள். உம்பளச்சேரியைச் சேர்ந்த ரத்தினத்தின் இரண்டாவது மகன் தனியார் ஐ.டி.ஐ.யில் படிப்பை முடித்துவிட்டாலும், கட்டண பாக்கியிருப்பதால் இன்னும் சர்டிபிகேட்டை வாங்க முடியவில்லை. அவரது மூன்றாவது மகன் மன்னார்குடியிலுள்ள அரசு கல்லூரியில் படிக்கிறான். பஸ்ஸுக்குக் காசில்லைன்னா, அன்னிக்குக் கல்லூரிக்கு மட்டம்தான்.

”எம் புள்ள ஒருத்தன் திருச்சியில தனியார் இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறான். பீஸெல்லாம் இல்ல, ஃப்ரீதான்னு சொல்லி சேர்க்கச் சொன்னாங்க. இப்ப எக்ஸாம் பீஸ் ஐயாயிரம் கொடுன்னு கேட்குறாங்க. புள்ளய படிக்க வைக்கவா, திருப்பிக் கூட்டிட்டு வந்துறவான்னு தவிக்கிறேன்” என்கிறார், உம்பளச்சேரியைச் சேர்ந்த செல்வி.

தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் தனது மகளுக்காகக் கல்விக் கடன் கேட்டு வங்கிக்குச் சென்ற தலைஞாயிறைச் சேர்ந்த முரசொலியிடம், ”75 சதவீத மார்க் எடுத்தவர்களுக்குத்தான் கல்விக் கடன் கொடுப்போம்” எனக் கூறித் திருப்பி அனுப்பிவிட்டார்கள் வங்கி அதிகாரிகள். வெளியாட்களிடம் கடன் வாங்குவதைத் தவிர முரசொலிக்கு இப்பொழுது வேறு வழியில்லை.

படிப்பை விவசாயத்திலிருந்து தப்பியோடுவதற்கான வழியாகவே விவசாயிகள் பார்க்கிறார்கள். அதனால் கடன்பட்டாவது தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்துவிடத் துணிகிறார்கள். உம்பளச்சேரியைச் சேர்ந்த காமராஜ், தனது மகனை எம்.பி.ஏ. வரை படிக்க வைப்பதற்காக மூன்று இலட்ச ரூபாய் கடன்பட்டதாகக் கூறுகிறார்.

படிச்சாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி; ஆகப் பெரும்பான்மையான இளைஞர்கள் விவசாயத்தை நம்பவில்லை. திருப்பூர், கோயம்புத்தூர், சென்னைக்கு வேலை தேடி புலம் பெயர்ந்துவிடுகிறார்கள். ஆந்திராவில் ஹிட்டாச்சி வண்டிகளை ஓட்டுவதற்கும், கேரளாவுக்குக் கல்லுடைக்கவும் பகுதி இளைஞர்கள் சென்றுவிடுவதாகக் கூறுகிறார், உள்ளூர் எல்.ஐ.சி. ஏஜெண்ட் ஏகாம்பரநாதன். வெளியூருக்குச் செல்ல முடியாத இளைஞர்கள் பக்கத்து நகரங்களுக்கு டிரைவராகப் போய்விடுகிறார்கள். படித்த இளம் பெண்கள் உள்ளூரிலேயே கடைகளில் 130 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்கிறார்கள்.

தலைஞாயிறு, காடந்தேத்தி, உம்பளச்சேரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறலாமே தவிர, அவர்கள் வாழ்கிறார்கள் என்பதற்குப் பொருள் கிடையாது. கல்வி, மருத்துவம், கல்யாணம், கருமாதி என வாழ்வில் வரும் சுக, துக்கங்கள் அனைத்திற்கும் அவர்கள் இப்பொழுது தனியார் கடனை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். தனியார் குறுநிதி நிறுவனங்கள், கந்துவட்டிக் கும்பல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அனைத்தும் அவர்களுக்குக் கடன் வழங்குவதில் மிகத் தாராளமாகவே நடந்து கொள்கின்றன.

வறட்சியைக் கண்டு நாம் அஞ்சுகிறோம். தனியார் கந்துவட்டிக் கும்பலோ, வறட்சியைப் புதிய முதலீட்டுக்கும் இலாபத்திற்குமான வாய்ப்பாகப் பார்க்கிறார்கள்.

***

வறட்சி, சாகுபடி பொய்த்துப் போனதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைச் சந்திப்பதில் தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளுக்கும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த சிறு விவசாயிகளுக்கும் பெருத்த வேறுபாடில்லை. இதனை உம்பளச்சேரியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளே எடுத்துச் சொல்கிறார்கள். உதாரணமாக, தலைஞாயிறு ஒன்றியத்தில் நிலவும் குடிதண்ணீர் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், அது சாதி வேறுபாடின்றிப் பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கிறது.

உம்பளச்சேரிக்கு, அவ்வூருக்கு அருகிலுள்ள கரியாப்பட்டினத்திலிருந்து எட்டு நாளைக்கு ஒருமுறைதான் டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளையாகிறது. அன்றாடப் புழக்கத்திற்குத் தேவைப்படும் தண்ணீரை அவ்வூரைச் சேர்ந்த அனைவரும் ஒரு கிலோ மீட்டரோ, இரண்டு கிலோ மீட்டரோ சென்று, அடி பம்புகளில் காத்திருந்து எடுத்துவர வேண்டும்.

டெல்டா விவசாயமே அழிவை நோக்கித் தள்ளப்படிருக்கும் சூழலில் தலைஞாயிறு ஒன்றியப் பகுதி வழியாகக் கடலை நோக்கிச் செல்லும் வ்ண்ணாறு வடிநிலப் பகுதி – அரிச்சந்திரா நதியில் கட்டப்படும் தடுப்பணை. இத்தடுப்பணை மழை நீரைச் சேமிக்கவா, இறால் பண்ணை குட்டைகளுக்கா எனக் கேள்வி எழுப்புகிறார்கள், உள்ளூர் மக்கள்.

காடந்தேத்தி கிராம மக்கள் குளிப்பதற்குப் பக்கத்திலுள்ள மணக்குடியிலுள்ள குளத்திற்குச் செல்ல வேண்டும். குடிதண்ணீர் எடுப்பதற்கு கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள தலைஞாயிறு மெயின் ரோட்டுக்குச் செல்ல வேண்டும். அதிகாலையில் இரண்டு மணிக்கோ, மூணு மணிக்கோ எழுந்து, சைக்கிளில் குடத்தைக் கட்டிக்கொண்டு போய், ரெண்டு ரெண்டு குடமாகத் தண்ணீர் எடுத்துவருவதற்குள் விடிந்துவிடும் என்கிறார்கள், அவ்வூர்ப் பெண்கள்.

தலைஞாயிறில் இரண்டு நாளைக்கு ஒருமுறை தெருக் குழாய்களில் குடிதண்ணீர் வரும். ஆனால், அன்று நடக்கும் குடுமிப்பிடி சண்டையைத் தீர்த்துக் கொள்ள போலீசு ஸ்டேஷன் வரை போக வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

தலைஞாயிறு ஒன்றியப் பகுதியிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத்தான் குடிநீருக்கு நம்பியுள்ளன. இந்தக் கொள்ளிடம் கரையை ஒட்டியிருக்கும் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களில்தான் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, தமிழக அரசு. இதனால் இப்பகுதி மக்கள் எதிர்காலத்தில் இன்றிருப்பதைவிட மோசமான குடிநீர்த் தட்டுப்பாடைச் சந்திக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்.

தலைஞாயிறு பகுதியில் வறட்சி பாதித்த இந்த ஆண்டுக்கான (2016) காப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. வெள்ளம் பாதித்த கடந்த ஆண்டுக்கான (2015) காப்பீடு மட்டும்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும்கூட விவசாயிகள் அடைந்த நட்டத்தில் கால்பகுதியைக்கூட ஈடு கட்டவில்லை. உம்பளச்சேரியைச் சேர்ந்த செல்விக்கும் அமாவாசைக்கும் கிடைத்த காப்பீடு தொகை வெறும் 600 ரூபாய்தான். இதைக்கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தை உழவு ஓட்டுவதற்கு ஆகும் செலவைக்கூட ஈடு செய்ய முடியாது.

இதுவாவது பரவாயில்லை, தலைஞாயிறு ஒன்றியத்திலுள்ள களத்தூர் பிர்காவைச் சேர்ந்த விவசாயிகளுக்குக் காப்பீடு தொகையே கிடையாது எனக் கைவிரித்துவிட்டார்கள் என்கிறார், எஸ்.சம்பந்தம்.

தலைஞாயிறைச் சேர்ந்த ரவிசேகர், ”லாப்டி” மூலம் கிடைத்த ஒரு ஏக்கர் நிலத்தில் (300 குழி) பயிர் செய்து வருகிறார். ஆனால், அவருக்கு 200 குழிக்குக் கணக்கிட்டுதான் வறட்சி நிவாரணம் தந்திருக்கிறார்கள். மீதி 100 குழிக்கான நிவாரணத்தை அதிகாரிகள் அமுக்கிவிட்டார்கள் என்கிறார், அவர்.

குமார் ஒரு ஏக்கர் கோவில் நிலத்தை எடுத்துக் குத்தகை செய்து வருகிறார். இவருக்கு வறட்சி நிவாரணமும் கிடைக்கவில்லை, காப்பீடும் கிடைக்கவில்லை. வறட்சி நிவாரணம், காப்பீடு தொகையை வழங்குவதில் நடந்துள்ள குளறுபடிகளையும் பாரபட்சமான அணுகுமுறையையும் எதிர்த்து ஏன் போராடவில்லை எனக் கேட்டதற்கு, ”எங்களுக்கு இருக்கும் வறுமைக்குக் கிடைத்ததே போதும் என்ற நிலையில் இருக்கிறோம்” எனப் பதில் அளித்தார்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

***

வேலையில்லை, குடிநீர் இல்லை, அரைப்பட்டினியில் தள்ளப்பட்டிருக்கும் குடும்பங்கள் என்ற நிலையிலும்கூட தலைஞாயிறு பகுதி அமைதியாகத்தான் இருந்து வருகிறது. நிவாரணம் கோரி சம்பிரதாயமான முறையில் போராட்டங்கள் நடத்தியதைத் தாண்டி, விவசாய சங்கங்கள் வேறெந்த தொந்தரவையும் அரசிற்கும் அதிகார வர்க்கத்திற்கும் தந்துவிடவில்லை.

வறுமையைவிட, விவசாயிகள் தமது போராட்டக் குணத்தை இழந்து நிற்பதுதான் நம்மைப் பெரிதும் அச்சுறுத்துகிறது. விவசாயிகள் போராடத் துணிய மாட்டார்கள் என்ற கொழுப்பில்தான் எடப்பாடி அரசு தமிழகத்தில் பரவலாக வறட்சி காணப்படவில்லை என உச்சநீதி மன்றத்தில் துணிந்து பொய் சொல்கிறது. வேலையில்லாமல் தவிக்கும் கூலி விவசாயிகளுக்குச் சிறு நிவாரண உதவியைக்கூட அறிவிக்க மறுக்கிறது.

இந்த அமைதி எப்போது குலையும் என்று யோசனை செய்துகொண்டே பேருந்து நிலையத்திற்கு வந்தேன். பேருந்து ஏறும் முன் சாப்பிட்டுவிடலாம் என முடிவு செய்து, அருகில் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்து சப்பாத்தி கேட்டேன். சப்பாத்தியில் கைவைக்கும் சமயத்தில் ”காலையில் நீராகாரம் சாப்பிட்டதுதான் சார்” எனச் சொன்ன அந்த முதியவரின் நினைவும் வந்துபோனது. சப்பாத்தி தொண்டைக் குழிக்குள் இறங்க மறுத்தது.

 -செல்வம்

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு 2017

_____________

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க