Sunday, March 26, 2023
முகப்புசெய்திதிருப்பூர் - விவசாயியைக் ’கொன்ற’ கோடக் மஹிந்திரா வங்கி - போலீசு - நீதிமன்றம்

திருப்பூர் – விவசாயியைக் ’கொன்ற’ கோடக் மஹிந்திரா வங்கி – போலீசு – நீதிமன்றம்

-

திருப்பூர் மாவட்டம் – பல்லடம் அருகிலுள்ள மலையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன் ; வயது-60. கடந்த 06.09.2017 அன்று பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக செய்தித் தாள் மூலம் கேள்விப்பட்டு, மக்கள் அதிகாரம் தோழர்கள் 07.09.2017 அன்று அவரது கிராமத்திற்கு சென்று தகவல்களைக் கேட்டறிந்தனர்.

அங்கு கிடைத்த தகவல்களின் படி, மேற்படி விவசாயியின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; மத்திய மாநில அரசுகளும், கோடக் மஹிந்திரா வங்கியும், போலிசும் இணைந்து நடத்திய ’படுகொலை’தான்.

திருப்பூர் அவிநாசி ரோடு கோடக் மஹிந்திரா வங்கிக் கிளையில் தனது விவசாய நிலத்தின் அடமானத்தின் பேரில் விவசாயி வெள்ளியங்கிரிநாதன் வாங்கியிருந்த டிராக்டர் கடனுக்கு, மழை பொய்த்த காரணத்தால், விவசாயம் நடைபெறாமல், அவரால் கடந்த 2 தவணைகள் கட்ட முடியவில்லை; அதனால், கோடக் மஹிந்திரா வங்கி நீதிமன்றத்தின் வாயிலாக போலீசு மூலம்,  டிராக்டரை பறிமுதல் செய்தது. அதன் பின்னர் பல்லடம் போலீசு நிலையத்தில் டிராக்டரை நிறுத்தி விட்டு, அதனை விவசாயி வெள்ளியங்கிரிநாதனுக்கு தகவலாக மட்டும் கூறியுள்ளனர்.

ஏற்கனவே விவசாயி வெள்ளியங்கிரிநாதன் வங்கிக்கு சென்று, கடந்த 6 மாதமாக மழை இல்லாததால் விவசாயம் பொய்த்துப்போனதால், வருமானம் எதுவும் இல்லை என்றும், தற்போது மழை பெய்து வருவதால் தனது 4 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டிருப்பதாகவும், மேலும் 6 மாத தவணைக் காலம் கொடுத்தால் முழுப்பணத்தையும் கட்டிவிடுவதாகவும், தனது நிலைமையை விளக்கிக் கூறியுள்ளார்.

அதைப் பொருட்படுத்தாமல் வங்கி நிர்வாகம்  நீதிமன்றத்தின் ஜப்தி ஆணையைப் பெற்று பல்லடம் போலீசு மூலம் அவரின் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வாழைக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் கொண்டு பல்லடம் போலீசு நிலையம் சென்று, அங்கிருந்த வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னர் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

அதன் பிறகு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு விவசாயி வெள்ளியங்கிரிநாதனைக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் உறவினர்கள், விவசாயசங்கத்தினர், மற்றும் தி.மு.க பிரதிநிதிகள் என அனைத்து தரப்பு மக்களும் குவியத் ஆரம்பிக்கவே, நயவஞ்சகமாக மேல் சிகிச்சைக்கு அனுப்புவதாகக் கூறி கோவைக்கு உடலை அனுப்பிவிட்டனர்.

மறுநாள் 07.09.2017 காலை 11:00 மணிக்கு பல்லடம் போலீசுநிலையம் – பஸ் ஸ்டாண்டு – அருகில் விவசாயி வெள்ளியங்கிரிநாதனின் மரணத்திற்கு காரணமான கோடக் மஹிந்திரா வங்கியைக் கண்டித்தும். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கும் போலீசைக் குவித்து போராடுபவர்களை மிரட்டிக் கொண்டே இருந்தனர்.

இதன் பின்னர் 1:00 மணி அளவில் திருப்பூர் கோடக் மஹிந்திரா வங்கி நுழைவு வாயிலில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசும், வங்கி அதிகாரிகளும் 5 நாட்களில் விவசாயியின் கடனை ரத்து செய்து உரிய ஆவணங்களைத் திருப்பித் தருவதாக உறுதி கூறினர். இதனைத் தொடர்ந்து விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று உறவினர்கள் வெள்ளியங்கிரிநாதனின் உடலைப் பெற்று அடக்கம் செய்தனர்.

அவரது குடும்பத்திற்கான நிவாரணம் பற்றி தாசில்தார்தான் முடிவு செய்வார் என அதிகாரிகள் வஞ்சகம் செய்துள்ளனர். இன்று அவரது உடல் ஊனமுற்ற தாய், விதவை மனைவி, 10ம் வகுப்பு படிக்கும் மகன் ஆகிய மூவரும் நிர்கதியாக நிற்கின்றனர்.

படுகொலை செய்த நீதிமன்றம் – காவல்துறை – வங்கி அதிகாரிகள் கூட்டணி அடுத்தகட்ட வேலைகளுக்குச் சென்றுவிட்டது. பல செய்தித் தாள்களும், தொலைக் காட்சிகளும் வங்கியின் பெயரைக்கூட கூறாமல் அரசுக்கு கால் பிடித்து விட்டிருக்கின்றன.

“தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக விவசாயம் பொய்த்துப் போனதற்குக் காரணம், ஊரில் உள்ள ஏரி, குளம், வாய்க்கால் என அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து தரிசாக்கி மக்களைக் கொல்லும் அரசியல்வாதிகளும் அதற்குத் துணை நிற்கும் அரசு அதிகாரிகளும், நீதிமன்றங்களும் தான் என்பதை அம்பலப்படுத்திப் பேசினர் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள்.  ஆள அருகதையற்றுப் போன அரசுகளிடம் இனி கெஞ்சிப் பயனில்லை, விவசாயிகள், மாணவர்கள் என உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடினால் தான் தீர்வு கிடைக்கும்” என்று கூறி “விவசாயியை வாழவிடு” கையேட்டைக் கொடுத்து விட்டுத் தோழர்கள் திரும்பினர் .

இந்தச் சம்பவத்தில் வங்கி மற்றும் ஆட்சியாளர்களின் சதிகளை அம்பலப்படுத்திப் பகுதி முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர் – கோவை மண்டலம்.

_____________

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க