Friday, March 24, 2023
முகப்புசெய்திஏழைகளிடம் பிடுங்கித் தின்னும் பாரத ஸ்டேட் வங்கி !

ஏழைகளிடம் பிடுங்கித் தின்னும் பாரத ஸ்டேட் வங்கி !

-

பிபிஷன் ஷிண்டே

சிரியர் பிபிஷன் ஷிண்டேவுக்கு தனது மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது கனவு. மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார் ஷிண்டே. மராத்தி மற்றும் தெலுங்கு பயிற்று மொழியாக இருக்கும் அந்தப் பள்ளியில் பெரும்பாலும் அக்கம் பக்கத்தில் இருந்து வரும் ஏழை மாணவர்களே படிக்கின்றனர். ஆறாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 200 மாணவர்களிடம் இரண்டாண்டுகளுக்கு முன்பு சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த ஆசிரியர் ஷிண்டே, அவர்களது பெற்றோர் கைச்செலவுக்காக அளிக்கும் ஐந்து, பத்து ரூபாய்களை வங்கியில் சேமிக்க அறிவுறுத்தியுள்ளார்.

“வங்கியில் சேமிப்பதென்றால் அரசு பொதுத்துறை வங்கியே சிறந்தது எனத் தீர்மானித்து அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையை அணுகினோம்” எனக் குறிப்பிடும் ஷிண்டே, தற்போது தன்னுடைய ஆலோசனையைக் கேட்டு சேமிக்கத் துவங்கிய மாணவர்களின் பணத்தை பாரத ஸ்டேட் வங்கியே திருடிக் கொண்டதைக் கண்டு திகைத்துப் போயிருக்கிறார்.

நாடெங்கும் சுமார் 24 ஆயிரம் கிளைகளுடன் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கிக்கு சுமார் 40 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 31 கோடி பேர் இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். சமீபத்தில் தனது வங்கி விதிகளில் திருத்தம் கொண்டு வந்த பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 5000 ரூபாயை நிர்ணயித்தது. மேலும், அவ்வாறு குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காதவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கவுள்ளதாகவும் அறிவித்தது.

புதிய விதிகளைக் கடந்த காலாண்டின் போதே (ஏப்ரல் – ஜூன்) அமலுக்கு கொண்டு வந்த பாரத ஸ்டேட் வங்கி, அபராதத் தொகையாக மட்டும் ரூ.235 கோடி அளவுக்கு வசூலித்திருக்கிறது. நாடு முழுவதும் – குறிப்பாக ஊரகப் பகுதிகள் வரை – வங்கி வலைப்பிண்ணல் கொண்டிருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் ஏழை எளிய மக்களே பெரும்பாலும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதோடு, ஓய்வூதியம் பெறுவோர், முதியோர் உதவித் தொகை பெறுகிறவர்கள், அரசின் மானியம் பெறும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் போன்றோரின் வங்கிக் கணக்குகள் அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் தான் உள்ளன.

இந்நிலையில் தான், தங்களது வங்கிக் கணக்குகளில் ஐந்தாயிரம் ரூபாய் பராமரிக்க முடியாத சுமார் 3.88 கோடி ஏழை மக்களிடம் இருந்து ரூ.235 கோடியை அபராதம் எனும் பெயரில் திருடியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

”என்னுடைய தந்தை வாரம் ஒரு முறை ஐம்பதோ நூறோ தருவார். அதை நான் வங்கிக் கணக்கில் போட்டு வந்தேன்.. இப்போது சென்று பார்த்தால் பூஜ்ஜியம் ரூபாய் தான் உள்ளது” என்கிறார் செம்பூர் அரசு பள்ளியில் படிக்கும் ஹர்ஷதா டோத்ரே எனும் மாணவி.

ஆறாம் வகுப்பில் பயிலும் இன்னொரு மாணவியான தனிஷா மோரேவின் தந்தை வாரம் ஐந்து அல்லது பத்து ரூபாய்கள் தான் கைச்செலவுக்கென்று கொடுத்து வந்துள்ளார். இந்தக் காசை குருவி சேர்ப்பது போல் சேர்த்து ஐநூறு ரூபாயாக தனது வங்கிக் கணக்கில் இருப்பு வைத்துள்ளார். தற்போது அந்தப் பணத்தையும் களவாடியுள்ளது வங்கி.

ஆசிரியர் பிபிஷன் ஷிண்டேவிடம் அரசே நடத்திய களவு குறித்து மாணவர்கள் முறையிட்டுள்ளனர். அவர் வங்கிக் கிளையை அணுகி விசாரித்த போது, குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்க முடியாவிட்டால் வங்கிக் கணக்கை மூடி விடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாற்றப்பட்ட புதிய விதிகளின் படி வங்கிக் கணக்கை மூடுவதற்கான தண்டத் தொகையே 590 ரூயாய்! தங்களது சேமிப்பை ஏற்கனவே பறிகொடுத்து விட்ட மாணவர்கள் தற்போது வங்கிக் கணக்கை மூடுவதற்கும் வழி தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

ஒரு பக்கம் ஏழைகளின் வயிற்றில் அடித்து அவர்களின் சேமிப்பைத் திருடும் வங்கிகள், இன்னொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கின்றன. இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 49 வங்கிகளின் வாராக் கடன் மட்டும் சுமார் 6 லட்சம் கோடி என கடந்தாண்டு பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நிதியமைச்சர் பதில் அளித்துள்ளார். இதில் பொதுத்துறை வங்கிகளில் முதல் 20 வாராக்கடன்களின் மதிப்பு மட்டும் 1.54 லட்சம் கோடி. பாரத ஸ்டேட் வங்கியின் வாராக் கடன் மட்டும் சுமார் 93ஆயிரம் கோடி. கடந்தாண்டு தான் மல்லையாவுக்குக் கடனாகக்  கொடுத்த 7,016 கோடியை வாராக் கடனாக அறிவித்து தலைமுழுகியது பாரத ஸ்டேட் வங்கி.

இது தான் மோடியின் புதிய இந்தியா.

இதை நாடு என்று அழைப்பதா அதிகாரப்பூர்வ கொள்ளைக்கூட்டம் உலாவும் காடு என்று அழைப்பதா?

மேலும் படிக்க:

KIDS PENNILESS AFTER MINIMUM BALANCE RULE

SBI decisions on transaction charges, minimum balance will hurt customers: RBI staff body

SBI collects Rs 235cr in minimum balance fine in June qtr: RTI

SBI writes off Rs 7,016 crore loans owed by wilful defaulters, including Vijay Mallya’s defunct airlines

Details of NPA figures of public, private sector banks


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள், சந்தா செலுத்துங்கள்.

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. குறைந்த பட்ச இருப்புயில்லை என்று இருந்ததையும் கபளீகரம்செய்துவிட்டு … கணக்கை முடிக்கவும் ஒரு தாெகையை எதிர்பார்க்கும் பகல் காெள்ளை அடிக்கும் வங்கி …. இச் செயலைப் பற்றி யாரும் எழுதவும் .. விவாதிக்கவும் திராணியற்று பாேனது தான் மனவேதனை … காசுக்கு …. பயத்திற்கும் அடங்கி கிடக்கும் ஊடகங்கள் …

    குறைந்த பட்ச இருப்பு தேவையில்லை என்கிற பிரதம மந்திரியின் யாேஜனா திட்டத்தில் சிறார்களின் சாெற்ப சேமிப்புகளை மாற்றி அவர்களின் சேமிப்புகளை தக்கவைத்திருக்க கூட மனம் இல்லாத வங்கியும் … அரசும் தான் நாட்டிற்கு நல்லது புரிய வந்த உத்தமர்கள் ….?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க