privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூரில் மாபெரும் பேரணி - கண்டனக் கூட்டம் !

கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூரில் மாபெரும் பேரணி – கண்டனக் கூட்டம் !

-

மூத்த பத்திரிக்கையாளரும், முற்போக்கு எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் அவர்கள் சென்ற 5 -ம் தேதி மாலை 7:00  மணியளவில் அவரது வீட்டின் நுழைவாயிலின் அருகே சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையைக் கண்டித்து பெங்களூரில் கடந்த 12 -ம் தேதியன்று கண்டனப் பேரணி, கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கண்டன கூட்டத்திற்கு இந்தியா முழுமையிலும் இருந்து பத்திரிக்கையாளர்கள், முற்போக்காளர்கள், இடதுசாரிகள், புத்தமதத்தவர்கள், கலைஞர்கள்,  முற்போக்கு அமைப்புகள், வழக்குரைஞர்கள், கல்லூரி மாணவர்கள், திருநங்கைகள், கிருத்துவ, இசுலாமிய மக்கள், தலித் மற்றும் பழங்குடி மக்கள் என பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெங்களூருவின் மையப் பகுதியான இரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் கல்லூரி வரை பேரணி நடைப்பெற்றது, இந்த கண்டனப் பேரணியில் “நான் கௌரி” என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டது.

மாநாட்டில் பத்திரிக்கையாளர் சாய்நாத், சீத்தாராம் யெச்சூரி, மேதா பட்கர், திருநங்கை ரேவதி, உனா போராட்ட ஒருங்கினைப்பாளர் ஜிக்னேஷ் மேவானி, ஜே.என்.யு கல்லூரி மாணவர்கள், வட மாநில அடிகளார் அக்னிவேஷ், கர்நாடகத்தைச் சேர்ந்த இடுமுடி சாமியார் போன்றவர்கள் கௌரி லங்கேஷ் சுட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன உரையாற்றினர்.

( கூட்டத்தில் வினியோகிக்கப்பட்ட துண்டறிக்கை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும் )

கர்நாடக முற்போக்கு கலைஞர்கள் சார்பில் கௌரி லங்கேஷ் – ன் சமூக பணியைப் பாராட்டி கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.  தமிழ் நாட்டில் இருந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் அதில் கலந்துக்கொண்டனர். கௌரி லங்கேஷ் இந்துமதவெறிப் பாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பு.ஜ.தொ.மு சார்பில் ஆங்கிலத்தில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், கண்டன உரையாற்றிய முன்னணியாளர்கள் அனைவருக்கும் பிரசுரம் கொடுக்கப்பட்டது. “முற்போக்காளர் கௌரி லங்கேஷ் படுகொலை: பார்ப்பன இந்து மதவெறி பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம்!” என்ற பிரசுரத்தின் தலைப்பைப் பார்த்து பலரும் ஆர்வமாக வாங்கிப் படித்தனர். சிலர் கூடுதலாக சில பிரதிகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட இளம் பெண் வழக்குரைஞர்கள் மத்தியில் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என அறிமுகம் செய்துகொண்டு பேசினோம். கன்னடமொழி தெரியாது, ஆங்கிலமும் அந்த அளவிற்கு பேச வராது தமிழில் பேசினால் புரிந்து கொள்வீர்களா என கேட்டு, அந்த குழுவில்  இருந்தவர்களிடம் பேசினோம்.

கூட்டத்தில் துண்டறிக்கை கொடுக்கும் தோழர்கள்

தமிழ் தெரிந்த ஒரு பெண் வழக்கறிஞர், “கௌரி லங்கேஷ் இந்து மதவெறி எதிர்ப்பாளர், கர்நாடக அரசியலில் நடக்கும் ஊழல்கள், மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளை ஆகியவற்றை துணிவுடன் அம்பலப்படுத்தி அவர் பத்திரிக்கையில் எழுதியவர், காடுகளில் மற்ற பத்திரிக்கையாளர்கள் செல்வதற்கே பயப்ப்படுவார்கள். ஆனால், இவர் மட்டும்தான் தைரியமாக சென்று நக்சல்பாரி தோழர்களை சந்தித்து, அவர்களுக்கும், அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி நக்சல் அச்சம் என்ற ஒன்று இல்லாமல் செய்தார்.

குற்றவாளிகள் யார் என்பது இந்த காங்கிரஸ் அரசுக்கு தெரியும், இருந்தாலும் குற்றவாளியைக் கைது செய்யவில்லை. இந்த கும்பலில் இருந்து ஒருவர் இந்து மதத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்த நிலைமை தான் ஏற்படும் என பகிரங்கமாக பேசியிருக்கிறார். அவரை கைதும் செய்திருக்கிறார்கள். இந்த ஆதாரம் போதாதா? தேர்தல் வருகிறது என்று கூறி, குற்றவாளிக்கு உடந்தையாக இருக்கிறார்கள்.

கூட்டத்தில் துண்டறிக்கை கொடுக்கும் தோழர்கள்

இந்துமதவெறி பாசிச கும்பலை நாங்கள் தீவிரமாக எதிர்க்கிறோம், கர்நாடக மக்களாகிய நாங்கள் இனிமேலும் சும்மா இருக்க போவதில்லை, தமிழ் நாட்டில் அதிமுக-வையும் தன் கை பையில் வைத்திருக்கிறது. மோடி கூறுவதை கேட்டுதான் ஆட்சியை நடக்கிறது, உங்களை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன், பி.ஜே.பி.-யை தமிழ் நாட்டில் விட்டுவிடாதீர்கள், தொடர்ந்து அவர்களை அம்பலபடுத்திப் போராடுங்கள்” என்று ஆதங்கத்துடன் பேசினர்.

கௌரி லங்கேஷின் இறுதி ஊர்வலத்தில் நாம் பங்கேற்றிருந்தபோது நமக்கு அறிமுகமான ஒருவர், நம்மை அடையாளம் கண்டுகொண்டு நம்மிடம் வந்து பேசினார். அவரது பெயர்  அலி பாபு. நமது பிரசுரத்தைப் பெற்றுக்கொண்டு நமது அமைப்பின் செயல்பாடுகளை கவனித்ததாகவும் மிகவம் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில்  திருநங்கைகள் கலந்துக்கொண்டனர். அவர்களில் ஒருவர் ரேவதி என்ற திருநங்கை இந்த கூட்டத்தில் உரையாற்றினார். அவர் மற்றும் அவர்களுடன் வந்த மற்ற திருநங்கைகளிடம், கௌரி லங்கேஷ் குறித்து விசாரித்தோம். “கௌரி லங்கேஷ் எங்களுக்கு குரு. எங்களை இந்த சமூகம் மதிக்காத போது அவர் எங்களை அரவணைத்தார், பழங்குடியின மக்களிடம் எங்களை அழைத்துச் சென்று அவர்கள் வாழ்க்கையை காண்பித்தார். எங்களை ஒருங்கிணைத்து உழைத்து பிழைக்கவும் சமூக பணிகளிலும் ஈடுபடுத்தினார். அவர் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடருவோம்” என்றார்.

காலை 10:00 மணி முதல் பேரணியைத் தொடர்ந்து கண்டன கூட்டம் என சுமார் பல ஆயிரம் மக்கள் ஆர்வமாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இறுதிவரை கட்டுக்கோப்புடன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வானது, கௌரி லங்கேஷைக் கொன்றதன் மூலம் பார்ப்பன எதிர்ப்புணர்வை மழுங்கடித்துவிடலாம் எனக் கனவு கண்டிருந்த இந்து மதவெறியர்களின் கனவைக் கலைத்திருக்கும்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி