Monday, March 27, 2023
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்ஓசூர் : “விவசாயியை வாழவிடு !” மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

ஓசூர் : “விவசாயியை வாழவிடு !” மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

-

க்கள் அதிகாரத்தின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 5, 2017 அன்று தஞ்சையில் நடத்தப்பட்ட “விவசாயியை வாழவிடு !” மாநாட்டின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் 24.09.2017 அன்று மாலை 4:00 மணியளவில் ஓசூரில் உள்ள பாகலூர் சர்க்கிள் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சூடாபுரம் கேபிள் ஆபரேட்டர் திரு முருகேசன், சேவகானப்பள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு கோவிந்தராஜ், பாகலூரை சேர்ந்த விவசாயி திரு. செயராமன், பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் ரவிச்சந்திரன், மக்கள் அதிகாரத்தின் தர்மபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார், பு.ஜ.தொ.மு -வின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் உரையாற்றினர். மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ சிறப்புரையாற்றினார். இறுதியாக, பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் ராமசாமி நன்றியுரையாற்றினார்.

தோழர் நாகராஜ் தனது தலைமை உரையில், தஞ்சை மாநாட்டிற்கு அரசு கொடுத்த பல்வேறு தடைகளையும் அவைகளை கடந்து மாநாடு நடத்தப்பட்ட அனுபவங்களையும் விளக்கி பேசினார்.

அதன் பின் பேசிய சூடாபுரம் கேபிள் ஆபரேட்டர் திரு முருகேசன் தனது உரையில் இங்கு இயங்கிவரும் ஆலைகளின் கழிவுகள் மற்றும் பெங்களூரின் கழிவுகள் தென்பெண்ணையாற்றில் கலக்கப்படுகிறது. அதனால் ஆறு அதன் தன்மை இழந்து நிலத்தடி நீர் மாசடைந்து குடிக்க இலாயக்கற்றதாகியுள்ளது. மேலும், ஏற்கனவே, செய்துவரும் அரைகுறை விவசாயம் கூட தொடர்ந்து செய்யமுடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்ற யதார்த்த நிலையை அம்பலப்படுத்திப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் ரவிச்சந்திரன் தனது உரையில், இன்றைக்கு விவசாயத்தில் மரபணுமாற்றப்பட்ட விதைகளை  பயன்படுத்துவதால் மண்ணே மலடாக்கப்படுகிறது. மேலும், விதைகளை எடுத்து விவசாயி அதனை  பாதுகாத்தால் அவனை குற்றவாளியாக சித்தரிக்கிறது இந்த அரசு என்பதையும் அம்பலப்படுத்தி பேசினார்.

விவசாயிகள் தாங்களே ஒரே வழியை தேடிக் கண்டு, விவசாயம் செய்தபோதும், விளைபொருளுக்குரிய விலை கிடைக்காமல் போண்டியாகி கடனாளியாக்கப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்படும் அவல நிலையை விளக்கிப் பேசினார்.

ஓய்வுபெற்ற தலைமையாசிரியரும் விவசாயியுமான திரு கோவிந்தராஜ், அவரது உரையை அவரின் தாய் மொழியான தெலுங்கில்; விவசாயிகளுக்கே உரிய பாணியில் ஒரு கதையை சொல்லி தொடங்கினார். “ஒரு பள்ளியில் அன்றாடம் வேப்பம் எண்ணையில் மதிய உணவு சமைத்துப் போட்டார்கள். அந்த உணவு கசப்பாக இருந்தாலும் மாணவர்கள் அதனை தட்டிக்கேட்காமல் சகித்துக்கொண்டு சாப்பிட்டு வந்தார்கள்.

சிறிது காலம் சென்றபின்பு கசப்பான அந்த உணவை தொடர்ந்து சாப்பிட முடியாததால் எதிர்த்து குரலெழுப்பினர்.  அதன் பின்னர் நல்ல எண்ணெயில் சமைத்துப் போட்டார்கள். இதுபோல கசப்பான பல சம்பவங்கள் இந்த சமுதாயத்தில் நடக்கிறது. இதனை அகற்றவேண்டுமெனில் நாம் போராடவேண்டும். நான் விவசாயி என்பதால் விவசாயத்தால் நான் மட்டும் பயன் அடைவதில்லை, மனித இனங்களோடு சேர்த்து மற்ற உயிரினங்களும் பயனடைகின்றன.

சின்ன வயதிலிருந்து எதை சாப்பிட்டாலும் அனைவருக்கும் பகிர்ந்து தான் சாப்பிடுவேன் என் அம்மா சின்ன வயதில் சொல்லிக்கொடுத்தது. அதுபோல விவசாயத்தின் பயன்களை நான் மட்டும் அனுபவிக்காமல் எல்லா மக்களுக்கும் கொடுக்கிறேன். இந்த சமுதாயத்தில் விவசாயம் என்பதை அழிக்க பார்க்கிறார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். வேறு வழியில்லை” என விளக்கிப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து திரு ஜெயராமன் தனது உரையில்; “விவசாயிகள் இல்லையென்றால் சாப்பாடு இல்லை. கடன், மானியம், விதை உரம் எதையும் அரசு கொடுப்பதில்லை. விளைந்த பொருட்களுக்கு விலை இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது அரசுதான், அவர்களை பாதுகாக்கத் தவறுகிறது. இந்நிலையில் தான் நாம் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கிப் பேசினார்.

அதன் பின்னர் பேசிய தோழர் முத்துக்குமார் தனது உரையில், நீட் தேர்வைக்கொண்டு வந்து அனிதாவை படுகொலை செய்த இந்த அரசுதான் விவசாயிகளையும் வாழவிடாமல் அவர்களின் வாழ்வைப் பறித்து தற்கொலைக்குத் தள்ளி கொன்றுகுவித்து வருகிறது என்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்திப் பேசினார்.

தோழர் பரசுராமன் தனது உரையில் இந்த அரசுக்கட்டமைப்பு தொழிலாளர்கள், தற்போது போராடிவரும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களையும், அவர்கள் ஏற்கனவே போராடி பெற்ற உரிமைகளையும் பறித்து அவர்களை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக்கி வருகிறது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துச்சொல்லி தொழிலாளர்களின் பொது எதிரியாக இருக்கக்கூடிய கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகதான் விவசாயத்தை அழித்துவருகிறது இந்த அரசு என்பதை விளக்கிப் பேசினார்.

பொதுக்கூட்டத்தின் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த, மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தனது சிறப்புரையில், விவசாயிகளின் உழைப்பு என்பது அளவிட முடியாதது. அதனை இந்த அரசு அங்கீகரித்திருந்தால் விவசாயிகளின் தற்கொலை இங்கே நடந்திருக்க முடியாது. ஆனால் நமது அரசு அவ்வாறில்லை. தமிழகத்தில் விவசாயிகள் 400 பேர் இறந்த செய்தியை நாம் ஊடகங்களில் பார்த்திருப்போம். ஆனால் அரசால் பதிவுசெய்யப்பட்டது வெறும் 17 பேர்தான். இந்த அரசின் யோக்கியதையே இதுதான்.

விவசாயத்துறையை சேர்ந்த அமைச்சர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விவசாயிகளின் தற்கொலையை காதல் தோல்வியால் இறந்தான், குடும்பப் பிரச்சினையால் இறந்தான் என்று சொல்லி அவர்களது இறப்பையும் அவமானப்படுத்துகின்றனர்.

தொழிலாளர்களுக்கு கூட அவர்களை பாதுகாக்க பெயரளவிலான தொழிற்சங்க சட்டங்கள் இருக்கிறது. இதை இந்த அரசே அமுல்படுத்தவில்லை என்பது வேறு விவகாரம். ஆனால் அந்தளவுக்கு பெயரளவிலான சட்டப்புத்தகங்களில்கூட விவசாயிகளுக்கு பாதுகாப்பில்லை. இந்த விவசாயிகளை விவசாயத்தையே செய்யாமல் விவசாயத்தை விட்டே விரட்டியடித்து அவர்களை கார்ப்பரேட்டுகளின் நேரடி கொத்தடிமைகளாக்குவதை கொள்கையாக கொண்டிருக்கிறது இந்த அரசு என்பதை பல்வேறு விவரங்களுடன் தொகுத்து அம்பலப்படுத்திப் பேசினார்.

இறுதியாக, விவசாயிகள் மட்டுமின்றி, தொழிலாளர்கள், சிறுமுதலாளிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினர்களும் இந்த அரசுக்கட்டமைப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஆளத்தகுதியற்ற இந்த அரசுக்கட்டமைப்பை வீழ்த்தி மக்கள் அதிகாரம் படைப்பது ஒன்றே இவை அனைத்திற்கும் தீர்வாக முடியும் என்று சொல்லி. அத்தகையதொரு போராட்டத்திற்கு அணியமாவோம், மக்கள் அதிகாரம் படைப்போம் என்ற வகையில் அறைகூவி பேசினார்.

கூட்டத்தின் இறுதியாக, பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் இராமசாமி நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டத்தை இறுதிவரை கவனித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க