விவசாயியை வாழவிடு மணல்கொள்ளையை நிறுத்து!
ஊர் கூடி ஒரு பொதுக்கூட்டம்!
கடலூர் மாவட்டம், கூடலையாத்தூர், வெள்ளாறு மணல் கொள்ளையை நிறுத்தக்கோரியும், ஊழல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பில் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் சேத்தியாத்தோப்பு கடை விதியில் 01.10.2017 அன்று மாலை 5.00 மணியளவில் பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர்
ஆர். வெங்கடேசன் தலைமை தாங்கினார். கண்டன உரை தோழர். முருகானந்தம், வட்டார ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம், விருதை மற்றும் வழக்கறிஞர் செந்தில் ,மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தோழர் மா.மணியரசன் (செயலர்) புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருதை. சிறப்பு உரை தோழர். வழக்கறிஞர் .சி. ராஜீ மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் ஆகியோர் கலந்துக்கொண்டு உரையாற்றினர்,

ஆர். வெங்கடேசன் அவர்கள் தலைமை உரையில் குவாரியை மூடவேண்டும், விவசாயி வாழவேண்டும் என்று மக்கள் போராடினால், வாழவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்வது இந்த அரசும், அரசியல்வாதிகளும். கூடலையாத்தூரில் வெள்ளாற்றில் வெயிலில், சுடுமணலில், பெண்களும், மாணவர்களும், மக்களும் உட்கார்ந்துக்கொண்டு மணல் குவாரியை முடியே தீர வேண்டும் என்ற உறுதியோடு போராடுகிறோம்.
போராடுகின்ற எங்களுக்கு தண்ணீர் கூட தரமறுத்தது இந்த போலீசுத் துறை. குவாரியை தற்காலிகமாக மூடுகின்றோம் என்று சிதம்பரம் கோட்டாட்சியரும் போலீசும் கூறி நாடகமாடி போராட்டத்தை கலைத்தனர். ஆனால் இரண்டாம் நாளே குவாரியை திறந்துவிட்டார்கள், இந்த ஊழல் அதிகாரிகள். விவசாயிகள் நாம் வாழவேண்டும் என்றால் மக்களாகிய நாம் தாம் அதிகாரத்தை கையில் எடுத்து மூடவேண்டும் என்று தலைமை உரையாற்றினார்.
அவரை தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தின் தெய்வக்கண்ணு அவர்கள் பேசும்போது மணலை அள்ளுவதற்கு வெள்ளாற்றிலே தார் ரோடு போடுகின்ற இந்த அரசு, மக்களும், மாணவர்களும் நடத்து செல்ல ரோடு போட்டுக்கொடுக்க துப்பில்ல அதோடு இல்லங்க, காவனூர் ஆற்றின் குறுக்கே மக்கள் நாங்களே முன் முயற்சியோடு ஈடுபட்டு நடைபாதைக்காக போட்டு இருந்த அந்த மண்பாதையை கூட உடைத்து தேங்கியிருந்த நீரை வடிக்கட்டி மணலை அள்ளுவதற்கு உதவி செய்கிறார்கள் இந்த அதிகாரிகள். அதனால் தான் இந்த மக்களுக்கு எதிராய் இருக்கின்ற ஊழல் அதிகாரிகள் எங்களுக்கு தேவையில்லை என்று நாங்கள் கூறுகிறோம் என்றார்.
வெள்ளாறு , கூடலையாத்தூர் பகுதியில் வாழும் தி.மு.கவை சேர்ந்த ஆசை தம்பி, பேசும்போது விவசாயிகள் நாம் விளைவிக்கின்ற உணவு பொருட்களை சாப்பிடுகின்றவர்களிடமே ’விவசாயிகளை வாழ விடு’ என்று கெஞ்சுகின்ற அவல நிலையை உருவாக்கிய தரம் கெட்ட அரசின் கீழ் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதோடு தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது, சம்பா சாகுபடிக்கு ஆற்றில் நீர் இல்லை, இப்படி இருக்கின்ற சூழலில ஆற்றில் உள்ள மணலை ஓட்ட சுரண்டுவது, ஒரு தாயின் மார்பை அறுப்பதற்கு சமம், மணல் திருட்டு நடக்கின்றது, ஓவர் லோடு என்று அதனை பிடித்துக்கொடுகின்றோம். பிடித்துக்கொடுக்கின்ற எங்கள் மீது 107 வழக்கு என்றால், மணலை திருடுகின்றவனுக்கு என்ன தண்டனை? என்ற கேள்வியை பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் எழுப்பினார்.
மக்கள் அதிகாரத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர். முருகானந்தம் பேசுகையில் ”மக்கள் அதிகாரம் கூட்டம் நடத்துவது, காவல்துறையையும் போலீசையும் திட்டுவதற்காக கூட்டம் நடத்தவில்லை, மக்களுடைய ஆதங்கத்தையும், கொத்தளிப்பையும் மதிக்காமல் நடத்துக்கொள்ளும் பீர்பாஷா போன்ற போலீசு அதிகாரிகளை, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்காகவும் குவாரியை மூடவேண்டும் என்றும் நாங்கள் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கிக் கூட்டம் நடத்துகின்றோம்.

மக்களுடைய வரிப்பணத்தில் வாழ்ந்துகொண்டு, மக்களை ஒடுக்குகின்ற போக்கை இந்த அரசு கையாளுகின்றது. எனவே தான் மாற்றி அமைக்கின்ற ஒரு சக்தியாக மக்கள் அதிகாரமாக, மக்கள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறி முடித்தார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் செந்தில் பேசுகையில் “ நாங்கள் எடுத்தவுடன் வெள்ளாற்று மணல் குவாரியை முற்றுகையிடவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி, அதன் துறை சார்ந்த அனைத்து பிரிவு அதிகாரிகளிடமும் மனு கொடுத்து விட்டோம் அந்த மனு மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ எதுவும் இல்லை, அதனால் தான் மக்களை திரட்டினோம். 21.08.2017 அன்று குவாரியை முற்றுகையிட வெள்ளாற்றில் இறங்கினோம், போராடினோம், போராட்டத்தில் உளவு பிரிவு போலீசார் கலவரத்தை மூட்டுவதற்கான வேலையை செய்தார்கள். இதனை புரிந்து கொண்ட மக்களும், இளைஞர்களும் தெளிவாக இருந்தனர். போராட்டத்தில் போராடுகின்ற மக்கள் கொண்டு வந்த தண்ணீரைக் கூடத் தர மறுத்தனர் சாமியனா பந்தல் போடக்கூடாது என்று மிரட்டினர். மக்களை தள்ளுமுள்ளுக்கு ஆளாக்கினர்” என்றார்.
ஓட்டிமேடு ஊராட்சி மன்ற தலைவர் ரவி கூறுகையில் “வெள்ளாற்றில் ஒரு தடுப்பணைக்கூட கிடையாது. இருப்பதோ சேத்தியாத்தோப்பு அருகில் ஆங்கிலயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு அதனை திறந்தால் ஆற்றின் மொத்த நீரும் கடலுக்கு தான் செல்லும், வெள்ளாற்றை நம்பி சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஆனால் பொதுப்பணித்துறையால் விவசாயத்திற்கு எந்த வித நீர்பாசன கால்வாயோ தடுப்பணையோ எதுவும் இல்லை. ஆனால் அரசு டாஸ்மாக் கடையை மட்டும் மூடுகின்ற மாதிரி மூடி, தெருவிற்கு தெரு திறக்கின்றனர். நாங்கள் அரசிடம் கேட்பது மூன்று கோரிக்கைதான் கல்வி, மருத்துவம், தண்ணீர் இவைகளை இலவசமாக கொடுத்தாலே மக்களாகிய நாங்கள் வாழ்ந்துகொள்வோம்” என்று பேசினார்.
அவரை தொடர்ந்து மா. மணியரசன் செயலர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி “வெள்ளாற்றில் 21 ம் தேதி போராட்டம் தொடங்கியது ஆனால் ஒரு கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது போல் 5 டி.எஸ்.பி, 500 – க்கும் மேற்பட்ட காவலர்கள் என்று ஆற்றில் குவித்தனர். மக்களை அச்சுறுத்தினர், இருந்தாலும் மக்கள் குவாரியை மூடினால் தான் ஆற்றை விட்டு வெளியேறுவோம் என்று முழக்கம் இட்டப்படி போராடினர்.
வெள்ளாற்றில் மணல் கொள்ளை அடிக்கப்படுவது, அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவோ, டெங்குவால் பலியாக கூடிய சிறுமியின் உயிரைத் தடுக்கவோ, இப்படி எதற்கும் பயன்படாத அதிகார வர்க்கம் நடத்தக்கூடிய, கொள்ளையடிக்கக்கூடிய மணல்குவாரியை இழுத்து மூடவேண்டும், நீட் தேர்வில் மாணவி அனிதாவை நம்பவைத்துக் கழுத்தை அறுத்தது மோடி அரசும், எடப்பாடி அரசும், நீதிபதிகளும். அதே போல் ஆகஸ்ட் 21 ல் மக்கள் அதிகாரம் தலைமையில் நடந்த மணல் குவாரி முற்றுகை போராட்டத்தில் விவசாயிகளை நம்ப வைத்து கழுத்தை அறுத்தார்கள், இந்த அதிகாரிகள். இப்படி நம்ப வைத்துக் கழுத்தை அறுத்த அதிகாரவர்க்கத்தை விழ்த்த மாணவர்கள் இளைஞர்கள் பகத்சிங் பாதையில் அணிதிரள்வோம்” என்றார்.
சிறப்புரையாக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி.ராஜீ பேசுகையில் “ கடந்த மூன்று மாதகாலமாக வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தோடு எமது மக்கள் அதிகார தோழர்களும் இணைந்து வெள்ளாற்றில் இயங்கி வரும் கூடலையாத்தூரில் மணல் குவாரியை மூடியாக வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம் அதாவது நாம் மக்கள் இடத்தில் கூறுவது கூடலையாத்தூரில் நடப்பது என்ன?

மணலை வெட்டி எடுக்கின்றனர் வெட்டி எடுக்கும் இடம் 8 நம்பர் சர்வேயில், 2-ஏக்கர், 3 அடி ஆழம் சிவப்பு துணி கம்பு எல்லை வரைவு என்று அவர்கள் பணி ஆணையில் குறிப்பிட்டுள்ளனர். நடப்பது என்ன வென்றால் 30 அடிக்கும் கீழாக, கணக்கு காட்டிய தூரம் வரையில் வெட்டி எடுக்கின்றனர், எல்லை வரைவு கம்பம் என்று எதுவும் கிடையாது, அங்கேதான் இல்லை என்று பார்த்தால் தமிழ்நாட்டில் எந்த குவாரியிலும் இந்தச் சட்டம் நடைமுறையில் இல்லை. அதோடு லாரிக்கு பரிமிட் கிடையாது, ஓவர்லோடில் மணல் கொள்ளை போகிறது, எனப் பலமுறை திருமுட்டம் காவல் ஆய்வாளர் பீர்பாஷாவிடமும், பொதுப்பணித்துறை இன்ஜீனியர் சரவணனிடம் சொன்னதற்கு எதனையும் கண்டுகொள்ளவில்லை அதோடு பொதுமக்களிடம் நாயினும் கீழாக பீர்பாஷா நடந்து கொண்டார். கூடலையாத்தூர் ஆக. 21 மணல் குவாரி முற்றுகை போராட்டத்தின் பொழுது குவாரிக்கு விடுமுறை ஆனால் குவாரி அதிகாரிகளை பணி செய்யவிடவில்லை என்று ஊர் பிரமுகர் மற்றும் வழக்கறிஞர்கள் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. ஜெயலலிதா மரணத்தை எடுத்து கொண்டால் போதும் ஒட்டுமொத்த அரசும் மக்களுக்கு எதிராக மாறி தோற்று உள்ளது என்று தெரியும். மேலும் டெங்கினால் பாதிக்கப்பட்டு தினமும் குழந்தைகளும் மக்களும் இறந்து கொண்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையிலும் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று நீதி விசாரணை வேண்டும் என்கிறது பா.ஜ.க. கைக்கூலி எடுபிடி எடப்பாடி அரசும், ஆட்சியாளர்களும் அடிக்கிற கூத்து தொலைக்காட்சி செய்தியை பார்தாலே உங்களுக்கு புரியும். மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டுமென்றால் அரசை நம்பி பலன் இல்லை மக்கள் நாம்தான் ஒவ்வொரு ஊர்களிலும் குழுக்களை உருவாக்கி அந்த குழுக்களின் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்து மூடவேண்டும். இல்லையென்றால் இவர்களிடம் மனு கொடுத்து உண்ணாவிரதம் இருந்து எதையும் சாதிக்கமுடியாது.
ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையோ மணல் கொள்ளை போகுது என்று லாரியை பிடித்து கொடுத்த ஆசைதம்பி மீது 107 பிரிவு கீழ் (ரவுடி) வழக்கு போடுவேன் என்று மிரட்டுகிறது. இப்படி ஒட்டுமொத்த அரசும் கிரிமினல்மயமாகவும், ஊழல்மயமாகவும் உள்ளது. இதைதான் மக்கள் அதிகாரம் கட்டமைப்பு நெருக்கடி என்கிறது இதற்கு மாற்றுதான் மக்கள் அதிகாரம் என்கிறோம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி, செங்குட்டுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் சுற்று வட்டாரங்களில் உள்ள வருவாய் துறை, பொது பணிதுறை அலுவலகத்தையும், காவல் நிலையங்களையும் முற்றுகையிட்டு எந்த அதிகாரிகளையும் உள்ளே போகவிடாமல் கைது செய்தவர்களை விடுதலை செய்யும்வரை நாம் அடுத்தக்கட்ட போராட்டத்தை கட்டியமைக்கவேண்டும். இந்த பொதுக் கூட்டத்திற்கான நோக்கம் என்னவென்றால் மணல் கொள்ளை அடிப்பது குற்றமா, அதை தடுப்பது குற்றமா, இக்கொள்ளையை ஏற்று நடத்துகிற எடுபிடி எடப்பாடி கும்பலும், அதிகாரவர்க்கமும் குற்றவாளிகளா? இந்த கொள்ளையை கேள்வி கேட்கின்ற பொதுமக்கள் குற்றவாளிகளா?. வெள்ளாற்றை ஒட்டி உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தை கட்டியமைத்து, மக்கள் அதிகாரத்தில் உறுப்பினராக வேண்டும். மக்களுக்கு எதிராக இருக்கின்ற இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவதற்கான ஒரே தீர்வு மக்கள் அதிகாரம் தான்” என்றார்.
அக்டோபர் 1, 2017 அன்று கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கமும், மக்கள் அதிகாரமும் இணைந்து நடத்திய ”மணல் கொள்ளையை நிறுத்து! ஊழல் அதிகாரிகளைக் கைது செய்!” பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- கடலூர் மாவட்டம் கூடலையாத்தூர் மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என அனைத்து கிராம மக்கள் சார்பாக தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
- கூடலையாத்தூர் மணல் கொள்ளை தினமும் தொடர்கிறது. திருட்டு லாரிகளை மக்கள்தான் பிடித்துக் கொடுத்தார்கள். மணல் கொள்ளைக்கு உடந்தையான பொதுப்பணித் துறை பொறியாளர் சரவணன், திருமுட்டம் ஆய்வாளர் பீர்பாஷா மீது ஊழல் கிரிமினல் வழக்கு பதிவு செய்து உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என உரிய அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
- வெள்ளாற்றில் கடந்த 10 ஆண்டுகளாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு வெள்ளாறு மீளமுடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டுள்ளது. எனவே நிலத்தடி நீர் ஆதாரத்தைக் காக்க உரிய தடுப்பணை கட்டவும், விவசாயிகளின் போர் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசே ஆழ்துளை போர் போட்டு இலவசமாக விவசாயிகளுக்கு பாசன வசதி செய்து தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
- வாழ்வாதாரங்களைக் காக்க அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது பொய் வழக்கு போடுவதாக அச்சுறுத்தும் கடலூர் மாவட்ட காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். போடப்பட்ட வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
- கிரானைட் கொள்ளையை விசாரித்த சகாயம் கமிஷனைப் போன்று தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஆற்றுமணல் கொள்ளையை விசாரிக்க நீதிபதிகள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் அடங்கிய கமிட்டி மூலம் விசாரிக்க தமிழக அரசை நிர்ப்பந்தித்து அனைத்து மக்களும் போராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
- கூடலையாத்தூர் மணல் குவாரியை ஒரு வாரத்திற்குள் பொதுப் பணித் துறை மூடவில்லை என்றால் அனைத்து கிராம மக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம். அது வெள்ளாற்றைக் காத்திட சிறை செல்லும் போராட்டமாக இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- வெள்ளாற்றைக் காக்க அனைத்து கிராமங்களிலும் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்க அனைவரும் உறுப்பினராக சேர வேண்டும். சட்ட விரோத மணல் லாரிகளை மக்கள் கண்காணித்து தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
- 30-9-17 அன்று கடலூர் கெடிலம் ஆற்றில் மாமூல் கேட்டு சக்ரபாணி என்ற மாட்டு வண்டி தொழிலாளியை போலீசார் ஹெல்மெட்டால் அடித்துப் படுகொலை செய்துள்ளனர். குற்றவாளி போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் உயிரிழந்த சக்ரபாணி குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
மணல் குவாரிக்கு எதிரான இந்தப் பொதுக்கூட்டத்தில் பல கிராமங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். கோயில் திருவிழாவை ஊர் கூடி நடத்துவதைப்போல ஊர் கூடி இந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வந்திருந்த மக்களில் பலரும், போலீசுக்கு எதிராக தானும் கருத்துச் சொல்ல வேண்டும் என்று கூறி பதிவும் செய்தனர். தோழர் ராஜூ பேசிய பின்னர், 8 வயது சிறுமி ஒருவர் வெள்ளாற்றை காக்க வேண்டும் என்ற பாடலை பாடியது மெய்சிலிர்க்க வைத்தது. போலீசைத் திட்டக்கூடாது என்று போலீஸ் நிலையத்தில் இருந்து துண்டுச்சீட்டை கொடுத்துக்கொண்டே இருக்க, மக்களோ தாங்களே முன்வந்து போலீசின் யோக்கியதையை அம்பலப்படுத்திக்கொண்டே இருந்தனர்.
ஒருங்கிணையக்கூடாது என்று மக்களை என்னதான் போலீசு அச்சுறுத்தினாலும் அந்த அச்சுறுத்தலே மக்களை ஒருங்கிணைப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக உறுதியாகப் போராடவும் வைக்கிறது என்பதை இப்பொதுக்கூட்டம் கண்முன்னே காட்டியது.
தகவல்
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம்
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
Politicians are 100% corrupt and they have succeded in making the general public as their partner in crime by bribing them for votes. And the sad part is people are willing to sell their vote. So whatever you do , it will be a waste of time.