privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திடெங்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் - செயலர் இராதா கிருஷ்ணன் மீது வழக்குப் போடு !...

டெங்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் – செயலர் இராதா கிருஷ்ணன் மீது வழக்குப் போடு ! PRPC

-

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்:11.10.2017

பத்திரிக்கைச்   செய்தி 

  • டெங்கு மரணங்கள் : மிகப்பெரிய மனித உரிமை மீறல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-A-ன் கீழ் குற்றம். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப் பதிய வேண்டும்!
  • டெங்குவிற்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்!

டெங்கு காய்ச்சல் மரணங்கள் தமிழக மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசின் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தமிழக பொறுப்பு மருத்துவர் கல்பனா பரூபா தகவலின்படி, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் 11,555 பேர். இதில் நூற்றுக்கும் மேலானோர்  இறந்துள்ளனர்.

சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்களே டெங்குவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை, படுக்கை இல்லை, போதிய மருத்துவர்கள் இல்லை என அன்றாடம் செய்திகள் வருகின்றன.

நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசாங்கமோ  வெற்று அறிக்கைகள், பேட்டிகள் மூலமே டெங்கு பிரச்சனையைக் கையாள்கிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இறந்தோர் எண்ணிக்கையை மறைத்து, உண்மை விபரங்களை வெளியிட மறுக்கிறது.

இதுவே மிகப்பெரிய குற்றம்.  தமிழகத்தின் மற்ற பிரச்சனைகளில் அத்துமீறித் தலையிடும் மோடி அரசு, தமிழக மக்கள் நூற்றுக்கணக்கில் சாவது குறித்து வாய்திறக்க மறுக்கிறது. டெங்குவா? வேறு காய்ச்சலா? என்று தமிழக மருத்துவத் துறையிலே குழப்பம் நிலவும்போது, இதனை ஆய்வு செய்து உதவி செய்ய வேண்டிய மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. மொத்தத்தில் தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகள் இருந்தும் நாதியற்றவர்களாக உள்ளனர்.

சுகாதாரம், மருத்துவ வசதி ஆகியவை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையின் (சரத்து 21) அங்கம் என்று உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சொல்லியுள்ளது. குறிப்பாக, Paschin Bangal Khat Mazdoor Sanity வழக்கில் “மக்கள் நல அரசின் முக்கியப்பணி மக்களுக்கு உரிய மருத்துவ வசதி வழங்குவதே  சரத்து 21 -ன்படி அரசு இதனைச் செய்ய வேண்டும்” என்று  தீர்ப்பளித்துள்ளது.

அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறை சரத்து 47-ன்படி “அரசானது – பொதுச் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கும் கடப்பாடு கொண்டுள்ளது. மாடு வதை குறித்துச் சட்டம் இயற்றி, நடவடிக்கை எடுக்கும் மோடி அரசு, மக்களின் பொதுச் சுகாராரம் குறித்து எந்தச் சட்டமும் இயற்றவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டெங்கு  காய்ச்சலைத் தடுக்கத் தவறிய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் சுகாதாரச் செயலர் இராதா கிருஷ்ணன்.

மாறாக, கடந்த 15.03.2017-ல் மோடியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்து வெளியிட்ட தேசிய சுகாதாரக் கொள்கை-2017, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை வலியுறுத்துகிறது. கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை குறைக்க வழிவகை செய்கிறது. இதனால் அரசு மருத்துவ சேவைக்கான நிதி குறைக்கப்பட்டு, மருத்துவமனைகள் போதிய வசதிகளின்றி தள்ளாடுகின்றன. தமிழகத்தில் இன்றைய டெங்கு மரணங்கள் மிகவும் அதிகரிக்கக் காரணம், மருத்துவத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் கொள்கையே.

களத்தில் நிற்க வேண்டிய தமிழக அரசின் சுகாதாரத்துறையோ, போதிய பணியாளர்கள் இன்றித் தடுமாறுகிறது. 15,000 சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டிய இடங்களில், வெறும் 2000 பேரே   பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஆய்வாளருக்கும் 35 முதல் 40 கிராமங்கள் ஒதுக்கப்படுகிறது.

ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்குச் செல்வது சாத்தியம் இல்லை என்ற நிலையில் டெங்கு மரணங்களை மறைக்கவே இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பூச்சியியல் என்ற ஓர் கொசு ஒழிப்புத்துறை இருப்பது, இப்போதுதான் வெளியே தெரிகிறது. கொசு ஒழிப்பில் பணிபுரிய வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் முற்றிலும் முடங்கிக் கிடக்கின்றன.

மொத்தத்தில் பெரும்பான்மை மக்கள் நலனைப் புறக்கணிக்கும், செயலற்ற அரசால், தமிழகம் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்து வருகிறது. இதனைப் பரிசீலிக்காமல், நல்ல தண்ணீர்க் கொசு என்று சொல்லி, மக்களைக் குற்றவாளி ஆக்குகிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் இன்றுவரை தமிழக அரசு நிர்வாகத்தை, உள்ளாட்சி அமைப்புகளை மரணப்படுக்கையில் தள்ளியது யார்? மக்களா? அதிமுக அரசா?

படம் – நன்றி : தினகரன்

இது தவிர  தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் கொள்ளை எல்லை மீறுகிறது. முதலில் சேர்த்துக் கொண்டு, பணத்தைப் பறித்து டெங்கு எனத் தெரிந்ததும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறார்கள். பணம் இல்லையேல் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

எனவே, டெங்குவை முன்கூட்டியே தடுக்காத, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 304-A-ன் கீழ் அசட்டையால் மரணம் விளைவித்த குற்றத்திற்கு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நிலநடுக்கம், சுனாமி போல் காய்ச்சல் ஓர் கொள்ளை நோயாகப் பரவி வரும் சூழலில், அனைத்துத் தனியார் மருத்துவமனைகளிலும் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். மறுத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக  மாணவர்களும், மக்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் வீடுகளை முற்றுகை இட வேண்டும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கேட்டுக் கொள்கிறது.

வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்

அலுவலகம்:
150-இ, ஏரிக்கரை சாலை,
அப்போலோ மருத்துவமனை அருகில்,
கே.கே.நகர், மதுரை-20.
தொடர்புக்கு: 9865348163  vanchiadv@gmail.com

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க